Tuesday, April 28, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 4

கடந்த இரு வாங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 3


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நீங்கள் வீரர்கள். உங்களுக்கு வீரம் பெருஞ்செல்வமென்பது உண்மையானால் நாங்கள் மண்வினைக் கலைஞர்களானாலும் கற்றவர்கள். எங்களுக்குக் கல்வி தானே பெருஞ்செல்வம்."
(காவிய நாயகி - காட்சி 14 - பக்கம் 47)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) பொன்னி, பெருஞ்சேரலாதன்

(ii) சோழ நாட்டின் வெண்ணிப் பறந்தலை ஊரைச் சேர்ந்த மண்வினைஞர் மருதவாணர், சேர நாட்டில் வாழும் தன் தங்கையின் அழைப்பை ஏற்று அறுவடைத் திருநாளைக் கொண்டாட தன் மகள் பொன்னியுடன் வருகிறார். சேர நாட்டின் இயற்கை அழகை இரசித்துக் கொண்டு காட்டு வழியே வரும் வேளையில், குதிரையில் சிலர் ஏறி வருவதைக் காண்கிறார்கள். வருபவர்கள் கள்வர்கள் என அஞ்சி மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர். அவர்களை வெளியே அழைத்து விசாரிக்கின்றனர் மாறுவேடத்தில் வந்த பெருஞ்சேரலாதனும் அவன் அமைச்சரும். வெளியே வரும் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வந்த நோக்கத்தைக் கூறுகின்றனர். தங்களைக் கள்வர்கள் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் கள்வர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு அபராதம் விதிகின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 4

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நாம்தான் நச்சுக் கடலிலேயே நீந்தி விளையாடிக் கொண்டிருப்பவர்களாயிற்றே, அப்படியிருக்க அவன் வைக்கும் ஒரு துளி நஞ்சுக்காகவா நான் அச்சப்பட போகிறேன்."
((காவிய நாயகி - காட்சி 40 - பக்கம் 116)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த பின் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



Friday, April 10, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 3

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 2


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"எங்கள் சோழநாட்டு நெற்பயிருக்குக் கூடப் பகைவரை எதிர்த்துப் போராடும் வல்லமை உண்டு. எனவே வந்திருப்பவள் பெண்தானே என்று சொற்களைச் சிதறவிடாதே. முதலில் உங்கள் மன்னரை நான் சந்திக்க வந்திருப்பதாகப் போய்ச் சொல்"
(காவிய நாயகி - காட்சி 33 - பக்கம் 104)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) பொன்னி, சேரனின் மெய்க்காவல் வீரன்

(ii) போரே இல்லாத உலகைக்கான விரும்பும் பொன்னியின் கவிதையைப் படித்து மகிழ்கிறார் மருதவாணர். அப்பொழுது சந்தைக்குப் போக பொன்னி தந்தையை அழைக்கிறாள். சேர நாட்டுப் படைகளும் சோழநாட்டுப் படைகளும் போருக்குத் தயாராகி விட்டதால் வெளியில் போக வேண்டாமென மருதவாணர் தடுக்கிறார். ஆயினும், அன்னை மண்ணைக் கவர படையெடுத்து வந்த சேர மன்னனைச் சந்தித்து வசைப்பாடப் போவதாகச் சொல்லி பொன்னி போர்களத்தை நோக்கிச் செல்கிறாள். மன்னரைத் தடுக்க முடியாது என்று வீரன் ஒருவன் பொன்னியைத் தடுக்கின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 3

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நீங்கள் வீரர்கள். உங்களுக்கு வீரம் பெருஞ்செல்வமென்பது உண்மையானால் நாங்கள் மண்வினைக் கலைஞர்களானாலும் கற்றவர்கள். எங்களுக்குக் கல்வி தானே பெருஞ்செல்வம்."
(காவிய நாயகி - காட்சி 14 - பக்கம் 47)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணி

காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணியை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

"காவிய நாயகி" இரா.பழனிசாமி கைவண்ணத்தில் மலர்ந்த ஒரு நாடகமாகும். இந்நாடகம் பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார் இயற்றிய புறநானூற்றுப் பாடலை மையமாகக்கொண்டது. இந்நாடகத்தின் கதையோட்டத்திற்கு இடப்பின்னணி அவசியமாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

காவிய நாயகி நாடகத்தில் முக்கிய இடப்பின்னணியாகத் திகழ்வது சோழநாடும் சேரநாடும் ஆகும். பொன்னி சோழ நாட்டில் பிறந்து வாழ்ந்த மருதவாணரின் மகள் ஆவாள். சேரநாட்டுக்கு அறுவடைத் திருநாளுக்காகப் போகும் வழியில் வீரனாக மாறுவேடமிட்ட சேரமன்னன் பெருஞ்சேரலாதனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். பொன்னியின் அழகும் கவியாற்றலும் பெருஞ்சேரலாதனின் மனதைக் கவர்கிறது. இவ்வகையில் இந்நாடகம் சோழ நாட்டையும் சேரநாட்டையும் தொடர்பு படுத்துகிறது.

இதனைத் தவிர்த்து, வெண்ணிப் பறந்தலை போர்க்களமும் முக்கிய இடப் பின்னணியாகத் திகழ்கிறது. சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் சோழ மன்னன் கரிகாலனுக்கும் நடந்த போரில் கரிகாலனின் வாள் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து புறமுதுகையும் சென்றடைந்தது. புறமுதுகில் காயம் ஏற்பட்டதால் கோழை எனப் பிறர் கருதுவர் என்றெண்ணி வடக்கிருந்து உயிர் நீத்தான் பெருஞ்சேரலாதன். அதற்கு முன் அங்கு வந்த பொன்னியின் நெற்றியில் திலகமிட்டு மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். பொன்னி பிறந்து வளர்ந்த ஊரான வெண்ணிப்பறந்தலையிலேயே பொன்னியின் திருமணம் நடந்தேறுவதோடு அவள் கணவனின் உயிரும் பிரிகிறது.

கரிகாலனின் அரசவையும் ஒரு முக்கியக் களமாக உருவெடுத்துள்ளது. தன் காதலனின் மரணத்திற்குப் பிறகு பொன்னி கரிகாலனின் அரசவைக்குக் கவிபாடச் சென்றாள். 'நின்னினும் நல்லவனன்றே' என்று பெருஞ்சேரலாதனை உயர்த்திப் பாடும் வஞ்சப் புகழ்ச்சிப் பாடலினால் அரசவையினர் பொங்கி எழுகின்றனர். அவளுக்குத் தக்க தண்டனை வழங்குமாற் கரிகாலனை வேண்டுகின்றனர். ஆனால், கரிகாலன் தீர விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடிவெடுக்கிறான். பொன்னியின் இரண்டாம் மூன்றாம் விசாரனையும் இங்குதான் நடந்தேறுகிறது.

இந்தக் களங்கதளைத் தவிர்த்து, விருந்தினர் விடுதியும் முக்கிய இடப்பின்னணியாக விளங்குகிறது. பொன்னிக்குத் தண்டனை வழங்கும் வரை தங்க வைக்கப்பட்ட இடமான விருந்ததினர் விடுதியில் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. இங்குதான் காளிங்கராயரும் தளபதியும் மேற்கொண்ட கூட்டுச்சதி அரங்கேறுகிறது. உதாரணமாகப் பொன்னிக்கு விஷம் வைத்துக் கொல்ல கார்கோடனை ஏவுகின்றனர். பினர், துறவியைக் கொல்ல வேங்கையனையும் பணிக்கின்றனர். ஆனால், கரிகாலனின் மதிநுட்பம் இச்சதித்திட்டங்களைத் தகர்த்தெறிகிறது. சதிதிட்டங்களைத் தவிர்த்து, பொன்னி ஏன் கவிபாட வந்தாள்? என்ற கூற்றுக்கும் கரிகாலனுக்கு இங்குதான் விடை கிடைக்கிறது.

இக்களங்களைத் தவிர்த்து, வான மண்டலம் இந்நாடகத்தின் முதல் காட்சியாகவும் இறுதி காட்சியாகவும் இடம் பெற்று இந்நாடகத்திற்கும் மேலும் மெருகூட்டுகிறது. வானமண்ட்டலத்தில் பொன்னி பெருஞ்சேரலாதனைத் தேடி அலைவதாக முதல் காட்சி துன்பியலை உணரத்துகிறது. இறுதி காட்சியோ பொன்னி தன் காதலன் பெருஞ்சேரலாதனுடன் இணைந்து கைக்கோர்த்து மேகங்களின் மேல் நடந்து செல்வதாக இன்பியலில் முடிவுறுகிறது.

எனவே, காவிய நாயகி நாடகத்திற்குச் சிறந்த கதைக்களத்தைக் கொடுத்து, காதலும் வீரமும் என்ற மையக்கருவிற்கு வலு சேர்த்துள்ளார் கலைமாமணி இரா.பழனிசாமி. கதைக்களத்தின் தேர்ந்தெடுப்பு இந்நாடகத்தை மேலும் சுவாரசியப் படுத்தியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



(மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

Thursday, April 2, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 2

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 1


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"ஒரு பெண் அவ்வளவு துணிவுடன் நமது அவைக்கே வந்து, நம்மைத் தாழ்த்திப் பேசுகிறாளென்றால், அதற்குப் பின்னணி ஏதாவது இருக்க வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள். அப்படி யாராவது அவளைத் தூண்டிவிட்டிருந்தாள் அவளையும் அந்தக் கூட்டத்தையும் சேர்த்துத் தண்டியுங்கள்."
(காவிய நாயகி - காட்சி 5 - பக்கம் 23)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) வேண்மாள், கரிகாலன்

(ii) கரிகாலனின் அரசாட்சியைக் கவிழ்க்க நீண்ட காலமாகவே சதித்திட்டம் தீட்டிவரும் காளிங்கராயர் பொன்னியை ஒரு கருவியாகப் பயன்படுத்த திட்டமிடுகிறார். அவ்வகையில் இரும்பிடர்த்தலையாரைச் சந்தித்து பொன்னிக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர தூபமிடுகின்றார். அதன் பொருட்டு கரிகாலனைச் சந்திக்கும் இரும்பிடர்த்தலையார் பொன்னியை சேரநாட்டின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் கூறி விரைந்து தண்டிக்குமாறு பணிகிறார். ஆனால், கொள்கையில் உறுதி கொண்ட கரிகாலன் தீர விசாரித்தே தீர்ப்பு வழங்குவேன் எனத் தீர்க்கமாகக் கூறுகின்ற சூழலில் மேற்கண்ட கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 2

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"எங்கள் சோழநாட்டு நெற்பயிருக்குக் கூடப் பகைவரை எதிர்த்துப் போராடும் வல்லமை உண்டு. எனவே வந்திருப்பவள் பெண்தானே என்று சொற்களைச் சிதறவிடாதே. முதலில் உங்கள் மன்னரை நான் சந்திக்க வந்திருப்பதாகப் போய்ச் சொல்"
(காவிய நாயகி - காட்சி 33 - பக்கம் 104)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் சிறப்பு

காவிய நாயகி நாடகத்தில் காணப்படும் பெருஞ்சேரலாதனின் சிறப்புகளை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

நாடகாசிரியர் கலைமாமணி இரா.பழனிசாமி கைவண்ணத்தில் மலர்ந்துள்ள காவிய நாயகி எனும் வரலாற்று நாடகத்தில் துணைக்கதைமாந்தராக வலம் வருகிறான் பொருஞ்சேரலாதன். சேரநாட்டின் மன்னனும் இமயவரம்பின் வழித்தோன்றலுமான பெருஞ்சேரலாதன் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்ட ஓர் மன்னனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

சேரநாட்டின் மாமன்னன் பெருஞ்சேரலாதன் தன்மானம் மிக்கவன். வெண்ணிப் பறந்தலைப் போரில் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வாள் முதுகுக்குப் பின் வெளியே வந்து புறப்புண்ணை ஏற்படுத்தி விடுகிறதது. "புறப்புண் ஏற்பட்டும் உயிர் வாழ்கிறான் சேரன்" என மக்கள் அவனைப் பழித்துப் பேசுவார்களே என்று எண்ணுகிறான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போலத் தன்மானத்திற்கு இழுக்கு நேர்ந்த பொழுது வடக்கிருந்து உயிர் துறக்கிறான். இது சேர மன்னனின் தன்மானத்தை வெளிப்படுத்துவதோடு அவனது வீரத்திற்கும் இலக்கணமாகத் திகழ்கிறது.

மேலும், பெருஞ்சேரலாதன் காதலை மதிக்கும் நற்பண்பினனாகவும் திகழ்கிறான். சேர நாட்டின் மன்னனாக இருப்பினும் சாதாரண மண்வினைக் கலைஞர் மகளான பொன்னியின் மீது ஆழ்ந்த காதல் கொள்கிறான். குலத்தைச் சுட்டிக் காட்டி, இவ்வுறவு பொருந்துமா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என அமைச்சர் கேள்வி எழுப்பும் பொழுது உண்மை அன்பு சாதி, மத பேதத்திற்கு அப்பாற்பட்டது என தனது காதலின் மாண்பைப் புலப்படுத்துகிறான். அவளையே மணக்க சித்தமாகவுள்ளான்.

அத்துடன், மக்கள் நலனைப் போற்றும் சிறந்த வேந்தனாகவும் பெருஞ்சேரலாதன் விளங்குகிறான். மாறுவேடம் பூண்டு தன் அமைச்சருடன் சிற்றூர்வரை சென்று அங்கு மக்களின் அறுவடைத் திருநாள் கொண்டாட்டத்தை அறிகிறான். மேலும், தன் ஆட்சியில் மக்கள் குறைவில்லாமல் வாழ வேண்டும் என அரசாட்சி புரிகிறான். ஏழைகள், கல்லாதவர்கள், கள்வர்கள் தன்னாட்சியில் இருக்கக்கூடாது எனப் பாடுபடும் சிறந்த மன்னனாகத் திகழ்கிறான்.

இதனைத் தவிர்த்து, பெருஞ்சேரலாதன் தமிழ்ப்பற்று கொண்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளான். சிற்றூரில் நடைபெறும் அறுவடைத் திருநாளைக் கண்டு களிக்கச் செல்லும் வழியில் மக்கள் பேசுகின்ற மொழியில் மொழிக்கலப்பு இருப்பதைக் கண்டு அமைச்சரோடு உரையாடுகிறான். வடமொழி மந்திரமொழியாகவும் தமிழை உயிர் காக்கும் மொழியாகவும் வளர்க்க வேண்டுமெனக் கூறுகிறான்.

பெருஞ்சேரலாதன் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் சிறந்த பண்பையும் தன்னகத்தே கொண்டுள்ளான். ஓர் ஆண்டிற்குள் பொன்னியைப் பெண் கேட்டு வந்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறான். அவ்வகையில் தான் இறக்கும் தருவாயிலும், மருதவாணர் முன்னிலையில் பொன்னியின் நெற்றியில் திலகமிட்டுத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்ட பிறகே உயிர் துறக்கிறான்.

இதுமட்டுமல்லாது, வாரி வழங்கும் வள்ளலாகவும் பெருஞ்சேரலாதன் திகழ்கிறான். மக்கள் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அறுவடைத் திருநாளான ஆவணித் திருவோணத்தை முன்னிட்டு நாள்தோறும் தான் துயிலெழ இனிமையாகப் பாடும் பாணர்களுக்கு ஆளுக்கு ஆயிரம் பொற்காசுகளும், அரண்மனை வீரர்களுக்கும் பணியாளர்களுக்கும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பரிசளிக்கவும் அமைச்சருக்கு உத்தரவிடுகிறான்.

ஆகவே, துணைக் கதைமாந்தராகச் சேரன் பெருஞ்சேரலாதன் படைக்கப்பட்டிருந்தாலும் காவிய நாயகியாக வலம் வரும் பொன்னிக்கு இவன்தான் நாயகன்; தன்மான நாயகன்.



(மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி