Wednesday, May 18, 2011

கவிவாணர் ஐ.உலகநாதன் (அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு)

கவிவாணர் ஐ.உலகநாதன் (மலேசியா / தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

பிறப்பு

ஈப்போ, மலேசியா


கல்வி / தொழில்

மலேசியாவில் கல்வி பயின்று, சிங்கையில் பல பணிகள் மேற்கொண்டார். பின்னர் பெங்களூரில் (இந்தியா) குடியேறினார்.


துறைகள் / திறன்கள்

கவிதை, இலக்கியச் சொற்பொழிவு, இதழியல்.


பணிகள்

சிங்கையில் 'மாதவி' இலக்கிய மாத இதழ்; பெங்களூரில் 'திருப்பம்' மாதமிருமுறை இதழ். பெங்களூர் இளம்பாவலர்களுக்குப் 'பாவலர் பூங்கா' என்னும் பயிலரங்கு நடத்துகிறார்.


படைப்புகள்

1954 முதல் கவிதை எழுது வருகிறார். இவரின் 'சந்தனக்கிண்ணம்' கவிதை நூல் மலேசியாவில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்தது. திருப்புமுனை, மகரயாழ், முத்துக்கோவை, கேட்டால் கேளுங்கள், புரட்சித்தலைவர் அந்தாதி, செந்தமிழ்க் கவசம், பாவாணர் புகழ்ச்சிந்து, கண்ணம்மா, உடைந்த வீணை, தமயந்தி என்ற கவிதை நூல்களும், பாலைவன ஒட்டகத்தின் சோலைவனப் பயணம் என்ற பயணக்கட்டுரை நூலும் எழுதியுள்ளார்.


சிறப்பு அடை

கவிவாணர், பாவரசு


விருதுகள் / பரிசுகள்

1985-இல் தமிழக அரசின் 'பாவேந்தர் விருது'. இதுவன்றி வேறுபல விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (கவிவாணர் ஐ.உலகநாதன்)

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ!
(கவிவாணர் ஐ.உலகநாதன்)


வஞ்ச மனத்துட‎ன் வந்து புகுந்தவர்
வாலை யறுத்திட வாராயோ - வரும்
வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை
மேலும் குவித்துட‎ன் தாராயோ?


சேரு மலேசியச் சீர்மிகு நாட்டினைச்
சேரு மிடர்ப்பகை தீராயோ - உனை
வாரி யணைத்தவள் வாழ்வு சிறந்திட
வாரி நிதிக்குவை தாராயோ


ஆறு மலைத்தொடர் அ‎ன்பு மனத்தொடர்
ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே - உனை
வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடி‎ன்
வேட்டி லவர்தலை போய்விழுமே!


வீடு விளங்கிடப் பெற்ற குழந்தையை
நாடு விளங்கிடத் தாரீரோ - அவர்
பீடு விளங்கிடக் கேடு களைந்திடப்
பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ!


தங்க மெனத்தகும் துங்கு மொழிப்படி
சிங்க மெனப்புகக் கூறீரோ - நாம்
பொங்கி யெழுந்திடி‎ன் புல்ல ரிருப்பது
பூமியி னுள்ளெனக் கூறிரோ


அப்படி இப்படித் தப்படி வைத்தனர்
எப்படி யும்படி ஏறிடவே - அவர்
ஒப்பிட வீரம் உணர்த்திடு; வைத்திடும்
ஒவ்வொரு காலடி கூறிடவே!


(கவிதைப்பூங்கொத்து)