Monday, May 18, 2009

தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 1

பயிற்சி 1
அ. பொன் விலங்கு நாவலின் முதன்மைக் கதைமாந்தர் யார்? (1 புள்ளி)

ஆ. பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு உத்திகளைக் குறிப்பிடுக. (2 புள்ளி)

இ. கல்லூரி நிர்வாகி, மஞ்சள் பட்டி ஜமீந்தார் ஆகிய இருவரும் சத்தியமூர்த்தியை பழிவாங்க முனைந்ததற்கான காரணம் என்ன? (4 புள்ளி)

ஈ. "நீ ஏன் இப்படி இருக்கே? பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசன் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன் குத்துக்கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கலியாணத்துக்கு ஆடணுமின்னு பேச வந்திருக்காரு."(அத்தியாயம் ,பக்கம் 274)

(i) இந்த உரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)
(ii) இந்த உரையாடலுக்கு முன் நடந்த சூழல் யாது? (5 புள்ளி)

மாதிரி விடை

அ. சத்தியமூர்த்தி (1 புள்ளி)

ஆ. பின்நோக்கு உத்தி, கடித உத்தி. (2 புள்ளி)

இ. சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு விரிவுரையாளராக வரிவதைத் தொடக்கத்திலிருந்தே கல்லூரி முதல்வர் விரும்பவில்லை. பின்னர், சத்தியமூர்த்தி சிறந்த போதனையால் மாணவரிடையே நன்மதிப்பு பெறுவது கல்லூரி நிர்வாகிக்குப் பொறாமையைத் தருகிறது. அவர் அவனைப் பழிவாங்கக் காத்திருந்தார். ஜமீந்தார் மோகினியைத் தாரமாக்க நினைத்தார். சத்தியமூர்த்தி அதற்குத் தடையாக இருந்தான். பாராட்டு நிகழ்வில் சத்தியமூர்த்தி ஜமீந்தாரைப் பாராட்டாமல் வெளியேறியது ஜமீந்தாருக்குக் கோபம். எனவே, இருவரும் சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைகின்றனர். (4 புள்ளி)

ஈ.
(i) மோகினி, முத்தழகம்மாள் (2 புள்ளி)
(ii) சத்தியூர்த்தியின் பிரிவு மோகினிக்கு வேதனையைத் தருகிறது. தன் கையில் அவன் தந்த மோதிரத்தோடும் நெஞ்சில் வேதனையோடும் இருக்கிறாள். அப்பொழுது கண்ணாயிரம் தனவணிகர் ஒருவரை அழைத்து வருகிறார். தனவணிகர் வீட்டுத் திருமணத்தில் மோகினியின் நாட்டியத்தை ஏற்பாடு செய்ய கண்ணாயிரம் முயற்சி செய்கிறார். மோகினிக்கு அவருடன் பேச விருப்பம் இல்லை. எனவே, கோயிலுக்குப் போய் வருகிறாள். தலைவலி என்ற சாக்குச் சொல்லி மாடிக்குப் போகிறாள். அவ்வேளையில் மோகினியின் அம்மா அவர்களுடன் பேசும்படி வற்புறுத்துகின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது. (5 புள்ளி)

(இதனை அனுப்பி உதவியவர் ஆசிரியர் இளந்தமிழ், கோலாலும்பூர்)

நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - பொன் விலங்கு நாவல் கூறும் படிப்பினை

பொன் விலங்கு நாவல் வாசகர்களுக்குச் சிறந்த படிப்பினையைத் தரவல்லது. அதனை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.


நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி எழுதிய சிறப்பான நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களை இந்நாவல் மையமாகக் கொண்டது. அவ்வகையில் வாசகர்களுக்கு நல்ல படிப்பினைகளைத் தந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் முக்கிய இலக்கிய வடிவமாகச் செயல்படுகிறது.

வாய்மையே வெல்லும் என்ற நீதி இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நிர்வாகி பூபதி விமான விபத்தில் இறந்தவுடன் அக்கல்லூரியின் நிர்வாகம் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் கைக்கு மாறுகிறது. அவருடன் கூட்டுச் சேர்ந்த கண்ணாயிரம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்கும் பொருட்டு, பல தீங்குகளை விளைவிக்கின்றனர். உச்சகட்டமாகக் கல்லூரிக் கூரைக்குத் தீ வைத்து விட்டான் என்று பொய் குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் தள்ள முனைகின்றனர். சத்தியமூர்த்தியோ அவர்களின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் இறுதிவரை போராடுகிறான். கல்லூரி மாணவர்கள், குமரப்பன் போன்ற நல்லவர்களின் பக்கத்துணையுடன் இறுதியில் வெற்றிப் பெறுகிறான். 'வாழ்க்கயே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்ற சத்தியமூர்த்தியின் நம்பிக்கை விதைகள் இன்றைய இளைஞர்களின் மனதில் விதைக்கப்படவேண்டும்.

கெட்டவர்கள், சதிகாரர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்ககள் எனும் கருத்து இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. 'மூன் லைட்' விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணாயிரம் வஞ்சகத்தன்மை நிறைந்தவர். மஞ்சள் பட்டி ஜமீந்தாரோ பணபலத்தைக் கொண்டு பிறரை அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார். அவர்கள் இருவரும் சத்தியமூர்த்திக்கும் மோகினிக்கும் சொல்லொணா துன்பத்தை விளைவிக்கின்றனர். இருப்பினும், அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கொப்ப இறுதியில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் கள்ள நோட்டுத் தயாரிக்கும் கும்பலோடு சம்மந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்படுகின்றனர். எனவே, நாம் பிறருக்குத் துன்பத்தை விளைவிப்பதை விடுத்து நல்லதே நினைத்து நல்லதே செய்தால் வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்ற கருத்து சிந்தனைக்கு விருந்தாகிறது.

மேலும், குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற கருத்தினை வாசகர்கள் இந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தாசி குலத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிய மோகினி போற்றப்படவேண்டியவள். மோகினியிடம் குடிகொண்டிருந்த அடக்கம், பொறுமை, ஒழுக்கம் போன்ற குணங்களே இலட்சியவாதியான சத்தியமூர்த்தியின் உள்ளத்தைக் கவர்ந்தன. சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை உயர்ந்த தெய்வாம்சம் பொருந்திய மலராகக் கருதப்படுவதைப் போன்று நாம் பிறரின் குலத்தையோ வறுமை நிலையையோ எண்ணி அவர்களை எள்ளி நகையாடாமல் அவர்களிடத்தில் காணப்படும் குணத்தைப் போற்றி வாழப் பழக வேண்டும் என்ற உன்னத கருத்தினை நாவலாசிரியர் நமக்குப் படிப்பினையாகத் தந்துள்ளார்.

இதனைத் தவிர்த்து, நல்ல நட்பு வாழ்வை உயர்த்தும் என்ற சிந்தனையையும் நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார். சத்தியமூர்த்தி தனது தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ள அவனுக்குத் தோள் கொடுத்து உற்ற நண்பன் குமரப்பனே. படிப்பறிவிலும் தொழிலிலும் இருவரும் வெவ்வேறு நிலையினைக் கொண்டிருந்தாலும் நகமும் சதையும்போல இணைபிரியாமல் வாழ்ந்தனர். சத்தியமூர்த்திக்கு வந்த மோகினியின் கடிதங்களை அவன் அனுமதியில்லாமல் படித்தமைக்குக் குமரப்பன் மன்னிப்புக் கேட்கும் பொழுது தன் அந்தரங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நண்பனுக்கு உரிமையுண்டு என்று கூறுகிறான். அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பதற்கேற்ப சதிக்காரர்களின் கூட்டுச்சதியை முறியடிக்கவும் பணக்கஷ்டத்தைத் தீர்க்கவும் சத்தியமூர்த்திக்குக் குமரப்பன் உதவியது நட்பின் உச்சத்தைக் காட்டுகிறது. இத்தகையவரைப்போன்று நாமும் ஆராய்ந்து நட்பு கொண்டால் வாழ்வில் சிறக்கலாம் என்பது வெள்ளிடைமலை.

அத்துடன் தூயக் காதல் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த படிப்பினையையும் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நாவல் ஏதுவாக அமைந்துள்ளது எனலாம். சத்தியமூர்த்தி மோகினி காதலானது ஆத்வீகமானது; இன கவர்ச்சிக்கு அப்பாற்பட்டது. மோகினியை மானசீகமாக மனைவியாக ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி சபலபுத்திகொண்ட ஆணாக இல்லாமல் பாரதியுடன் கண்ணியமாகவே பழகினான். சத்தியமூர்த்தியைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் கனவிலும் நினையாத மோகினி மாதவிபோன்று கற்புக்கரசியாகவே வாழ்ந்து உயிரை மாய்த்தாள். பாரதியோ, சத்தியமூர்த்தி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் பழிவாங்கும் எண்ணங்கொள்ளாது உண்மைக் காதலைச் சேர்த்து வைக்கப் போராடி தனது காதலை உண்மை என மெய்ப்பித்தாள். இன்றைய இளைஞர்களுக்கு இது நல்ல படிப்பினையாக அமையும்.

ஆகவே, மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் அரிய நல்ல கருத்துகளை உள்ளடக்கிய பனுவலாகப் பொன் விலங்கு திகழ்கிறது. வாசகர்கள் கண்டிபாய் இந்நாவலைப் படித்துச் சுவைப்பதோடு சிந்தனைக்குத் தீனியாய்ப் பயன்படுத்தி ஏற்றம் பெற வேண்டும்.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

Monday, May 4, 2009

நீண்ட கேள்வி: கவிதை (மாதிரி விடை 2)

'நீ உயர' எனும் கவிதையை நீ எவ்வாறு உணர்கின்றாய் என்று விளக்கி எழுதுக.

அருந்தமிழ் கவிஞர் செ.சீனி நைனா முகம்மதுவின் ஆழ்ந்த கற்பனை நீரோடையில் மலர்ந்த 'நீ உயர' எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் உயர்வும் தாழ்வும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தே அமையும் எனும் உன்னத கருத்தினை மையமிட்டு இக்கவிதைப் புனையப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் சளையாது போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறத் துடிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தானும் உயரத் துடிக்கும் ஓர் இளையனைப் பார்த்து கவிஞர் முதலில் ஆரவமர உட்கார்ந்து கொஞ்சம் சிந்திக்குமாறு வேண்டுகிறார். வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டிய துடுப்பு உள்ளமே எனக் கூறும் கவிஞர் முதலில் அவ்வுள்ளத்தை ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்துகிறார். 'எண்ணம்தான் நம்மை ஆள்கிறது' என்ற உளவியல் ஆய்வாளரின் கருத்துப்படியே கவிஞரின் பேனா முனையும் கோலமிட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கையில் குளத்தில் உள்ள தாமரைச் செடி குளத்தின் நீர் அளவுக்கு உயர்ந்து நிற்கும்; நீர் வற்றினால் தாமரைச் செடி அழியும்; புது வெள்ளத்தில் அது மீண்டும் தழைத்து வளரும். அதுபோலவே 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு' என்ற பொய்யாமொழிப் புலவரின் அமுதவாக்கினைக் கருத்தில் கொண்டு உள்ளம் உயர்ந்தால் வாழ்க்கை உயரும் என்கிறார். மேலும், அத்தகைய உயர்வினைப் பெறுவதற்குத் திருக்குறள் உதவும் என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார். மாந்தனின் வாழ்க்கை உயர்விற்குத் திருக்குறள் பெரும் பயனை விளைவிக்கும் அரிய நூலாக விளங்குகிறது என்பதனை நமக்கு உணர வைத்துள்ளார்.

தொடர்ந்து, "எண்ணம், சொல், செயல்" ஆகிய மூன்றிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நமக்கு நன்மைகள் பல வந்து சேரும் என்று கவிஞர் விளக்கியுள்ளார். அதற்கு எதிர்மாறாக வஞ்சக எண்ணம் கொண்டு சுயநலத்துடனும் பொறாமை குணத்துடனும் வாழ்ந்தால் இந்த உலகவே நம்மை வெறுக்கும் என்ற உண்மையினையும் கவிஞர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாது, நாம் உள்ளத்தில் விதைக்கும் எண்ண விதைகளே பின்னர் செயலாக முளைக்கின்றன என்று உள்ளத்தை விளைநிலமாக கவிஞர் உருவகப்படுத்தியுள்ளார். அத்தகைய விளைநிலத்தில் நல்ல எண்ணங்களை விதைக்காமல் போனால் அது பயன்றற பள்ளம் போன்று ஆகிவிடும் என்று நினைவுறுத்துகிறார். காலம் எனும் ஆழியில் மூழ்கிவிடாமல் மனிதன் புகழுடம்புடன் வாழ வேண்டுமெனில் தீய எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை உள்ளத்தில் பதியமிட வேண்டும் என்பதானது சிந்தனைக்கு விருந்தாகிறது.

இறுதியாக, விதைக்கப்பட்டதே முளைக்கும் என்ற மறுக்க முடியாத இயற்கையின் விதியைப் புரிந்து கொண்டு நாம் முரணான வழிகளைக் கைவிட்டு நல்ல மனப்போக்கைக் கொண்டிருந்தால் நமக்கு உலகமும் வாழ்க்கையும் புதியனவாக விளங்கும் என்ற கருத்தினையும் கவிஞர் நமக்குப் பரிமாறியுள்ளார். புதிய உதயத்தை நோக்கி எழுச்சியுடன் நடைபயில வருமாறு கவிஞர் நமக்கு அறைகூவல் விடுக்கிறார். எனினும், அறிவுரைகள் மட்டும் பல ஆயிரம் குவிந்து அதைக் கேட்டுத் திருந்தும் மனம் இல்லாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடுமென்பது திண்ணம்.

ஆகவே, நாம் சுவற்றில் எறியும் பந்து நம்மை நோக்கிய திரும்பி வருவது போல, ஒருவரின் செயலுக்கு அடிப்படையாக அமைவது அவரின் எண்ணமே என்பது ஆன்றோரின் அமுத வாக்காகும், இதனை நாம் சிந்தையில் தெளிந்து வாழ்வில் வெற்றிக் கனிகளைக் கொய்ய வேண்டுமென்பதே கவிஞரின் ஆவா.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி