Friday, April 8, 2011

கவிதை நீண்ட கேள்வி : கோம்பா ஆறு

கோம்பா ஆறு கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளை விளக்கி எழுதுக.

கவிதையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் கவிஞர்களுள் மலேசியக் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியும் ஒருவராவார். இவரது கைவண்ணத்தில் உருவான கோம்பா ஆறு எனும் இக்கவிதையானது கவிதை பூங்கொத்து எனும் நூலில் இடப்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுள் ஆறு இன்றியமையாத ஒரு கூறு என்ற மையக் கருத்தினைக் கருப்பொருளாகக் கொண்டு இக்கவிதை புனையப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய ஆறாக விளங்கும் கோம்பா ஆற்றின் பெருமையை மலேசிய மக்கள் அனைவரும் உணரும் வகையில் அதன் சிறப்புகளுக்குக் கவிஞர் மணிமகுடம் சூட்டியுள்ளார்.

இயற்கை அன்னையின் அருட்கொடையான கோம்பா ஆறு ஓடும்போதே தன் நீரால் கோலம் தீட்டியும் வழியிலுள்ள மணலை மேவிப் பாதையாக்கியும் விரும்புவதை எல்லாம் நனைக்கிற ஆற்றலுடையதாய், முற்காலத்தில் போர்கள் நடந்த வரலாற்றில், நேரடியாக அல்லாமல் மறைவாகத் தானும் கலந்து இன்றளவும் புகழுக்குரியதாய் விளங்குகிறது என்று கவிஞர் நமக்கு கோம்பா ஆற்றை அறிமுகப்படுத்துகிறார்.

சாதனைப் படைப்பவர்களே வரலாற்றுப் பெட்டகத்தில் இடம் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் முற்காலத்தில் போர்களிலும் மற்ற பணிகளிலும் தேர்களைப் பயன்படுத்திய பாண்டியன் மன்னன் புகழ் பெற்றான்; ஊருக்காகப் போராடிய புலித்தேவன் வரலாற்றில் இடம் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களைப் போல, இன்று நீரைக் காலாகக் கொண்டு சிலாங்கூரில் ஓயாமல் நிதமும் நடந்து செல்லும் கோம்பா ஆறு மலேசிய நாட்டின் வளம் பெருக காரணியாக இருந்து நாட்டின் வரலாற்றிலும் இடம் பெரும் மங்கா சிறப்பைப் பெற்றுள்ளது எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கிறார்.

சலசலத்து ஓடும் கோம்பா ஆற்றின் எழில் ஓவியம் சொல்லில் மாளாது என்கிறார் கவிஞர். காலையில் உதய சூரியனின் ஒளியால் தங்கமாகவும், கடுவெப்பமான நண்பகல் வெயிலில் கன்னியரின் கன்னமாகவும், மாலை நேரத்து கதிரொளியில் செம்பரத்தைப் பூவைப் போல செந்நிறமாகவும், மணியின் ஒளியாக வெளிச்சம் சூழ்ந்த இரவில் வெண்ணிலவின் சுடர்பட்டு முல்லைப் பூவாக வெண்ணிறத்திலும் பல வண்ணக் கலவை பூணுவதாக கவிஞர் இரசித்துக் கூறுகிறார். கோம்பா ஆறானது பூஞ்சோலையில் புகுந்து ஓடும்பொழுது அங்கே உலவும் தென்றலின் அசைந்தாடலுக்குத் தொட்டிலாக விளங்குவதாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். சளைக்காமல் இரவுபகலாக ஓடி தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் கோம்பா ஆற்றின் கடமையுணர்ச்சி மனிதனுக்கு நல்லதொரு பாடமாகும். மேலும், நாளை எனப்படும் மறுநாள் பிறக்குமுன் இரவு வந்தாக வேண்டும் என்பது போல் நாம் சிறப்புற வேண்டுமானால் உறவுகளாக நமக்குப் பயன் தரும் ஆறுகள் நாட்டில் ஓடவேண்டும் என்று கவிஞர் அவா கொள்கிறார்.

இதுமட்டுமல்லாது, கோம்பா ஆறும் கிள்ளான் ஆறும் ஒன்றாக சங்கமிக்கும் இடத்தில் நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூர் அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளும் இவ்விடத்தில் இணையாதிருந்தால் இந்த நகரம் அமைந்ததனால் உருவான இப்போதைய வரலாறும் இருந்திருக்காது. அந்த இரண்டு ஆறுகளும் ஒன்று சேர்ந்ததனால் அவற்றின் விளைவுகளாக ஏற்பட்ட பல பெருமைகளை மொத்தமாக உணர முடிந்தது என்ற உண்மையையும் நாம் உய்த்துணர வைத்துள்ளார்.

இதனைத் தவிர்த்து, மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் இருமுகங்கள் ஒருமுகமாதல் போல வேற்றுமையைக் களைந்து ஒன்றுபடாவிட்டால் தேசிய நலனின் எதிர்காலம் இருளால் சூழப்படும் என்ற கவிஞரின் எச்சரிக்கை மணி கேட்கிறது. எனவே, நாட்டில் வறுமை ஒழிந்து வளம்பெருக வேண்டுமெனில், கோம்பா ஆறு கிள்ளான் ஆறுடன் இணைந்ததுபோல, இங்கு வாழும் மூன்று இனத்தவரும் அன்பால் ஒன்று கலத்தல் வேண்டும் என்ற சிந்தனை முத்தினை கவிஞர் அழகாய்க் கோர்த்திருக்கிறார் எனலாம்.

கோம்பா ஆறு சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கவிஞர். இயற்கையான நீரில் குளித்து மகிழவும், காதலிக்கும் பெண்களோடு கொஞ்சி விளையாடவும் இயற்கைச் சூழலில் இதமாகச் சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும், குடும்பக் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்வோடு பொழுதைக் கழிக்கவும் பொருத்தமான இடமாக உலு கோம்பா திகழ்கிறது. அந்த இடத்தை அடைவதற்கான பயணம் இன்பமாக இருப்பதற்கு, வழிநெடுக விற்கின்ற சுவைமிக்க கோம்பா டுரியான் உதவியாக இருக்கும். பசி வயிற்றைக் கிள்ளினாலும், அங்கே விற்கிற கோம்பா கூவே என்னும் களிப்பாக்கின் நிறங்கொண்ட பலகாரம் அதனைப் போக்க உதவும். எனவே, மகிழ்ச்சி எனும் இன்ப வெள்ளத்தில் திளைக்க கவிஞர் அங்குச் செல்லுமாறு விழைகிறார்.

ஆகவே, கோம்பா ஆற்றினைப் போன்று பல்வேறு பயன்களை வழங்கும் ஆறுகளை அரசும் மக்களும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்; அப்படிச் செய்யா விட்டால் மனித குலம் அழிவு பாதையில் காலடி பதிக்கும் என்ற உன்னத செய்தியையும் கவிஞர் இக்கவிதை மூலம் நயம்பட உணர்த்தியுள்ளார்.

(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )

Thursday, April 7, 2011

கோம்பா ஆறு (கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா

கோம்பா ஆறு
(கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, புக்கிட் ரோத்தான், மலேசியா)

நீர்க்கோல மிட்டுமணற் பாதை போட்டு
நினைத்தபடி நனைக்கின்ற ஆற்றல் பெற்றுப்
போர்க்கால வரலாற்றில் புதைந்து மீண்டும்
புகழ்தொட்டு நடக்குதுபார் கோம்பா ஆறு!
தேர்க்காலால் பாண்டியனும் புகழைப் பெற்றான் பெற்றான்
ஊர்க்காலால் புலித்தேவன் வெற்றி நட்டான்
நீர்க்காலால் சிலாங்கூரில் நிதம் நடக்கும்
நிதியாறே! வரலாறே! கோம்பா ஆறே!

காலையிலே கதிரவனால் தங்க மாகிக்
கடும்பகலில் கன்னியரின் கன்ன மாகி
மாலையிலே செம்பரத்தை போல மாறி
மணியிரவில் வெண்ணிலவால் முல்லை யாகி
சோலையிலே தென்றலுக்குத் தொட்டி லாகித்
தூங்காமல் நிறங்காட்டும் கோம்பா ஆறு!
நாளையெனும் நாள்பிறக்க இரவு வேண்டும்
நாம்சிறக்க ஆறுகளின் உறவு வேண்டும்!

இருநதிகள் இணையுமிடம் கோலா லம்பூர்
இல்லையெனில் இன்றிருக்கும் வரலா றில்லை
பெருநதியைத் தந்தவிரு நதிகள் அன்று
பிணைந்ததனால் பெருமைஎலாம் ஒருங்கே பெற்றோம்
இருமுகமும் ஒருமுகமாய்ச் சேராவிட்டால்
எதிர்காலம் இருளாகும் தேசி யத்தில்
வறுமைகளை ஒழிப்பதற்குக் கோம்பா போல
வாழுகின்ற இனம்மூன்றும் கலத்தல் வேண்டும்

குளிப்பதற்கும் காதலியைக் கொஞ்சு தற்கும்
கொஞ்சநேரம் கண்ணயர்ந்து படுப்ப தற்கும்
களிப்பதற்கும் குடும்பத்தின் கவலை எல்லாம்
களைவதற்கும் ஏற்றவிடம் ‘உலுகோம் பா’தான்
வழிப்பயணம் நீள்வதற்கும் ‘துரியான் கோம்பா’
வகைசெய்யும் சூடான ‘கூவே கோம்பா’
களிப்பாக்கின் நிறங்காட்டிப் பசியைப் போக்கும்
கண்டிப்பாய் நீங்களங்கே போக வேண்டும்

Saturday, April 2, 2011

நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை

பொன் விலங்கு நாவலின் துணைக் கதாப்பாத்திரங்களின் பங்கு முக்கியமானது. அவ்வகையில் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை ஆகிய இருவரின் பாத்திரப்படைப்யை ஆராய்க.

தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். இந்நாவலில் துணைக் கதாப்பாத்திரமாக வலம் வரும் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை, நாவலின் கதையோட்டத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்நாவலில் இவர்கள் இருவரின் பாத்திரப்படைப்பும் வேறுபட்டு அமைந்துள்ளது.

பூபதி மல்லிகைப் பந்தலில் ஒரு கலைக்கல்லூரியை நிறுவி அதன் நிர்வாகியாக வலம் வருகிறார். எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராக பூபதி இந்நாவலில் படைக்கப்பட்டுள்ளார். தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத் தேர்வின் போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் பூபதி மனத்திருப்தி அடைந்தாலும், இன்னொரு வயது முதிர்ந்த ஓர் ஆசிரியரையும் அழைத்து அதே விரிவிரையாளர் பணிக்காக நேர்முகத் தேர்வு நடத்துகிறார். கல்லூரி முதல்வரின் முறையீடுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து, சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்குத் தன் கலைக்கல்லூரியில் நியமிக்கிறார். இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது.

மேலும், பூபதி தரமான கல்லூரியை உருவாக்கும் கொள்கையுடையவராக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். மல்லிகைப் பந்தலில் உள்ள கலைக்கல்லூரியின் நிர்வாகியாக இருக்கும் அவர் கட்டொழுங்கும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். அதற்காக வேண்டிய முயற்சிகளையும் மேற்கொள்கிறார். கல்லூரியின் நற்பெயரை நிலைநாட்ட சிறந்த பண்புடைய விரிவுரையாளர்களை நியமிக்க எண்ணுகிறார். அதைத் தவிற, ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை உருவாக்க முனைப்புக் காட்டுகிறார். இவற்றின் மூலம் கலைக்கல்லூரியின் பெயரை மேம்படுத்த விரும்புகிறார். தொழிலதிபராக விளங்கினாலும் படத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் கல்வித் தொண்டின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவராக விளங்குகிறார்.

பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் போக்குடையவராக பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார். இக்குணம் கல்லூரியின் முதல் நாளன்று அவர் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தின் போது வெளிப்படுகிறது. தேநீர் விருந்தின் போது அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடும்போது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் உரையாடுவதைக் காண்கிறார். அந்நிகழ்வின்போது தமிழில் பேசிய சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக் கவிதையைத் தமிழில் விளக்கியதை வகுப்பு வெளியிலிருந்து கண்ட பூபதி அவனைப் பாராட்டினார். அவரின் திறமைக்குச் சான்றாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார். பிறரின் திறமையை ஆதரிக்கும் அவரின் பண்பு இந்நிகழ்வுகளின் வழி நமக்குத் தெரிய வருகிறது.

அதுமட்டுமின்றி, பூபதி சிறந்த தந்தையாகவும் இந்நாவலில் உலா வருகிறார். தன் மகளான பாரதியை மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார். தாய் இல்லாமல் வளரும் பாரதிக்குத் தாய் இல்லாத நினைவு வராதபடி அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அவளின் ஆசைப்படி கல்லூரியில் கல்வியைத் தொடர்வதற்கும் சம்மதிக்கிறார். தன் மகளைச் சிறந்த முறையில் வளர்த்து நற்பண்புகளுடனும் அடக்கமுடனும் உருவாக்கும் சிறந்த தந்தையாக பூபதி இந்நாவலில் விளங்குகிறார்.

சத்தியமூர்த்தியின் அப்பா ஒரு முன்னாள் தமிழாசிரியராக நாவலில் வலம் வருகிறார். இவர் வறுமையைப் பலவீனமாக எண்ணுபவராக நாவலில் இடம் பெற்றுள்ளார். தான் செய்த தமிழாசிரியர் தொழில்தான் வறுமையின் பிடியில் இருக்க காரணமாக அமைந்தது என எண்ணுகிறார். வறுமையில் இருப்பதால் மஞ்சள் பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற வசதி படைத்தவர்களின் கீழ் வாழவேண்டும் என்று யூகித்துக் கொண்டு வறுமையை பலவீனமாக உருமாற்றிக் கொள்கிறார். அடிமை வாழ்கை வாழத் தயாராகிறார். ஆகவே, ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற பணபலமுடையவர்களின் கீழ் அடிமையாக வேலை செய்ய முடிவு செய்கிறார்.

தொடர்ந்து, குடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா படைக்கப்பட்டுள்ளார். தாசிக் குலத்தில் பிறந்த மோகினியைச் சத்தியமூர்த்தி காதலிப்பதை அவர் கடுமையாக எதிர்க்கிறார். குலத்தைப் பெரிதா எண்ணும் அவர் மோகினியை வெறுக்கிறார். அவளை மணக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தியுடன் வாக்குவாதம் நடத்துகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மாளிகையில் அடைப்பட்டிருக்கும் மோகினியைக் காணச் சென்ற சத்தியமூர்த்தியைக் கண்டு கோபம் அடைகிறார்; அவனைத் தடுக்கிறார்.

நேர்மையை எண்ணாமல் தீமைக்குத் துணைபோகும் மனிதராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா காணப்படுகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் வஞ்சக எண்ணம் படைத்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு அடிமையாக இருக்க முற்படுகிறார் சத்தியமூர்த்தியின் அப்பா. கண்ணாயிரம் போன்ற தீயவர்களின் பேச்சைக் கேட்டு, சொந்த மகனையே வேதனைப்படுத்துகிறார். கண்ணாயிரத்தின் ஏவலுக்கு ஏற்ப சத்தியமூர்த்தியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுதத்தைக் கொடுத்து செய்யாத தவற்றிக்கு மன்னிப்புக் கோறுமாறு கேட்கிறார். ஆனால், சத்தியமூர்த்தி மறுத்துக் கடிதத்தைப் பார்த்துக் கோபமடைகிறான்.

ஆகவே, பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் அப்பா இருவரும் நாவலின் கதையோட்டம் சிறப்பாக அமைய அவர்களின் பாணியில் பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு கதையை வாசகர்கள் இரசிக்கும்படி நகர்த்திச் சென்று நாவலாசிரியரின் நோக்கத்தை வெற்றியடையச் செய்துள்ளது எனலாம்.

ஆக்கம்: பொ.உமாபாரதி, SMK Universiti 2, Johor Bahru, Malaysia.