Sunday, September 13, 2009

தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 2

பயிற்சி 2
அ. பொன் விலங்கு நாவல் எந்த நோக்கு நிலையில் எழுதப்பட்டுள்ளது. (1 புள்ளி)

ஆ. கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கைது செய்யப்பட்ட இருவரை குறிப்பிடுக. (2 புள்ளி)

இ. பாரதி எழுதிய இரண்டு கடிதங்களைச் சத்தியமூர்த்தி கிழித்து வீசியது ஏன்? (4 புள்ளி)

ஈ. "வாழ்வை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப்பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் துயரங்களை வெல்ல அவளால் முடியுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது."(அத்தியாயம் 13, பக்கம் 117)

(i) இச்சூழலில் இம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)
(ii) இந்த உரையாடலுக்கு முன் நடந்த சூழல் யாது? (5 புள்ளி)

மாதிரி விடை

அ. எல்லாம் அறிந்த நோக்குநிலை / இறை நோக்கு நிலை / படர்கை நோக்கு நிலை (1 புள்ளி)

ஆ. மஞ்சள் பட்டி ஜமீந்தார், கண்ணாயிரம். (2 புள்ளி)

இ. மோகினியை தனைவியாக மனதில் ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி பாரதியிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கிறான் நோக்கத்தில் அக்கடித்ததைதக் கிழிக்கிறான். மேலும் பாரதி வீணாக தன் மீது அன்புகொண்டு ஏமாந்து போக்ககூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவள் கண்முன்னே அவள் எழுதுய கடிதங்களைக் கிழித்து வீசுகிறான். (4 புள்ளி)

ஈ.
(i) சத்தியமூர்த்தி, குமரப்பன்(2 புள்ளி)
(ii) மோகினியின் ஆண்டாள் நடனத்தைச் சத்ததியமூர்த்தி மெய்மறந்து இரசிக்கிறான். நடனம் முடிந்த புறகு மோகினியைச்சந்தித்து அவளைப் பாராட்டுகிறான். தன் நடனம் சிறப்பாக அமைவதற்கு அவன் வருகையே காரணம் என்று அவள் கூறுகிறாள். அப்பொழுது கண்ணாயிரம் அங்கு வரவே விரைவாக அவளிடம் விடைபெற்றுக்கொண்டு நண்பன் குமரப்பனோடு அவன் வெளியேறுகிறான். மோகினி பற்றி குமரப்பன் வினவ, இரயிலில் அவள் தற்கொலைக்கு முயன்றபொழுது அவளைக் காப்பாற்றிய நிகழ்வை சத்தியமூர்த்திக்கு விளக்குகிறான். அதைக் கேட்ட குமரப்பன் மேற்கண்டவாறு கூறுகிறான். (5 புள்ளி)

(பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1 - நன்றி பகாங் மாநில இடைநிலைப்பள்ளி தமிழ்ப் பணித்தியம்)

நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - மோகினியின் பாத்திரப்படைப்பு

மோகினியின் பாத்திரப்படைப்பை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

நாவலுலகில் முடிசூடா மன்னன் மணிவண்ணன் எனும் புனைப்பெயர் கொண்டவர் நா.பார்த்தசாரதி ஆவார். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற பல படைப்புகளைப் படைத்து வெற்றி கண்டவர். அவற்றுள், குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், பொன் விலங்கு போன்ற நாவல்கள் தமிழர்களின் நெஞ்சங்களில் தனி ஓர் இடத்தைப் பிடித்த அற்புதப் படைப்புகள். பொன் விலங்கு நாவலில் துணைப்பாத்திரமாகவரும் பொன்னியின் பாத்திரம் தமிழ்ப்பெண்களின் தனிப்பெரும் அடையாளத்தின் சின்னம் என்பதை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்; படைத்துக் காட்டியிருக்கிறார் நா.பார்த்தசாரதி அவர்கள்.

தமிழர்கள் மானத்தைப் பெரிதும் மதிப்பவர்கள். மானம் அவர்களுக்கு உயிரினும் மேலானதாகக் கருதப்படுகிறது. அதைத்தான் திருவள்ளுவரும், ஒழுக்கத்தை உயிரினும் மேலானது என்று கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல்,

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

எனும் குறளில், மானம் இழந்த அடுத்த கணமே உயிரை இழப்பவர்கள் தமிழர்கள் அதுவும் குறிப்பாகப் பெண்கள். தமிழரின் இந்தத் தனிப் பெரும் குணத்தைத் திருவள்ளுவர் கவரிமானுக்கு ஒப்பிட்டுக் காட்டியிருப்பத்தை எண்ணிப்பார்த்தவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இந்தத் தத்துவத்தைத் தன் நாவலின்வழி தமிழ் மக்களுக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டவர். எனவே, பொன் விலங்கு நாவலின் துணைப்பாத்திரமான மோகினியைத் தமிழ் மக்களின் ஒழுக்கத்தின் சான்றாண்மைக்கு உதாரணம் காட்டி உலாவிட்டிருக்கிறார்.

தாசி குலத்தில் பிறந்தவள் மோகினி. அழகுப் பதுமை. ஆடற்கலைகளிலும் இசைக்கலையிலும் தேர்ந்தவள். முத்தழகம்மாளோ குலத்துக்கே உரிய பண்பைப் போற்ற வேண்டும் எனும் நோக்கில் எல்லா ஆண்களோடும் சகஜமாகப் பழக வேண்டும்; ஆடிப்பாடி மயக்கிப் பொருளீட்ட வேண்டும் எனும் போக்கில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் மோகினியைப் போகப் பொருளாக்கிப் பொருள் சம்பாதிப்பவள்.

ஆனால், மோகினியோ அதற்குக் கிஞ்சிற்றும்தும் உடன்படாதவளாக, சத்தியமூர்த்தியை மனதார விரும்புபவளாக, ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒப்பற்ற ஒழுக்கத்தைப் போற்றுபவளாக விளங்குகின்றாள். முத்தழகம்மாள் விபத்தில் மரணமடையவே திக்கற்றவளாக நிற்கும் அவளை மஞ்சள்பட்டியார் மோகினியைத் தன் ஆசை நாயகியாக்கிக் கொள்ள எண்ணம் கொள்கிறார். கண்ணாயிரத்தின் கபட வேசத்திலும் மஞ்சள்பட்டியாரின் வஞ்சக எண்ணத்திலும் வீழ்ந்து விடாமல் தன் மானத்துக்குப் பங்கம் வரும் வேளைகளில் கட்டுப்பாட்டுடன் கண்ணியம் காத்து நிற்கிறாள் மோகினி. சொல்லொணாத் துயர்வரினும் சத்தியமூர்த்தியையே தன் மனம் கவர்ந்தவனாக வணங்கி நிற்கிறாள். இருப்பினும், மஞ்சள்பட்டியாரின் சூழ்ச்சியில் சிக்குண்ட சத்தியமூர்த்தியே தன்னை வெறுக்கும் நிலைக்கு ஆளானதால் தன் மானத்துக்கு இனி யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது எனும் இறுதி முடிவுக்கு வந்த மோகினி தூக்க மாத்திரைகளை விழுங்கி தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறாள். எனவே, தமிழ்ப் பெண்கள் உயிரைவிட மானமே பெரிதென நினைக்கும் மாண்புக்குரியவர்கள் என்பதைக் காட்டுவதற்காகப் படைக்கப்பட்ட பாத்திரம்தான் மோகினி.

மேலும், தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரக் காப்பியத்தின் முதன்மைக் கருத்தாகத் திகழும் 'கற்புடைய மங்கையரைத் தேவரும் முனிவரும் போற்றுவர்' என்னும் கருத்தையும் வலியுறுத்தவே மோகினி எனும் பாத்திரத்தைப் பார்த்தசாரதி படைத்திருக்கிறார்.

சிலப்பதிகாரத்தில், மாதவியும் தாசி குலப் பெண்தான். மாதவியின் தாயாரோ மாதவியைப் பயன்படுத்தி பெருஞ்செல்வந்தனான கோவலனின் செல்வங்களைக் கவர்ந்து செல்வம் அனைத்தையும் இழக்கச் செய்கிறாள். பின்னர், கோவலனோ கொலையுண்டு போகிறான். மாதவியோ, கோவலனையே தன் கணவனாக ஏற்றிப் போற்றிய காரணத்தால், கோவலன் மாண்டான் எனக் கேள்விப்பட்டதும் தன் அழகிய கோலத்தைத் துறந்து துறவியானாள்; கற்பின் செல்வியாகி மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்தாள் என்பது நாம் அறிந்த வரலாறு. அந்த வரலாற்றை மீண்டும் தன் நாவலில் நம் கண்முன் மோகினியின் பாத்திரப்படைப்பின்வழி நமக்கு காட்டுகிறார் நா.பார்த்தசாரதி அவர்கள்.

தாசி குலப் பெண்ணாக இருந்தாலும் தமிழ்க்குலப் பெண்ணான மோகினியும் தன் அம்மா முத்தழகம்மாள் தன்னைப் பணம் காய்க்கும் பெண்ணாகவும் ஆண்களின் அடிமைப் பொருளாகவும் பாவித்துப் பொருள் ஈட்டுபவள். பிறப்பாலும் வளர்ப்பாலும் தாசி குலப் பெண்ணாக இருந்தாலும் உடலளவிலும் உள்ளத்தளவிலும் மோகினி தூய்மையானவளாக ஒழுக்கத்தில் ஒப்பற்றவளாகத் திகழ்கின்றாள்; தன்மானத்துக்கு எள்ளளவேனும் இழுக்கு நேராத இயல்பினளாக விளங்குகின்றாள்.

அவள், தன் உயிரைக் காப்பாற்றிய சத்தியமூர்த்தியயே மனத்தளவில் கணவனாகப் போற்றி வாழ்கிறாள். ஒரு சூழலில் தான் தொழும் சத்தியமூர்த்தியும் தன் கற்பைப் பற்றி சந்தேகப்படும் நிலை வரும்போது தான் மானத்தோடு வாழ்பவள் என நிரூபித்துவிட்டுதான் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். தாசி குலத்தில் பிறந்தாலும் மனம் வைத்தால் கற்புடைய பெண்ணாகத் திகழ்ந்து மாநிலம் போற்றும் உத்தமி என்ற பேர் எடுக்க முடியும், நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும், குப்பை மேட்டிலும் குன்றிமணி தோன்றும் என்னும் தத்துவத்தை வலியுறுத்திக் காட்டுவதற்காகவே நா. பார்த்தசாரதி மோகினியின் பாத்திரத்தைப் படைத்தளித்திருக்கின்றார்.

அதோடு மட்டுமல்லாமல், ஒளவையாரின் மூதுரையில் குறிப்பிட்டுள்ள 'குலத்தளவே ஆகும் குணம்' எனும் கருத்துக்கு உடன்படாதவறாகவும் இருக்கிறார். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் தரங்கெட்டவர்கள் எனும் கருத்தை மறுக்கும் வகையிலும் மோகினியின் பாத்திரத்தை நாவலாசிரியர் படைத்துள்ளார். தாசி குலத்தில் பிறந்த மோகினியும் குலத்தொழில்தான் செய்ய வேண்டும் எனும் சமுதாயத்தின் கோணல் கோட்பாட்டைத் தகர்தெரியும் நோக்கில் தாசி குலத்தில் பிறந்த மோகினியைத் தூய்மையின் அடையாளமாக் காட்டி பெண்குலத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்.

எனவே, வள்ளுவரும் இளங்கோவும் வடித்துக்காட்டிய தமிழ்ப்பெண்களின் சான்றாமைச் சின்னமே மோகினியின் பாத்திரப்படைப்பு என்பது தெளிவு.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியர் இளந்தமிழ், கோலாலும்பூர்- நன்றி