Monday, January 31, 2011

தமிழ்க் கவிதை - கவிஞர் க.பெருமாள், மலேசியா

தமிழ்க் கவிதை
(கவிஞர் க.பெருமாள், மலேசியா)

எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்,
எழுத்தசையும் சீர்தளையும் தேடிச் சோர்ந்து
பதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!
பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடு
மெதுமெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடம்
மெய்மறந்தேன் அதன்சுவையில் ஒன்றிப் போனேன்!
இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடி
யான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி!


வாழ்வுமெங்கள் வளமும்உயர் தமிழே என்று
வழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!
ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க
அருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாய்ச்
சூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்
சுடந்திருக்கும் உண்மையதை மறுப்பா ருண்டோ!
யாழ்குழலின் இசையெல்லாம் இணைந்து வார்க்கும்
இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்!


துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்
தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்
நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு
நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்டு
விரைவான வெற்றிகண்டால் பரணிப் பாட்டு
வீறுபெறு தமிழாநீ அச்சம் ஓட்டு!
மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!
மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு!


கவிதைப் பூங்கொத்து

Sunday, January 30, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 4

பயிற்சி 4
பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. சத்தியமூர்த்தியின் இலட்சியத்திற்குத் தடையாக இருந்த முக்கியக் கதைமாந்தர் யார்(1 புள்ளி)


ஆ. சத்தியமூர்த்தியின்பால் காதல் கொண்ட இரு பெண்களைக் குறிப்பிடுக?.(2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தி தமிழ் விரிவுரையாளராவதற்கு அவன் தந்தை எதிர்ப்புத் தெரிவிக்கக் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம் பெற்ற கல்லூரி அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின் அடிதடி வம்புகளுக்கும் கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ் நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியாயிற்றே! முதல் வகுப்பில் தேறி இருந்தாலும் நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்தக் கல்லூரியைப் பற்றி நினைக்கும்போது நான் பயப்படுவது நியாயம்தானே?".(அத்தியாயம் 2, பக்கம் 27)
 1. இவ்வுரையாடலில் வரும் 'நான்' மற்றும் 'நீங்கள்' யாவர்? (2 புள்ளி)


 2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)


பயிற்சி 4
மாதிரி விடை

அ. கண்ணாயிரம்


ஆ. மோகினி, பாரதி


இ. ஏழ்மையிலிருந்து மீள முடியாது.
சமுதாயத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காமை.
ஏணியைப்போல் பிறரை உயர்த்திவிட்டு தான் மட்டும் எந்த உயர்வுமில்லாமல் இருக்கும் தொழில் என்பதால்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.
 1. சத்தியமூர்த்தி, பூபதி


 2. ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்லூரி என்பதாலும், அக்கல்லூரியைச் சிறப்பாக நடத்திவரும் பூபதியும், தன்னை இந்த இலட்சியக் கல்லூரியில் வேலை செய்ய ஆர்வப்படுத்துவதற்குக் காரணமென்று சத்தியமூர்த்தி பதிலுரைக்கிறான்.நேர்க்காணலில் அறிவுப்பூர்வமாகவும் திறமையாகவும் பதிலளிக்கிறான்; துணிவுடன் வாதிடுகிறான்: மதுரைக்குத் திரும்பி தன் நியமனக் கடிதத்திற்காக்க் காத்திருக்கிறான்.

(நன்றி. எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய வழிகாட்டி - நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

Thursday, January 27, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 3

பயிற்சி 3
பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. மோகினியின் தாயார் பெயர் என்ன?.(1 புள்ளி)


ஆ. பொன்விலங்கு நாவலில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய இடப் பின்னணிகள் யாவை?.(2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தி, மோகினியின்பால் கொண்ட காதலைச் சந்தேகிக்கக் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "பார்த்தாயா தம்பி, காரும் பங்களாவும் டெலிபோனும் வைத்துக் கொண்டு உலகறிய நல்லவர்களாகவும் மனம் அறிய பொய்யர்களாகவும் வாழ்ந்து மிகவும் கௌரவமாகத் திருடிக் கொண்டிருக்கின்ற பலர் சமூகத்தில் பிடிபட மாட்டார்கள். உன்னைப்போல் வயிறு பசித்துப்போய் திருடுகிற அப்பாவிகள்தான் பிடிப்பட்டுத் திருட்டுப் பட்டமும் கட்டிக் கொள்கிறார்கள். இதோ, இப்படி என்னோடு வா".(அத்தியாயம் 1, பக்கம் 16)

 1. இவ்வுரையாடலில் வரும் 'என்னோடு' யாரைக் குறிப்பிடுகிறது. (2 புள்ளி)


 2. இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?. (5 புள்ளி)


பயிற்சி 3
மாதிரி விடை

அ. முத்தழகம்மாள்


ஆ. மல்லிகைப் பந்தல், மதுரை


இ. மஞ்சள்பட்டி ஜமிந்தார், மோகினி இரிவரும் இணைந்திருக்கும் நிழற்படம்.

மஞ்சள்பட்டி ஜமிந்தாருக்கு மோகினி தேநீர் கொடுக்கும் காட்சி.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.
 1. சத்தியமூர்த்தி

 2. மறுநாள் மல்லிகைப் பந்தலில் நடைபெறவிருக்கும் நேர்க்காணலில் கலந்து கொள்ளும் நோக்கத்தில் சிறிது நேரம் இரயில் நிலையத்தில் கண்ணயர்ந்து விடுகிறான் சத்தியமூர்த்தி. தன் சூட்கேஸ் உருவப்படும் போது தன்னிலை உணர்ந்து விழித்துக் கொள்கிறான். திருடனைக் கையும் களவுமாகப் பிடிக்கிறான். கருணையுடனும் பரிவுடனும் அத்திருடனை அணுகி விசாரிக்கின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

(நன்றி. எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய வழிகாட்டி - நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

Wednesday, January 26, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 2

பயிற்சி 2
பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. பொன் விலங்கு நாவல் எந்த நோக்கு நிலையில் எழுதப்பட்டுள்ளது.(1 புள்ளி)

ஆ. கள்ள நோட்டுக் கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கைது செய்யப்பட்ட இருவரைக் குறிப்பிடுக.(2 புள்ளி)


இ. பாரதி எழுதிய இரண்டு கடிதங்களைச் சத்தியமூர்த்தி கிழித்து வீசியது ஏன்? (4 புள்ளி)


ஈ. "வாழ்வை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப் பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும்போது எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் துயரங்களை வெல்ல ஆவளால் முடியுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது.(அத்தியாயம் 13, பக்கம் 117)


 1. இவ்வுரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


 2. இந்த உரையாடலுக்குப் முன் நிகழ்ந்தவற்றை எழுதுக. (5 புள்ளி)


பயிற்சி 2
மாதிரி விடை

அ. எல்லாம் அறிந்த நோக்குநிலை / இறை நோக்குநிலை / படர்க்கை நோக்கிநிலை


ஆ. மஞ்சள்பட்டி ஜமிந்தார், கண்ணாயிரம்


இ. மோகினியை மனைவியாக மனதில் ஏற்றுக் கொண்ட சத்தியமூர்த்தி பாரதியிடம் நெறுங்கிப் பழகுவதைத் தவிர்க்க.

சத்தியமூர்த்தியன் மனத்தில் இனியும் பாரதிக்கு இடமில்லை என்பதை உணர்த்த.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.
 1. சத்தியமூர்த்தி, குமரப்பன்


 2. மோகினி ஆண்டாள் நடனத்தைச் சத்தியமூர்த்தி மெய்மறந்து இரசிக்கிறான். நடனம் முடிந்த பிறகு மோகினியைச் சந்தித்து அவளைப் பாராட்டுகிறான். தன் நடனம் சிறப்பாக அமைந்ததற்கு அவன் வருகையே காரணம் என்று அவள் கூறுகிறாள். அப்பொழுது கண்ணாயிரம் அங்கு வரவே விரைவாக அவளிடம் விடைபெற்று நண்பன் குமரப்பனோடு அவன் வெளியேறுகிறான். மோகினி பற்றி குமரப்பன் வினவ இரயிலில் அவள் தற்கொலைக்கு முயன்றபொழுது தான் அவளைக் காப்பாற்றிய நிகழ்வை சத்தியமூர்த்தி விளக்கிகிறான். அதைக் கேட்ட குமரப்பன் மேற்கண்டவாறு கூறுகிறான்.

(நன்றி. இலக்கியப் பயிற்றி 1 - பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்)

Tuesday, January 25, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 1

பயிற்சி 1
பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகளில் ஒன்றைக் குறிப்பிடுக.(1 புள்ளி)

ஆ. மல்லிகைப் பந்தல் கல்லூரியில் சத்தியமூர்த்தியை வெறுக்கும் இரு கதைமாந்தர்களிக் குறிப்பிடுக.(2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தியை உதவி விடுதி காப்பாளராக நியமிக்க பூபதி கூறிய காரணங்கள் என்ன?(4 புள்ளி)


ஈ. "இப்போது நான் சொல்லப்போவதெல்லாம் நம்முடைய 'டமில் டிபார்ட்மெண்ட்' டின் நன்மைக்காகத்தான். தயவு செய்து இனிமேல் எந்த வகுப்புக்குப் போனாலும் நம்முடைய டிபார்ட்மெண்டுக்குத் தொடர்புடைய ஏதாவது வரு பாடத்தை நடத்திவிட்டு வாருங்கள் .(அத்தியாயம் 20, பக்கம் 260)


 1. இவ்வுரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


 2. இந்த உரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழலை விளக்குக. (5 புள்ளி)


பயிற்சி 1
மாதிரி விடை

அ. உரையாடல்


ஆ. கல்லூரி முதல்வர், கல்லூரி வார்டன்


இ. வைஸ் பிரின்ஸ்பாலுக்கு வயதாகிவிட்டது.
விடுதியை ஓடியாடி அலைந்து கவனமாக பார்க்க முடியவில்லை.
மாணவர்கள் இன்னிம் சிரத்தையோடு கவனித்துக்கொள்ள வேண்டும்
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.

 1. காசிலிங்கனார், சத்தியமூர்த்தி


 2. காசிலிங்கனார் சத்தியமூர்த்திக்கு அறிவுரை கூறினார். அவரின் அறிவுரையைக் கேட்ட சத்தியமூர்த்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தன்னைத் தவறாக நினைப்பார் என்பதற்காக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தான் சத்தியமூர்த்தி.

(நன்றி. இலக்கியப் பயிற்றி 1 - பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்)

Sunday, January 23, 2011

எஸ்.பி.எம். தமிழு இலக்கியப் பாட வரலாற்றில் ஒரு திருப்புமுனை

எஸ்.பி.எம். தமிழு இலக்கியப் பாட வரலாற்றில் ஒரு திருப்புமுனை
முதல் முறையாக மலேசியத் தமிழ் நாவல்

(ஆக்கம் : திரு. இராஜேந்திரன் – மக்கள் ஓசை நாளிதழ், மலேசியா)

மலேசிய கல்வித் துறையில் அரை நூற்றாண்டு வரலாற்றில் முதன் முறையாக எஸ்.பி.எம். மாணவர்களுக்கு உள்நாட்டுத் தமிழ் நாவல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட விருக்கிறது. அதே வேளையில், கலைஞர் மு.கருணாநிதியின் ‘சிலப்பதிகாரம்’ நாடகக் காப்பியமும் பாட நூலாக இடம்பெறவிருக்கிறது.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் 1970 ஆம் ஆண்டு இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிஞர் ஐ.இளவழகுவின் ‘இலட்சியப் பயணம்’ என்னும் அந்த நாவல் 2012ஆம் ஆண்டு நான்காம் படிவ மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வுக்குப் பயன்படுத்தப்பட விருக்கிறது.

மலேசியக் கல்வி அமைச்சின் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வு வரலாற்றில் உள்நாட்டுத் தமிழ் நாவலுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாக இது கருதப்படுகிறது. எஸ்.பி.எம். தேர்வுக்கு உள்நாட்டுத் தமிழ் நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கல்வியமைச்சின் தேர்வு வாரியத்தை வலியுறுத்தி வந்தது. கடந்த பத்தாண்டுகளாக அந்தக் கோரிக்கைக்கு மேலும் அழுத்தம் கொடுத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி கல்வியமைச்சுக்கும் தேர்வு வாரியத்திற்கும் அனுப்பி வந்துள்ளது.

கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 2012-2015 கல்வியாண்டுகளுக்கான தமிழ் இலக்கியப் பாட நூல்கள் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நூல்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஐ.இளவழகுவின் ‘இலட்சியப் பயணம்’ நாவல், முனைவர் முரசு நெடுமாறனின் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள கா.பெருமாளின் ‘கதிரும் கடலும்’, முல்லைவாணனின் ‘குழந்தாய்’, ஐ.உலகநாதனின் ‘இஃது ஆகாது காண்!’, கரு.திருவரசுவின் ‘மொழி-இனம்-பண்பாடு’, தி.சு.பொன்னுசாமியின் ‘அறிவியல் தமிழ்’, கா.பெருமாளின் ‘புலரும் பொங்கல்’, மதுராந்தகனின் ‘தோட்டப்புறத் தமிழர்’, பொன்முடியின் ‘வீண்பேச்சு’, சங்கு சண்முகத்தின் ‘வெற்றி ஈட்டுவாய்’, அமலதாசனின் ‘சப்பானியர் காலத்திலே’, எல்லோனின் ‘துங்கு’, மீசல் அபூ பாக்கரின் ‘ஒழியட்டும் ஆசைகள்’, க.து.மு.இக்பாலின் ‘கல்’ ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

நாடகத்திற்குறிய பாட நூலாக தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் ‘சிலப்பதிகாரம்’ நாடகக் காப்பியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

1957ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தும் 1970ஆம் ஆண்டு வரைக்கும் University Of Cambridge, London எனப்படும் கேம்ரிஜ் பல்கலைக்கழகம் தயாரிக்கும் தேர்வு முறைகள் இங்குள்ள பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தத் தேர்வை MCE தேர்வு என அழைத்து வந்தோம். 1970ஆம் ஆண்டு வாக்கில் நமது கல்வி அமைச்சால் Malaysian Examination Syndicate (Lembaga Peperiksaan Malaysia) வாரியம் நிறுவப்பட்டு உள்நாட்டிலேயே தேர்வுத் தாட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்தத் தேர்வு SPM என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று அடிப்படையில் 1950ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் ஒரு தேர்வுப் பாடமாக இருந்து வருகிறது.

கவிதைப் பாடத்திற்கு நமது நாட்டுக் கவிதைகள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. கவிஞர் காரைக்கிழார், கவிஞர் டி.வி.ஆர்.பி, கவிஞர் வீரமான், கவிஞர் சி.வேலுசாமி, கவிஞர் கரு.வேலுசாமி, கவிஞர் ஐ.உலகநாதன், கவிஞர் கா.பெருமாள் உட்பட பலரது கவிதைகள் பாட நூலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நாவலுக்கு மட்டும் இதுவரைத் தமிழகப் படைப்புகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ‘சிநேகிதி’, ‘கரித்துண்டு’, ‘கள்ளோ காவியமோ’, ‘அகல்விளக்கு’, ‘குறிஞ்சிமலர்’, ‘பொன் விலங்கு’, போன்ற நாவல்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. மலேசியத்தமிழ் நாவல்கள் மாணவர்களுக்கு ஆறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் வழி மலேசிய மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் வழி நமது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தது. தரமான நாவல்கள் படைக்கப்படுவதற்கான தளங்களை உருவாக்க நாவல் எழுதும் போட்டிகளையும், நாவல் எழுத ஊக்குவிக்கும் கருத்தரங்குகளும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்போல், முதன் முறையாக மலேசிய நாவல் ஒன்று எஸ்.பி.எம். மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட விருப்பது புதிய வரலாற்றின் திறவுகோளாக அமைந்திருக்கிறது.

அதே வேளையில் கலைஞர் மு.கருணாநிதியின் சிலப்பதிகாரம் நாடகக் காப்பியமும் பாடநூலாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நல்ல தமிழ் உச்சரிப்புக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் என்றும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலவச பாடநூல்

இதற்கிடையே தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற நூல்களை, 2012 முதல் 2015ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் மூலமாக அரசாங்க மானியம் பெற்று, அதன் வழி இலவசமாக பாட நூல்களை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி மக்கள் ஓசை நாளிதழ், ஞாயிறு பதிப்பு, 23 ஜனவரி 2011

Friday, January 21, 2011

கவிதை: யார் தமிழ் படிப்பார் (நீண்ட கேள்வி)

யார் தமிழ் படிப்பார்?

திரு.சுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் பொன்முடி எழுதிய ‘யார் தமிழ் படிப்பார்?’ என்ற கவிதை, ‘கவிதைப் பூங்கொத்து’ என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளளது. உயர்நிலைக் கல்வி வரை தமிழ்க்கல்வி தொடர்ந்தால்தான் இந்நாட்டில் தமிழ் வளரும் என்பதே இக்கவிதையின் மையக்கரு ஆகும்.


கல்விப் பயிலும் காலத்தில் தொடர்ந்து தமிழைப் படிக்காது புறந்தள்ளும் தமிழ் மாணவ்வர்களின் நிலையை எண்ணி வருந்தி இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் உயிர் நாடியாக விளங்குவது தமிழ்க்கல்வி. தமிழ் மொழியின் வளர்ச்சியே மலேசியத் தமிழரின் உரிமைகளையும் வாய்ப்புகளையும் நிலை பெறச் செய்யும்.


தமிழ் மாணவர்களே, தமிழைப் படிக்கத் தயங்குகின்றீர்களே! தமிழ் மாணவர்கள் படிக்காமல் கடல் போன்று விரிந்து கிடக்கின்ற இவ்வுலகில் யார் தமிழைப் படிப்பார்கள் என்று கவிஞர் வினவுகிறார். தாய் மொழியான தமிழ்மொழி எமக்குத் தேனைப் போன்று இனிமையானது. இந்தத் தாயினைக் காப்பது பிள்ளையின் கடமை அல்லவா? ஆரம்பப் பள்ளியில் படித்த அத்தமிழை இடைநிலைப் பள்ளியில் ஒதுக்கித் தள்ளுவது எவ்வகையில் நியாயம் என்று கவிஞர் வினவுகிறார். ஆறு ஆண்டுகளாக அடிப்படைக் கல்வியைக் கொடுத்த தமிழ்மொழியின் அருமையை மறந்து, இப்போது இம்மொழி புளிக்கிறது என்று கூறலாமா? ஆரம்பத்தில் சிந்தையில் தோன்றிய தமிழைப் பாதியிலே ஏளனப்படுத்தி ஒதுக்கி வைக்ககும் எண்ணம் எப்படித் தோன்றியது என்கிறார் கவிஞர்.


உண்ணும் உணவும், தின்னும் பண்டமும் ஒரு காலத்தில் சலிப்புத் தட்டிப் போகலாம். சில வேளைகளில் கண்ணும் கூட காட்சிகளைப் பார்க்க மறுக்கலாம். பெற்றெடுத்த தாய் பிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும், அந்தத் தாயின் அன்பை உதறித் தள்ளுவதும் நமக்கு மற்றவர் மத்தியில் நற்பெயர் கொடுக்குமா? படித்தவர்களின் மத்தியில் பாராட்டைத் தேடித் தருமா என்று தமிழ் மாணவர்களைப் பார்த்து கவிஞர் கேட்கிறார்.


நம் பிறப்போடு நம்முடன் பிறந்த தாய்மொழியான இத்தமிழ்மொழி சோறு போடுமா? என்று கேட்பகும் தமிழினத்தைப் போல் வேறினம் இவ்வுலகில் இல்லை. விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு விடா முயிற்சியில் ஈடுபடாமல் வெறுமனே கிடக்கும் இத்தகையோர்களை வெட்டிக் கொன்றாலும் என் கோபம் தீராது என்கிறார் கவிஞர். எந்த நாட்டிலும் எந்த மொழியும் யாருக்கும் சோறு போடாது. மன உறுதியுடன் உழைப்பவன் எவனும் மொழியின் மேல் தன் இயலாமை குறித்துப் பழி சொல்வது இல்லை.

தமிழ் மொழியால்தான் தமிழன் தாழ்ந்து போனதாகவும் அம்மொழி இவனைத் தலையெடுக்க விடாமல் மண்ணோடு மண்ணாய்ச் சிறை பிடித்ததென இவன் சொல்லித் திரியலாமா? அவன் அப்படிச் சொல்வது ஒப்புக் கொள்ளத் தக்கச் செய்தியாகுமா? தாயானவள் தன் பிள்ளைக்கு எதிராக தீயாக மாறி தீங்குச் செய்ய நினைப்பாளா? மொழி நம்முடைய உணர்வாகவும் நமக்கு உயர்ப்பாக விளங்குகிறது. மொழி நம் உயிரைக் காக்கும் காவலன். வாழ்வில் உரிமை இழந்தால் இவ்வுலகில் எந்தப் பெருமையையும் பெற முடியாது.


மொழி சிறப்பாக இருந்தால் தானே இனம் சிறப்பாக இருக்கும். மொழியைக்காப்பதே இனத்தைக்காப்பது ஆகும். தமிழ் மொழி இந்நாட்டில் வாழ்வதும் தாழ்வதும் தமிழைப் படிக்கும் தங்கம் போன்ற தமிழ் மாணவர்களின் கையில் இருக்கிறது. மாணவர்களே! தமிழைப் படித்தலே அத்தமிழை வளர்க்கின்ற மிகப் பெரிய சேவையாகும்.

தாய் மொழியான தமிழைத் தயக்கமின்றி எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி கட்டாயம் தொடர்ந்து கற்பது தமிழ் மாணவர் ஒவ்வொருவருடைய கடமையாகும். தமிழ் மொழியில் சிறந்து விளங்க அதே வேளையில் இதர மொழியையும் கற்றுத் தேற வேண்டும்.