Sunday, November 4, 2012

கோம்பா ஆறு கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளை விளக்கி எழுதுக.


கவிதையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் கவிஞர்களுள் மலேசியக் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியும் ஒருவராவார். இவரது கைவண்ணத்தில் உருவான கோம்பா ஆறு எனும் இக்கவிதையானது கவிதை பூங்கொத்து எனும் நூலில் இடப்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுள் ஆறு இன்றியமையாத ஒரு கூறு என்ற மையக் கருத்தினைக் கருப்பொருளாகக் கொண்டு இக்கவிதை புனையப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய ஆறாக விளங்கும் கோம்பா ஆற்றின் பெருமையை மலேசிய மக்கள் அனைவரும் உணரும் வகையில் அதன் சிறப்புகளுக்குக் கவிஞர் மணிமகுடம் சூட்டியுள்ளார்.

இயற்கை அன்னையின் அருட்கொடையான கோம்பா ஆறு ஓடும்போதே தன் நீரால் கோலம் தீட்டியும் வழியிலுள்ள மணலை மேவிப் பாதையாக்கியும் விரும்புவதை எல்லாம் நனைக்கிற ஆற்றலுடையதாய், முற்காலத்தில் போர்கள் நடந்த வரலாற்றில், நேரடியாக அல்லாமல் மறைவாகத் தானும் கலந்து இன்றளவும் புகழுக்குரியதாய் விளங்குகிறது என்று கவிஞர் நமக்கு கோம்பா ஆற்றை அறிமுகப்படுத்துகிறார்.

சாதனைப் படைப்பவர்களே வரலாற்றுப் பெட்டகத்தில் இடம் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் முற்காலத்தில் போர்களிலும் மற்ற பணிகளிலும் தேர்களைப் பயன்படுத்திய பாண்டியன் மன்னன் புகழ் பெற்றான்; ஊருக்காகப் போராடிய புலித்தேவன் வரலாற்றில் இடம் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களைப் போல, இன்று நீரைக் காலாகக் கொண்டு சிலாங்கூரில் ஓயாமல் நிதமும் நடந்து செல்லும் கோம்பா ஆறு மலேசிய நாட்டின் வளம் பெருக காரணியாக இருந்து நாட்டின் வரலாற்றிலும் இடம் பெரும் மங்கா சிறப்பைப் பெற்றுள்ளது எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கிறார்.

சலசலத்து ஓடும் கோம்பா ஆற்றின் எழில் ஓவியம் சொல்லில் மாளாது என்கிறார் கவிஞர். காலையில் உதய சூரியனின் ஒளியால் தங்கமாகவும், கடுவெப்பமான நண்பகல் வெயிலில் கன்னியரின் கன்னமாகவும், மாலை நேரத்து கதிரொளியில் செம்பரத்தைப் பூவைப் போல செந்நிறமாகவும், மணியின் ஒளியாக வெளிச்சம் சூழ்ந்த இரவில் வெண்ணிலவின் சுடர்பட்டு முல்லைப் பூவாக வெண்ணிறத்திலும் பல வண்ணக் கலவை பூணுவதாக கவிஞர் இரசித்துக் கூறுகிறார். கோம்பா ஆறானது பூஞ்சோலையில் புகுந்து ஓடும்பொழுது அங்கே உலவும் தென்றலின் அசைந்தாடலுக்குத் தொட்டிலாக விளங்குவதாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். சளைக்காமல் இரவுபகலாக ஓடி தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் கோம்பா ஆற்றின் கடமையுணர்ச்சி மனிதனுக்கு நல்லதொரு பாடமாகும். மேலும், நாளை எனப்படும் மறுநாள் பிறக்குமுன் இரவு வந்தாக வேண்டும் என்பது போல் நாம் சிறப்புற வேண்டுமானால் உறவுகளாக நமக்குப் பயன் தரும் ஆறுகள் நாட்டில் ஓடவேண்டும் என்று கவிஞர் அவா கொள்கிறார்.

இதுமட்டுமல்லாது, கோம்பா ஆறும் கிள்ளான் ஆறும் ஒன்றாக சங்கமிக்கும் இடத்தில் நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூர் அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளும் இவ்விடத்தில் இணையாதிருந்தால் இந்த நகரம் அமைந்ததனால் உருவான இப்போதைய வரலாறும் இருந்திருக்காது. அந்த இரண்டு ஆறுகளும் ஒன்று சேர்ந்ததனால் அவற்றின் விளைவுகளாக ஏற்பட்ட பல பெருமைகளை மொத்தமாக உணர முடிந்தது என்ற உண்மையையும் நாம் உய்த்துணர வைத்துள்ளார்.

இதனைத் தவிர்த்து, மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் இருமுகங்கள் ஒருமுகமாதல் போல வேற்றுமையைக் களைந்து ஒன்றுபடாவிட்டால் தேசிய நலனின் எதிர்காலம் இருளால் சூழப்படும் என்ற கவிஞரின் எச்சரிக்கை மணி கேட்கிறது. எனவே, நாட்டில் வறுமை ஒழிந்து வளம்பெருக வேண்டுமெனில், கோம்பா ஆறு கிள்ளான் ஆறுடன் இணைந்ததுபோல, இங்கு வாழும் மூன்று இனத்தவரும் அன்பால் ஒன்று கலத்தல் வேண்டும் என்ற சிந்தனை முத்தினை கவிஞர் அழகாய்க் கோர்த்திருக்கிறார் எனலாம்.

கோம்பா ஆறு சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கவிஞர். இயற்கையான நீரில் குளித்து மகிழவும், காதலிக்கும் பெண்களோடு கொஞ்சி விளையாடவும் இயற்கைச் சூழலில் இதமாகச் சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும், குடும்பக் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்வோடு பொழுதைக் கழிக்கவும் பொருத்தமான இடமாக உலு கோம்பா திகழ்கிறது. அந்த இடத்தை அடைவதற்கான பயணம் இன்பமாக இருப்பதற்கு, வழிநெடுக விற்கின்ற சுவைமிக்க கோம்பா டுரியான் உதவியாக இருக்கும். பசி வயிற்றைக் கிள்ளினாலும், அங்கே விற்கிற கோம்பா கூவே என்னும் களிப்பாக்கின் நிறங்கொண்ட பலகாரம் அதனைப் போக்க உதவும். எனவே, மகிழ்ச்சி எனும் இன்ப வெள்ளத்தில் திளைக்க கவிஞர் அங்குச் செல்லுமாறு விழைகிறார்.


ஆகவே, கோம்பா ஆற்றினைப் போன்று பல்வேறு பயன்களை வழங்கும் ஆறுகளை அரசும் மக்களும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்; அப்படிச் செய்யா விட்டால் மனித குலம் அழிவு பாதையில் காலடி பதிக்கும் என்ற உன்னத செய்தியையும் கவிஞர் இக்கவிதை மூலம் நயம்பட உணர்த்தியுள்ளார்.


- நன்றி :புஷ்பவள்ளி சக்திவேல், SMK Taman Selesa Jaya, Skudai, Johor Bahru

No comments:

Post a Comment