Thursday, February 24, 2011

யார் தமிழ்படிப்பார் (கவிஞர் பொன்முடி) - கவிதையில் காணப்படும் சிறப்புகள்

கவிஞர் பொன்முடி (மலேசியா) புனைந்த யார் தமிழ் படிப்பார் என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்
தலைப்பு
யார் தமிழ் படிப்பார்

கவிஞர்
பொன்முடி(இயற்பெயர் : திரு.சுப்பிரமணியம்) - மலேசியா

மையக்கரு
மாணவர்கள் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்க்கல்வி பயில்வது தொடர்ந்தால்தான் நம் நாட்டில் தமிழ் வளரும்.

யாப்பு வகை
ஆசிரியப்பா

அணிச்சிறப்புகள்
உருவக அணி
உதாரணம்:
"தமிழ்மொழித் தேனே"
தமிழ் மொழி தேனாக உருவகம்.

உதாரணம்:
"தாய்நலங் காப்பது சேய்கடன் தானே"
தமிழ் தாயாக உருவகம்.

உதாரணம்:
"தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா"

தமிழ்மொழி, சுமக்கப்பட்டு பின் இறக்கி வைக்கப்பட்டதொரு பொருளாக உருவகம்.

உதாரணம்:
"தாயா அருமைச்சேயினுக் கெதிராய்த் தீயாய் மாறித் தீய்க்க
முனைவாள்"

தமிழ் தாயாக உருவகம்.

உவமை அணி
உதாரணம்:
"பொற்றதாயைப் பிள்ளை மறுப்பது"
தாய் மொழியை மறுப்பது தாயை மறுப்பதைப் போன்றது.

உதாரணம்:
"உற்ற தாய் அன்பினை உதறிப் போவது"
தமிழ்ப்பற்றை உதறிப் போவது தாயன்பை உதறிப் போவதைப் போன்றது.
உதாரணம்:
"சொந்தம் என்று வந்த பந்தம் சோறு போடுமா"
தமிழ்மொழி சோறு போடுமா என்று கேன்பதைப் போன்றது.

உதாரணம்:
"இமயச் செயல்"
இமயம் போன்ற உயர்ந்த செயல்.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)

Wednesday, February 16, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 5

பயிற்சி 5

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. குத்துவிளக்குப் பத்திரிகையில் கேலிச்சித்திரம் வரைபவர் யார்? (1 புள்ளி)


ஆ. ஏன் மோகினி சத்தியமூர்த்தியை இரண்டாவது முறையாகத் தன் வீட்டிற்கு அழைத்தாள்?.(2 புள்ளி)


இ. குமரப்பன் மல்லிகைப் பந்தலுக்கு வருகை தந்ததன் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளை காலையிலிருந்துதான் நான் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பாட்டில் நானே தங்கிக் கொள்வதுதான் முறை! இல்லையா?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டபோது அவள் முகம் வாடிவிட்டது.(அத்தியாயம் 16, பக்கம் 218)


  1. இவ்வுரையாடலில் வரும் 'அவன்' மற்றும் 'அவள்' யாவர்? (2 புள்ளி)


  2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 5
மாதிரி விடை

அ. குமரப்பன்

ஆ. நீலக்கல் பொருந்திய மோதிரத்தைச் சத்தியமூர்த்திக்கு அணிவிப்பதற்காக

இ. குத்துவிளக்குப் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணி.
நிர்வாக உரிமை மஞ்சள் பட்டி ஜமீந்தாருக்கு மாறியதால்.
நண்பன் சத்தியமூர்த்தி வேலை செய்யும் இடத்திற்குச் செல்லுதல்.
தனக்குத் தெரிந்த கைத்தொழிலைச் செய்ய எண்ணுதல்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.

  1. சத்தியமூர்த்தி, பாரதி

  2. கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் உபசாரம் செய்கிறான்.
    சத்தியமூர்த்தி பாரதியின் பிடிவாதத்திற்கு உடன்படுகிறான்.
    தனது காரில் கல்லூரிக்கு அனுப்பி வாட்ச்மேனை கொண்டு தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கிறாள். அதன்பிறகே அவள் வீடு திரும்புகிறாள்.

(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)

Monday, February 14, 2011

கவிஞர் பொன்முடி (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

கவிஞர் பொன்முடி (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு
(இயற்பெயர் : சுப்பிரமணியம்)


பிறப்பு

27-11-1939


கல்வி / தொழில்

இடைநிலைக் கல்விபெற்று, 1959-1971 வரை ஆசிரியராகவும், 1972-1994 வரை தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.


துறைகள் / திறன்கள்

கவிதை, உரைவீச்சு, கட்டுரை


பணிகள்

மணிமன்ற அமைப்பாளராகவும்; திருமணத் துணைப் பதிவதிகாரியாகவும்; ஆலயத் தலைவராகவும்; ம.இ.கா. கிளையில் பல பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழ்மொழி சிறப்புப் பயிற்றுநராகவும்; மாவட்டக் கல்விப் பொறுப்பாளராகவும்; புதிய பாடத்திட்டக் குழு, பாட நூல் ஆக்கக் குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைப் பயிலரங்குகளும் சமய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார்.


படைப்புகள்

35 ஆண்டுகளாக எழுதுபவர். கவிதை, சிறுவர் கவிதை, சிறுவர் இலக்கியம் என இவர் எழுதி வெளியானவை 16 நூல்கள்.


புனைப்பெயர்

பொன்முடி.


விருதுகள் / பரிசுகள்

PJK, ASA அரசவிருதுகளைப் பெற்றவர். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம், இலக்கியக் கழகத்தின் குழந்தை எழுத்தாளர் விருது, கவிதை மாநாட்டில் தங்கப் பதக்கம் ஆகியவற்றுடன் பல அமைப்புகளின் இலக்கியப் பரிசுகளும் பெற்றுள்ளார்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

Saturday, February 12, 2011

யார் தமிழ் படிப்பார்? (கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா )

யார் தமிழ் படிப்பார்?
(கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா)



தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே
தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே
தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்
இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!
தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே
தாய்நலங் காப்பது சேய்கடன் தானே
தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?
ஓராண் டல்ல ஈராண் டல்ல
ஆறாண் டாக அடிப்படைக் கல்வி
அளித்த மொழியின் அருமை மறந்து
புளித்தது என்று புகல்வதா இன்று!
ஆதியில் அறிவில் உறைத்த தமிழை
பாதியில் ஏளனம் படுத்தி ஒதுக்கிட
எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்
தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்
கண்ணும் கூடக் காண மறுக்கலாம்
பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்
உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்
மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?
கற்றவர் அவையில் கையொலி பெறுமா?
சொந்தம் என்று வந்த பந்தம்
சோறு போடுமா என்று கேட்கும்
ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்
வேறினம் இல்லை விதிவிதி என்றே
வீறு குறைந்த வீணன் இவனைக்
கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்
தீரா தென்றன் சினம்தீ ராது!
எந்த நாட்டினில் எந்த மொழிதான்
எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
துவையில் கறியுடன் ஊட்டு கின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
மொழியில் பழியை ஏற்றுவ தில்லை
தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்
தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்
தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்
இப்படி யாஇவன் செப்பித் திரிவது
ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது
தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்
தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்
மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு
மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்
உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்
பெருமை வாழ்வைப் பெறவா முடியும்
மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும்
மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்
தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்
தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்
தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்
இமயச் செயலாம் என்மா ணவரே!

(கவிதைப் பூங்கொத்து)

Friday, February 11, 2011

நீண்ட கேள்வி (நாவல்) - கதைப்பின்னல்

பொன் விலங்கு நாவலில் ஆசிரியர் கையாண்டுள்ள கதைப் பின்னலை விளக்கி ஒரு கட்டுரை வரைக.


பொன் விலங்கு தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஒரு சிறந்த நாவலாகும். இவர் படைத்தளித்த நூல்களில் குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், சமுதாய வீதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொன் விலங்கு நாவலின் கதை பின்னல் "தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்நாவலின் கதைப் பின்னலை நாம் ஐந்து கூறுகளில் ஆராயலாம்.

முதற்கூறு தொடக்கம். இந்நாவலின் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளும் சிறந்த கொள்கையும் உடைய முதன்மைக் கதாப்பாத்திரமாகச் சத்தியமூர்த்தி அறிமுகமாகிறான். எம்.ஏ. பட்டதாரியான அவன் வயதான பெற்றோரையும் இரு தங்கைகளையும் பராமரிக்க வேண்டிய சூழலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் இரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் அவன் கைப்பெட்டியைச் சிறுவன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓட அவனைக் கையும்களவுமாகப் பிடித்துவிடுகிறான். பிறகு இத்திருடனுக்கு அறிவுரைகள் கூறி அவனது செயலை மன்னித்து விடுகிறான். இங்கே அவனின் இரக்கக் குணம் வெளிப்படுகிறது. நேர்முகப்பேட்டியின் போது அவனது அறிவாற்றல் வெளிப்படுகிறது. துணைக் கதைமாந்தர்களான மோகினி, பூபதி, பாரதி போன்றோரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். ஒழுக்கமும் கட்டுபாடும் நிறைந்த தரமான கல்லூரியை நடத்தும் தொழிலதிபரான பூபதியால் கவரப்படுகிறான். பேட்டி முடிந்து மதுரை திரும்பும் சத்தியமூர்த்தி இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைக் காப்பாற்றுகிறான்.

இரண்டாவது கூறு கதையின் வளர்ச்சி ஆகும். இந்நாவலின் வளர்ச்சியில் மோகினியோடு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்ட தொடர்பு நெருக்கமாகி, விட்டு விலக முடியாத பொன் விலங்காக அவனை அரவணைக்கிறது. எதிர்மறைக் கதைப்பாத்திரங்களான கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். மூன்லைட் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான கண்ணாயிரம் மோகினியின் தாயார் முத்தழகு அம்மாளின் பணத்தாசையைப் பயன்படுத்தி தாமும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார். புகழுக்காக பணத்தை அள்ளி இறைக்கும் ஜமீந்தாரை மோகினி குடும்பத்திற்கு அறிமுகம் செய்கிறார். வேலைக்காகக் காத்திருந்த சத்தியமூர்த்திக்கு வேலைக்கான ஆர்டர் வருகிறது. சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினர், மோகினி, நண்பன் குமரப்பன் ஆகியோருடன் விடைபெற்று மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.

மூன்றாவது கூறான இந்நாவலின் சிக்கலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு வேலைக்குப் போனது முதல் சத்தியமூர்த்தி பல இன்னல்களை எதிர்நோக்குகிறான். அவன் அன்புக்காக ஏங்கி அவனிடம் நெருங்கி வரும் பாரதியிடம் கவனமாகப் பழகுகிறான். சத்தியமூர்த்தி தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக எண்ணி அவள் வருந்துகிறாள். பூபதியின் நன்மதிப்பைப் பெற்றுப் பல புதிய பொறுப்புகளுக்குச் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்ட போது மற்றவர்களின் பொறாமைக்கு அவன் ஆளாகிறான். அவனுடைய செயலில் பலரும் குற்றம் காண்கின்றனர். கார் விபத்தில் தாயை இழந்த மோகினியை ஜமீன்தார் மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். ஆனால் அவளோ மறுக்கிறாள். சத்தியமூர்த்திக்குத் துணையாக இருந்த பூபதி விமான விபத்தில் மரணமடைந்தது அவன் நிலைமையை மோசமாக்குகிறது. கல்லூரியின் புதிய நிர்வாகியாகும் ஜமீன்தார் அவனைப் பழி வாங்க திட்டமிடுகிறார். அவர் ஏற்பாட்டில் சத்தியமூர்த்தி கைது செய்யப்படுகிறான். சத்தியமூர்த்தியை எதிர்க்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.

இதனையடுத்த கூறு உச்சம் ஆகும். பொன் விலங்கு நாவலின் உச்சத்தில் சத்தியமூர்த்தியிடமிருந்து எப்படியாவது மோகினியைப் பிரித்து அவளைத் தாம் மணக்க வேண்டும் என ஜமீந்தார் திட்டமிடுகிறார். அவரும் மோகினியும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தைச் சுவரில் மாட்டி சத்தியமூர்த்தியை நம்பும்படி செய்கிறார். மோகினி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கும் சத்தியமூர்த்தி அவளை வெறுத்து ஒதுக்குகிறான்.

கதைப் பின்னலின் இறுதி கூறான சிக்கல் அவிழ்ப்பில் பாரதி மூலம் மோகினியின் மரணம் பற்றி அறியும் சத்தியமூர்த்தி தன் தவற்றுக்காகக் குமுறி அழுகிறான். மோகினியின் சிதைக்கு தன் இறுதி மரியாதையைச் செய்கிறான். கண்ணாயிரமும் ஜமிந்தாரும் தாங்கள் செய்த அநியாயத்திற்குத் தண்டனையாகக் கள்ளநோட்டுக் கும்பலோடு கொண்ட தொடர்பால் கைது செய்யப்படுகிறார்கள். மோகினியின் நினைவைச் சுமந்துக் கொண்டு ஜெர்மனிக்குப் பயணமாகிறான் சத்தியமூர்த்தி.

இந்நாவலின் கதைப் பின்னலின் மூலம் நாவலாசிரியர் பல நல்ல கருத்துகளை மிக சுவாரசியமாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். இதுவே, கதைக்குத் திருப்பத்தையும் விறுவிறுப்பையும் தந்து வாசகர் படித்து சுவைக்கும் நாவலாக பொன் விலங்கு நாவல் அமைய உதவி உள்ளது.

படைப்பு:
செல்வி க.காளிஷ்வரி, ஸ்ரீ நிபோங் இடைநிலைப்பள்ளி, நிபோங் திபால், தென் செபெராங் பிறை, பினாங்கு.

Wednesday, February 9, 2011

மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியம் (பொதுக் கட்டுரை 2)

2012ஆம் கல்வியாண்டில் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்தில் அறிமுகப்படுத்த இருக்கின்ற மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியத்தைப் பற்றி மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்த செய்தி.
(நன்றி, மலேசிய நண்பன் ஞாயிற்றுக்கிழமை 6-2-2011)


உள்நாட்டுப் படைப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழ் நூல்களை எஸ்.பி.எம். இலக்கியப் பாடத்திற்குக் கல்வி அமைச்சு ஏற்பதில்லை என்னும் குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

அக்குறையை நீக்கும் வண்ணம் 2012-2015ஆம் ஆண்டுகளுக்குரிய இலக்கியப் பாடத்திற்கு (கவிதை) அருள்மதியம் பதிப்பகம் வெளியிட்ட மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தை அரசு ஏற்றுள்ளது. நாவல் பிரிவிற்கு ஐ.இளவழகு எழுதி, சன்ரைஸ் ஸ்டோர் வெளியிட்ட இலட்சியப் பயணத்தைத் தெரிவு செய்துள்ளது. இது மலேசியத் தமிழ்ப் படைப்பு இலக்கியத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாகும். உள்நாட்டு இலக்கியம், எதிர்காலத் தலைமுறையான மாணவர்களிடையே பரவவும், அவர்களுக்கு நாட்டுப் பற்று, சமுதாய உணர்வு, தன்முனைப்புப் போன்றவை மேலோங்கவும் இது வழிவகுக்கும்.

மலேசியக் கல்வி அமைச்சு, பாட நூலாக அங்கீகரித்துள்ள மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலைப் பற்றி இங்குச் சிறிது குறிப்பிடுவது முதன்மையாகும்.

முனைவர் முரசு.நெடுமாறன் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அரிதின் முயன்றுதேடித் திரட்டிய முயற்சியாகும். அவர் நியமித்த தகுதி வாய்ந்த குழுவினர்தம் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும் உருவானது இக்களஞ்சியம். இது 254 மலேசிய, சிங்கப்பூர்க் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழ்க் கூறு நல்லுலகம் நிமிர்ந்து பார்க்க வைத்த ஓர் அரும்படையல் ஆகும். புலம் பெயர்ந்த ஒரு தமிழினப் பிரிவு, தாய் தமிழுக்குச் சூட்டிய ஒப்பற்ற ஓர் அணியாகும். இக்களஞ்சியம் இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு தலைமைத் தொகுப்பாசிரியருக்கு உயரிய பாவேந்தர் பாரதிதாசன் விருதளித்துச் சிறப்புச் செய்தது (1978). இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அந்நூலுக்கு முதல் பரிசளித்தது. 1977ஆம் ஆண்டின் ‘சிறந்த நூலாசிரியர்’ என்னும் விருதையும் தலைமைத் தொகுப்பாசிரியருக்கு அளித்தது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் கவிஞர்களுக்கும் களஞ்சியத்தில் இடம் தந்தமையைப் பாராட்டி ‘தமிழவேள்’ விருதளித்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு வெ.5000.00 வழங்கி, அவ்வாண்டின் சிறந்த நூல் என்னும் சிறப்பைக் களஞ்சியத்திற்கு வழங்கியது. இப்பொழுது மலேசியக் கல்வி அமைச்சும் தன் அங்கீகாரத்தை அளித்துள்ளளது.

இங்ஙனம் தமிழ்க்கூறு நல்லுலகால் ஒரு சேரப் பாராட்டப்பெற்ற இக்களஞ்சிய உருவாக்கத்திற்குத் துணை நின்றவர்களைக் குறுப்பிடுவது நன்றிக்குரிய செயாலாகும். நூல் உருவாக்கப் பெரும் பணிக்குத் தமிழறிஞர் டத்தோ ஆ.சோதிநாதன் போன்ற சான்றோர் பெருமக்கள் தகவுரை நல்கி வழிநடத்தியுள்ளனர். பெரும் புலவர்களாகவும் பதிப்புச் செம்பல்களாகவும் விளங்கிய நினைவில் வாழும் பேரா இராம சுப்பிரமணியரும் புலவரடல் அ.நக்கீர அடிகள் இங்குவந்து ஆறு மாதங்கள் தங்கி ஆசிரியர் குழுவுக்கு வழிகாட்டி நூலை உரிய பதிப்பாக உருவாக்க அரும்பாடுபட்டனர். முனைவர் முரசு நெடுமாறனுடன் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற புலவர் ப.மு.அன்வர், எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன், செவ்விசைச் சித்தர் ரெ.சண்முகம் ஆகியோர் ஆற்றிய பணி போற்றுதற்குரிய அரும்பணியாகும். பல்லாயிரக்கணக்கான கவிதைகளைப் படித்து, ஆய்வுக்குரிய கவிதைகளைத் தெரிவு செய்யும் பணியில் கவிஞரேறு அமலதாசன் (சிங்கப்பூர்), சதாசிவம் வீரையா (சிங்கப்பூர்), சை.பீர்.முகம்மது, பி.கோவிந்தசாமி, மணிக்கவிஞர் பாதாசன், கவிச்சுடர் காரைக்கிழார், கவிஞர் மைதீ.சுல்தான் ஆகியோர் ஈடுபட்டு ஒத்துழைத்தனர்.

1887 முதல் 1987ஆம் ஆண்டு வரையாலான நூறு ஆண்டு காலக் கவிதைகளை ஆய்வு செய்து 650 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கும் பணியும் தமிழபம், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாட்டுத் தமிழர் வரலாற்றைத் தேடித் திரட்டி வரலாற்று வாயில் எழுதும் பணியும், கவிஞர்களைப் பற்றிய குறிப்புகள், பாடல்களில் புலங்கள் போன்றவற்றைத் தொகுத்தெழுதவும் பத்தாண்டு காலம் செலவானது.

இந்த நீண்ட காலகட்டத்தில் எத்தனையோ சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும், தொகுப்புப் பணி தொடர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துத் தொகுப்புக் குழுவும் பதிப்புக் குழுவும் தம் பணிகளைச் செம்மையாய் நிறைவேற்றி தமிழ்க்கூறு நல்லுலகில் ஓர் அழுத்தமானவரலாற்றைப் பதித்தன. மேற்படி பட்டியலில் இடம்பெறாத இன்னும் பல தொண்டு மனங்களின் உழைப்பும் இங்குக் குறிக்கத்தக்கனவாகும்.

ஓர் அரசோ, பல்கலைக்கழகமோ மேற்கொள்ள வேண்டிய பெருஞ் செயலை, தனி மாந்தர் ஒருவர் தலைமையேற்று, உறுதியாக நின்று எல்லாரையும் அரவணைத்துச் செயலாற்றி வெற்றிக்கண்டிருப்பது வியந்து பாராட்டுதற்குரிய தென்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகின்றனர்.

1080 பக்கங்கள் கொண்ட பெருநூலான இத்தொகுப்பிலிருந்து இலக்கியப் பாடத்திற்கேற்ற முப்பது கவிதைகளை மட்டும் தொகுத்து மாணவர்ப் பதிப்பு ஒன்றை வெளியிடும் முயற்சி நடந்து வருகிறது.

Monday, February 7, 2011

கவிதை பாகம் 2 - (‘தமிழ்க்கவிதை’யில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக)

‘தமிழ்க்கவிதை’யில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.


நற்றமிழ்க் கவிஞர் க. பெருமாள் அவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘தமிழ்க்கவிதை’ என்ற தலைப்பிலான கவிதை, ‘கவிதைப்பூங்கொத்து’ எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கை நுகர்ச்சியின் உணர்வு கலந்த கலையாக்கமே தமிழ்க்கவிதை என்ற மையக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே இக்கவிதை உருவாகியுள்ளது.

கவிதை என்பது கடினமான இலக்கிய வடிவம் என்ற மனப்போக்கு கொண்டவர்களுக்கு, தமிழ்க்கவிதை தனித்தன்மை வாய்ந்தது எனவும் இலக்கிய இன்பத்தினை ஊட்ட வல்லது என்ற முகாமையான கருத்து இக்கவிதையில் வெளிப்படுகிறது. தான் பெற்ற அனுபவத்தையும் இன்பத்தையும் யாவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கவிஞர் பல கருத்துகளைத் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்.

அவ்வகையில், கவிதை என்பது எதுகை, எழுத்து, அசை, சீர், தளை போன்றவற்றை முயன்று தேடி வலிந்து உருவாக்குவது அன்று எனவும் ஊக்கத்துடன் கவிதை இயற்றும் கலையை உரிய முறையில் படிப்படியாக முயன்று கற்றால் அதன் சுவையில் மெய்மறந்து ஒன்றிப் போய்விடலாம் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார். இவ்வாறே தானும் தமிழ்க்கவிதையைப் பயின்று கோடி இன்பம் பெற்றதாகக் கவிஞர் தன்னையே முன்னுதாரணமாகக் கூறுகிறார்.

மேலும், தமிழ்க்கவிதை இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்யும் திறன் பெற்றது. தமிழர்களிடையே, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே’ என்ற கவிதை வரிகளை மொழிந்தறியா வாய் இருப்பது அரிதே. பாவேந்தர் பாரதிதாசனின் அந்த இனிய கவிதை வரிகள், ஆழக் கடலில் மூழ்கி முத்தை எடுத்து விட்டது போன்ற பெருமகிழ்ச்சியைப் பொங்கச் செய்து அருமைமிகு தமிழர்களின் நாவில் எல்லாம் மணம் பரப்புகிற, அமுதின் சுவை கொண்ட பாட்டாகத் தொடர்ந்து அவர்களைச் சூழ்ந்து நின்று சுடர்வீசிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. யாழும் குழலும் போன்ற இசைக்கருவிகளால் பெறக்கூடிய இசைவகைகளை எல்லாம் ஒன்றாக இணைத்து வழங்குகிற இன்பச்சுவையின் உச்சநிலை வளர நம்மை இட்டுச் செல்லக்கூடியது கவிதை என்று அதன் மேன்மையைக் கவிஞர் தெளிவுறுத்துகிறார்.

தொடர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், தொடங்கியதெல்லாம் வெற்றிபெறும் வகையில், உள்ளத்தில் வெளிச்சம் தரக் கூடிய வல்லமை பெற்றது தமிழ்க்கவிதை. வீரச் சுவை கொண்ட எழுச்சிப் பாட்டு, மழலைச் செல்வங்களுக்கு அமைதியான உறக்கத்தைத் தரும் தாலாட்டு, வெற்றியின் பெருமிதத்தை உணர்த்தும் பரணி பாட்டு, புகழுக்கு மேலும் சிறப்பூட்டும் வாழ்த்துப் பாட்டு போன்ற பல்வகை கவிதைகள் தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருமித்து வாழ்ந்து கொண்டிருப்பது வெள்ளிடைமலை. இதனாலேயே தமிழர் வாழ்வு பெருமையும் சிறப்பும் பெற்று விளங்குகிறதெனவும் கவிஞர் உணர்த்துகிறார்.

கவிதை என்பது உலகப்பொதுநிலையில் ஓர் இலக்கிய வடிவம் என்னும் நிலையில் பல பயன்களையும் சுவைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால், ‘தமிழ்க்கவிதை’ என்பது அவற்றுக்கெல்லாம் அப்பால், தமிழர்களின் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு கூறாக காலங்காலமாக விளங்கி வந்திருக்கிறது என்ற கருத்தினை கவிஞர் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனைத் தவிர்த்து தொன்று தொட்டு வளர்ந்து வரும் தமிழ்க்கவிதை உலகமயமாக்குதல் என்னும் பெருவெள்ளத்தில் தனது தனித்தன்மையை இழந்துவிடுமாறு விட்டுவிடக் கூடாது என்பதையும் மறைமுகமாகக் கவிஞர் வலியுறுத்துகின்றார்.

ஆகவே, செம்மொழியாம் தமிழ்மொழியின் குழந்தையான தமிழ்க்கவிதை சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட வேண்டும். நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட தமிழ்க்கவிதையையின் தனித்தன்மை போற்றி காக்கப்பட வேண்டியது நம் கையில்தான் உள்ளது.


(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல், SMK Taman Selesa Jaya, Johor Bahru, Malaysia)

Wednesday, February 2, 2011

கவிதை (பாகம் 1 : பிரிவு மூன்று) தமிழ்க்கவிதை பயிற்சி 1

பயிற்சி 1
பாகம் 1- பிரிவு மூன்று (கவிதை : தமிழ்க்கவிதை)


துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்
தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்
நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு
நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்டு
விரைவான வெற்றிகண்டால் பரணிப் பாட்டு
வீறுபெறு தமிழாநீ அச்சம் ஓட்டு!
மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!
மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு!

அ. இக்கவிதையின் பாடுபொருள் என்ன?.(1 புள்ளி)

ஆ. மேற்காணும் கவிதையை இயற்றியவர் யார்?.(1 புள்ளி)

இ.
  1. "பரணிப்பாட்டு" எனும் சொல்லின் பொருள் யாது?. (1 புள்ளி)

  2. மேற்காணும் கண்ணியின் வாயிலாக்க் கவிஞர் வலியுறுத்தும் கருத்து யாது?. (3 புள்ளி)

ஈ.
  1. "இக்கவிதையில் வரும் எதுகை மோனையைக் குறிப்பிடுக?. (2 புள்ளி)

  2. இக்கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கும் அணிச்சிறப்புகள் இரண்டனைக் குறிப்பிடுக?. (4 புள்ளி)


பயிற்சி 1
மாதிரி விடை

அ. வாழ்க்கை நுகர்ச்சியின் உணர்வுகலந்த கலையாக்கமே தமிழ்க் கவிதை.(1 புள்ளி)


ஆ. க.பெருமாள்.(1 புள்ளி)

இ.
  1. போரில் பெற்ற வெற்றியை மகிழ்ந்து கொண்டாடிப் பாடும் செய்யுள்வகை. (1 புள்ளி)

  2. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தொடங்கியதெல்லாம் வெற்றி பெறும் வகையில் உள்ளத்தில் வெளிச்சம் தரக்கூடியது கவிதை. நாம் கவிதையால் உணர்வு பெற்று வீறு கொண்டு அச்சத்தை ஒழிப்போம் என கவிஞர் உணர்த்துகிறார். பெறுமையும் சிறப்பும் மிக்க தமிழர்கள் வாழ்வில் எல்லா நிலைகளிலும் நிறைந்து வாழ்ந்துக் கொண்டிருப்பது கவிதையாகும். (3 புள்ளி)

ஈ.
  1. எதுகை
    துறைதோறும் - நிறைவான (1 புள்ளி)

    மோனை
    எதுகையென்ன - எழுத்தசையும்(1 புள்ளி)

  2. உவமை அணி
    பூந்தாலாட்டு. (2 புள்ளி)

    உருவக அணி
    தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும். (2 புள்ளி)

(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1- பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)

தமிழ்க்கவிதை (கவிஞர் க.பெருமாள் - கவிதையில் காணப்படும் சிறப்புகள்

கவிஞர் க.பெருமாள் (மலேசியா) புனைந்த தமிழ்க்கவிதை என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்


தலைப்பு

தமிழ்க்கவிதை


கவிஞர்

க.பெருமாள் (கவியழகர்) - மலேசியா


மையக்கரு

வாழ்வோடு கலந்து நிற்கும் நிகழ்ச்சியின் உணர்வு கலந்த வெளிப்பாடே தமிழ்க்கவிதை


யாப்பு வகை

ஆசிரியப்பா


அணிச்சிறப்புகள்

இரட்டுறமொழிதல் / சிலேடை
உதாரணம் :
எழுத்தசையும் சீர்தலையும்.

உவமை அணி
உதாரணம்:
"ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க"
ஆழமான கடலிலிருந்து முத்து எடுத்த மகிழ்ச்சி போன்று

உதாரணம்:
"அமுதப் பாட்டு"
அமுதம் போன்ற பாட்டு

உதாரணம்:
"யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்
இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்"

கவிதையின் சுவையானது யாழ் மற்றும் குழலின் இசையைப் போன்றது.

உருவக அணி
உதாரணம்:
"தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்"
கவிதை ஒளியைப் பாய்ச்சும் விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.


(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)

Tuesday, February 1, 2011

கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு


பிறப்பு

5-5-1938 கூலாத் தோட்டம், கோலக்குரோ, பேரா மாநிலம், மலேசியா


கல்வி / தொழில்

தமிழ்ப்பள்ளி மாணவர்; 7ஆம் வகுப்புவரை பயின்று ஆசிரியர் ஆயத்தப் பயிற்சி பெற்றவர்


துறைகள் / திறன்கள்

கவிதை, கட்டுரை


பணிகள்

1954இல் ஈவேரா பெரியாரின் உரையை நேரிடையாகக் கேட்ட உணர்வெழுச்சியில் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இன்றுவரை மலேசியத் திராவிடர் இயக்கத்தில் பல நிலைகளில் தொடர்ந்து பணியாற்றுபவர். பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றுவதுடன், பூக்களம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்


படைப்புகள்

பள்ளி நாள்களில் மாணவர் மணி மன்ற மலரில் தொடங்கி, அறுபதுகளில் யாப்புப் பயின்று தொடர்ந்து கவிதை எழுதி வருபவர். தமது கவிதைகளைத் தொகுத்து 2004இல் நூலாக வெளியிட்டுள்ளார்.


சிறப்பு அடைகள்

கவியழகர்.


விருதுகள் / பரிசுகள்

பினாங்கு ஆளுநரிடமிருந்து PJK, PJM ஆகிய அரசவிருதுகளைப் பெற்றவர். பல்வேறு கவிதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

மலேசிய எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ்வாழ்த்து

நிலைபெற நீ வாழியவே!

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ் வாழ்த்து கடந்த வாரம் வெளியீடு கண்டது. கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதி, ஆர்.பி.எஸ். ராஜூ இசையமைத்து, துருவன், பாபு லோகநாதன் ஆகியோர் பாடியுள்ள பாடல் இங்கு இடம்பெறுகிறது.

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!


எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர்அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!


செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!


குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!


இந்த தமிழ் வாழ்த்து குறுந்தட்டுகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தேவைப்படுகிறவர்கள் 012-2668416(மலேசியா) என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.