Sunday, February 21, 2010

நாவல் (பொன் விலங்கு) : நீண்ட கேள்வி - கதைப்பின்னல்

பொன் விலங்கு நாவலில் ஆசிரியர் கையாண்டுள்ள கதைப் பின்னலை விளக்கி ஒரு கட்டுரை வரைக.

பொன் விலங்கு தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஒரு சிறந்த நாவலாகும். இவர் படைத்தளித்த நூல்களில் குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், சமுதாய வீதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொன் விலங்கு நாவலின் கதை பின்னல் "தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்நாவலின் கதைப் பின்னலை நாம் ஐந்து கூறுகளில் ஆராயலாம்.

முதற்கூறு தொடக்கம். இந்நாவலின் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளும் சிறந்த கொள்கையும் உடைய முதன்மைக் கதாப்பாத்திரமாகச் சத்தியமூர்த்தி அறிமுகமாகிறான். எம்.ஏ. பட்டதாரியான அவன் வயதான பெற்றோரையும் இரு தங்கைகளையும் பராமரிக்க வேண்டிய சூழலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் இரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் அவன் கைப்பெட்டியைச் சிறுவன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓட அவனை மன்னித்து விடுகிறான். இங்கே அவனின் இரக்கக் குணம் வெளிப்படுகிறது. நேர்முகப்பேட்டியின் போது அவனது அறிவாற்றல் வெளிப்படுகிறது. துணைக் கதைமாந்தர்களான மோகினி, பூபதி, பாரதி போன்றோரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். ஒழுக்கமும் கட்டுபாடும் நிறைந்த தரமான கல்லூரியை நடத்தும் தொழிலதிபரான பூபதியால் கவரப்படுகிறான். பேட்டி முடிந்து மதுரை திரும்பும் சத்தியமூர்த்தி இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைக் காப்பாற்றுகிறான்.

இரண்டாவது கூறு கதையின் வளர்ச்சி ஆகும். இந்நாவலின் வளர்ச்சியில் மோகினியோடு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்ட தொடர்பு நெருக்கமாகி, விட்டு விலக முடியாத பொன் விலங்காக அவனை அரவணைக்கிறது. எதிர்மறைக் கதைப்பாத்திரங்களான கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். மூன்லைட் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான கண்ணாயிரம் மோகினியின் தாயார் முத்தழகு அம்மாளின் பணத்தாசையைப் பயன்படுத்தி தாமும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார். புகழுக்காக பணத்தை அள்ளி இறைக்கும் ஜமீந்தாரை மோகினி குடும்பத்திற்கு அறிமுகம் செய்கிறார். வேலைக்காகக் காத்திருந்த சத்தியமூர்த்திக்கு வேலைக்கான ஆர்டர் வருகிறது. சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினர், மோகினி, நண்பன் குமரப்பன் ஆகியோருடன் விடைபெற்று மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.

மூன்றாவது கூறான இந்நாவலின் சிக்கலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு வேலைக்குப் போனது முதல் சத்தியமூர்த்தி பல இன்னல்களை எதிர்நோக்குகிறான். அவன் அன்புக்காக ஏங்கி அவனிடம் நெருங்கி வரும் பாரதியிடம் கவனமாகப் பழகுகிறான். சத்தியமூர்த்தி தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக எண்ணி அவள் வருந்துகிறாள். பூபதியின் நன்மதிப்பைப் பெற்றுப் பல புதிய பொறுப்புகளுக்குச் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்ட போது மற்றவர்களின் பொறாமைக்கு அவன் ஆளாகிறான். அவனுடைய செயலில் பலரும் குற்றம் காண்கின்றனர். கார் விபத்தில் தாயை இழந்த மோகினியை ஜமீன்தார் மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். ஆனால் அவளோ மறுக்கிறாள். சத்தியமூர்த்திக்குத் துணையாக இருந்த பூபதி விமான விபத்தில் மரணமடைந்தது அவன் நிலைமையை மோசமாக்குகிறது. கல்லூரியின் புதிய நிர்வாகியாகும் ஜமீன்தார் அவனைப் பழி வாங்க திட்டமிடுகிறார். அவர் ஏற்பாட்டில் சத்தியமூர்த்தி கைது செய்யப்படுகிறான். சத்தியமூர்த்தியை எதிர்க்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.

இதனையடுத்த கூறு உச்சம் ஆகும். பொன் விலங்கு நாவலின் உச்சத்தில் சத்தியமூர்த்தியிடமிருந்து எப்படியாவது மோகினியைப் பிரித்து அவளைத் தாம் மணக்க வேண்டும் என ஜமீந்தார் திட்டமிடுகிறார். அவரும் மோகினியும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தைச் சுவரில் மாட்டி சத்தியமூர்த்தியை நம்பும்படி செய்கிறார். மோகினி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கும் சத்தியமூர்த்தி அவளை வெறுத்து ஒதுக்குகிறான்.

கதைப் பின்னலின் இறுதி கூறான சிக்கல் அவிழ்ப்பில் பாரதி மூலம் மோகினியின் மரணம் பற்றி அறியும் சத்தியமூர்த்தி தன் தவற்றுக்காகக் குமுறி அழுகிறான். மோகினியின் சிதைக்கு தன் இறுதி மரியாதையைச் செய்கிறான். கண்ணாயிரமும் ஜமிந்தாரும் தாங்கள் செய்த அநியாயத்திற்குத் தண்டனையாகக் கள்ளநோட்டுக் கும்பலோடு கொண்ட தொடர்பால் கைது செய்யப்படுகிறார்கள். மோகினியின் நினைவைச் சுமந்துக் கொண்டு ஜெர்மனிக்குப் பயணமாகிறான் சத்தியமூர்த்தி.

இந்நாவலின் கதைப் பின்னலின் மூலம் நாவலாசிரியர் பல நல்ல கருத்துகளை மிக சுவாரசியமாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். இதுவே, கதைக்குத் திருப்பத்தையும் விறுவிறுப்பையும் தந்து வாசகர் படித்து சுவைக்கும் நாவலாக பொன் விலங்கு நாவல் அமைய உதவி உள்ளது.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் செல்வி க.காளிஷ்வரி, ஸ்ரீ நிபோங் இடைநிலைப்பள்ளி, தென் செபெராங் பிறை,பினாங்கு, மலேசியா.நன்றி

Friday, February 19, 2010

கவிதை: நீண்ட கேள்வி - எங்கள் நாடு

எங்கள் நாடு என்ற கவிதையில் தன் நாட்டின் சிறப்புகளாகக் கவிஞர் கூறுவனவற்றையும் இக்கவிதை வழி நாம் பெறும் படிப்பினையையும் விளக்கி எழுதுக.

நாடறிந்த மலேசியக் கவிஞர் சங்கு சண்முகத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த ‘எங்கள் நாடு’ எனும் கவிதை, கவிதைப் பூங்கொத்து என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதையில் கவிஞர் தன் தாய்நாடான மலேசியாவின் தனிச்சிறப்புகளை எல்லாம் பெருமிதத்துடன் விளக்கியுள்ளார்.

சந்தக் கவிஞரான இவர் மலேசியத் திருநாட்டைத் தாயாக உருவகித்துப் பாடுகிறார். “இந்த நாட்டு மண்ணிலே இன்றிருக்கும் உயிர்கள் யாவும் எங்கள் தாயின் பிள்ளையே” என்ற கூற்றின் வழி மலாய், சீனர், இந்தியர், கடாசான், டூசூன் போன்ற பல்லின மக்கள் யாவரும் கலை, பண்பாடு, சமயம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி வருகின்றனர். பல இனங்களிடையே நிலவும் நல்ல உறவும் ஒற்றுமையும் மலேசியாவை உலக அரங்கில் நிமிர வைத்துள்ளது.

மேலும், அடர்ந்த காடு மேடாக இருந்த இந்த ஸ்வர்ண பூமியைத் தங்கள் கடின உழைப்பால் சீர்ப்படுத்திச் செம்மையாக்கி இனிய வாழுமிடமாக மாற்றிய நம் முன்னோரைக் கவிஞர் நினைவுகூற வைத்துள்ளளார். மக்களின் இனிய பண்பையும் ஒற்றுமைச் சிறப்பையும் தென்றல், ஆறு போன்ற இயற்கைச் செல்வங்கள் வாழ்த்தி மகிழ்வதாகக் கவிஞர் குறிப்பிடுதவன் மூலம் நாட்டின் இயற்கை வளமும் மக்களின் உழைப்பும் போற்றப்படவேண்டிய ஒன்று என்று அறிய முடிகிறது.

இதனைத் தொடர்ந்து பகைமை உணர்ச்சி நீங்கி தோழமை உணர்வுடன் மலேசிய மக்கள் வாழ்வதால் இப்புண்ணிய பூமி அமைதிப் பூங்காவாகத் திகழும் பேறு பெற்றுள்ளதைக் கவிஞர் தம் கவிதையின் வழி இயம்பியுள்ளார். தான் குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து இளைஞனாகி ஒரு பெண்ணை மணந்து வாழும் இந்நாட்டில் வீணான குழப்பங்கள் இல்லை என்கிறார். எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே கொண்டு ஒருவர் பால் ஒருவர் அன்பு கொள்ளும் திறத்தை மக்கள் வளர்த்து வருவதால் இங்கு வீணான குழப்பங்களும் சண்டைச் சச்சரவுகளும் இல்லை எனக் கவிஞர் பெருமிதத்துடன் கூறுகின்றார். அவ்வாறு யாராகினும் வீணான பகை உணர்வுக்கு இடங்கொடுத்தால் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் எனவும் சூளுரைக்கின்றார்.

இறுதியாக கவிஞர், 'உன்னாலே மலேசியா' என்ற வாசகத்திற்கும் பொருள் கூறும் வண்ணம் மக்கள் இங்கு நல்வாழ்வுப் பெற்று வாழ்ந்திட வரங்கொடுத்த தன் தாய் நாட்டை வாழ்த்தி வணங்குகிறார். ஈன்றெடுத்த குழந்தை எத்தனை என்றாலும் குறைவின்றி பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய் போல, மக்கள் அதிகமாக வந்து குடியேறினாலும் தன் நிலத்தின் வளங்களை வழங்கி அனைவரையும் வாழ வைக்கும் நாடாகிய தாயைச் சிந்துக் கவிகளால் போற்றிப் பாடி சிரம் தாழ்த்தி, கைகளைப் குவித்து வணங்கி, தாயே! என் உயிரையும் உனக்காகத் தருவேன் என்று கவிஞர் தன் நாட்டுப் பற்றை வெளிக்கொணர்கிறார்.

தன் தாய் நாட்டின் சிறப்புகளை எடுத்தியம்பும் அதே வேளையில் சில படிப்பினைகளையும் நம் சிந்தனைக்கு விருந்தாக்கி உள்ளார் கவிஞர். தீவிரவாதம், அரசியல் நிலைத்தன்மை இன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை, உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய உலகியல் மலேசியாவின் பல்லின மக்கள் சுபிட்சமாய் வாழும் நிலை பெற்றதற்கு வேற்றுமைகளைக் களைந்த ஒற்றுமை உணர்வே என்பதனை நாம் உணர வேண்டும். இந்நிலை நீடிக்க வேண்டுமெனில் நாம் புறத்தாக்குதலிலிருந்து தற்காத்துப் கொள்ளும் வகையில் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில், இரத்தப் பெருக்கெடுத்து ஓடும் போர்க்களமாக இப்பூமி மாறக்கூடும். அப்பொழுது இத்தாய் மண்ணில் செழித்து நிற்கும் இயற்கை வளங்கள் பயனற்றுப் போகும். ஒவ்வொரு குடிமகனும் தன் தாய் மண்ணை நேசித்து அதன் உயர்வுக்குப் பாடுபட வேண்டும் என்ற படிப்பினையைக் கவிஞர் நமக்குத் தந்துள்ளார்.

ஆகவே, பிறந்த நாட்டை தாயாகவே எண்ணி அதன் புகழ்பாடும் கவிஞரின் பாங்கு நம்மிடத்திலும் நிலைபெற வேண்டும். அவரின் பேனா முனையில் தெறித்துள்ள சிந்தனை முத்துகளை நாம் படிப்பினையாகக் கொண்டு வாழமுற்பட வேண்டும்.

(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி