Friday, January 21, 2011

கவிதை: யார் தமிழ் படிப்பார் (நீண்ட கேள்வி)

யார் தமிழ் படிப்பார்?

திரு.சுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் பொன்முடி எழுதிய ‘யார் தமிழ் படிப்பார்?’ என்ற கவிதை, ‘கவிதைப் பூங்கொத்து’ என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளளது. உயர்நிலைக் கல்வி வரை தமிழ்க்கல்வி தொடர்ந்தால்தான் இந்நாட்டில் தமிழ் வளரும் என்பதே இக்கவிதையின் மையக்கரு ஆகும்.


கல்விப் பயிலும் காலத்தில் தொடர்ந்து தமிழைப் படிக்காது புறந்தள்ளும் தமிழ் மாணவ்வர்களின் நிலையை எண்ணி வருந்தி இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் உயிர் நாடியாக விளங்குவது தமிழ்க்கல்வி. தமிழ் மொழியின் வளர்ச்சியே மலேசியத் தமிழரின் உரிமைகளையும் வாய்ப்புகளையும் நிலை பெறச் செய்யும்.


தமிழ் மாணவர்களே, தமிழைப் படிக்கத் தயங்குகின்றீர்களே! தமிழ் மாணவர்கள் படிக்காமல் கடல் போன்று விரிந்து கிடக்கின்ற இவ்வுலகில் யார் தமிழைப் படிப்பார்கள் என்று கவிஞர் வினவுகிறார். தாய் மொழியான தமிழ்மொழி எமக்குத் தேனைப் போன்று இனிமையானது. இந்தத் தாயினைக் காப்பது பிள்ளையின் கடமை அல்லவா? ஆரம்பப் பள்ளியில் படித்த அத்தமிழை இடைநிலைப் பள்ளியில் ஒதுக்கித் தள்ளுவது எவ்வகையில் நியாயம் என்று கவிஞர் வினவுகிறார். ஆறு ஆண்டுகளாக அடிப்படைக் கல்வியைக் கொடுத்த தமிழ்மொழியின் அருமையை மறந்து, இப்போது இம்மொழி புளிக்கிறது என்று கூறலாமா? ஆரம்பத்தில் சிந்தையில் தோன்றிய தமிழைப் பாதியிலே ஏளனப்படுத்தி ஒதுக்கி வைக்ககும் எண்ணம் எப்படித் தோன்றியது என்கிறார் கவிஞர்.


உண்ணும் உணவும், தின்னும் பண்டமும் ஒரு காலத்தில் சலிப்புத் தட்டிப் போகலாம். சில வேளைகளில் கண்ணும் கூட காட்சிகளைப் பார்க்க மறுக்கலாம். பெற்றெடுத்த தாய் பிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும், அந்தத் தாயின் அன்பை உதறித் தள்ளுவதும் நமக்கு மற்றவர் மத்தியில் நற்பெயர் கொடுக்குமா? படித்தவர்களின் மத்தியில் பாராட்டைத் தேடித் தருமா என்று தமிழ் மாணவர்களைப் பார்த்து கவிஞர் கேட்கிறார்.


நம் பிறப்போடு நம்முடன் பிறந்த தாய்மொழியான இத்தமிழ்மொழி சோறு போடுமா? என்று கேட்பகும் தமிழினத்தைப் போல் வேறினம் இவ்வுலகில் இல்லை. விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு விடா முயிற்சியில் ஈடுபடாமல் வெறுமனே கிடக்கும் இத்தகையோர்களை வெட்டிக் கொன்றாலும் என் கோபம் தீராது என்கிறார் கவிஞர். எந்த நாட்டிலும் எந்த மொழியும் யாருக்கும் சோறு போடாது. மன உறுதியுடன் உழைப்பவன் எவனும் மொழியின் மேல் தன் இயலாமை குறித்துப் பழி சொல்வது இல்லை.

தமிழ் மொழியால்தான் தமிழன் தாழ்ந்து போனதாகவும் அம்மொழி இவனைத் தலையெடுக்க விடாமல் மண்ணோடு மண்ணாய்ச் சிறை பிடித்ததென இவன் சொல்லித் திரியலாமா? அவன் அப்படிச் சொல்வது ஒப்புக் கொள்ளத் தக்கச் செய்தியாகுமா? தாயானவள் தன் பிள்ளைக்கு எதிராக தீயாக மாறி தீங்குச் செய்ய நினைப்பாளா? மொழி நம்முடைய உணர்வாகவும் நமக்கு உயர்ப்பாக விளங்குகிறது. மொழி நம் உயிரைக் காக்கும் காவலன். வாழ்வில் உரிமை இழந்தால் இவ்வுலகில் எந்தப் பெருமையையும் பெற முடியாது.


மொழி சிறப்பாக இருந்தால் தானே இனம் சிறப்பாக இருக்கும். மொழியைக்காப்பதே இனத்தைக்காப்பது ஆகும். தமிழ் மொழி இந்நாட்டில் வாழ்வதும் தாழ்வதும் தமிழைப் படிக்கும் தங்கம் போன்ற தமிழ் மாணவர்களின் கையில் இருக்கிறது. மாணவர்களே! தமிழைப் படித்தலே அத்தமிழை வளர்க்கின்ற மிகப் பெரிய சேவையாகும்.

தாய் மொழியான தமிழைத் தயக்கமின்றி எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி கட்டாயம் தொடர்ந்து கற்பது தமிழ் மாணவர் ஒவ்வொருவருடைய கடமையாகும். தமிழ் மொழியில் சிறந்து விளங்க அதே வேளையில் இதர மொழியையும் கற்றுத் தேற வேண்டும்.

No comments:

Post a Comment