Friday, March 20, 2009

நாவல் (பொன் விலங்கு) - கதைச்சுருக்கம் - பகுதி 1

மாணவர்களின் கவனத்திற்கு,
கதைச் சுருக்கம் நீளமாக இருப்பதால் அதனை 4 பகுதிகளாப் பிரித்து இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது


சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் என்ற மலைப்பிரதேசத்தில் இயங்கிவரும் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிய விண்ணப்பம் செய்திருந்தான். நேர்முகத் தேர்விற்கு வரும்படி கடிதம் வந்தது. மல்லிகைப் பந்தலுக்குச் செல்லும் கடைசி பேருந்தைத் தவறவிட்டதனால் நேர்முகத் தேர்வுக்குத் தாமதமாகச் சென்றடைகிறான். கல்லூரி நிர்வாகி பூபதி உடல் நலக் குறைவாக இருந்த காரணத்தால் நேர்முகத் தேர்வைத் தன்னுடைய வீட்டில் நடத்தினார். இந்தக் காரணத்திற்காகத் தாமதமாக வந்த சத்தியமூர்த்தி மன்னிக்கப்படுகிறான்.

நேர்முகத் தேர்வை மிகச் சிறப்பாக செய்த சத்தியமூர்த்தி, “வயதில் மூத்த அனைவரும் யோக்கியமானவர்கள் அல்ல” என்று கூறுகிறான். இந்தப் பேச்சு பூபதியின் மனதை நோகச் செய்கிறது. “பெரியோர்களிடம் பணிவாகவும், விநயமாகவும் பேசத் தெரிய வேண்டும். கல்வி மலரைப் போன்றது. பணிவும், விநயமும்தான் அதை மணக்கச் செய்கிறது” என்கிறார். “மேலும், சத்தியமூர்த்தியிடம் உள்ள இந்த எடுத்தெறிந்து பேசிவிடுகின்ற இளமைக்குணம் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும்” என்கிறார். பூபதி நேர்முகத் தேர்வின் முடிவை கல்லூரி திறப்பதற்கு முன் தெரிவிப்பதாகவும், தேர்வு சான்றிதழ்களைக் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிற¡ர். அவரிடம் விடைபெற்று கல்லூரியில் சான்றிதழ்களை ஒப்படைத்த பின்னர், மதுரை திரும்புகிறான் சத்தியமூர்த்தி. அவன் பயணம் செய்த அதே இரயில் பெட்டியில் பெண்மணி ஒருவரும், அவருடைய மகளும் பயணம் செய்தனர். மகள் என்றுகூட பார்க்காது அவளிடம் மிகவும் அநாகரிகமாகப் பேசுகிறார் பெண்மணி. சத்தியமூர்த்தி அவரிடம் “சற்று நாகரீகமாக மகளுடன் பேசுங்களேன்” என்று கூற அவளுடைய தாயாரும் அமைதியாகிவிட்டாள். இதற்கிடையே ஓடும் இரயிலில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்ற அந்த இளம்பெண்ணைக் காப்பாற்றுகிறான் சத்தியமூர்த்தி.

ரயில் மதுரையை அடைந்ததும், பிளாட்பாரத்திலிருந்து வெளியேறிய அவனைக் கண்ணாயிரம் என்ற விளம்பர நிர்வாகி சந்திக்கிறார். அவன் பின்னால் வந்து கொண்டிருந்த பெண்ணைக் காட்டி, “நாட்டியப் பெண்மணி மோகினியை முன்பே தெரியுமா” என்று சிரித்தவாறே கேட்டார். அவர் கேட்ட பாணி சத்தியமூர்த்திக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. அடிப்படை நாகரீகம் கூட தெரியாத அவரை எரித்துவிடுவதைப்போல் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான்.

வீடு திரும்பிய சத்தியமூர்த்தியிடம் கல்லூரி வேலை குறித்து அனைவரும் வினவினர். விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று கூறுகிறான். இதற்கிடையே ரயிலில் காப்பற்றப்பட்ட மோகினி, ரயிலில் அவன் தவறவிட்டுவிட்டதாகக் கூறி பேனா ஒன்றை ஒப்படைக்கிறாள். “தன்னை மறக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறாள் மோகினி.

இதற்கிடையே பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க பூபதிக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை அனுப்புகிறான். தபால் நிலையத்தில் நண்பன் குமரப்பனைச் சந்திக்கிறான். ‘குத்து விளக்கு’ என்ற பத்திரிக்கையில் கார்ட்டூனிஸ்ட் ஆகப் பணி புரிகிறான் குமரப்பன்.

மல்லிகைப் பந்தலில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளராக விரும்பும் சத்தியமூர்த்தியிடம், “அங்கு வாழ்க்கை செலவு அதிகமாயிற்றே, உள்ளூரிலேயே பணி புரியலாமே” என்று கனிவோடு கூறுகிறான்.

மன அமைதி வேண்டி கோயிலுக்குச் சென்ற சத்தியமூர்த்தி எதிர்பாரா விதமாக மோகினியைக் காண்கிறான். அவளுடைய தூய அன்பில் மனதைப் பறிகொடுக்கிறான். அவனைத் தன் வீட்டிற்கு ஒருமுறை வரும்படி அன்போடு கேட்கிறாள். ஆண்டாள் பாசுரத்திற்கு அபிநயம் பிடித்து ஆடிக்காட்டுவதாகக் கேட்டுக் கொள்கிறாள். சத்தியமூர்த்திக்கு மோகினியின் இதயம் ஒருவாறு புரிகிறது.

இதற்கிடையே அவனுடைய அப்பா குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக கண்ணாயிரத்திடம் 5000 ரூப¡ய் கடன் பெறுவதற்கு, கண்ணாயிரம் இழுத்த இழுப்பிற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மஞ்சள் பட்டி ஜமீந்தார் என்ற பெரிய பணக்காரர் ஒருவருக்கு ஆங்கிலமும் இந்தியும் சொல்லிக் கொடுக்கிறார்.

சத்தியமூர்த்திக்குக் கல்லூரியில் பணி புரிய வருமாறு கடிதம் வருகிறது. பூபதி தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதில் சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டதோடு அவனுக்கு வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். கல்லூரி திறப்பதற்கு முதல்நாளே வேலையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே தினத்தில் பாரதியின் கடிதமும் கிடைத்தது. அவனுக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தாள் பாரதி. கல்லூரி முதல்வர், சத்தியமூர்த்திக்கு வேலை கிடைப்பதற்குத் தடையாக இருந்தார் என்றும் எழுதியிருந்தாள். கல்லூரி முதல்வரை மாணவன் ஒருவன் கத்தியால் தாக்கியதாகவும், செய்தி அறிந்த பூபதி முதல்வரிடம் மாணவர்களை அன்போடு நடத்துமாறு கட்டளையிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாள் பாரதி. “சத்தியமூர்த்தியைப் போல் இளமைப் பருவமும், தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கி விடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இளைஞனால் மாணவர்களின் மனதைக் கெடுக்க முடியும்” என்று கூறியவர், இதே முதல்வர்தான் என்று குறிப்பிட்டிருந்தாள். கல்லூரியில் தமிழ்ப்பிரிவில் சேர்ந்து அவரிடம் பயில ஆர்வமுடன் இருப்பதாகவும் எழுதியிருந்தாள்.

சித்ரா பௌர்ணமியன்று மோகினியின் ஆண்டாள் நடனத்தைச் சத்தியமூர்த்தியும், குமரப்பனும் கண்டு கழிக்கின்றனர். மோகினியின் நடனத்தில் மெய் மறக்கிறான் சத்தியமூர்த்தி. மோகினியின் மேல் இனம் புரியாத மதிப்பு உருவாகிறது. அவளிடம் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பாராட்டுக்களைத் தெரிவ¢க்கிறான். மோகினியியோ அவனைப் பார்த்த உற்சாகத்தினால் சிறப்பாக ஆட முடிந்ததாகக் கூறுகிறாள். அவனுடைய பாராட்டு தான் பெற்ற பாக்கியமாகக் கருதுவதாகக் கூறுகிறாள் மோகினி.

குமரப்பனிடம், மோகினியுடன் ஏற்பட்ட உறவைக் கூறுகிறான் சத்தியமூர்த்தி. மோகினியைப் போன்ற கலைஞர்களின் கலைத்திறமையும், அழகும், அவர்கள¢ன் அடிமனத்தில் உள்ள வேதனைகளும் உலகத்துக்குத் தெரியாமல் போய்விடுவதாகக் கூறுகிறான் குமரப்பன். வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்குத் துணியும் அளவிற்கு அவளின் துயரங்கள் உள்ளன என்பதை அறியும் போது ஆச்சரியமாக உள்ளதாகக் கூறுகிறான்.

மல்லிகைப் பந்தலில் உள்ள கல்லூரியில் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் சத்தியமூர்த்திக்குத் தன்னுடய மனமார்ந்த வாழ்த்துக்களைச் கூறிக் கொள்கிறான் குமரப்பன். குமரப்பனின் பிரிவை எண்ணி சத்தியமூர்த்திக்கு இதயமே கனக்கிறது.

சத்தியமூர்த்திக்கு நண்பர்கள் விருந்து வைக்கிறார்கள். நண்பன் ஒருவன், “சத்தியமூர்த்தியைப் போன்ற ஓர் உயிர் நண்பனை வெளியூருக்கு அனுப்பும் போது பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காத துயரத்தினால் பேசாமலேயே உட்காருகிறேன்” என்று கண்ணீரோடு பேச்சை முடிக்கிறான்.

விருந்து முடிந்து வீடு திரும்புகிறான் சத்தியமூர்த்தி. கண்ணாயிரத்திடம் வாங்கப்போகும் கடனுக்குச் சத்தியமூர்த்தியை ஜாமீன் கையெழுத்து போடுமாறு கேட்கிறார் அவனுடைய அப்பா. வேறு வழியின்றி கையெழுத்து போடுகிறான் சத்தியமூர்த்தி. வேலைக்குப் போகிற இடத்தைப் பற்றிய மகிழ்ச்சியும், பிரிகிற இடத்தைப் பற்றிய துயரமும் மனத்தை ஆட்கொள்கிறது.

நிறையப் புத்தகங்களைப் பயணப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து, “படிப்பு சொல்லிக் கொடுக்கப்போகிறீர்களா அல்லது படிக்கப்போகிறீர்களா” என்று கேட்டுத் தங்கை சிரித்தாள். அவளிடம், “படிக்கிறவனைக் காட்டிலும் படிப்புச் சொல்லிக் கொடுப்பவன் அதிகமாகப் படிக்கவும், சிந்திக்கவும் வேண்டும்” என்கிறான். பயணப் பெட்டியில் பாரதி எழுதிய கடிதத்தையும் பத்திரமாக வைக்கிறான்.

மோகினியின் வீட்டிற்குச் சென்று தான் வெளியூரில் பணி புரியப் போகும் செய்தியைக் கூறுகிறான். அவனுடைய வருகை மோகினிக்குப் பேரின்பத்தை அளிக்கிறது.

“சத்தியமூர்த்தியைப் போல் சத்தியமும் நேர்மையும் நிறைந்த இளைஞர் மனம் வைத்தால் வாழ்நாள் முழுவதும் வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று அந்த வீட்டில் காத்திருப்பதாக” மோகினி கூறுகிறாள்.

“இந்த வீட்டில் நீங்கள் எடுத்து வாசிப்பதற்காகவே உங்கள் காலடியில் காத்துக் கொண்டிருக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது” என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து அவனுக்கு விடையளிக்கிறாள் மோகினி.

“பிரிந்து வெளியூர் போகப் போவதைச் சொல்லிக் கொண்டு போக வந்தால், என்றும் பிரியமுடியாத பந்தத்தைச் சொல்லி நீங்கள் என்னைத் தடைப்படுத்துவது நியாயமா?” என்று கேட்கிறான் சத்தியமூர்த்தி.

“ரயிலில் கையைப் பற்றி காப்பாற்றிய அவன் பாதியில் இழுத்து முறித்துக் கொள்ளலாமா?” என்று கூறுவதன் மூலம் அவனை மனதார விரும்புவதைத் தெரிவிக்கிறாள்.

“நாம் இருவரும் சந்தித்துப் பிரிந்த போது கண்ணீரும் அமைதியுமே இருந்தன” என்ற பைரனின் கவிதை வரிகள் அவன் ஞாபகத்திற்கு வருகிறது. மோகினியின் அன்பு அவனை ஆட்கொள்கிறது.

மல்லிகைப் பந்தலுக்குச் செல்வதற்குமுன் மீண்டும் அவளைச் சந்திப்பதாகக் கூறி விடைபெறுகிறான். இதற்கிடையே மோகினியைச் சினிமாவில் நடிக்க வைக்க கண்ணாயிரம் முயற்சி செய்து வருவதாகக் குமரப்பன் சத்தியமூர்த்தியிடம் தெரிவிக்கிறான். மேலும், மஞ்சள்பட்டி ஜமீந்தார்தான் சினிமா படம் எடுக்க பணவுதவி செய்யவிருப்பதாகச் செய்தி சொல்கிறான்.

மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் மோகினியைச் சந்தித்து கண்ணாயிரத்திடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறான். மோகினி அவளுடைய நினைவாக அவன் விரலில் மோதிரம் ஒன்ற அணிவிக்கிறாள். சத்தியமூர்த்தியும் தன் நினைவாக அவளுடைய விரலில் மோதிரத்தை அணிவிக்க¢றான்.

கண்ணாடியில் தங்கள் இருவரின் உருவமும் மணமக்களைப் போல் காட்சி தருவதாகக் கூறி மனம் மகிழ்கிறாள் மோகினி.

“காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல்தான் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருப்பதை நீயும் நானும், இன்றும் நாளையும், என்றும் கேட்கலாம்” என்று கூறுகிறான் சத்தியமூர்த்தி. பதில் கூறாமல் அழத்தொடங்குக¢றாள். “அவனுடைய நினைவில் வாழ்வதே பாக்கியம்” என்று விடைகொடுக்கிறாள் மோகினி.

நண்பர்கள் அவனை ரயில் நிலையத்திற்கு வழியனுப்ப வந்திருந்தனர். மலைக்குப் புறப்பட்ட கடைசி போருந்தில் இடம் கிடைத்தது. விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பும் மாணவ இளைஞர்கள் பேச்சும் சிரிப்புமாய் பேருந்தில் பயணித்தனர். அவனோடு அங்குப் பணிபுரியும் விரிவுரைஞர்களும் பயணித்தனர். போருந்து நிலையத்தில் பாரதி அவனுக்காகக் காத்திருக்கிறாள். அவனைத் தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு போய் கல்லூரியில் விடுகிறாள். சத்தியமூர்த்தி கல்லூரியில் தங்குவது முதல்வருக்கும் ஹெட் கிளார்க்கிற்கும் விருப்பமில்லை என்பதை அவர்களின் பேச்சிலே புரிந்து கொள்கிறான். அன்றே அங்கிருந்து வெளியேறி வாடகை அறை ஒன்றில் தங்குகிறான்.

பாரதி அடிக்கடி தன்னைத் தேடி வருவதையும், பேசுவதையும் தவிர்க்க எண்ணுகிறான். கல்லூரி முதல்வரும், ஹெட் கிளார்க்கும் காரணமேயில்லாமல் தன் மீது பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்தப் பெண்ணால் பொறாமை மேலும் வளர்ந்து விபரீதமாகிவிடக்கூடாதே என்று தயங்கினான்.

பாரதியிடம், “மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது, எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும், எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதுவும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான்” என்கிறான்.

வேலையில் சேரும் உடன்படிக்கை பாரத்தில் தங்கள் பணிவுள்ள என்ற சொற்களை வெட்டி தங்கள் உண்மையுள்ள என்று திருத்தி கையொப்பமிட்டான்.

இதைக் கண்ட ஹெட் கிளார்க், “உங்களிடம் பணிவை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் ஒருவர் தான் உண்மையானவர் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” அப்படித்தானே என்கிற¡ர். அவரிடம், “உண்மை என்ற பெருங்குணம் மற்ற எல்லா குணங்களையும் தன்னுள் அடக்கி விடுகிறது” என்கிற¡ன். ஹெட் கிளார்க் தன்னை வெறுப்பதை அவனால் நன்கு உணர முடிகிறது.

அன்று மாலை கல்லூரியில் பணிபுரிபவர்களுக்குப் பூபதியின் தோட்டத்தில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பேசிய அனைவரும் ஆங்கில மொழியையே பயன்படுத்தினர். புதிதாக வேலையில் சேர்ந்துள்ள விரிவுரையாளர்கள் சார்பாக சத்தியமூர்த்தியைப் பேசும்படி பணித்தார் பூபதி. சத்தியமூர்த்தி அனைவருக்கும் தமிழிலேயே வணக்கம் கூறி பேச்சைத் தொடங்கினான். கல்லூரி முதல்வர் அவனிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு காதருகே முணுமுணுத்தார். “நான் ஆங்கிலத்தை மதிக்கிறேன், தமிழை வணங்குகிறேன்” என்று கூட்டத்தினர் அனைவருக்குமே கேட்குமாறு கூறி, உரையைத் தமிழிலேயே தொடங்கினான். பூபதி அவனைப் பாராட்டியதோடு, “பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட காரணத்தால், தமிழ் நன்றாகத் தெரிந்தவர்களிடையேயும் ஆங்கிலம் பேச நேரிடுகிறது” என்றார்.

கல்லூரி தொடங்கிய இரண்டாவது நாள் BA ஆங்கில இலக்கிய வகுப்பிற்குச் செல்கிறான். சுமார் எழுபது மாணவர்கள் அந்த வகுப்பில் இருந்தனர். பாரதி ஆங்கிலக் கவிதை நூலைக் கொடுத்து ஏதாவது கவிதை ஒன்றை விளக்குமாறு கேட்கிறாள். “தமிழ் விரிவுரையாளர் ஆங்கிலக் கவிதைக்கு விளக்கம் சொல்வதாவது” என்று மாணவர்கள் மருண்டனர். சத்தியமூர்த்தி கவிதை நூலில் இருந்து “She walks in beauty” என்ற கவிதையை விளக்க ஆரம்பித்தான். பாரதியாரின் ‘அழகுத் தெய்வம்’ என்ற கவிதையோடு இரண்டறக் கலந்துவிட்டான். மாணவர்கள் எழுதிவைத்த சித்திரங்கள் போல அசையாமல் கட்டுண்டு கிடந்தனர். பாரதியோ, “இலக்கிய நயமிக்க உரை” என்று பாராட்டுகிறாள்.

தங்கள் மனதிற்குப் பிடித்த ஒரு நல்ல விரிவுரையாளனைக் கண்டு பிடித்து விட்ட மகிழ்ச்சி முகத்திலும், மனத்திலும் ஆர்வம் பொங்க மாணவர்கள் சூழ்ந்தார்கள். வகுப்பிற்கு வெளியே நின்று இவனது கவிதை விளக்கத்தைக் கேட்டு சத்தியமூர்த்தியை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார் பூபதி. கல்லூரி முதல்வரிடம் தமிழ்த்துறை விரிவுரையாளராகிய சத்தியமூர்த்தி ஆங்கில மொழியில் கவிதையை விளக்கியதை மிகவும் பெருமையாகக் கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் சத்தியமூர்த்தியைத் தனியே அழைத்து, “இனி எந்த வகுப்பிற்குச் சென்றாலும் தமிழ்த்துறை தொடர்புடைய ஏதாவது பாடத்தை நடத்துங்கள். இது முதல்வர் கட்டளை” என்கிறார்.

அரைகுறையாகப் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் நன்றாகவே பொறாமைப் படும்படியான காரியம் ஒரு வாரம் கழித்து நடந்தது. சத்தியமூர்த்தியை ஹாஸ்டலின் உதவி வார்டனாக நியமிக்கப்பட்டிருப்பதகாகச் சுற்றறிக்கை (circular) வந்தது. வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படும் சுபாவம் மனிதனிடம் நிறையவே உள்ளதை அவன் அறிவான். முதலில் மறுத்தாலும் பூபதியின் வேண்டுகோளை நிராகரிக்க இயலாது. வார்டன் பதவியை ஏற்றுக்கொண்டான்.

இதற்கிடையே மோகினியின் வீட்டிற்குச் செல்வந்தர் ஒருவரை அழைத்து வருகிறார் கண்ணாயிரம். தொழிலதிபர் தன் வீட்டில் நடைபெறும் திருமணத்தில் மோகினியின் நடனம் இடம்பெறுவதை விரும்புவதாகக் கண்ணாயிரம் கூறுகிறார். இதற்கிடையே மோகினி ரகசியமாகச் சத்தியமூர்த்திக்குக் கடிதம் எழுதி அதில் அஞ்சல் கூட ஒட்டாமல் அனுப்புகிறாள்.

‘குத்துவிளக்கு’ பத்திரிக்கையில் மோகினியின் பேட்டி இடம் பெற வேண்டி, அவளைப் பேட்டி காண பத்திரிக்கை உதவி ஆசிரியரும் குமரப்பனும் அவளது வீட்டிற்குச் சென்றனர். எல்லாவிதமான பேச்சு வார்த்தைகளுக்கும், கண்ணாயிரமும் முத்தழகம்மாளுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாட்டியக் கலைய¢ல் மோகினியின் முன்னேற்றத்திற்குக் கண்ணாயிரமும் மஞ்சள்பட்டி ஜமீந்தாருமே காரணம் என்று முத்தழகம்மாள் கூறினாள். அதை வன்மையாக மறுக்கிறாள் மோகினி. தன்னுடைய வளர்ச்சிக்கு நாட்டியம் கற்பித்த ஆசிரியரே காரணம் என்கிறாள்.

No comments:

Post a Comment