Wednesday, January 20, 2010

நாவல் (பொன் விலங்கு)-நீண்ட கேள்வி

மோகினி சத்தியமூர்த்தியின் மேல் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை விவரித்து எழுதுக

நாவல் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் நா.பார்த்தசாரதி ஆவார். இவரின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் பொன் விலங்காகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் தனித்தன்மை வாய்ந்த துணைக்கதாப்பாத்திரமான மோகினி, சத்தியமூர்த்தியின் மேல் உண்மையான அன்பு கொள்ளும் பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

பொன் விலங்கு நாவலில் மோகினி தனது கள்ளமில்லா ஆத்மார்த்தமான காதலால் வாசகர்களின் மனதில் நெருடலையும் பாதிப்பையும் உண்டாக்கி இருக்கிறாள் என்பது கண்கூடு. 1960-களில் வாழ்ந்த சராசரி பெண்களின் உணர்வுப் போராட்டங்களையும், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட வழிகளையும் மோகினியின் மூலம் நாவலாசிரியர் நமக்குப் புலப்படுத்தி உள்ளார். மேலும், உலகமே பழிக்கின்ற தாசிக்குலப் பெண்களுக்கும் ஒழுக்கம், காதல் உணர்வு, உயர் குணநலன்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதனை மோகினியின் வழி நாம் அறியலாம்.

உயர்ந்த இலட்சியங்களும் நல்ல சிந்தனைகளும் கொண்ட சத்தியமூர்த்தியும் கணிகையர் குலத்து நடன சகாப்தம் மோகினியும் முதன் முதலில் சந்தித்ததே மிகவும் சுவாரசியமான நிகழ்வாகும். எதிர்ப்பாரவிதமாக இரு வெவ்வேறு துருவ நட்சத்திரங்கள் சந்தித்துக் கொண்டாற்போல அவர்களின் சந்திப்பு அமைந்தது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளருக்கான நேர்முகத் தேர்வை முடித்துக் கொண்டு சத்தியமூர்த்தி மதுரைக்கு இரயிலில் திரும்புகிறான். தாயின் சுடுச்சொற்களைத் தாங்காதது இரயிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயலும் மோகினியைச் சற்றும் தாமதிக்காமல் அவளது வலது கையைப் பற்றி காப்பாற்றுகிறான். "அன்னலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்ற கம்ப இராமாயண வரிகளைப் போல் பார்வையாலே நூறு கவிதை பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அரும்பத் தொடங்கிய அவர்களின் சந்திப்பு, சத்தியமூர்த்தியின் இல்லம், மீனாட்சியம்மன் கோயில் என மெல்ல விரிந்தது. அதிலும் கோயில் கிளி மண்டபத்தில் சத்தியமூர்த்தியின் காலில் விழுந்து வணங்கிய மோகினி, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமாகச் சத்தியமூர்த்தியைக் கருதுவதாகக் கூறுகிறாள். மோகினியின் அன்பு தெய்வீகமானது என்பது இதன் மூலம் நமக்குத் தெளிவாகிறது.

மேலும், தமுக்கம் பொருட்காட்சி மைதானத்தில் சித்திரா பௌளர்ணமி யன்று மோகினியின் நடனத்தைக் காண சத்தியமூர்த்திக்கு அழைப்பு விடுக்கிறாள் மோகினி. தனது மனதில் சலனத்தை ஏற்படுத்திய உற்றவளின் அழைப்புக்கிணங்கி சத்தியமூர்த்தியும் அங்குச் செல்கிறான். அங்கு ஆண்டாள் பாசுரத்திற்கு அபிநயம் பிடித்த மோகினி தன்னை ஆண்டாளாகவும் சத்தியமூர்த்தியை கண்ணபிரானாக நினைத்தே ஆடுகிறாள். நடனத்தில் மனம் இலயித்து கெஞ்சி வேண்டிக் கொள்கிற குழைவோடு ஆடிய மோகினியின் வனப்பைக் கண்டு சத்தியமூர்த்தியும் மெய்ச்சிலிர்க்கிறான். தனது மனங்கவர்ந்த சத்தியமூர்த்தியின் வருகையே தான் அவ்வளவு சிறப்பாக ஆடக் காரணமென மோகினி விவரிக்கிறாள். தன்னுடைய ஆழமான காதலைச் சத்தியமூர்த்தியிடம் தன் நடனம்வாயிலாக தெரிவித்ததில் வெற்றி அடைகிறாள்.

தொடர்ந்து, மல்லிகைப் பந்தலுக்குச் சத்தியமூர்த்தி செல்ல விருப்பதை அறிந்த மோகினி திகைக்கிறாள்; வேதனையுறுகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்லுகின்ற சத்தியமூர்த்தியிடம் "நீங்கள் வாசிப்பதற்காக உங்கள் காலடியில் காத்துக்கொண்டிருக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது" எனது தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து அவனைக் கைக்கூப்புகிறாள் மோகினி. அணையில்லா காட்டாறுபோல தன் மேல் பாயும் மோகினியின் அன்பால் சத்தியமூர்த்தி திளைக்கிறான். தன் உள்ளக்கிடக்கை மறைமுகமாகக் கூறிய மோகினியிடம் சத்தியமூர்த்திக்கும் இனம் புரியாத காதல் ஏற்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மோகினி கேட்டுக் கொண்டதால் மல்லிகைப் பந்தலுக்குச் செல்லும் முன் சத்தியமூர்த்தி மோகினியை ஒருமுறை காணச் செல்கிறான். அங்குப் பழம் நழுவிப் பாலில் விழுவதைப் போல் முருகன் படத்திற்கு மோகினி அணிவ்வித்த மாலை, சத்தியமூர்த்தியின் கழுத்தில் விழுகிறது. இதனால் மோகினி அளவில்லா ஆனந்தமும் பரவசமும் அடைகிறாள். இவர்களின் காதலின் உச்ச அம்சமாக மோகினி சத்தியமூர்த்திக்குத் தன் மோதிரத்தை அணிவித்துத் தன் தூய அன்பினை வெளிப்படுத்துகிறாள். இதற்கு ஒப்பாக சத்தியமூர்த்தியும் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவளுக்கு அணிவிக்கிறான். இருவரும் மனதார கணவன் மனைவியாக நிச்சயிக்கப்படுகின்றனர்.

காதல் இன்பத்தில் திளைத்திருந்த மோகினி விதி விரித்த வலையில் சிக்குண்டதுபோல் தன் தாயின் மரணத்துற்குப் பிறகு மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் தஞ்சமடைகிறாள். தனது உள்ளத்தில் கணவராக வரித்துக் கொண்ட சத்தியமூர்த்தியின் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் ஏங்கித் தவிக்கும் கூண்டுக் கிளியாகிறாள். வஞ்சகமும் அற்பத்தனமும் நிறைந்த மஞ்சள் பட்டி ஜமீந்தாரும் கண்ணாயிரமும் மோகினியின் காதலுக்குப் பல தொல்லைகளை ஏற்படுத்துகிறார்கள். மஞ்சள் பட்டி ஜமீந்தாரின் மாளிகையில் சிறைபட்டு அழுது கொண்டிருந்த மோகினியைச் சத்தியமூர்த்தி சந்திக்கும் வேளையில் ஜமீந்தாரின் மூலம் தனக்குத் தொல்லை நேருமென்றும் இன்னொருவர் கை தன் மேல் பட்டால் உயிர்விட்டு விடுவதாக மோகினி கண்ணீர் ததும்பக் கூறுகிறாள்.

காதலையும் காதலனையும் உள்ளத்தில் ஏந்திக் கொண்டு கொடூரர்களின் கையில் சிக்கிய பட்டாம்பூச்சியாக மோகினி வேதனையுறுகிறாள். சத்தியமூர்த்தியிடம் மோகினி ஜமீந்தாருக்கு வாழ்க்கைத் துணையாக வாழ்கிறாள் என்ற பொய்ச்செய்தி சென்றடைகிறது. மோகினி தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக மனம் நொந்துப் போகிறான். அவளை அடியோடு வெறுக்கிறான். தனக்கு ஒரே ஆரதவாய்த் திகழ்ந்த சத்தியமூர்த்தியும் தன்னை வெறுக்கதை அறிந்து மோகினி அனலில் இட்டப் புழு போல துடிக்கிறாள். எவ்வளவோ முயன்றும் தன் நிலையையும் உண்மையான தன் காதலையும் அவனுக்குத் தெரிவிக்க இயலாது தவிக்கிறாள்.

இதற்கிடையில், ஜமீந்தார் அவளிடம் வரம்பு மீறி நடக்க முயல்கிறார். கடவுளுக்குச் சமர்ப்பணமான தூய பூமாலை ஒன்று குரங்குக் கையில் சிக்கிப் பாழாவதை விரும்பாத மோகினி, தனது கற்பையும் காதலையும் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்துகொள்கிறாள். உண்மையறிந்த சத்தியமூர்த்தி, மோகினியின் விருப்பப்படியே அவளது சிதையில் மல்லிகைப்பூ மாலையையும் மஞ்சள் கிழங்கையும் குங்குமத்தையும் இடுகிறான். தனது கண்ணீரில் அவளது உடலை அர்ச்சனை செய்கிறான். அவனது நெஞ்சில் நித்திய சுமங்கலியாக நிரந்தர இடம் பெற்ற மோகினியின் நினைவுகளோடு மேற்கு ஜெர்மனி பயணமாகிறான். மோகினி சத்தியமூர்த்தியின் மேல் கொண்ட ஆழமான காதலும் அவள் அவனுக்கு அணிவித்த பொன் விலங்கும் வாழ்க்கை முழுவதுமாகச் சத்தியமூர்த்தியை விடுவிக்க முடியா அன்பில் பிணைத்து விட்டன.

இறுதியாக, நூற்றாண்டுகள் கடந்து இன்னமும் வாழும் காவிய நாயகி காதல்களான ஷாஜகான்-மும்தாஜ், லைலா-மஜ்னு, அம்பிகாவதி-அமராவதி ஆகியோர்களைப் போன்று சத்தியமூர்த்தி-மோகினியின் உண்மைக் காதலை பொன் விலங்கு நாவல் மூலம் அடுத்த தலைமுறையும் யாசிக்கும் என்றால் அது மிகையாகாது.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் குமாரி சுகன்யா குமார், காண்வென் இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா.நன்றி)