Sunday, November 4, 2012

பொன் விலங்குகு நாவலில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளை விளக்கி எழுது.


தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தனிமனித வாழ்விலும் பொதுவாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல் சுவைப்படச் சொல்கிறது. இது வெறும் பொழுதுபோக்கு நாவலாக அல்லாமல் அரிய சமுதாயச் சிந்தனைகளால் பின்னப்பட்ட சமூக நாவலாகத் திகழ்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் சிறந்த வாழ்வியல் இந்நாவலில் வலியறுத்தப்படுகிறது. இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைச் சத்தியமூர்த்தி காப்பாற்ற அது இருவரையும் ஆழமான அன்பில் பிணைக்கிறது. மோகினியை மனைவியாக மனத்தில் வரித்தபின் அவன் அன்புக்கு ஏங்கும் பாரதியிடமிருந்து விலகி நின்று கவனமாகப் பழகுகிறான். அதுபோல் சத்தியமூர்த்தியைத் தன் கணவனாக எண்ணி வாழும் மோகினி மஞ்சள் பட்டி ஜமீந்தாரின் அத்துமீறலாலும், சத்தியமூர்த்தி தன்னை விட்டுப் பிரிந்து வெளிநாடு போவதாலும் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அவனும் மறுமணம் செய்யும் எண்ணமில்லாமல் மோகினி நினைவோடு வெளிநாடு போகிறான். உள்ளத்தால் இணைந்த இருவரின் தூய அன்பை இது தெளிவாக்குகிறது.

குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற சிந்தனை மோகினியின் மூலம் வெளிப்படுகிறது. மோகினி தாசிப் பெண்ணாகப் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் பெண்ணாகவும், விரும்பியவரையே மணந்து தூய வாழ்வை வாழத் துடிக்கும் கதை மாந்தராகவும் படைக்கப்பட்டுள்ளாள். பணத்துக்காக ஆண்களிடம் பேசவும் பழகவும் தன்னைத் தூண்டும் அம்மாவை மோகினி வெறுக்கிறாள். அவளின் சிறந்த குணத்தை அறிந்தே சத்தியமூர்த்தி அவளைத் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறான்.

எளியாரை வலியார் அடிமைப்படுத்தி அவர்களின் இரத்ததை உறிஞ்சி வாழும் பண்ணை அடிமை வாழ்க்கையின் தீமை இந்நாவலில் காட்டப்படுகிறது. மஞ்சள் பட்டி ஜமீந்தார் பெரும் செல்வர். பழைய ஜமீன் பரம்பரையின் பிரதிநிதியாக வரும் அவர் பணபலத்தைக் கொண்டு மோகினியைத் தம்மக்கு அடிமையாக்கி மணமுடிக்க முயலுகிறார். சத்தியமூர்த்தியின் தந்தையைத் தமக்கு எடுபிடியாக்குகிறார். பூபதிக்குப் பின் கல்லூரியைத் தம் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சத்தியமூர்த்திக்குக் கொடுதல் செய்கிறார். பணபலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணிய அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.

1960இல் தமிழகத்தில் மொழிப்போராட்டமும் திராவிட எழுச்சியும் மேலோங்கியிருந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட இந்நாவலில் தாய்தமிழைப் போற்ற வேண்டும் என்ற உணர்வு பதிவாகியுள்ளது. பூபதி வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் மற்றவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்ற சத்தியமூர்த்தி தமிழில் பேசி பூபதியின் பாராட்டைப் பெறுகிறான். அதிகப் பணம் ஈட்டக்கூடிய கணக்குத் துறையில் அவன் படித்துப் பட்டம் பெற வேண்டும் எனத் தந்தை எதிர்ப்பார்க்கிறார். ஆனால் சத்தியமூர்த்தியோ தமிழ் மீது மோகங்கொண்டு தமிழில் முதுகலைப்பட்டம் பெறுகிறான்.

தம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு வேண்டும் என்ற சிந்தனை நாவலில் பதிவாகியுள்ளது. சத்தியமூர்த்தி தன் உயிர் நண்பனான குமரப்பனிடம் பல வேளைகளில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறான். சத்தியமூர்த்திக்கு மோகினி எழுதிய கடிதங்களை அனுமதியின்றி குமரப்பன் படித்துவிட்டு நண்பனிடம் மன்னிப்புக் கேட்கிறான். தன் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ள உயிர் நண்பனுக்கு உரிமையுண்டு என்று சத்தியமூர்த்தி கூறுகிறான். வெளிநாடு செல்லும் சத்தியமூர்த்திக்குப் பண உதவி செய்வதோடு கண்ணாயிரத்திடம் பட்ட கடனையும் அடைக்க உதவுகிறான் குமரப்பன். இருவருமே தூய நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள்.

தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு இடந்தராமல் மாணவர் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட கல்லூரி நிர்வாகம் தேவை என்ற சிந்தனை நாவலில் வலியுறுத்தப்படுகிறது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியை நடத்த வேண்டும் என்று பூபதி விரும்பினாலும் நிர்வாகக் குறைபாடுகள் அதற்குத் தடையாக இருக்கின்றன. சத்தியமூர்த்தி சிறந்த பணிகளால் மாணவர்களின் நன்மதிப்பைப் பெறுகிறான். இதைக்கண்டு நிர்வாகத்தினர் அவன் மீது பொறாமைப்படுகின்றனர். உதவி வார்டன் பொறுப்பிலிருந்து அவனை நீக்குவதோடு கல்லூரிக்குத் தீ வைத்ததாக வீண் பழி சுமத்துகின்றனர். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி வகுப்புகளைப் புறக்கணிக்கின்றனர்.

மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டல் தேவை என்ற கருத்து சத்தியமூர்த்தியின் மூலம் வெளிப்படுகிறது. கல்லூரி முதல்வரின் கடுமையான போக்கினால் மாணவன் ராஜாராமன் தன் தேர்வின் தோல்விக்கு அவரைக் காரணங்காட்டிக் கத்தியால் குத்துகிறான். சத்தியமூர்த்தியோ, சிறந்த போதனையாலும் நற்பணிகளாலும் அன்பான அணுகுமுறையாலும் மாணவர்களின் பாராட்டைப் பெறுகிறான். தமிழ் மன்ற விழாவுக்கு நவநீத கவியை வரவழைக்கிறான். மாணவர்களைச் சமூகப்பணியில் ஈடுபடடுத்துகிறான். இரவில் விடுதியை விட்டு வெளியேறும் மாணவர்களை அறிவுரை கூறித் திருத்துகிறான். இதனைக் காரணங்காட்டி கல்லூரி நிர்வாகம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைந்தபோது மாணவர்கள் அவனுக்காகப் போராடத் துணிகிறார்கள்.


அநீதி இழைப்போருக்குத் தண்டனை உறுதி என்ற கருத்தையும் நாவலாசிரியர் முன் வைக்கிறார். வஞ்சகமும் அற்பத்தனமும் நிறைந்து, பணமொன்றே குறிக்கோளாகக் கொண்ட மனிதராக கண்ணாயிரம் திகழ்கிறார். புகழுக்காகப் பணத்தை வாரி இறைக்கும் ஜமீந்தார், பூபதி மறைவுக்குப்பின் கல்லூரியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைகிறார். ஆயினும் நாவலின் இறுதியில், கள்ள நோட்டுக் கும்பலோடு தொடர்பு இருந்ததால் கண்ணாயிரமும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். அறவழியைவிட்டு விழகி நடப்போர்க்கு இஃது எச்சரிக்கையாக அமைகிறது.

இலக்கியம் மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் ஆற்றல்மிக்கது. இத்தகையச் சிறப்பையும் சமுதாயச் சிந்தனைகளையும் பொன் விலங்கு நாவலில் காண முடிகிறது. படித்துச் சுவைப்பதோடு அவற்றை அசைபோடவும் அரிய செய்திகளாக விளங்குகின்றன.


ஆக்ககம்: குமாரி ஷோபனா,
தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா.

No comments:

Post a Comment