Monday, March 23, 2009

நாவல் (நீண்ட கேள்வி)- சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகிய இருவரின் நட்பு

சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகிய இருவரும் நட்புக்கு இலக்கணம். சான்றுகளுடன் விளக்குக.

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகின் தனிப்பெரும் படைப்பாளராகத் திகழ்ந்தவர் புலவர் நா.பா. என்று செல்லமாக அழைக்கப்பட்ட நா.பார்த்தசாரதி அவர்கள். சத்திய வெள்ளம், குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள் போன்றவை இவரது சிறந்த படைப்புகளுள் சில. இவர் கைவண்ணத்தில் கருவாகி உருவான பொன்விலங்கு எனும் சமூக நாவல் உயர்ந்த இலட்சியங்களும் சிறந்த கொள்கைகளும் கொண்ட சத்தியமூர்த்தி எதிர்கொள்ளும் சவால்களைச் சித்திரிக்கிறது. இதில் வரும் சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகிய இருவரும் நட்புக்கு இலக்கணமாகப் படைக்கப்பட்ட இரு கதைப்பாத்திரங்கள் ஆவர்.

மனித வாழ்க்கையில் நமது இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் கருத்துகளை மனம் திறந்து பரிமாறிக்கொள்ளவும் சிற்சில வேளைகளில் தவறு நேரும்போது நட்பின்காரணமாக இடித்துரைக்கவும் தோழர்கள் தேவை. அவ்வகையில், சத்தியமூர்த்தியும் குமரப்பனும் மணிக்கு ஒத்த ஒலியென விலங்கும் அருமை நண்பர்களாக இந்நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை உலா வருகிறார்கள்.

சத்தியமூர்த்தி தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். மல்லிகைப் பந்தலில் உள்ள கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றுபவன். முற்போக்குச் சிந்தனையாளனான அவன் அவனது கொள்கைக்கு ஒத்த குமரப்பனை நண்பனாகக் கொண்டிருக்கிறான். குமரப்பனோ சத்தியமூர்த்தியைபோல் ஏட்டறிவு குறைவானவனாக இருந்தாலும் சிந்தனையிலும் செயலிலும் உழைப்பிலும் சத்தியமூர்த்திக்கு எந்தவிதத்திலும் சளைத்தவன் அல்லாதவனாகத் திகழ்கிறான். சத்தியமூர்த்தியே அவனை ‘சர்வகலாசாலை’ எனப் போற்றப்படுபவன். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உரிமைப் பாராட்டிப் பழகிவருவதை இந்நாவலில் பரக்கக் காணலாம்.

குமரப்பனும் சத்தியமூர்த்தியும் யாரையும் எதற்காகவும் பொய்யாக மதிக்கவும் புகழவும் விரும்பாதவர்கள். தங்கள் மனத்தில் தோன்றிய எண்ணங்களை மறைக்காது கூறும் இயல்பைக் கொண்டவர்கள். பக்தி எனும் கவசத்தைக் கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் போலி மனிதர்களைச் சாடுகின்றனர். மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் ஆணைக்கு ஏவல் புரியும் கண்ணாயிரம் செய்யும் அக்கிரமங்களை வெறுக்கின்றனர். பல இடங்களில் இவர்கள் நட்புக்கு இலகணமாகப் பரிணமிக்கின்றனர்.

சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தலில் வேலைக்கு மனுப்போட்டிருப்பதை அறிந்த குமரப்பன், உள்ளூரிலேயே வேலை பார்த்தால் சிக்கனமாக இருக்க முடியும் என்கிறான். மேலும், மல்லிகைப்பந்தல் போன்ற இடங்களில் வாழ்க்கைச் செலவுகளும் சாப்பாட்டுச் செலவுக்குமே அதிகம் செலவிட நேரிடும் என்று யோசனை கூறுகிறான் குமரப்பன்.

மல்லிகைப்பந்தலில் தனக்கு வேலை கிடைத்த செய்தியைக் குமரப்பனுக்குத் தெரிவிக்கிறான் சத்தியமூர்த்தி. அதைக்கேட்ட குமரப்பன் அளவில்லா மகிழ்ச்சியடைகிறான். குமரப்பனும் அவனது மற்ற நண்பர்களும் சத்தியமூர்த்திக்கு விருந்துவைத்து வழியனுப்புகிறார்கள். அப்போது, மல்லிகைப் பந்தலுக்குச் சென்றவுடன் கல்லூரி வேலையோடு உயர்கல்வி கற்றுத் தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அன்புக்கட்டளையிடுகிறான்.

ஒருமுறை குத்துவிளக்குப் பத்திரிகைக்காகக் கண்ணாயிரத்தோடு மோகினியைப் பேட்டிக் கண்டுவரும் வாய்ப்புக் குமரப்பனுக்குக் கிடைக்கிறது. அப்போது, மோகினியின் திறமைக்கும் புகழுக்கும் கண்ணாயிரமும் ஜமீந்தாரும்தான் காரணம் என்று முத்தழகம்மாள் சொல்கிறாள். அதை மறுத்த மே¡கினி தன் பாட்டியும் தன் குருவும்தான் காரணம் என்று அவர்கள் முகத்தில் கரிபூசும் விதமாகச் சொல்கிற¡ள். அங்கு நடந்த சம்பவத்தைக் குமரப்பன் படத்தோடு இணைத்து மோகினியின் புனிதத்தையும் விளக்கி நண்பனுக்குச் செய்யும் கைம்மாறாகக் கருதி சத்தியமூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறான்.

மோகினி சாலை விபத்தில் சிக்குண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அந்தத் தகவலைக் குமரப்பன் சத்தியமூர்த்திக்குத் தெரிவிக்கிறான். இருவரும் மோகினியைக் காண மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அங்குக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் வருகின்றனர். ஜமீந்தாரின் கண்காணிப்பில் இருந்துவரும் மாகினியை எப்படிச் சத்தியமூர்த்தி பார்க்கமுடியும் என்று வம்பளக்கிற¡ர் கண்ணாயிரம். சத்தியமூர்த்தியை உடனே அங்கிருந்து வெளியேறுமாறு கூற நண்பனுக்காகக் குமரப்பன் கண்ணாயிரத்தோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.

குத்துவிளக்குப் பத்திரிகையிலிருந்து விலகிய குமரப்பன், மல்லிகைப்பந்தலுக்குச் செல்கிறான். சில நாள் வேலை இல்லாதவனாகச் சத்தியமூர்த்தியின் அறையில் தங்குகிறான். அப்போது பொழுதுபோகாததால் சத்தியமூர்த்தியின் பெட்டியிலிருந்து ஏதாவது புத்தகம் எடுத்துப் படிக்கலாம் என்று திறந்தபோது, மோகினி சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தைப் படித்து விடுகிறான். நண்பனுக்கு வந்த கடிதத்தைப் படிக்க நேர்ந்ததை மூடி மறைக்காமல் சத்தியமூர்த்தியிடமும் சொல்லி அதற்காக மன்னிப்பும் கோருகிறான். தன் அந்தரங்க இரகசியங்கள் தன் ஆருயிர் நண்பன் தெரிந்துகொள்வதில் தவறில்லை என்பதை சத்தியமூர்த்தியும் உணர்ந்து உண்மையை ஒளிவு மறைவில்லாமல் தெரிவிக்கிறான். அதற்காகக் குமரப்பனை மன்னிக்கவேண்டிய அளவுக்குத் தவறேதும் செய்யவில்லை என்றும் கூறுகிறான்.

அதுபோக, குமரப்பன் சத்தியமூர்த்தியோடு தங்கியிருந்ததற்கான செலவை ஈடுகட்டும் வகையில் குறிப்பிட்ட தொகையை செலவுக்காகத் தருகிறான். சத்தியமூர்த்தி அவ்வாறு செய்வது தவறு எனவும் அதை வாங்கவும் மறுக்கிறான். ஆனால், நியாயத்தையும் நண்பனின் உண்மை நிலையையும் எடுத்துச் சொல்லி சத்தியமூர்த்தியைப் பெற்றுக் கொள்ளச் சொல்கிறான். நண்பனின் பொருளியல் நிலையை அறிந்து நடந்துகொள்ளும் பண்பு இருவரிடமும் இருப்பதை நன்கு விளக்கப்படுகிறது.

பூபதி இறப்பிற்குப் பிறகு மஞ்சள்பட்டியார் கல்லூரி நிருவாகத்தைக் கவனித்து வருகிறார். ஏற்கனவே சத்தியமூர்த்திமீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கும் ஜமீந்தார் சதித்திட்டம் தீட்டி, சைக்கிள் ஷெட்டுக்குத் தீவைத்துக் கலகம் மூட்டி விடுகிறார். இக்கலகத்துக்குக் காரணம் சத்தியமூர்த்திதான் என்று குற்றம் சாட்டப்படுகிறான். அவனைக் கைது செய்வதற்காக வருகிறார் காவல் அதிகாரி. அதனைக் கேள்விபட்ட குமரப்பன், சத்தியமூர்த்திக்காக விளக்கமளிக்கிறான்; வாதாடுகிறான். இருப்பினும் காவலதிகாரி அவனைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார். நண்பனுக்கு நேர்ந்த இந்த அவலத்தைப் போக்க உடனே ஜாமீன் பெற குமரப்பன் காவல்நிலையத்துக்குச் சென்று சத்தியமூர்த்தியை ஜாமீனில் வெளியே கொண்டுவருகிறான்.

இவ்வளவில், குமரப்பனும் சத்தியமூர்த்தியும் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குகொள்ளும் நல்ல நண்பர்களாக இந்நாவலில் இருப்பதைக் காணமுடிகிறது.



(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியர் திரு.இளந்தமிழ், கோலாலும்பூர்)- நன்றி

No comments:

Post a Comment