Friday, April 10, 2009

நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணி

காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணியை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

"காவிய நாயகி" இரா.பழனிசாமி கைவண்ணத்தில் மலர்ந்த ஒரு நாடகமாகும். இந்நாடகம் பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார் இயற்றிய புறநானூற்றுப் பாடலை மையமாகக்கொண்டது. இந்நாடகத்தின் கதையோட்டத்திற்கு இடப்பின்னணி அவசியமாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

காவிய நாயகி நாடகத்தில் முக்கிய இடப்பின்னணியாகத் திகழ்வது சோழநாடும் சேரநாடும் ஆகும். பொன்னி சோழ நாட்டில் பிறந்து வாழ்ந்த மருதவாணரின் மகள் ஆவாள். சேரநாட்டுக்கு அறுவடைத் திருநாளுக்காகப் போகும் வழியில் வீரனாக மாறுவேடமிட்ட சேரமன்னன் பெருஞ்சேரலாதனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். பொன்னியின் அழகும் கவியாற்றலும் பெருஞ்சேரலாதனின் மனதைக் கவர்கிறது. இவ்வகையில் இந்நாடகம் சோழ நாட்டையும் சேரநாட்டையும் தொடர்பு படுத்துகிறது.

இதனைத் தவிர்த்து, வெண்ணிப் பறந்தலை போர்க்களமும் முக்கிய இடப் பின்னணியாகத் திகழ்கிறது. சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் சோழ மன்னன் கரிகாலனுக்கும் நடந்த போரில் கரிகாலனின் வாள் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து புறமுதுகையும் சென்றடைந்தது. புறமுதுகில் காயம் ஏற்பட்டதால் கோழை எனப் பிறர் கருதுவர் என்றெண்ணி வடக்கிருந்து உயிர் நீத்தான் பெருஞ்சேரலாதன். அதற்கு முன் அங்கு வந்த பொன்னியின் நெற்றியில் திலகமிட்டு மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். பொன்னி பிறந்து வளர்ந்த ஊரான வெண்ணிப்பறந்தலையிலேயே பொன்னியின் திருமணம் நடந்தேறுவதோடு அவள் கணவனின் உயிரும் பிரிகிறது.

கரிகாலனின் அரசவையும் ஒரு முக்கியக் களமாக உருவெடுத்துள்ளது. தன் காதலனின் மரணத்திற்குப் பிறகு பொன்னி கரிகாலனின் அரசவைக்குக் கவிபாடச் சென்றாள். 'நின்னினும் நல்லவனன்றே' என்று பெருஞ்சேரலாதனை உயர்த்திப் பாடும் வஞ்சப் புகழ்ச்சிப் பாடலினால் அரசவையினர் பொங்கி எழுகின்றனர். அவளுக்குத் தக்க தண்டனை வழங்குமாற் கரிகாலனை வேண்டுகின்றனர். ஆனால், கரிகாலன் தீர விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடிவெடுக்கிறான். பொன்னியின் இரண்டாம் மூன்றாம் விசாரனையும் இங்குதான் நடந்தேறுகிறது.

இந்தக் களங்கதளைத் தவிர்த்து, விருந்தினர் விடுதியும் முக்கிய இடப்பின்னணியாக விளங்குகிறது. பொன்னிக்குத் தண்டனை வழங்கும் வரை தங்க வைக்கப்பட்ட இடமான விருந்ததினர் விடுதியில் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. இங்குதான் காளிங்கராயரும் தளபதியும் மேற்கொண்ட கூட்டுச்சதி அரங்கேறுகிறது. உதாரணமாகப் பொன்னிக்கு விஷம் வைத்துக் கொல்ல கார்கோடனை ஏவுகின்றனர். பினர், துறவியைக் கொல்ல வேங்கையனையும் பணிக்கின்றனர். ஆனால், கரிகாலனின் மதிநுட்பம் இச்சதித்திட்டங்களைத் தகர்த்தெறிகிறது. சதிதிட்டங்களைத் தவிர்த்து, பொன்னி ஏன் கவிபாட வந்தாள்? என்ற கூற்றுக்கும் கரிகாலனுக்கு இங்குதான் விடை கிடைக்கிறது.

இக்களங்களைத் தவிர்த்து, வான மண்டலம் இந்நாடகத்தின் முதல் காட்சியாகவும் இறுதி காட்சியாகவும் இடம் பெற்று இந்நாடகத்திற்கும் மேலும் மெருகூட்டுகிறது. வானமண்ட்டலத்தில் பொன்னி பெருஞ்சேரலாதனைத் தேடி அலைவதாக முதல் காட்சி துன்பியலை உணரத்துகிறது. இறுதி காட்சியோ பொன்னி தன் காதலன் பெருஞ்சேரலாதனுடன் இணைந்து கைக்கோர்த்து மேகங்களின் மேல் நடந்து செல்வதாக இன்பியலில் முடிவுறுகிறது.

எனவே, காவிய நாயகி நாடகத்திற்குச் சிறந்த கதைக்களத்தைக் கொடுத்து, காதலும் வீரமும் என்ற மையக்கருவிற்கு வலு சேர்த்துள்ளார் கலைமாமணி இரா.பழனிசாமி. கதைக்களத்தின் தேர்ந்தெடுப்பு இந்நாடகத்தை மேலும் சுவாரசியப் படுத்தியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



(மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

2 comments: