Thursday, March 26, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 1

இலக்கியக் கேள்வித் தாளில் பாகம் I-ல் பிரிவு இரண்டு காவிய நாடகம் ஆகும். இதில் நான்கு கேள்விகள் கேட்கப்படும். அதில் (ஈ) i-வது கேள்வி கொடுக்கப்பட்ட உரையாடலில் இடம்பெற்ற கதைமாந்தர்களையும், (ஈ)ii -வது கேள்வி அவ்வுரையாடலுக்கு முன் அல்லது பின் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து எழுத வேண்டும். பெரும்பாலும் மாணவர்கள் இச்சூழலை விவரித்து எழுதுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். ஆகவே அதன் தொடர்பான சில பயிற்சிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.


பாகம் I: பிரிவு இரண்டு (நாடகம்)
(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"இதுவரை நம் காதலுக்காக வாழ்ந்த நீ, இனிமேல் நீ கற்ற தமிழுக்காக வாழ வேண்டும். அந்தத் தங்கத் தமிழால், 'உன் கணவன் மானங்காக்க உயிர் நீத்தான்' என்று நம் பகைவரும் அறியும் படி பாடவேண்டும்."
(காவிய நாயகி - காட்சி 37 - பக்கம் 111)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) பொருஞ்சேரலாதன், பொன்னி

(ii) வெண்ணிப்பறந்தலையில் நடந்த போரில் கரிகாலனின் வாள் பெரிஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து முதுகுக்கு வெளியே வந்து புறப்புண் ஏற்படுத்துகிறது. தன் தன்மானத்துக்கு இழுக்கு நேரிட்டதாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் துறக்க போர்க்களத்திலேயே அமர்ந்திருக்கிறான். விபரம் அறிந்து அங்கு ஓடிவரும் பொன்னியின் நெற்றியில் திலகமிட்டு மருதவாணர் முன்னிலையில் மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். பொன்னியும் அவனுடனேயே வடக்கிருந்து உயிர் விட்டு மறுமையிலும் துணையாக வர எத்தனிக்கும் பொழுது அதற்கு மறுமொழிகூறுகின்ற சூழலில் இக்கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 1

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"ஒரு பெண் அவ்வளவு துணிவுடன் நமது அவைக்கே வந்து, நம்மைத் தாழ்த்திப் பேசுகிறாளென்றால், அதற்குப் பின்னணி ஏதாவது இருக்க வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள். அப்படி யாராவது அவளைத் தூண்டிவிட்டிருந்தாள் அவளையும் அந்தக் கூட்டத்தையும் சேர்த்துத் தண்டியுங்கள்."
(காவிய நாயகி - காட்சி 5 - பக்கம் 23)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?



(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

No comments:

Post a Comment