Monday, January 30, 2012

யார் தமிழ் படிப்பார் (கவிஞர் பொன்முடி)

யார் தமிழ் படிப்பார்?
(கவிஞர் பொன்முடி, மலேசியா)

தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே
தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே
தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்
இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!
தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே
தாய்நலங் காப்பது சேய்கடன் தானே
தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?
ஓராண் டல்ல ஈராண் டல்ல
ஆறாண் டாக அடிப்படைக் கல்வி
அளித்த மொழியின் அருமை மறந்து
புளித்தது என்று புகல்வதா இன்று!
ஆதியில் அறிவில் உறைத்த தமிழை
பாதியில் ஏளனம் படுத்தி ஒதுக்கிட
எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்
தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்
கண்ணும் கூடக் காண மறுக்கலாம்
பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்
உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்
மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?
கற்றவர் அவையில் கையொலி பெறுமா?
சொந்தம் என்று வந்த பந்தம்
சோறு போடுமா என்று கேட்கும்
ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்
வேறினம் இல்லை விதிவிதி என்றே
வீறு குறைந்த வீணன் இவனைக்
கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்
தீரா தென்றன் சினம்தீ ராது!
எந்த நாட்டினில் எந்த மொழிதான்
எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
துவையில் கறியுடன் ஊட்டு கின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
மொழியில் பழியை ஏற்றுவ தில்லை
தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்
தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்
தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்
இப்படி யாஇவன் செப்பித் திரிவது
ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது
தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்
தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்
மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு
மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்
உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்
பெருமை வாழ்வைப் பெறவா முடியும்
மொழிநலம் என்றே இனநலம் காக்கும்
மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்
தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்
தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்
தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்
இமயச் செயலாம் என்மாணவரே!

Sunday, November 13, 2011

பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க

பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க.

தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும்.சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் சந்திக்கும் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் முக்கிய துணைக் கதைப்பாத்திரமாக வலம் வரும் பூபதி நாவலின் கதை ஓட்டத்திற்கும் திருப்புமுனைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.


மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் அதிபரான பூபதி பாசமிகு தந்தையாகô படைக்கப்பட்டுள்ளார். தாயில்லா பிள்ளையான பாரதியை அக்குறை தெரியாமலே அன்பும் அரவணைப்பும் செலுத்தி வளர்க்கிறார். அவளுக்கு எந்தக் குறையுமில்லாமல் பேணி பாதுகாக்கும் அதே வேளையில் நற்பண்புகளையும் ஊட்ட அவர் தவறவில்லை. நேர்முகத் தேர்வின்போது மூன்று ஆண்களுக்குத் தேநீர் கொடுத்து விட்டு நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்துடன் ஒதுங்கி நின்ற பாரதி, சத்தியமூர்த்தியின் கண்களுக்கு அவன் சந்தித்த அகம்பாவமிக்க செல்வகுடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்ததற்கு பூபதியின் வளர்ப்பு முறையையே காரணமாகக் கூறலாம்.


எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராகப் பூபதி இந்நாவலில் வலம் வருகிறார்.தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத்தேர்வின்போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் மனத்திருப்தி அடைந்தாலும் இன்னோரு வயோதிக ஆசிரியரையும் அழைத்துப் பேட்டி காண்கிறார்.கல்லூரி முதல்வரின் முறையீட்டுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்கு நியமிக்கிறார்.இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது.


மேலும், பூபதி உயர்ந்த இலட்சியவாதியாகவும் நாவலாசிரியர் படைத்துள்ளார். தொழிலதிபராக இருந்தாலும் கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியை சிறந்த போதானா முறையுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறார். அதற்குச் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தானே மேற்கொள்கிறார். உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் தன் வீட்டிலேயே நேர்முகத்தேர்வை வைத்து சத்தியமூர்த்தியின் அறிவையும் பண்பையும் சோதிக்கிறார். தன் தந்தை மல்லிகைப் பந்தல் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்தும் எண்ணம் கொண்டிருப்பதைப் பாரதி சத்தியமூர்த்தியிடம் தெரிவிப்பது இதற்கு நற்சான்று.


பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் உன்னத மனிதராகவும் பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார்.கல்லூரி தேநீர் விருந்தில் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியபோது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் பேசியதைப் பாராட்டுகிறார். அதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி ‘ஷி வாக்ஸ் இன் பியூட்டி’ என்ற ஆங்கிலக் கவிதையை விளக்கியதை வகுப்பின் வெளியிலிருந்து கேட்கும் பூபதி அவனைப் பாராட்டுகிறார். சத்தியமூர்த்தியின் திறமைக்கு அங்கீகரமாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார்.


அத்துடன், பூபதி கண்டிப்புமிக்க மனிதராகவும் படைக்கப்பட்டுள்ளார்.தாம் நிர்வகிக்கும் கல்லூரி மாணவர்கள் கட்டொழுங்குடன் திகழ வேண்டும் என்பதற்காகப் பல சட்டதிட்டங்களை அமல்படுத்திகிறார். இறுதியாண்டு மானவர்கள் ஓர் அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும், மாணவர்கள் இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது, அவசர காரியங்களுக்காக வெளியே செல்லும் மாணவர்கள் வார்டன் அல்லது துணைவார்டனிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும், இல்லையேல் தண்டம் கட்ட வேண்டும் வேண்டும் போன்றவை அவற்றுள் அடங்கும். இராஜாராமன் என்ற மாணவன் தான் தேர்வில் தோல்வி அடைந்ததற்குக் கல்லூரி முதல்வரே காரணம் என்று கூறி அவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தைத் துணிவுடன் எதிர்நோக்கி அவனுக்கு அறிவுரை கூறி தன்னிலை உணரச் செய்தது அவரது கண்டிப்பை நன்கு வெளிப்படுத்துகிறது எனலாம்.


சான்றாண்மைப் பண்புகள் இருக்கும் அதே வேளையில் பூபதியிடம் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன.புகழுக்கு ஆசைப்படும்சாதாரண மனிதராகவே பூபதி விளங்குகிறார்.டில்லியில் வழங்கப்படும் விருதைப் பெறுவதற்கு மதுரை வரும் பூபதி சத்தியமூர்த்தியிடம் தன் பிறந்தநாள் விழாவையும் கல்லூரி ஸ்தாபகர் தின விழாவையும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாட்டைச் செய்யச் சொல்லி அவனை வரவேற்பு இதழ் தயாரிக்கச் சொல்கிறார். அதுவரை சத்தியமூர்த்தியின் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் பெற்றிருந்த பூபதி இக்குணத்தாலேயே மிக அற்பத்தனவராகக் காட்சியளிக்கிறார்.


இதைத் தவிர, பூபதி தீயவருடன் நட்பு பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீன்தார், கண்ணாயிரம் போன்ற நயவஞ்சகர்களுடன் ‘ஏய் பூபதி’ என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறார். அவர்களோடு சீட்டாடி பொழுதைக் கழிப்பதைக் காணும் சத்தியமூர்த்தியும் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.


ஆகவே, “நெல்லுக்கும் உமியுண்டு, புல்லிதல் பூவுக்குமுண்டு” என்பதைப் போல பூபதியிடம் சில குறைகள் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் சான்றாண்மை குணத்தால் உயர்ந்தே காணப்படுகிறார். செல்வம் படைத்தவர்கள் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றில்லாமல் சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்ற கருத்தையும் நாவலாசிரியர் பூபதியின் மூலமாக மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.


குமாரி புஷ்பவள்ளி, ஜொகூர், மலேசியா

Tuesday, August 2, 2011

பேராக், தஞ்சோங் ரம்புத்தான் வட்டாரத்தில் உள்ள எஸ்.பி.எம். / எஸ்.டி.பி.எம். மாணவர்களின் கவனத்திற்கு...

எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்பு இலக்கிய வகுப்பு,
தஞ்சோங் ரம்புத்தான் இலக்கியச் சங்கம் நடத்துகிறது
.


எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., தேர்வில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுக்கும் மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகளை நடத்திட பேராக், ஈப்போ அருகேயுள்ள தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்இலக்கியச் சங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


தம்பூன், தஞ்சோங் ரம்புத்தான், சிம்மோர், பெர்ச்சாம் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் இந்திய மாணவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றனர்.


சங்கங்களின் பதிவிலாக்காவால் முறையாகப்பதிவு பெற்ற சங்கமான, தஞ்சோங் ரம்புத்தான் தமிழ் இலக்கியச் சங்கம், தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பாடுபடுமென்று சங்கப் பொற்ப்பாளர்கள் தெரிவித்தனர். மேல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்: 016-5944528.

Wednesday, July 6, 2011

நாடகம்: காவிய நாயகி (நீண்ட கேள்வி)

காளிங்கராயரும் தளபதியும் தீட்டிய சதித்திட்டங்களை விளக்கி எழுதுக.

இரா.பழனிசாமியின் வைவண்ணத்தில் மலர்ந்த ‘காவிய நாயகி’ நாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக் குயத்தியாரின் பாடலை ஆதாரமாகக் கொண்டதாகும். இதில் எதிமறைக் கதைப்பாத்திரங்களான காளிங்கராயரும் தளபதியும் பல சதித்திட்டங்களைத் தீட்டி சோழ அரசாட்சியைக் கைப்பற்ற நினைக்கின்றனர்.

முதலில், பொன்னிக்குத் தண்டனை பெற்றுத் தந்து சோழன் கரிகாலனுக்கு எதிராக மக்கள் புரட்சியை ஏற்படுத்த இருவரும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். கரிகாலன் போர் நெறியை மீறியதாகக் குற்றஞ்சாட்டும் பொன்னியை மன்னன் விருந்தினர் விடுதியில் தங்க வைக்கிறான். இருவரும் இரும்பிடர்த்தலையாரைத் தூண்டிவிட அவர் கரிகாலனைச் சந்தித்துப் பொன்னி சேரனின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் குற்றம் சுமத்துகிறார். ஆனால், கரிகாலனோ வழக்கு விசானைக்கு முன்பே பொன்னியைத் தண்டிக்க மறுத்து, தீர விசாரிப்பதாகக் கூறினான். சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு இஃது ஏமாற்றமாக முடிந்தது.

இரண்டாவதாக, பொன்னிக்கும் கரிகாலனுக்கும் காதல் என்று கூறி கரிகாலன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். பொன்னியின் வழக்கை இரண்டு நாட்களுக்குக் கரிகாலன் ஒத்திவைத்ததைச் சாதகமாக்கி, பொன்னி எழுதியதுபோல் ஒரு பொய்யான ஓலையைத் தயாரித்து அதை அந்தப்புரத்தில் கரிகாலன் தவறவிட்டதாக வேண்மாளிடம் தருகிறார் தளபதி. அவள், அது குறித்து இரும்பிடர்த்தலையாரிடம் புகார் செய்ய, அவர் கலிகாலனிடம் முறையிடுகிறார். அவ்வேளை பொன்னி உண்மையாக எழுதிய ஓலை வர கரிகாலன் குற்றமற்றவன் என்பது உறுதியாகிறது. இதனால் அவர்களின் இரண்டாவது திட்டமும் தோல்வியடைகிறது.

மூன்றாவதாக, பாண்டிய மன்னனின் சோழ நாட்டைக் காப்பாற்ற இருவரும் திட்டம் தீட்டுகின்றனர். காளிங்கராயர் ஒரு நாள், பாழ்மண்டபத்தில் துறவி வேடத்தில் வந்த பாண்டிய மன்னனின் ஒற்றனைச் சந்திக்கிறார். இருவரும் ஓலைகளை மாற்றிக் கொள்கின்றனர். அதை மறைந்திருந்து கவனிக்கும் துறவி வேடம் பூண்ட கரிகாலன், காளிங்கராயர் மீது மோதி ஓலையைப் பறிக்கிறான். அதன்வழி பாண்டிய மன்னனின் படை இரகசியங்களையும் காளிங்கராயரின் துரோகத்தையும் அறிகிறான். சதித்திட்டத்தை நிறைவேற்ற ஐயாயிரம் கொற்காசுகளைக் காளிங்கராயரிடம் கொடுத்து விட்டுப் போன அந்த ஒற்றனைக் கலிகாலன் பின்னர் கைதுசெய்கிறான். பாண்டியனையும் அவனது படைகளையும் பின்னர் சிறைச் செய்து சதித்திட்டத்தை முறியடிக்கிறான்.

நான்காவதாக, பொன்னியைக் கொன்று அந்தப் பழியை மன்னன் மீது போட விஷ வைத்தியன் கார்கோடனை ஏவுகின்றனர். கார்கோடனை அரசாங்க விடுதிக்கு அதிகாரியாக நியமித்துப் பொன்னியை விஷம் வைத்துக் கொல்லுமாறு தூண்டுகின்றனர். மந்திரி பதவி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி அவன் சம்மதிக்கிறான். விருந்தினர் விடுதியில் கார்கோடகன் பொன்னியைத் தேடுகிறான். கோட்டைக் காவலர்கள் தீவட்டி, அமாவாசை மூலம் கார்கோடகனின் வருகையை அறிந்த கரிகாலன் அங்கு வருகிறான். கார்கோடகனிடமிருந்த சோற்று வட்டிலைப் பறித்துக் கரிகாலன் குருவிகளுக்கு உணவிடுகிறான். விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட குருவிகள் துடிதுடித்து இறக்கின்றன. சதித்திட்டத்தை அவன் ஒப்புக்கொள்ள, அவனை இரகசியச் சிறையில் அடைக்கிறான்.

இறுதியாக, கார்கோடகனைச் சிறையில் அடைப்பதற்குக் காரணமான துறவியைக் (கரிகாலன்) கொல்லத் திட்டம் தீட்டுகின்றனர். வேங்கையன் என்னும் முரடன் தன் குடும்பச் செலவுகளுக்குப் பொருள் வேண்டி காளிங்கராயரைக் காண வருகிறான். அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி அவனுக்குப் பொருளைத் தந்து துறவியைக் கொன்று விடுமாறு பணிக்கின்றனர். ஆனால், அவன் துறவியைக் கொல்ல முயன்ற பொழுது பொன்னி எச்சரித்ததால் துறவி வேடத்தில் இருந்த கரிகாலன் காப்பாற்றப்படுகிறார். பின்னர், கரிகாலன் வேங்கையனைச் சிறையில் அடக்கிறான்.

இப்படி, எல்லாச் சதித்திட்டங்களும் தோல்வியடைய காளிங்கராயரும் தளபதியும் கரிகாலனிடம் வசமாக மாட்டிக்கொள்கின்றனர். இருவரும் செய்த சதிகளை அரசவையில் அம்பலப்படுத்திய கரிகாலன் இருவருக்கும் தக்க தண்டனை வழங்க ஆணையிடுகிறான்.

Monday, June 20, 2011

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (நீண்ட கேள்வி)

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையில் கவிஞர் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

சொற்முத்துகளைக் கோர்வையாக்கி கவிதை எனும் மாலைத் தொடுப்பதில் வல்லமை பெற்றவர் கவிவாணர் ஐ. உலகநாதன். அவரது கைவண்ணத்தில் உருவான தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. தாய் நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடப்பாடு உண்டு என்ற மையக் கருத்தினை ஒட்டி இக்கவிதை புனையப்பட்டுள்ளது.

பெற்றெடுத்த அன்னைக்குப் பழி ஏற்பட்டால் வீறு கொண்டு எழும் பிள்ளைபோல் பிறந்த பொன்னாட்டுக்குப் பகைவரால் ஊறு ஏற்படும் தருவாயில் அதனைக் களைய போராடுவது நாட்டு மக்களின் கடமை. அதனை நோக்கமாகக் கொண்டே கவிஞரின் பேனா முனையும் எழுச்சிக் கோலம் வரைந்துள்ளது.

நாட்டைச் சீர்குலைக்கும் கொடிய எண்ணத்துடன் நம் நாட்டினுக்குள் புகுந்தவர்களின் வரம்பு மீறிய செயலை முறியடிக்க ஆள்பலம் தேவைப்படுவதால் நாட்டு குடிமக்களைத் தற்காப்பு அரனாகச் செயல்பட கவிஞர் அழைக்கிறார். மேலும், தற்காப்புச் செலவினத்திற்குப் பணம் தேவைப்படுவதால் தயங்காமல் பொருளுதவி செய்யுமாறும் கவிஞர் அறைகூவல் விடுக்கிறார்.

சிறிய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து பெரிதாக உருவாகிற சீர் மிகுந்த நம் மலேசிய நாட்டின்பால் வலிந்து பகைமை காட்டுபவர்களை நாம் தீர்த்து ஒழிப்பது காலத்தின் கட்டாயமாகும். நம்மைச் சீரோடும் சிறப்போடும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாய் நாட்டைப் பாதுகாத்து அதன் சிறப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திட நாம் பொருளுதவி செய்வது இன்றியமையாத தேவையாகும் என்று கவிஞர் வலியுறுத்துகிறார்.

ஆறுகளும் மலைத்தொடர்களும் நிரம்பி இயற்கை எழில் கொஞ்சும் மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் அன்புமிக்க உறவால் பிணைந்துள்ளனர். பலவித பண்பாட்டுக் கலைகளும் சிறந்தோங்கி வளர்ந்து வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க தாய் நிலத்தை வேற்று நாட்டவர் வெல்லும் எண்ணத்துடன் செயல்பட்டால் நம் வீரர்கள் எதிர்த்து வெடிக்கும் குண்டுகளின் தாக்குதலில் அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டுத் தொலைவில் போய் விழும் என்று கவிஞர் தம் சினத்தின் உச்சத்தில் நின்று கூறுகிறார்.

அவ்வகையில், நாட்டைத் தற்காக்கும் உன்னத நோக்கத்திற்குத் தேவையான வீரர்கள் வேண்டும் என்பதால் கவிஞர் பெற்றோர்களிடம் அறைகூவல் விடுக்கிறார். தங்கள் வீடுகளைச் சிறந்து விளங்கச் செய்வதற்குப் பெற்று வளர்த்து இளைஞர்களாக உருவாக்கியிருக்கிற குழந்தைகளை நாட்டைப் பகைவரிடமிருந்து காத்து அதன் தன்மதிப்பை விளங்கச் செய்வதற்குத் தருமாறு வேண்டுகிறார். பிள்ளைகளைப் பெற்றவர்களாக விளங்கும் அவர்களும் பகைவரால் விளையும் கேடுகளைக் களைந்து பெருமை விளையச் செய்ய இயன்ற உதவிகளைச் செய்யுமாறு கேட்கிறார்.

வேற்று நாட்டினர் நம் தாய் நாட்டின் மீது பகைமை கொண்டு லலிந்து போரைத் திணிக்க முயலுவதால் அவர்களை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் திரளாக அணிசேர வேண்டுமென்ற நம் தலைவர் துங்குவின் ஆணைக்குச் செவிசாய்க்கும்படி கவிஞர் வேண்டுகிறார். மேலும், வீறு கொண்ட வேங்கையென எதிரிகளை எதிர்க்க நாம் பொங்கி எழுந்துவிட்டால் அந்தத் தீயவர்களுக்கு நிலத்தின் அடியில்தான் இருப்பிடம் வாய்க்கும் என்ற உண்மைப் புலப்படும் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

அத்துடன், எப்படியாவது நம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் நேரான வழியைவிட்டு அங்கும் இங்குமாக மாறித் தப்பான பாதையில் பகைவர்கள் அடியெடுத்து வைத்துவிட்டனர். எனவே, அவர்கள் வைத்த ஒவ்வொரு காலடியையும் கூறாகச் செய்து, அவர்கள் மறுக்க இயலாது ஒப்புக் கொள்ளுமாறு நம் வீரத்தை அவர்களுக்கு உணர்த்திட வேண்டியது நம் கடப்பாடாகும் என்று கவிஞர் நினைவுறுத்துகிறார்.

புறத்தே பகை சூழும் காலத்தில், உள்ளே நிலவும் வேறுபாடுகள் நாட்டை வலிமைகுன்றச் செய்து பகைவருக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே, நாட்டுக்கு இடர்சூழும் காலத்தில் மக்கள் நாட்டுத் தலைவரின் ஆணையை ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் முழுமனத்துடன் ஏற்றுச் செயற்பட வேண்டியது முக்கியமானது என்ற கருத்தினையும் கவிஞர் முன்வைத்துள்ளார். அதைத் தவிர, ஒரு நாட்டில் எத்துணை இயற்கை எழிலும் வளமும் செறிந்திருந்தாலும், கலைகளும் பண்படும் வளர்ந்திருந்தாலும், புறப்பகைவரிடமிருந்து அந்நாட்டைப் பாதுகாக்க முடியாத மக்களுக்கு அந்த நலன்களும் வளங்களும் பயன்பட வாய்ப்பில்லை என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்க கவிஞர் தவறவில்லை.

ஆகவே, கவிஞர் கூறியபடி நாம் நன்றியுணர்ச்சியுடன் தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்படுவது இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் உலக அரங்கில் மலேசிய தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும்.

Wednesday, May 18, 2011

கவிவாணர் ஐ.உலகநாதன் (அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு)

கவிவாணர் ஐ.உலகநாதன் (மலேசியா / தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

பிறப்பு

ஈப்போ, மலேசியா


கல்வி / தொழில்

மலேசியாவில் கல்வி பயின்று, சிங்கையில் பல பணிகள் மேற்கொண்டார். பின்னர் பெங்களூரில் (இந்தியா) குடியேறினார்.


துறைகள் / திறன்கள்

கவிதை, இலக்கியச் சொற்பொழிவு, இதழியல்.


பணிகள்

சிங்கையில் 'மாதவி' இலக்கிய மாத இதழ்; பெங்களூரில் 'திருப்பம்' மாதமிருமுறை இதழ். பெங்களூர் இளம்பாவலர்களுக்குப் 'பாவலர் பூங்கா' என்னும் பயிலரங்கு நடத்துகிறார்.


படைப்புகள்

1954 முதல் கவிதை எழுது வருகிறார். இவரின் 'சந்தனக்கிண்ணம்' கவிதை நூல் மலேசியாவில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்தது. திருப்புமுனை, மகரயாழ், முத்துக்கோவை, கேட்டால் கேளுங்கள், புரட்சித்தலைவர் அந்தாதி, செந்தமிழ்க் கவசம், பாவாணர் புகழ்ச்சிந்து, கண்ணம்மா, உடைந்த வீணை, தமயந்தி என்ற கவிதை நூல்களும், பாலைவன ஒட்டகத்தின் சோலைவனப் பயணம் என்ற பயணக்கட்டுரை நூலும் எழுதியுள்ளார்.


சிறப்பு அடை

கவிவாணர், பாவரசு


விருதுகள் / பரிசுகள்

1985-இல் தமிழக அரசின் 'பாவேந்தர் விருது'. இதுவன்றி வேறுபல விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)