Sunday, April 11, 2010

நாவல் (நீண்ட கேள்வி) : முத்தழகம்மாள் மோகினி வேறுபாடுகள்

முத்தழகம்மாள்-மோகினி இருவரிடையே காணப்படும் முரண்பாடுகளை / கொள்கைகளை விளக்கி எழுதுக.

இலக்கியத் தாயின் தவப் புதல்வராக விளங்குபவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இவரின் பொன் விலங்கு நாவல் அறுபதாம் ஆண்டு காலக்கட்டத்தை நம் கண்முன் நிழலாடச் செய்கிறது. சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனிமனித வாழ்க்கைக் போரட்டங்களை மையமிட்டுப் புனையப்பட்ட இந்நாவல் சிறந்த சமுதாயப் படைப்பாகத் திகழ்கிறது. இந்நாவலில் முத்தழகம்மாளும் மோகினியும் தாய், மகள் எனும் உறவில் துணைக் கதாப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கொள்கை வேறுபாட்டினால் இரு துருவங்களாக விளங்கும் இவ்விருவருக்குமிடையே பற்பல முரண்பாடுகளை நாம் காண இயலுகிறது.

கணிகையர் குலத்தில் பிறந்து அதே நிலையில் வாழ விரும்பும் ஒரு கதாப்பாத்திரமாக வலம் வருகிறாள். தன் வழியிலேயே தன் மகளையும் உருவாக்க விரும்புகிறார். சுயநலத்தின் திருவுருவமாகவே திகழும் முத்தழகம்மாள் சொந்த மகள் தற்கொலைக்குத் துணிந்ததைப் பார்த்தும் தன் பண்பை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. மோகினியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சற்றும் அவர் சிந்தித்ததேயில்லை. தனக்கு ஆதாயம் தரும் எந்தவொரு செயலையும் நிறைவேற்றத் துடிக்கும் காரியவாதியாகவே இருக்கிறார்.

மேலும், முத்தழகம்மாள் தாய்ப்பாசத்திற்குப் பதிலாகப் பணத்தாசையையே பிரதானமாகக் கொண்டுள்ளார். தனது மகள் மோகினியை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தி பணம் ஈட்ட முனைகிறார். நடனம், விளம்பரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் மோகினியை ஈடுபடுத்த விழைகிறார். உதாரணமாக அம்மன் கோயில் திருவிழாவில் நடனமாடிய மோகினி, அங்கு வந்திருந்தோரின் நடவடிக்கைப் பற்றியும் தன்னைப் பல்வேறு சில்லறை நடனங்களை ஆட வற்புறுத்தியதைப் பற்றியும் தன் தாயிடம் முறையிடுகிறாள். இனிமேல் அது போன்ற விழாக்களில் தான் ஆடப்போவதில்லை என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட முத்தழகம்மாள் மோகினியைக் கடுமையான சுடுச்சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார். பெருஞ் செல்வந்தரான மஞ்சள்பட்டி ஜமீன்தார், மோகினியைக் கொண்டு சினிமாப் படத்தை எடுக்க விருப்பம் தெரிவித்தபொழுது முத்தழகம்மாள் அதற்கு உடன்படுகிறார். அவளைப் பணம் காய்க்கும் மரமாககப் பார்க்கிறார்.

அதே வேளையில் மோகினியோ தனித்தன்மை வாய்ந்தவளாக விளங்குகிறாள். “நூலைப் போல சேலை, தாயைப்போல பெண்” என்ற கூற்றைத் தகர்த்தெறியும் பொண்ணாக மோகினி விளங்குகிறாள். சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல, தாழ்ந்த குடியில் பிறந்தாலும் தனது சிறப்பான பண்புகளால் மோகினி உயர்ந்து நிற்கிறாள். காண்பாரைச் சுண்டி இழுக்கும் பேரழகுப் படைத்தவளாகவும், பரதக் கலை, வீணை மீட்டுதல் ஆகிய திறமையைக் கொண்டவளாக இருப்பினும் அவற்றைக் கொண்டு பெரும் பணம் சம்பாதிப்பதில் மோகினிக்குக் கிஞ்சிற்றும் நாட்டமில்லை. இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் போராட்டம் அரங்கேறுகிறது.

அதனைத் தவிர்த்து, பணக்காரரான மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் உறவை மோகினி வெறுக்ககிறாள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல கொடிய எண்ணங் கொண்ட ஜமீன்தாரிடமிருந்து மோகினி விலகியே நிற்கிறாள். அதோடு, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமான சத்தியமூர்த்தியையே தனது கணவனாக மோகினி மனத்திலே வரித்துக் கொள்கிறாள். கார் விபத்தில் தன் தாயை இழந்த பிறகு ஆதரவற்ற நிலையில் மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் பின் செல்கிறாள். ஜமீன்தாரின் வஞ்சக சதியால் சத்தியமூர்த்தி தன்னை வெறுப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறாள். தனது தூய காதலுக்காகவும் கற்புக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறாள் பேதைப்பெண் மோகினி. மஞ்சள்பட்டி ஜமீன்தாரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆடம்பரமான, பகட்டான வாழ்வை அடைந்திருக்க முடியும் என்றிருந்தாலும், தெய்வீக காதலுக்கே முன்னுரிமைக் கொடுத்த மோகினி நம் மனக்கண்முன் உயர்ந்து நிற்கிறாள்.

ஆகவே, மோகினி-முத்தழகம்மாள் இருவருமே மாறுபட்ட பாத்திரப்படைப்பால் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், மோகினி தன் கொள்கையால் உயர்ந்து நின்றாள். அவளுடைய தாயோ தன் அற்பமான கொள்கையால் பின்தள்ளப்படுகிறாள்.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் செல்வி ஷோபனா, தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா.நன்றி

Sunday, February 21, 2010

நாவல் (பொன் விலங்கு) : நீண்ட கேள்வி - கதைப்பின்னல்

பொன் விலங்கு நாவலில் ஆசிரியர் கையாண்டுள்ள கதைப் பின்னலை விளக்கி ஒரு கட்டுரை வரைக.

பொன் விலங்கு தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஒரு சிறந்த நாவலாகும். இவர் படைத்தளித்த நூல்களில் குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், சமுதாய வீதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொன் விலங்கு நாவலின் கதை பின்னல் "தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்நாவலின் கதைப் பின்னலை நாம் ஐந்து கூறுகளில் ஆராயலாம்.

முதற்கூறு தொடக்கம். இந்நாவலின் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளும் சிறந்த கொள்கையும் உடைய முதன்மைக் கதாப்பாத்திரமாகச் சத்தியமூர்த்தி அறிமுகமாகிறான். எம்.ஏ. பட்டதாரியான அவன் வயதான பெற்றோரையும் இரு தங்கைகளையும் பராமரிக்க வேண்டிய சூழலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் இரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் அவன் கைப்பெட்டியைச் சிறுவன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓட அவனை மன்னித்து விடுகிறான். இங்கே அவனின் இரக்கக் குணம் வெளிப்படுகிறது. நேர்முகப்பேட்டியின் போது அவனது அறிவாற்றல் வெளிப்படுகிறது. துணைக் கதைமாந்தர்களான மோகினி, பூபதி, பாரதி போன்றோரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். ஒழுக்கமும் கட்டுபாடும் நிறைந்த தரமான கல்லூரியை நடத்தும் தொழிலதிபரான பூபதியால் கவரப்படுகிறான். பேட்டி முடிந்து மதுரை திரும்பும் சத்தியமூர்த்தி இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைக் காப்பாற்றுகிறான்.

இரண்டாவது கூறு கதையின் வளர்ச்சி ஆகும். இந்நாவலின் வளர்ச்சியில் மோகினியோடு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்ட தொடர்பு நெருக்கமாகி, விட்டு விலக முடியாத பொன் விலங்காக அவனை அரவணைக்கிறது. எதிர்மறைக் கதைப்பாத்திரங்களான கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். மூன்லைட் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான கண்ணாயிரம் மோகினியின் தாயார் முத்தழகு அம்மாளின் பணத்தாசையைப் பயன்படுத்தி தாமும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார். புகழுக்காக பணத்தை அள்ளி இறைக்கும் ஜமீந்தாரை மோகினி குடும்பத்திற்கு அறிமுகம் செய்கிறார். வேலைக்காகக் காத்திருந்த சத்தியமூர்த்திக்கு வேலைக்கான ஆர்டர் வருகிறது. சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினர், மோகினி, நண்பன் குமரப்பன் ஆகியோருடன் விடைபெற்று மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.

மூன்றாவது கூறான இந்நாவலின் சிக்கலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு வேலைக்குப் போனது முதல் சத்தியமூர்த்தி பல இன்னல்களை எதிர்நோக்குகிறான். அவன் அன்புக்காக ஏங்கி அவனிடம் நெருங்கி வரும் பாரதியிடம் கவனமாகப் பழகுகிறான். சத்தியமூர்த்தி தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக எண்ணி அவள் வருந்துகிறாள். பூபதியின் நன்மதிப்பைப் பெற்றுப் பல புதிய பொறுப்புகளுக்குச் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்ட போது மற்றவர்களின் பொறாமைக்கு அவன் ஆளாகிறான். அவனுடைய செயலில் பலரும் குற்றம் காண்கின்றனர். கார் விபத்தில் தாயை இழந்த மோகினியை ஜமீன்தார் மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். ஆனால் அவளோ மறுக்கிறாள். சத்தியமூர்த்திக்குத் துணையாக இருந்த பூபதி விமான விபத்தில் மரணமடைந்தது அவன் நிலைமையை மோசமாக்குகிறது. கல்லூரியின் புதிய நிர்வாகியாகும் ஜமீன்தார் அவனைப் பழி வாங்க திட்டமிடுகிறார். அவர் ஏற்பாட்டில் சத்தியமூர்த்தி கைது செய்யப்படுகிறான். சத்தியமூர்த்தியை எதிர்க்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.

இதனையடுத்த கூறு உச்சம் ஆகும். பொன் விலங்கு நாவலின் உச்சத்தில் சத்தியமூர்த்தியிடமிருந்து எப்படியாவது மோகினியைப் பிரித்து அவளைத் தாம் மணக்க வேண்டும் என ஜமீந்தார் திட்டமிடுகிறார். அவரும் மோகினியும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தைச் சுவரில் மாட்டி சத்தியமூர்த்தியை நம்பும்படி செய்கிறார். மோகினி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கும் சத்தியமூர்த்தி அவளை வெறுத்து ஒதுக்குகிறான்.

கதைப் பின்னலின் இறுதி கூறான சிக்கல் அவிழ்ப்பில் பாரதி மூலம் மோகினியின் மரணம் பற்றி அறியும் சத்தியமூர்த்தி தன் தவற்றுக்காகக் குமுறி அழுகிறான். மோகினியின் சிதைக்கு தன் இறுதி மரியாதையைச் செய்கிறான். கண்ணாயிரமும் ஜமிந்தாரும் தாங்கள் செய்த அநியாயத்திற்குத் தண்டனையாகக் கள்ளநோட்டுக் கும்பலோடு கொண்ட தொடர்பால் கைது செய்யப்படுகிறார்கள். மோகினியின் நினைவைச் சுமந்துக் கொண்டு ஜெர்மனிக்குப் பயணமாகிறான் சத்தியமூர்த்தி.

இந்நாவலின் கதைப் பின்னலின் மூலம் நாவலாசிரியர் பல நல்ல கருத்துகளை மிக சுவாரசியமாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். இதுவே, கதைக்குத் திருப்பத்தையும் விறுவிறுப்பையும் தந்து வாசகர் படித்து சுவைக்கும் நாவலாக பொன் விலங்கு நாவல் அமைய உதவி உள்ளது.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் செல்வி க.காளிஷ்வரி, ஸ்ரீ நிபோங் இடைநிலைப்பள்ளி, தென் செபெராங் பிறை,பினாங்கு, மலேசியா.நன்றி

Friday, February 19, 2010

கவிதை: நீண்ட கேள்வி - எங்கள் நாடு

எங்கள் நாடு என்ற கவிதையில் தன் நாட்டின் சிறப்புகளாகக் கவிஞர் கூறுவனவற்றையும் இக்கவிதை வழி நாம் பெறும் படிப்பினையையும் விளக்கி எழுதுக.

நாடறிந்த மலேசியக் கவிஞர் சங்கு சண்முகத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த ‘எங்கள் நாடு’ எனும் கவிதை, கவிதைப் பூங்கொத்து என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதையில் கவிஞர் தன் தாய்நாடான மலேசியாவின் தனிச்சிறப்புகளை எல்லாம் பெருமிதத்துடன் விளக்கியுள்ளார்.

சந்தக் கவிஞரான இவர் மலேசியத் திருநாட்டைத் தாயாக உருவகித்துப் பாடுகிறார். “இந்த நாட்டு மண்ணிலே இன்றிருக்கும் உயிர்கள் யாவும் எங்கள் தாயின் பிள்ளையே” என்ற கூற்றின் வழி மலாய், சீனர், இந்தியர், கடாசான், டூசூன் போன்ற பல்லின மக்கள் யாவரும் கலை, பண்பாடு, சமயம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி வருகின்றனர். பல இனங்களிடையே நிலவும் நல்ல உறவும் ஒற்றுமையும் மலேசியாவை உலக அரங்கில் நிமிர வைத்துள்ளது.

மேலும், அடர்ந்த காடு மேடாக இருந்த இந்த ஸ்வர்ண பூமியைத் தங்கள் கடின உழைப்பால் சீர்ப்படுத்திச் செம்மையாக்கி இனிய வாழுமிடமாக மாற்றிய நம் முன்னோரைக் கவிஞர் நினைவுகூற வைத்துள்ளளார். மக்களின் இனிய பண்பையும் ஒற்றுமைச் சிறப்பையும் தென்றல், ஆறு போன்ற இயற்கைச் செல்வங்கள் வாழ்த்தி மகிழ்வதாகக் கவிஞர் குறிப்பிடுதவன் மூலம் நாட்டின் இயற்கை வளமும் மக்களின் உழைப்பும் போற்றப்படவேண்டிய ஒன்று என்று அறிய முடிகிறது.

இதனைத் தொடர்ந்து பகைமை உணர்ச்சி நீங்கி தோழமை உணர்வுடன் மலேசிய மக்கள் வாழ்வதால் இப்புண்ணிய பூமி அமைதிப் பூங்காவாகத் திகழும் பேறு பெற்றுள்ளதைக் கவிஞர் தம் கவிதையின் வழி இயம்பியுள்ளார். தான் குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து இளைஞனாகி ஒரு பெண்ணை மணந்து வாழும் இந்நாட்டில் வீணான குழப்பங்கள் இல்லை என்கிறார். எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே கொண்டு ஒருவர் பால் ஒருவர் அன்பு கொள்ளும் திறத்தை மக்கள் வளர்த்து வருவதால் இங்கு வீணான குழப்பங்களும் சண்டைச் சச்சரவுகளும் இல்லை எனக் கவிஞர் பெருமிதத்துடன் கூறுகின்றார். அவ்வாறு யாராகினும் வீணான பகை உணர்வுக்கு இடங்கொடுத்தால் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் எனவும் சூளுரைக்கின்றார்.

இறுதியாக கவிஞர், 'உன்னாலே மலேசியா' என்ற வாசகத்திற்கும் பொருள் கூறும் வண்ணம் மக்கள் இங்கு நல்வாழ்வுப் பெற்று வாழ்ந்திட வரங்கொடுத்த தன் தாய் நாட்டை வாழ்த்தி வணங்குகிறார். ஈன்றெடுத்த குழந்தை எத்தனை என்றாலும் குறைவின்றி பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய் போல, மக்கள் அதிகமாக வந்து குடியேறினாலும் தன் நிலத்தின் வளங்களை வழங்கி அனைவரையும் வாழ வைக்கும் நாடாகிய தாயைச் சிந்துக் கவிகளால் போற்றிப் பாடி சிரம் தாழ்த்தி, கைகளைப் குவித்து வணங்கி, தாயே! என் உயிரையும் உனக்காகத் தருவேன் என்று கவிஞர் தன் நாட்டுப் பற்றை வெளிக்கொணர்கிறார்.

தன் தாய் நாட்டின் சிறப்புகளை எடுத்தியம்பும் அதே வேளையில் சில படிப்பினைகளையும் நம் சிந்தனைக்கு விருந்தாக்கி உள்ளார் கவிஞர். தீவிரவாதம், அரசியல் நிலைத்தன்மை இன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை, உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய உலகியல் மலேசியாவின் பல்லின மக்கள் சுபிட்சமாய் வாழும் நிலை பெற்றதற்கு வேற்றுமைகளைக் களைந்த ஒற்றுமை உணர்வே என்பதனை நாம் உணர வேண்டும். இந்நிலை நீடிக்க வேண்டுமெனில் நாம் புறத்தாக்குதலிலிருந்து தற்காத்துப் கொள்ளும் வகையில் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில், இரத்தப் பெருக்கெடுத்து ஓடும் போர்க்களமாக இப்பூமி மாறக்கூடும். அப்பொழுது இத்தாய் மண்ணில் செழித்து நிற்கும் இயற்கை வளங்கள் பயனற்றுப் போகும். ஒவ்வொரு குடிமகனும் தன் தாய் மண்ணை நேசித்து அதன் உயர்வுக்குப் பாடுபட வேண்டும் என்ற படிப்பினையைக் கவிஞர் நமக்குத் தந்துள்ளார்.

ஆகவே, பிறந்த நாட்டை தாயாகவே எண்ணி அதன் புகழ்பாடும் கவிஞரின் பாங்கு நம்மிடத்திலும் நிலைபெற வேண்டும். அவரின் பேனா முனையில் தெறித்துள்ள சிந்தனை முத்துகளை நாம் படிப்பினையாகக் கொண்டு வாழமுற்பட வேண்டும்.

(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

Wednesday, January 20, 2010

நாவல் (பொன் விலங்கு)-நீண்ட கேள்வி

மோகினி சத்தியமூர்த்தியின் மேல் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை விவரித்து எழுதுக

நாவல் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் நா.பார்த்தசாரதி ஆவார். இவரின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் பொன் விலங்காகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் தனித்தன்மை வாய்ந்த துணைக்கதாப்பாத்திரமான மோகினி, சத்தியமூர்த்தியின் மேல் உண்மையான அன்பு கொள்ளும் பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

பொன் விலங்கு நாவலில் மோகினி தனது கள்ளமில்லா ஆத்மார்த்தமான காதலால் வாசகர்களின் மனதில் நெருடலையும் பாதிப்பையும் உண்டாக்கி இருக்கிறாள் என்பது கண்கூடு. 1960-களில் வாழ்ந்த சராசரி பெண்களின் உணர்வுப் போராட்டங்களையும், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட வழிகளையும் மோகினியின் மூலம் நாவலாசிரியர் நமக்குப் புலப்படுத்தி உள்ளார். மேலும், உலகமே பழிக்கின்ற தாசிக்குலப் பெண்களுக்கும் ஒழுக்கம், காதல் உணர்வு, உயர் குணநலன்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதனை மோகினியின் வழி நாம் அறியலாம்.

உயர்ந்த இலட்சியங்களும் நல்ல சிந்தனைகளும் கொண்ட சத்தியமூர்த்தியும் கணிகையர் குலத்து நடன சகாப்தம் மோகினியும் முதன் முதலில் சந்தித்ததே மிகவும் சுவாரசியமான நிகழ்வாகும். எதிர்ப்பாரவிதமாக இரு வெவ்வேறு துருவ நட்சத்திரங்கள் சந்தித்துக் கொண்டாற்போல அவர்களின் சந்திப்பு அமைந்தது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளருக்கான நேர்முகத் தேர்வை முடித்துக் கொண்டு சத்தியமூர்த்தி மதுரைக்கு இரயிலில் திரும்புகிறான். தாயின் சுடுச்சொற்களைத் தாங்காதது இரயிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயலும் மோகினியைச் சற்றும் தாமதிக்காமல் அவளது வலது கையைப் பற்றி காப்பாற்றுகிறான். "அன்னலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்ற கம்ப இராமாயண வரிகளைப் போல் பார்வையாலே நூறு கவிதை பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அரும்பத் தொடங்கிய அவர்களின் சந்திப்பு, சத்தியமூர்த்தியின் இல்லம், மீனாட்சியம்மன் கோயில் என மெல்ல விரிந்தது. அதிலும் கோயில் கிளி மண்டபத்தில் சத்தியமூர்த்தியின் காலில் விழுந்து வணங்கிய மோகினி, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமாகச் சத்தியமூர்த்தியைக் கருதுவதாகக் கூறுகிறாள். மோகினியின் அன்பு தெய்வீகமானது என்பது இதன் மூலம் நமக்குத் தெளிவாகிறது.

மேலும், தமுக்கம் பொருட்காட்சி மைதானத்தில் சித்திரா பௌளர்ணமி யன்று மோகினியின் நடனத்தைக் காண சத்தியமூர்த்திக்கு அழைப்பு விடுக்கிறாள் மோகினி. தனது மனதில் சலனத்தை ஏற்படுத்திய உற்றவளின் அழைப்புக்கிணங்கி சத்தியமூர்த்தியும் அங்குச் செல்கிறான். அங்கு ஆண்டாள் பாசுரத்திற்கு அபிநயம் பிடித்த மோகினி தன்னை ஆண்டாளாகவும் சத்தியமூர்த்தியை கண்ணபிரானாக நினைத்தே ஆடுகிறாள். நடனத்தில் மனம் இலயித்து கெஞ்சி வேண்டிக் கொள்கிற குழைவோடு ஆடிய மோகினியின் வனப்பைக் கண்டு சத்தியமூர்த்தியும் மெய்ச்சிலிர்க்கிறான். தனது மனங்கவர்ந்த சத்தியமூர்த்தியின் வருகையே தான் அவ்வளவு சிறப்பாக ஆடக் காரணமென மோகினி விவரிக்கிறாள். தன்னுடைய ஆழமான காதலைச் சத்தியமூர்த்தியிடம் தன் நடனம்வாயிலாக தெரிவித்ததில் வெற்றி அடைகிறாள்.

தொடர்ந்து, மல்லிகைப் பந்தலுக்குச் சத்தியமூர்த்தி செல்ல விருப்பதை அறிந்த மோகினி திகைக்கிறாள்; வேதனையுறுகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்லுகின்ற சத்தியமூர்த்தியிடம் "நீங்கள் வாசிப்பதற்காக உங்கள் காலடியில் காத்துக்கொண்டிருக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது" எனது தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து அவனைக் கைக்கூப்புகிறாள் மோகினி. அணையில்லா காட்டாறுபோல தன் மேல் பாயும் மோகினியின் அன்பால் சத்தியமூர்த்தி திளைக்கிறான். தன் உள்ளக்கிடக்கை மறைமுகமாகக் கூறிய மோகினியிடம் சத்தியமூர்த்திக்கும் இனம் புரியாத காதல் ஏற்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மோகினி கேட்டுக் கொண்டதால் மல்லிகைப் பந்தலுக்குச் செல்லும் முன் சத்தியமூர்த்தி மோகினியை ஒருமுறை காணச் செல்கிறான். அங்குப் பழம் நழுவிப் பாலில் விழுவதைப் போல் முருகன் படத்திற்கு மோகினி அணிவ்வித்த மாலை, சத்தியமூர்த்தியின் கழுத்தில் விழுகிறது. இதனால் மோகினி அளவில்லா ஆனந்தமும் பரவசமும் அடைகிறாள். இவர்களின் காதலின் உச்ச அம்சமாக மோகினி சத்தியமூர்த்திக்குத் தன் மோதிரத்தை அணிவித்துத் தன் தூய அன்பினை வெளிப்படுத்துகிறாள். இதற்கு ஒப்பாக சத்தியமூர்த்தியும் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவளுக்கு அணிவிக்கிறான். இருவரும் மனதார கணவன் மனைவியாக நிச்சயிக்கப்படுகின்றனர்.

காதல் இன்பத்தில் திளைத்திருந்த மோகினி விதி விரித்த வலையில் சிக்குண்டதுபோல் தன் தாயின் மரணத்துற்குப் பிறகு மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் தஞ்சமடைகிறாள். தனது உள்ளத்தில் கணவராக வரித்துக் கொண்ட சத்தியமூர்த்தியின் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் ஏங்கித் தவிக்கும் கூண்டுக் கிளியாகிறாள். வஞ்சகமும் அற்பத்தனமும் நிறைந்த மஞ்சள் பட்டி ஜமீந்தாரும் கண்ணாயிரமும் மோகினியின் காதலுக்குப் பல தொல்லைகளை ஏற்படுத்துகிறார்கள். மஞ்சள் பட்டி ஜமீந்தாரின் மாளிகையில் சிறைபட்டு அழுது கொண்டிருந்த மோகினியைச் சத்தியமூர்த்தி சந்திக்கும் வேளையில் ஜமீந்தாரின் மூலம் தனக்குத் தொல்லை நேருமென்றும் இன்னொருவர் கை தன் மேல் பட்டால் உயிர்விட்டு விடுவதாக மோகினி கண்ணீர் ததும்பக் கூறுகிறாள்.

காதலையும் காதலனையும் உள்ளத்தில் ஏந்திக் கொண்டு கொடூரர்களின் கையில் சிக்கிய பட்டாம்பூச்சியாக மோகினி வேதனையுறுகிறாள். சத்தியமூர்த்தியிடம் மோகினி ஜமீந்தாருக்கு வாழ்க்கைத் துணையாக வாழ்கிறாள் என்ற பொய்ச்செய்தி சென்றடைகிறது. மோகினி தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக மனம் நொந்துப் போகிறான். அவளை அடியோடு வெறுக்கிறான். தனக்கு ஒரே ஆரதவாய்த் திகழ்ந்த சத்தியமூர்த்தியும் தன்னை வெறுக்கதை அறிந்து மோகினி அனலில் இட்டப் புழு போல துடிக்கிறாள். எவ்வளவோ முயன்றும் தன் நிலையையும் உண்மையான தன் காதலையும் அவனுக்குத் தெரிவிக்க இயலாது தவிக்கிறாள்.

இதற்கிடையில், ஜமீந்தார் அவளிடம் வரம்பு மீறி நடக்க முயல்கிறார். கடவுளுக்குச் சமர்ப்பணமான தூய பூமாலை ஒன்று குரங்குக் கையில் சிக்கிப் பாழாவதை விரும்பாத மோகினி, தனது கற்பையும் காதலையும் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்துகொள்கிறாள். உண்மையறிந்த சத்தியமூர்த்தி, மோகினியின் விருப்பப்படியே அவளது சிதையில் மல்லிகைப்பூ மாலையையும் மஞ்சள் கிழங்கையும் குங்குமத்தையும் இடுகிறான். தனது கண்ணீரில் அவளது உடலை அர்ச்சனை செய்கிறான். அவனது நெஞ்சில் நித்திய சுமங்கலியாக நிரந்தர இடம் பெற்ற மோகினியின் நினைவுகளோடு மேற்கு ஜெர்மனி பயணமாகிறான். மோகினி சத்தியமூர்த்தியின் மேல் கொண்ட ஆழமான காதலும் அவள் அவனுக்கு அணிவித்த பொன் விலங்கும் வாழ்க்கை முழுவதுமாகச் சத்தியமூர்த்தியை விடுவிக்க முடியா அன்பில் பிணைத்து விட்டன.

இறுதியாக, நூற்றாண்டுகள் கடந்து இன்னமும் வாழும் காவிய நாயகி காதல்களான ஷாஜகான்-மும்தாஜ், லைலா-மஜ்னு, அம்பிகாவதி-அமராவதி ஆகியோர்களைப் போன்று சத்தியமூர்த்தி-மோகினியின் உண்மைக் காதலை பொன் விலங்கு நாவல் மூலம் அடுத்த தலைமுறையும் யாசிக்கும் என்றால் அது மிகையாகாது.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் குமாரி சுகன்யா குமார், காண்வென் இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா.நன்றி)