Sunday, March 20, 2011

நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : முத்தழகம்மாள்-மோகினி

முத்தழகம்மாள்-மோகினி இருவரிடையே காணப்படும் முரண்பாடுகளை / கொள்கைப் போராட்டங்களை விளக்கி எழுதுக.

இலக்கியத் தாயின் தவப் புதல்வராக விளங்குபவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இவரின் பொன் விலங்கு நாவல் அறுபதாம் ஆண்டு காலக் கட்டத்தை நம் கண் முன்னே நிழலாடச் செய்கிறது. சத்தியமூர்த்தி எனும் தனி மனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டுப் புனையப்பட்ட இந்நாவல் சிறந்த சமுதாயப் படைப்பாகத் திகழ்கிறது. இந்நாவலில் முத்தழகம்மாளும் மோகினியும் தாய், மகள் எனும் உறவில் துணைக் கதாப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கொள்கை வேறுபாட்டினால் இரு துருவங்களாக விளங்கும் இவ்விருவருக்குமிடையே பற்பல முரண்பாடுகளை நாம் காண இயலுகிறது.

கணிகையர் குலத்தில் பிறந்து அதே நிலையில் வாழ விரும்பும் ஒரு கதாப்பாத்திரமாக முத்தழகம்மாள் இந்நாவலில் வலம் வருகிறாள். தன் வழியிலேயே தன் மகளையும் உருவாக்க விரும்புகிறார். சுயநலத்தின் திருவுருவமாகவே திகழும் முத்தழகம்மாள் சொந்த மகள் தற்கொலைக்குத் துணிந்ததைப் பார்த்தும் தன் பண்பை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. மோகினியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சற்றும் அவர் சிந்தித்ததேயில்லை. தனக்கு ஆதாயம் தரும் எந்தவொரு செயலையும் நிறைவேற்றத் துடிக்கும் காரியவாதியாகவே இருக்கிறார்.

மேலும், முத்தழகம்மாள் தாய்ப்பாசத்திற்குப் பதிலாகப் பணத்தாசையையே பிரதானமாகக் கொண்டுள்ளார். தனது மகள் மோகினியை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தி பணம் ஈட்ட முனைகிறார். நடனம், விளம்பரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் மோகினியை ஈடுபடுத்த விழைகிறார். உதாரணமாக அம்மன் கோயில் திருவிழாவில் நடனமாடிய மோகினி, அங்கு வந்திருந்தோரின் நடவடிக்கைப் பற்றியும் தன்னைப் பல்வோறு சில்லறை நடனங்களை ஆட வற்புறுத்தியதைப் பற்றியும் தாயிடம் முறையிடுகிறாள். இனிமேல் அது போன்ற விழாக்களில் தாம் ஆடப்போவதில்லை என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட முத்தழகம்மாள் மோகினியைக் கடுமையான சுடுச்சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார். பெருஞ்செல்வந்தரான மஞ்சள்பட்டி ஜமீந்தார், மோகினியைக் கொண்டு சினிமாப் படம் எடுக்க விருப்பம் தெரிவித்த பொழுது முத்தழகம்மாள் அதற்கு உடன்படுகிறார். அவளைப் பணம் காய்க்கும் மரமாகப் பார்க்கிறார்.

அதே வேளையில் மோகினியோ தனித்தன்மை வாய்ந்தவளாக விளங்குகிறாள், “நூலைப்போல சேலை, தாயைப்போல பெண்” என்ற கூற்றைத் தகர்த்தெறியும் பெண்ணாக மோகினி விளங்குகிறாள். சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல, தாழ்ந்த குடியில் பிறந்தாலும் தனது சிறப்பான பண்புகளால் மோகினி உயர்ந்து நிற்கிறாள். காண்பாரைச் சுண்டியிழுக்கும் பேரழகு படைத்தவளாகவும், பரதக் கலை, வீணை வாசித்தல் ஆகிய திறமையைக் கொண்டவளாக இருப்பினும் அவற்றைக் கொண்டு பெரும் பணம் சம்மாதிப்பதில் மோகினிக்குக் கிஞ்சிற்றும் நாட்டமில்லை. இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் போராட்டம் அரங்கேறுகிறது.

அதனைத் தவிர்த்து, பணக்காரரான மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் உறவை மோகினி அறவே வெறுக்கிறாள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல் கொடிய எண்ணங் கொண்ட ஜமீந்தாரிடமிருந்து மோகினி விலகியே நிற்கிறாள். அதோடு, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமான சத்தியமூர்த்தியையே தனது கணவனாக மோகினி மனத்திலே வரித்துக்கொள்கிறாள். கார் விபத்தில் தன் தாயை இழந்து பிறகு ஆதரவற்ற நிலையில் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் பின் செல்கிறாள். ஜமீந்தாரின் வஞ்சக சதியால் சத்தியமூர்த்தி தன்னை வெறுப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறாள். தனது தூய காதலுக்காகவும் கற்புக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறாள் மேதைப் பெண் மோகினி. மஞ்சள்பட்டி ஜமீந்தாரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆடம்பரமான, பகட்டான வாழ்வை அடைந்திருக்க முடியும் என்றிருந்தாலும் தெய்வீகக் காதலுக்கே முன்னுரிமை கொடுத்த மோகினி மனக்கண் முன் உயிர்ந்து நிற்கிறாள்.

ஆகவே, மோகினி, முத்தழகம்மாள் இருவருமே மாறுபட்ட பாத்திரப்படைப்பால் நம் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், மோகினி தன் கொள்கைகளால் உயர்ந்து நிற்கிறாள். அவளுடைய தாயோ தன் அற்பமான கொள்கைகளால் பின்தள்ளப்படுகிறாள்.
ஆக்கம்: ஷோபனா, தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா

Tuesday, March 15, 2011

கவிதை நீண்ட கேள்வி - முகம் நீ! முகவரி நீ!

முகம் நீ! முகவரி நீ! எனும் கவிதையில் வெளிப்படும் சிறப்புகளை விளக்கி எழுதுக.

தமிழன்னைக்கு கவிமகுடம் சூட்டிய கவிஞர்களுள் கவிக்கோ அப்துல் ரகுமானும் ஒருவராவார். அவரது பேனா முனை செதுக்கியுள்ள “முகம் நீ! முகவரி நீ!” எனும் செவிக்கினிய கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை, தமிழ் மொழி அனைத்து சிறப்பு அம்சங்களையும் ஒருங்கே அமையப்பெற்ற மொழி என்பதை மையக்கருவாகக் கொண்டுள்ளது. தமிழைத் தாயாக உருவகித்து அத்தாயின் சிறப்புகளை விளக்குவதாக இக்கவிதை புனையப்பட்டுள்ளது.

கவிஞர் இக்கவிதையின் வாயிலாகத் தமிழின் தொன்மையைக் கூறியுள்ளார். மொழிக்கு மூலமானது ஒலி. அந்த ஒலி கடலில் இருந்து முதன் முதலாய்த் தோன்றியது தமிழ்மொழி எனவும் கலை எனும் கடலை நாவினால் கடைந்ததால் வந்த அமுதமாகத் தமிழைச் சிறப்பிக்கிறார். இதன் மூலம் உலக மொழிகளுள் பழமையான மொழி, செம்மொழி தகுதியைக் கொண்டது நம் தாய் மொழி என்று உன்னத சிறப்பினைக் கூறி நம்மைப் பெருமைப்பட வைக்கிறார்.

மேலும், “கல் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி” என்ற சிறப்பு அம்சத்தைக் கொண்டிருந்தாலும் காலம் செல்லச் செல்ல தளர்ந்து போகும் மற்ற மொழிகளுக்கிடையே நாளுக்கு நாள் இளமைப் பெற்று வருவதாகக் கூறுவதானது மனிதன் அறிவியல் துணைக்கொண்டு கணினியுகம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்றிருந்தாலும் தமிழ்மொழி புதிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கியுள்ளதை அறிய முடிகிறது.

அதுமட்டுமல்லாது,இவ்வுலகில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் அவை அனைத்திலும் உயர்ந்து நிற்பது தமிழ்மொழியே எனக் கவிஞர் துணிந்து கூறுகிறார். தமிழ்மொழியில் உயிருக்கும் மெய்க்கும் என தனித்தனி எழுத்துகளுடன் சிறப்புற்று விளங்குவதைப் போன்று மற்ற எந்த மொழிகளாவது இருக்கிறதா என்று நம்மை ஆராயத் தூண்டுகிறார். மெய்யெழுத்துகளில், அழுத்தத்தால் வேறுபட்ட இனங்களாகப் பிரிந்திருக்கும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்றுவகை மெய்யொலிகள், இயற்கையான முறையில் ஒன்றுடன் ஒன்று இயைந்து இனிமையாக மொழியில் பயன்படும் சிறப்பான முறையைத் தமிழ்மொழி மட்டுமே கொண்டுள்ளதை உணர்த்துகிறார்.

அத்துடன், காலமெல்லாம் உயர்வடைந்துகொண்டே இருக்கிற மொழியாகவும் தமிழ்மொழி இருக்கும் வேளையில் மற்ற மொழிகளுள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகளைக் கொண்ட மொழியாகவும் அது விளங்குவதை நாம் உய்த்துணர வேண்டும். செவ்வியல் தன்மை என்ற அரிய தகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்மொழி ஒவ்வொரு தமிழனின் மூச்சிலும் பேச்சிலும் வாழ்வதோடு அவன் உயர்வுக்கும் வித்திடுவதைக் கவிஞர் நமக்குப் புலப்படுத்தியுள்ளார்.

அடுத்ததாக, ஒருவரைப் பற்றி கருத்து கூறும்பொழுது அதை நயம்பட அவர் முகம் கோணாமல் கூறும் வல்லமை பெற்றது தமிழ். ஒருவரைத் திட்டுவதற்குரிய கடுமையான சொற்களானாலும் அதைக் கூறும் போது கசப்பை விளைவிக்காமல் சிந்திக்கத் தூண்டும் இனிமை வாய்ந்ததாகத் தமிழ்மொழி விளங்குகிறது.மலர்களைக் கொண்ட பூஞ்சோலையைப் போன்று, காலம் கடக்க கடக்கச் சிறிதும் வளம் குறையாத மொழியாகத் திகழும் தமிழ்மொழியின் சிறப்பை எண்ணுங்கால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதைத் தவிர, யாருக்கும் நில்லாமல் உலவிக் கொண்டிருக்கின்ற காற்றும், தளர்ச்சியின்றி எப்போதும் எழுச்சியுடன் நிமிர்ந்து இலங்குகின்ற ஒளியும், எந்தச் சார்புமின்றி உலகம் முழுமைக்கும் பொதுவாகப் பயன் தரும் தமிழ்மொழி போற்றத்தக்கது என்று கவிஞர் இயம்புகிறார். அத்தகைய மொழியை ஒலிக்கும் வேளையில் நாவில் ஊறுகின்ற எச்சில்கூடத் தேனாகச் சுவைக்கிறது என்றும் கவிஞர் பூரிப்புடன் கூறுகிறார்.

தொடர்ந்து, உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டுமாய் முப்பதே எழுத்தொலிகளைக் கொண்டு மூவுலகிலும் உள்ள எந்தப் பொருளைக் குறிக்கவும், எந்தக் கருத்தை விளக்கவும், எந்த உணர்வை உணர்த்தவும் ஆற்றல் கொண்ட உலகப் பெருமொழியாகத் தமிழ்மொழி விளங்குவது வெள்ளிடைமலை. அப்பெருமொழியே வான்புகழ் வள்ளுவனின் திருநாவிலும் திருக்கரத்திலும் விளையாடி தனக்கு நிகராக வேறு நூல் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த திருக்குறள் மலர வித்திட்டிருக்கிறது.

மேலும், எந்தவொரு தடங்கல் இல்லாமல் கருத்துகளைச் சுலபமாக வெளிக்கொணர அரிய அமைப்பை வகுத்துத் தந்திருக்கும் ஒரே மொழியாகத் திகழ்வது தமிழ்மொழியே. பல இலக்கிய, இலக்கண செல்வங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்தம் வாழ்வைச் செழிப்புறச் செய்திருப்பது அதன் வள்ளல் தன்மையை மெய்ப்பிக்கிறது எனலாம். எந்த மொழியை ஒப்பிட்டாலும் அந்த மொழிக்கு மூத்ததாக இருக்கும் தமிழ்மொழி நம் தாய்மொழி எனப் பறைசாற்றுவதில் பெருமிதம் கொள்ளலாம். இவ்வாறு முதன்மை வகிக்கும் தமிழ்மொழி மதவேறுபாடுகள் பார்க்காமல் அனைத்து மதத்தின் கொள்கைகளையும் சுலபமாக மக்களிடம் போய்ச்சேர வழிவகுத்துள்ளது.வேறுபட்ட சமயக் கொள்கை இருப்பினும் தமிழ்ப்பற்று மேலோங்கி இருப்பதால் அவர்களிடையே உள்ள இணக்கம் பாதிப்புறவில்லை. தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதன் வாயிலாக தமிழர்கள் என்ற சிறப்பு அடையை நாம் பெற்றுள்ளோம். உயர்ந்த பண்பாட்டைப் பெற்று நாம் பெருமைகளுக்குரிய இனமாக உலகத்தில் வாழும் பேறும் பெற்று கிட்டியுள்ளோம். தமிழ்மொழியே நமக்கு இவ்வுலகில் அடையாளத்தையும் சிறப்பையும் வழங்கியுள்ளதை நாம் மறுக்க இயலாது. அத்தகைய தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்கள், தங்கள் முகத்தையும் முகவரியையுமே புறக்கணித்தவர்கள் ஆவார்கள் என்ற இன்றியமையாத கருத்தையும் மறைமுகமாகச் சுட்டி நம்மை உய்த்துணர கவிஞர் வழிவகுத்துள்ளார்.

ஆகவே, தொன்மை, தாய்மை, பொதுமை, தூய்மை, தனித்தன்மை, இனிமை, இளமை போன்ற செம்மொழித் தகுதிகளைக் கொண்டு அதன் நலம் கெடாது மென்மேலும் சிறப்பை எய்திட நம்மால் ஆன ஆக்கக் காரியங்களைச் செய்திட வேண்டும்.
(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )

Monday, March 14, 2011

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவறைப் பற்றிய சிறு குறிப்பு

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

பிறப்பு

9-11-1937 மதுரை, தமிழ்நாடு


கல்வி / தொழில்

முதுகலை (தமிழ்) பட்டமும், 'புதுக்கவிதையில் குறியீடு' என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பேராசிரியராகவும் பின் தமிழ்த்துறைத் தலைவராகவும் 30 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று முழுநேர இலக்கியப் பணியாற்றுகிறார்.


துறைகள் / திறன்கள்

கவிதை, உரைவீச்சு (புதுக்கவிதை), ஆய்வு.


பணிகள்

தமிழ்நாடு, தமிழன், அன்னம் விடுதூது ஏடுகளில் ஆசிரியர்; எண்ணற்ற ஆய்வுரைகள் ஆற்றியவர். உருதுக்கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். புதிய இலக்கியக் கோட்பாடுகளை ஆய்ந்து படைப்புகளில் கையாண்டுள்ளார்.


படைப்புகள்

பால்வீதி, நேயர்விருப்பம், சுட்டுவிரல், ஆலாபனை, விதைபோல் விழுந்தவன், முத்தமிழின் முகவரி, பித்தன், சொந்தச்சிறைகள், அவளுக்கு நிலா என்று பெயர், முட்டைவாசிகள், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, விலங்குகள் இல்லாத கவிதை, கரைகளே ந்தியாவதில்லை ஆகியன இவருடைய நூல்கள்.


சிறப்பு அடை

கவிக்கோ.


விருதுகள் / பரிசுகள்

கவியரசர் விருது, ராணா இலக்கிய விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, அட்சர விருது, கலைஞர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

முகம் நீ! முகவரி நீ! - கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்

முகம் நீ! முகவரி நீ!
(கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு, இந்தியா)

ஒலிக்கடலில் முதன்முதலாய்
உதித்துவந்த பேரலையே!
கலைக்கடலை நாவினால்
கடையவந்த செவியமுதே!


பிறந்தநாள் அறியாத
பேரழகே! பிறமொழிகள்
இறந்தநாள் காணநிதம்
இளமைபெற்று வந்தவளே!!


நயந்த மொழிகளிங்கு
நாலா யிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயர்மெய்யோ டிருப்பவர்யார்?


வல்லினமும் மெல்லினமும்
வளமான இடையினமும்
நல்லினமாய் ஒன்றுபட்டு
நடக்கவழி செய்தவளே!


உயர்மொழிநீ தனிமொழிநீ
உன்னதமாம் செம்மொழிநீ
உயிர்மொழிநீ மெய்மொழிநீ
உயர்வைத் தருபவள்நீ


வைதாலும் தித்திக்கும்
மதுரமே! காலத்தைக்
கொய்தாலும் மலர்வனத்தில்
குறையாத பூவனமே


நில்லாத காற்றைப்போல்
நிமிருகின்ற ஒளியைப்போல்
எல்லார்க்கும் பொதுவாக
இருப்பவளே உன்னைநாம்


உச்சரிக்கும் போதினிலே
ஊறுகின்ற வாயதன்
எச்சிலும் தேனாகும்
இதழ்களும் பூவாகும்


முப்பதே ஒலிகளுக்குள்
முழுவுலகும் அளப்பவளே!
ஒப்பதே இல்லாத
உயர்குறளைப் பெற்றவளே!


வலஞ்சுழித் தோடுகின்ற
வாக்கிய நதியே
நலஞ்செழித் தோங்குகின்ற
நாணய நாநயமே!


எம்மொழிக்கும் மூத்தவளே!
எம்மொழியாய் வாய்த்தவளே!
செம்மொழியாய் மொழிகளுக்குள்
செம்மாந் திருப்பவளே!


தேவாரம் தொடுத்தவளே!
திருவா சகத்தேனே!
நாவார ஆழ்வாரின்
நயங்களிலே ஆழ்ந்தவளே!


ஏசு மதத்தார்
ஈந்ததொரு கொள்கையினால்
ஏசா மதத்தை
எந்தமிழர்க் களித்தவளே!


மக்கா மதீனாவின்
மக்காத கொள்கையுடன்
நிக்கா முடித்தவளே!
நேயம் வளர்த்தவளே!


உன்னாலே பிறந்தோம்
உன்னாலே வளர்ந்தோம்
உன்னாலே பெருமைபெற்று
உலகத்தில் வாழுகின்றோம்!


அகம்நீ புறம்நீஎம்
ஆருயிரும் நீஎங்கள்
முகம்நீ முகவரிநீ
முடியாத புகழும்நீ!


கவிதைப் பூங்கொத்து

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 9

பயிற்சி 9

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. இரயில் சந்திப்புக்குப் பிறகு சத்தியமூர்த்தி மோகினியை எந்தக் கோயிலில் சந்தித்தான்? (1 புள்ளி)


ஆ. பொன் விலங்கு நாவலில் நாவலாசிரியர் எடுத்துக் கையாண்ட இரண்டு தமிழ் இலக்கிய நூல்களைக் குறிப்பிடவும். (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்திக்கும் தன் தகப்பனாருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாகக் காரணம் யாது?(4 புள்ளி)


ஈ. "உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் துணிந்து எழுதுவதே ஆச்சிரியமாக இருக்கலாம். இதை எப்படித் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே, எப்படி முடிப்பதென்றும், எந்த இடத்தில் முடிப்பதென்றும் கூடத்தெரியாமல் போகலாம். உங்களை எப்படி அழைத்து இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று சிந்தித்துத் தயங்குவதிலேயே அதிக நேரம் வீணாகக் கழிந்து விட்டது." (அத்தியாயம் 7, பக்கம் 102)


 1. இவ்வுரையாடலில் வரும் 'நான் மற்றும் 'உங்களை' யாவர்? (2 புள்ளி)

 2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 9
மாதிரி விடை

அ. மதுரை மீனாட்சியம்மன் கோயில்


ஆ.குறுந்தொகை, திருக்குறள்


இ. மோகினியோடு கொண்டுள்ள நட்பும் காதலும்.
தாம் பெரிய மனிதராக எண்ணிக் கொண்டிருக்கும் கண்ணாயிரத்தைத் துச்சமாக நினைத்து நடத்தல்.
தன் தந்தை வேண்டாம் என்று கூறிய இந்த ஆசிரியர் தொழிலை இவன் தேர்ந்தெடுத்தது.
தாம் விரும்பாத குமரப்பனோடு சகவாசம்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

 1. பாரதி, சத்தியமூர்த்தி


 2. பாரதியின் ஆலோசனைக்கேற்ப சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரியின் உரிதையாளர் பூபதிக்குக் கடிதம் எழுதுகிறான். அக்கடிதத்தில் விரிவிரையாளர் பணியின்பால் கொண்டுள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உண்ரத்த முனைகின்றான். அதன் பயனாக அவனுக்கு நியமனக் கடிதம் கிடைக்கின்றது. அவனும் வேலை நிமித்தம் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

Wednesday, March 9, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 8

பயிற்சி 8

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. விரிவுரையாளராக வரவேண்டுமென்ற சத்தியமூர்த்தியின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர் யார்? (1 புள்ளி)


ஆ. எதிர்மறை கதைமாந்தர்களில் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்திக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழக் காரணம் யாது?(4 புள்ளி)


ஈ. "நீயாவது 'டானா' உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏணியைப் போல நீ சாத்திய இடத்திலேயே சாத்திக்கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர் மேலே ஏறிப் போவதைப் பார்க்கும் வயிறெரிகிற தொழில் இது." (அத்தியாயம் 4, பக்கம் 56)


 1. இவ்வுரையாடலில் வரும் 'நீ' யார்? 'தொழில்'எதைக் குறிக்கிறது? (2 புள்ளி)

 2. இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 8
மாதிரி விடை

அ. பாரதி


ஆ.கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீந்தார்


இ. மாணவர்களைக் கவரும் வகையில் செயல்படுவது.
பாரதியுடன் நெருக்கம்.
தன் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்காமை.
மாணவர்களுக்காகப் போராடும் மனப்போக்கு.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

 1. சத்தியமூர்த்தி, விரிவிரையாளர்


 2. மல்லிகைப்பந்தலு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நேர்க்காணலை முடித்துவிட்டு மதுரைக்குத் திரும்புகிறான் சத்தியமூர்த்தி. அவ்வேளையில் நேர்காணலின் போது நடந்த சம்பவங்கள் அவன் மனதை நெருடுகின்றன. இந்த விரிவுரையாளர் வேலை தனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் கேள்வியும் அவன் மனத்தில் எழும்புகிறது. மேலும் தன் தந்தையின் எதிர்ப்பார்ப்பும் தன் மனக்கண் முன்னே நிழலாடுகிறது. இச்சூழலில் தன் தந்தை தான் செய்த இந்த ஆசிரியர் தொழிலை தன் மகனும் செய்யக்ககூடாது என்று கூறுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 7

பயிற்சி 7

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. சத்தியமூர்த்திக்குத் துணை நின்ற நண்பன் யார்? (1 புள்ளி)


ஆ. மல்லிகைப்பந்தல் கல்லூரியில் பணியாற்றும் இரு விரிவுரையாளர்களின் பெயரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தி விரிவுரையாளராக வரவேண்டுமென்று பாரதி எண்ணியதன் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரே இருக்கிற கல்லூரி உரிமையாளர் அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருக்கின்றன என்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப்பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் கோடீஸ்வரரிடம் இப்படி பேசி இருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது." (அத்தியாயம் 3, பக்கம் 40)


 1. இவ்வுரையாடலில் வரும் 'தனக்கு' மற்றும் 'கோடீஸ்வரர்' யாவர்? (2 புள்ளி)

 2. இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 7
மாதிரி விடை

அ. குமரப்பன்


ஆ.சத்தியமூர்த்தி, சுந்தரேசன்


இ. சத்தியமூர்த்தி ஒரு வசீகரமிக்க, அறிவார்ந்த இளைஞன்.
தமிழை நன்கு கற்றுணர்ந்தவன்.
ஆழ்ந்த அறிவும் உயர் பண்பும் கொண்டவன்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

 1. சத்தியமூர்த்தி, பூபதி


 2. நேர்க்காணலின் போது சத்தியமூர்த்தியின் இளமை ஒரு குறையாகக் கருதப்படுகிறது. சத்தியமூர்த்தி உணர்ச்சி வயப்படுவதோடு இளமை குறையள்ள என்றும், முதுமை நற்பண்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறுவதன்வழி பூபதியைப் புண்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. தான் கூறிய அந்த வார்த்தைகள் பூபதியின் மனத்தை புண்படுத்தியிருக்குமோ என்று எண்ணுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

Saturday, March 5, 2011

சிறுவர் இளையோர் சிறுகதைப் போட்டி

மலேசித் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்தும்

சிறுவர் – இளையோர் சிறுகதைப் போட்டி


சிறுவர், இளையோருக்கான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் (இலக்கியகம்) இணைந்து RM10,000.00 பரிசு திட்டத்தில் சிறுகதைப் போட்டியை நடத்தவிருக்கின்றது. இப்போட்டிக்கு மலேசிய உமா பதிப்பகமும், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றமும் ஆதரவு அமைப்புகளாக உள்ளன.

மாணவர்களின் வாசிப்புக்கான இலக்கியங்கள் நம் நாட்டில் படைக்கப்படுவது அரிதாகி விட்ட காரணத்தினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

நோக்கங்கள்
 1. மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் ‘சிறுவர் & இளையோர் சிறுகதை (Cerpen Kanak-kanan & Cerpen Remaja) இலக்கியத்தை அறிமுகப்படுத்துதல்.

 2. தமிழ்ப்படைப்பாளர்களிடையே சிறுவர் & இளையோர் சிறுகதை இலக்கியம் படைத்தலை ஊக்குவித்தல்.


 3. தமிழ்ச்சிறுவர்க்கும் தமிழ் இளையோருக்கும் இலக்கியச் சுவையூட்டி அதன்பால் ஆர்வத்தைத் தூண்டுதல்.


 4. இலக்கியத்தின் வழி தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோரின் சிந்தனையை வளப்படுத்திப் பண்படுத்துதல்.


 5. இலக்கியத்தின்வழி தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோரின் உணர்வுகளையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தி, பெற்றோரும் இளையோருடன் தொடர்புடைய மற்றோரும் அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுதல்.


 6. தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றின் காரணங்களையும் மூலங்களையும் சிறுகதை இலக்கியத்தில் அடையாளங்காட்டுவதன்வழி, உரிய தரப்புகள் அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளைக்கான வழிவகுத்தல்.


பிரிவுகள்
இப்போட்டி இரு பிரிவாக நடத்தப்படும்.
முதல் பிரிவு: சிறுவர் சிறுகதை (Cerpen Kanak-kanak – 7 முதல் 12 வயதினர் வாசிப்புக்கான படைப்பிலக்கியம்)

இரண்டாம் பிரிவு: இளையோர் சிறுகதை (Cerpen Remaja – 13 முதல் 19 வயதினர் (பதின்ம வயதினர்) வாசிப்புக்கான படைப்பிலக்கியம்.

பரிசுகள்
மொத்தப் பரிசுத் தொகை: ரொக்கப் பணம் RM10,000.00

சிறுவர் சிறுகதைக்கு: RM5,000.00
10 சிறந்த சிறுகதைக்குத் தலா RM500.00 வீதம் வழங்கப்படும்.

இளையோர் சிறுகதைக்கு: RM5,000.00
10 சிறந்த சிறுகதைக்குத் தலா RM500.00 வீதம் வழங்கப்படும்.

(குறிப்பு: முதல் இரண்டாம், மூன்றாம் பரிசுகள், ஆறுதல் பரிசுகள் என்று வகை பிரிக்கப்படாமல் தேர்வாகின்ற 10 சிறுகதைகளும் சிறந்த சிறுகதைகள் (பரிசுக்குரியவை) என நடுவர்களால் அறிவிக்கப்படும்)

விதிமுறைகள்

 1. மலேசியத் தமிழ்ப் படைப்பாளர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கு பெறலாம்


 2. போட்டியில் பங்கு பெறுபவர் இப்போட்டிக்கான சிறுவர் சிறுகதை, இளையோர் சிறுகதை ஆகிய இரு பிரிவுகளிலும் பங்கு கொள்ளலாம்.


 3. சிறுவர், பதின்ம அகவையினராகிய நம் நாட்டுத் தமிழ் இளையோர், இன்றைய பல்வகை மலேசிய வாழ்க்கைச் சூழல்களில் எதிர்கொள்கின்ற சவால்களையும் சிக்கல்களையும், உணர்வுகளையும், அதோடு அவர்கள அடைகின்ற சாதனைகள் அல்லது வெற்றிகளை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு சிறுகதை எழுத வேண்டும்.


 4. சிறுகதை நல்ல தமிழிலும், எளிய நடையிலும், மொழிநயம், கலைநயம், பொருள் நயம் (கருத்து நயம்) ஆகிய கூறுகள் பொருந்தியதாகவும் அமைய வேண்டுவதோடு அந்தந்த வயதினர்க்கேற்ற மொழியிலும் அவர்களின் மன நிலைக்கும் அனுபவத்திற்கும் ஏற்புடையதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.


 5. சிறுகதைப் படைப்பாளரின் சொந்தப் படைப்பாகவும், இதற்கு முன் அச்சேற்றப்படாததாகவும் இருத்தல் வேண்டும். (இதற்கான உறுதி மொழியை சிறுகதை படிவத்தின் இறுதியில் வழங்கி கையொப்பமிட்டிருக்க வேண்டும்). கதைப் படிவத்தில் கதைத் தலைப்பு மட்டுமே இருத்தல் வேண்டும்; எழுதியவரின் பெயர் அப்படிவத்தில் இருத்தல் கூடாது.


 6. சிறுகதை அளவு.
  A4 அளவுத்தாள்
  12 புள்ளி எழுத்துரு அளவு (Font Size)
  1.5 அளவு வரி இடைவெளி (Line Spacing)
  1,000 சொற்கள் (சிறுவர் சிறுகதைக்கு)
  1,500 சொற்கள் (இளையோர் சிறுகதைக்கு)

  கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அச்சுப்படிவத்தை (Hard Copy) மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.


 7. சிறுகதையைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

 8. நடுவர்களின் முடிவே இறுதியானது.


 9. படைப்பின் பதிப்புரிமை ஏற்பாட்டாளர்களுக்கு உரியதாகும். (படைப்பாளர், தங்களுடைய சிறுகதைகளை நூலாக்கும் உரிமையை ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் உறுதிக்கடிதம் ஒன்றை வழங்கவேண்டும்.)


 10. போட்டி விதிகளுக்கு உட்படாத படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 31.3.2011
மேல்விபரங்களுக்கு
:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
No.6-B, Jalan Murai 1, Batu Complex, Bt.3 Off Jalan Ipoh,
51200 Kuala Lumpur, Malaysia.
Tel/Fax: 03-6250 4544
H/P: 012-2668416 குணநாதன் H/P: 012-6025450 ந.பச்சைபாலன்

  Tuesday, March 1, 2011

  நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 6

  பயிற்சி 6

  பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

  அ. மல்லிகைப் பந்தலிலிருந்து சத்தியமூர்த்திக்கு எத்தனைக் கடிதங்கள் வந்தன? (1 புள்ளி)


  ஆ. பொன்விலங்கு நாவலை எழுதிய நா.பார்த்தசாரதியின் பிற நூல்கள் இரண்டிணைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


  இ. பணி ஓய்வுக்குப் பின் சத்தியமூர்த்தியின் தந்தையை வருத்திய இரண்டு கவலைகள் யாவை?(4 புள்ளி)


  ஈ. "சித்திரா பௌர்ணமியன்று மாலை ஒரு மணி தமுக்கம் பொருட்காட்சியில் அக்காவோட நாட்டியம் இருக்கு. அதுக்கு நீங்க அவசியம் வரணுமுன்னு அக்கா ஆசைப்படறாங்க! 'வேறே யாருக்கும் தெரியப்படாது. உடனே இதைப் போய் அவரிடம் சொல்லிவிட்டு வா'ன்னாங்க. இந்த வீட்டைக்கூட அக்கா சொன்ன அடையாளத்திலிருந்துதான் நான் தேடிக் கண்டுபிடித்தேன்." (அத்தியாயம் 12, பக்கம் 165)


  1. இவ்வுரையாடலில் வரும் 'நீங்க' மற்றும் 'நான்' யாவர்? (2 புள்ளி)

  2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

  பயிற்சி 6
  மாதிரி விடை


  அ. மூன்று


  ஆ. குறிஞ்சி மலர், ஆத்மாவின் ராகங்கள்


  இ. வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுதல்.
  மகள் ஆண்டாளின் திருமணம்.
  (ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

  1. சிறுவன், சத்தியமூர்த்தி


  2. ஒரு சிறுவன் சத்தியமூர்த்தியை வந்து சந்திக்கிறான். தமுக்கம் பொருட்காட்சியில் நடைபெறும் மோனியின் நடனத்தைக் காண வருமாறு மோகினி அழைத்ததாக அச்சிறுவன் கூறுகிறான். சத்தியமூர்த்தியோ சிறுவனிடம் தான் வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறான்.
   சிறுவனோ சத்தியமூர்த்தி உறுதியா பதில் சொல்லும்வரை விடாப்பிடியாக இருக்கிறான். அப்போது,
   பல வகையில் மனம் புண்பட்டுப் போய் இருக்கும் மோகினியைப் பற்றி யோசிக்கிறான்.
   தானும் புண்படுத்தக்கூடாது என்று எண்ணி அந்தச் சிறுவனிடம் அவசியம் வருகிறேன் என்று கூறி அவனை வழியனுப்புகிறான்

  (நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)