Tuesday, March 17, 2009

காவிய நாயகி - நாடகச் சுருக்கம்

சோழ மன்னன் கரிகாலனுக்கும்; சேர மன்னன் பெருஞ்சேரலாதனுக்கும்; வெண்ணிப் பறந்தலை என்னுமிடத்தில் நடந்த பெரும் போரில், கரிகாலனின் வாள் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து, முதுகுக்கு வெளியே வந்து விடவே சேரன் தோற்று, சோழன் வெற்றி பெற்றான். அந்த விழாவைக் கொண்டாடும் படி தன் மக்களுக்கு ஆணையிட்டதோடு, அவையையும் கூட்டினான். அவ்வேளை, பொன்னி என்ற பெண் புலவர் மன்னனைக் காண வந்தாள். அக்கவிஞர் வெண்ணிப் பறந்தலையில் குயவர் குலத்தில் பிறந்தவள்.

பொன்னி தலையில் பூவின்றி, நெற்றியில் பொட்டின்றி விதவைக்கோலத்தில் கரிகாலனை விரக்தியோடுவாழ்த்தினாள். வெண்பட்டாடையும் வெள்ளைத் தாமரையும் கலைமகளுக்கு மங்களம் என்பதை உணர்ந்து அந்தக் கலைமகளைப் போன்றே தானும் காட்சிக்கு எளியவளாக வந்திருப்பதாகக் கூறினாள். “எளிமையைப் பாராட்டாமல் அமங்கலம் என்று சொல்வது அழகல்ல” என்கிறாள். அவையினரை நோக்கி “தான் வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் பிறந்ததாகவும், தாயார் தான் பிறந்தவுடன் இறந்து விட்டதாகவும், தன்னைத் தந்தையார் தான் வளர்த்தார்” என்றும் கூறினாள். தொடர்ந்து, தந்தையின் உதவியால் தான் தமிழில் சிறந்து விளங்குவதாகக் கூறிய அவள் தன்னுடைய தகப்பனார் அண்மையில் இறந்து விட்டதாகவும் கூறினாள்.

தன்னுடைய உண்மைப் பெயர் பொன்னி என்றும் வெண்ணிக் குயத்தியார் என்பது தனக்குத் தானே இட்டுக் கொண்ட பெயர் என்கிறாள். தன்னால் மண்பாண்டங்கள் செய்ய முடியும். அதே மண்ணைக் கொண்டு மனித பொம்மைகளையும் படைக்க முடியும் என்றாள். “கற்பனை என்பது அவரவர்களின் அறிவிற்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப வளர்வது என்றும் தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வமே தன்னைப் புலவராக்கியது” என்றாள். மன்னனை நோக்கி, தான் ஒரு கவிதையை எழுதியிருப்பதாகக் கூறி கவிதையைப் பாடுகிறாள்.

காண்பதற்கு அச்சம் தரும் யானைப் படைகளை உடையவனே! காற்றுக்கும் ஆணையிட்டு, ஏவி, கடல் மூன்றிலும் கலங்களைச் செலுத்திய சோழ வேந்தர்களின் வழி வந்தவனே! கரிகால் வளவனே! வெண்ணிப் பறந்தலை என்னும் போர்க்கலத்தில் நின்னோடு போர் செய்த சேரர் பெருஞ்சேரலாதனின் மார்பிலே நின் வாளை வேகமாகப் பாய்ச்சி அவரின் முதுகிலும் புறப்புண் படச் செய்தாய்! வெற்றி பெற்றாய், சேரரோ புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து இறந்துவிட்டார். ஏ! மன்னனே! புகழை விரும்பி வெற்றி பெற்ற உன்னை விட மானங்காத்து மறைந்த சேரர் நல்லவர் என்று கவிதையைப் பாடினாள்.

பாடலைக் கேட்ட இரும்பிடர்த் தலையார் அக்கவிதையை 'வஞ்சப் புகழ்ச்சி' என்கிறார். தளபதியோ, ‘மன்னரைக் குற்றம் சுமத்தும் கவிதை’ என்கிறார். பொன்னியோ, “வீரம் படைத்தோருக்கு மானந்தான் அணிகலன்” என்கிறாள். “போர் முறையை மீறி கரிகாலன் வாளை சேர மன்னன் மார்போடு பாய்ச்சியதோடு நில்லாமல் முதுகிலும் பாய்ச்சி விட்டு வெற்றி விழா கொண்டாடுவது சரியல்ல” என்கிறாள். “போர் நியதிகளை மீறி சேர மன்னன் முதுகில் புறப் புண் உண்டாகக் காரணமான சோழன் அதற்காக வருத்தம் தெரிவிக்காதது முறையல்ல” என்கிறாள். இரும்பிடர்த்தலையார், பொன்னியைச் சேரரின் கைக்கூலி பெற்றவள் என்கிறார்.

“நன்னெறியார்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் நற்செயல்களைப் போற்றிப் பாடலாம்” என்றார் உருத்திரங்கண்ணனார். இரும்பிடர்த்தலையாரோ, “மன்னரின் வெற்றிக்குக் களங்கம் கற்பித்ததோடு, புகழை மாசு படச் செய்த பெண்ணைத் தண்டிக்க வேண்டும்” என்றார். மன்னன் கரிகாலனோ, “பொன்னி சுமத்திய குற்றச்சாட்டுகள் சரிதானா என்று ஆராய வேண்டும்” என்றான். மேலும், பொன்னியை விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கிறான்.

பொன்னியின் கவிதை, கரிகாலனின் புகழுக்கு மாசு கற்பிப்பதை மனதிற்குள் பாராட்டும் கபட குணம் கொண்ட காளிங்கராயர் இரும்பிடர்த்தலையாருக்கு மேலும் தூபமிட்டு, பொன்னியைத் தண்டிக்கச் சய்வதன் மூலம் மக்கள் மனதில் கரிகாலனைப் பற்றிய தவறான எண்ணங்களைப் பரப்பி மக்களைக் கரிகாலனுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதுடன், மாற்றரசனான பாண்டிய மன்னனுக்கு உதவி செய்து, அவன் துணைக் கொண்டு எப்படியாவது சோழ அரசைக் கைப்பற்றிவிடலாம் என்ற தீய எண்ணம் கொண்டான். காளிங்கராயன் தளபதியிடம், “பொன்னி மன்னன் கரிகாலன் போர் முறையை மீறியது தவறு என்றதைப் பெரிது படுத்தி அவதூறான செய்திகளை மக்களிடையே பரப்ப வேண்டும் என்றும் நாடிழந்த பாண்டிய மன்னனுக்கு உதவி செய்து அவனை மீண்டும் அரசனாக்க வேண்டும்” என்கிறார்.

காளிங்கராயன், இரும்பிடர்த்தலையாரிடம் பொன்னி அரசபையில் நடந்து கொண்ட முறை தவறு என்றும், அவளைச் சோழன் சிரச்சேதம் செய்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். மன்னன் அவளை விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தது முறையன்று என்று மேலும் சொல்கிறார். “மந்திரியாகிய இரும்பிடர்த்தலயார் இதனை மன்னனுக்கு எடுத்துக் கூற வேண்டும்” என்கிறார். இரும்பிடர்த்தலையார், “மன்னன் கரிகாலன் எதனையும் ஆராய்ந்து முடிவு எடுப்பவன், அவன் முடிவு சரியாகத்தான் இருக்கும்” என்கிறார். இரும்பிடர்த்தலையார் மன்னன் கரிகாலனிடம், அவன் பொன்னியிடம் நடந்து கொண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

“பொன்னி சோழனின் வெற்றியை இகழ்ந்து பேசுகிறாள், சோழப் பேரரசின் தன்மானத்தைத் தட்டிப் பார்க்கிறாள், அவளைப் போய் அரச மரியாதையுடன் அரச விடுதியில் தங்க வைத்தது முறையல்ல” என்கிறார். மன்னன் கரிகாலனோ, பொன்னியின் பாதுகாப்பை எண்ணியே அவளை அரச விடுதியில் தங்க வைத்ததாகக் கூறுகிறான். மேலும், “பெண் புலவரைத் தீர விசாரிக்காமல் தண்டித்து விட்டார்கள் என்று பிறர் பழி சொல்லக் கூடாது” என்று கூறுகிறான்.

காரிகாலன் மனைவியான வேண்மாள் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவள். பெண் புலவரான பொன்னி மன்னன் கரிகாலனை அவன் செயல் குறித்து இகழ்ந்ததை அறிந்து கோபமடைகிறாள். “புறப்புண்ணுக்கு நாணி உயிர் துறந்த சேரன் சோழனை விட உயர்ந்தவன்” என்ற பான்னியைத் தண்டிக்காதது தவறு என்கிறாள். மன்னனோ, தீர விசாரித்த பின்னரே தண்டிக்க முடியும் என்று கூறினான். அதற்கு அரசியும், “பொன்னியின் தைரியத்திற்குப் பின்னணி இருக்க வேண்டும்” என்கிறாள். சோழன் அரசியிடம், தான் மாறு வேடம் அணிந்து பொன்னியைப் பற்றிய உண்மைகளைக் கண்டறியப் போவதாகக் கூறினான்.

மாறு வேடத்தில் சென்ற மன்னன், பொன்னியை விருந்தினர் மாளிகையில் சந்திக்கிறான். அங்கு தான் ஒரு துறவி என்றும், மன்னன் கரிகாலன் தன்னை விடுதியில் தங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறுகிறான். தனக்கு அமைதியான இடம் தேவைப்படுவதால் அவளின் (பொன்னியின்) அனுமதியோடு அங்கு தங்க எண்ணியத¡கக் கூறுகிறான். பொன்னியோ தனக்குத் தந்தையைப் போல் உள்ள அவர் அங்குத் தங்குவது தனக்கு நல்ல துணையாக இருக்குமென்கிறாள். மன்னன் கரிகாலன் வீரத்தாலும், துணிவாலும் இமயம் சென்று புலிக்கொடி பொறித்தார் என்று அவள் தொடர்ந்து பேசலானாள். பொன்னி, வெண்ணிப் பறந்தலையில் நடந்த போரில் கரிகாலன் விதிமுறைகளை மீறியதைத் தான் சுட்டிக் காட்டியதால் மன்னர் தற்காலிகமாக விருந்தினர் மண்டபத்தில் தங்க வைத்துள்ளார், விரைவில் தண்டனை கிடைக்கும். வீரத்தையும் மானத்தையும் போற்றிய சேரனின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணியதாகவும், தன் குறிக்கோளை நிறவேற்றி விட்டதாகவும் கூறுகிறாள். பொன்னி துறவியிடம், தான் சேர மன்னனின் காதலி என்கிறாள். தன்னுடைய காதலனின் புறப்புண்ணால் ஏற்பட்ட இழுக்கை நீக்கி அவரின் புகழை கவிதையால் நிலைநாட்டியதாகக் கூறுகிறார்.

துறவி பொன்னியிடம், “சேர மன்னனோடு உறவு ஏற்பட்டது எப்படி?” என்று வினவுகிறார். அதற்கு பொன்னியும், தன்னுடைய அத்தையின் கணவர் சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர். சேர நாட்டிலுள்ள ஒரு கோவில் திருப்பணிக்காகக் குடும்பத்தோடு சென்றவர். அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அவர்கள் வாழும் ஊர் வஞ்சி மாநகரின் எல்லையை ஒட்டிய சிற்றூராகும். ஒரு சமயம் தன் அத்தை சேர நாட்டில் நடக்கும் அறுவடைத் திருநாளுக்குத் தன்னையும், தன் தந்தையையும் வரச்சொல்லி ஆள் அனுப்பியதாகவும், தானும், தன் தந்தையும் அங்குச் சென்றதாகக் கூறினாள்.

பொன்னி, “சேர நாடு வில் வளம் மிகுந்தது. அதோடு மலைவளம், கனிவளம், நத¢வளம், நிலவளம் முதலிய எல்லா வளமும் நிறைந்தது” என்கிறாள். மேலும், சேர நாடு இயற்கை வளம் மிக்க நாடு என்று போற்றுகிறாள். அவ்வேளையில் மாறுவேடத்தில் அவ்வழியே பெருஞ்சேரலாதனும், அமைச்சரும் வருகின்றனர். பொன்னியும் அவளுடைய தகப்பனும் அவர்களைக் கண்டு கள்வர்கள¡க இருப்பர் என்று எண்ணி ஒளிந்து கொள்கின்றனர். இதையறிந்து இருவரும் குதிரையை விட்டு இறங்கி வருகின்றனர். வெளியே வருமாறு கட்டளையிட பொன்னியும் அவள் தந்தையும் வெளியே வருகின்றனர். பொன்னியின் அழகைக் கண்டு பெருஞ்சேரலாதனும், பெருஞ்சேரலாதனின் அழகைக் கண்டு பொன்னியும் மயங்குகின்றனர். மன்னன் அவர்களை நோக்கி, “சேர நாடு வந்த காரணம்” குறித்து வினவ, அவர்களும், “உழவர் திருநாளைக் காண வந்ததாக” கூறுகின்றனர்.

குதிரையில் வந்த அவ்விருவரையும் கள்வர்கள் என்று எண்ணிவிட்டதாகப் பான்னி கூறினாள். அதைக்கேட்ட அமைச்சரும் அரசரும் வீரர்களாகிய தங்களைக் கள்வர்கள் என்று நினைத்தது குற்றம் என்றும் இவர்கள் மீது வழக்கு பதிந்து மன்னர் முன் நிறுத்தப் போவதாகவும் கூறினர். பொன்னி பருவ வயதாய் இருப்பதால், அபராதத் தொகையைக் கொடுத்து விட்டு போய்விடலாம். அரண்மனைக்குச் சென்றால் பிறர் முன் நிறுத்த வேண்டி வரும் என்றனர். பொன்னியும் பிரான்மலைக் கள்வர்கள், தங்கள் பணத்தை வரும் வழியில் கொள்ளையடித்து விட்டதாகவும், தங்களிடம் அபராதம் செலுத்த ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறாள்.

மன்னன் பொன்னி கூறியதைக் கேட்டு, அவர்கள் தற்போது ஓட்டாண்டிகள் போலும் என்கிறான். பொன்னியோ, “தன்னிடம் வெள்ளத்தால் போகாததும் வெந்தணலால் வேகாததும், கள்வர்கள¡ல் திருட முடியாத பெருஞ்செல்வம் உள்ளதென்று” கூறியவாறே சுவடி மூட்டையைத் தருகிறாள். “பொன்னி கூறிய அளவிற்குத் தகுதி உடையதா சுவடிகள்” என்று ஆராய்ந்து நாளை மறுநாள் தீர்ப்பு கூறுவதாகக் கூறினான் மாறுவேடத்தில் வந்த சேரன்.

பெருஞ்சேரலாதன் பொன்னியின் கவிதையை வாசித்து மகிழ்ந்தான். பொன்னியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். மன்னனாகச் செல்வதை விட மாறுவேடமே சிறந்தது என்று முடிவெடுக்கிறான். மன்னன் பொன்னியை மணம் புரிய எண்ணியதை அறிந்த அமைச்சர், “பொன்னி அரச குலப் பெண்ணில்லையே, இதனால் மன்னர் புகழுக்கு இழுக்கு ஏற்படாதா?” என்று கேட்கிறார். மன்னனோ, நாட்டை ஆள்வது அரசனின் கடமை. தன்னுடைய அமைச்சரைப் போல் கடமை தவறாதவர் இருக்கும் வர தனக்குக் கவலை இல்லை” என்கிறார்.

பொன்னி தான் தங்கியிருக்கும் சிற்றூரின் அழகை இரசித்துக்கொண்டிருக்கிறாள். மாறுவேடத்தில் வந்த சேரனிடம் தன்னுடைய கவிதைச் சுவடிகளைக் கேட்க, சேரனும், “அவளுடைய கவிதையைச் சேர மன்னன் பெரிதும் குறை கூறினார்” என்று சொன்னான். அது கேட்ட பொன்னி, “சேர மன்னனைச் சந்திக்க முடியுமா” என்று கேட்க சேரனும், “மன்னருக்குப் பெண்களே பிடிக்காது. மேலும் அவர்களைச் சந்திக்க விரும்புவதில்லை” என்கிறான். பொன்னியிடம் அவளுடைய கவிதைச் சுவடிகளோடு தன்னுடைய உள்ளத்தையும் ஒப்படைத்தான். பொன்னியின் மனமும் அவனை விரும்புகிறது. இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவகளாயிற்றே என்று பொன்னி கூற, சேரனும் முறையாக அவளுடைய தந்தையிடம் பெண் கேட்டு மணம் புரிவதாக வாக்களித்தான். பொன்னி சேரன் மீது அளவுகடந்த அன்பைச் செலுத்துகிறாள். பொன்னியின் தந்தைக்கும் இவர்களது அன்பு தெரிய வருகிறது. முறையாகப் பெண் கேட்டு திருமணம் புரிந்து கொள்வதாகச் சேர கூற, பொன்னியின் தந்தை பெரிதும் மகிழ்வடைகிறார்.

[பொன்னி துறவி வேடத்தில் இருக்கும் கரிகாலனிடம் தன் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்]

பொன்னி தன் தந்தையுடன் சொந்த நாட்டிற்குத் திரும்பும் நாள் வந்தது. காதலனைப் பிரிய முடியாத தவிப்போடு பிரிகிறாள். பொன்னியின் காதலனான சேரன் ஓர் ஆண்டிற்குள் மீண்டும் வருவதாகக் கூறிப் பிரிகிறான். சேர மன்னன் சோழ நாட்டின் மீது படையெடுத்ததை அறிந்து சோழ நாட்டின் பற்றின் காரணமாய்ச் சேரனைச் சந்திக்கச் செல்கிறாள். பொன்னி இதற்கிடையே பொன்னியின் காதலரிடமிருந்து ஓர் ஓலை வந்தது. அதில் சோழ மன்னன் மண்வெறி கொண்டு சேர நாட்டின் மீது போர் தொடுப்பதாகவும், அதனால் தாய்நாட்டைக் காக்கப் போவதாகவும், போர் முடிந்த பிறகே அவளைச் சந்திக்க இயலும் என்று எழுதப்பட்டிருந்தது. தன் நாட்டு மன்னன் சோழன் கரிகாலன மண்வெறி கொண்டவர் என்று எழுதி இருந்தது. அவளுக்குச் சினத்தை ஊட்டியது. ஆனால் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்கும் பொழுது கரிகாலன் மண்வெறி கொண்டு தான் சேர நாட்டின் மீது போர் தொடுத்தாரோ என்று எண்ணச்செய்தது. ஆனால் உண்மையில் கரிகாலன் சிவபெருமானுக்கு அடுத்தபடியாகச் சாத்தனை வணங்குபவர். அந்த கோயிலைச் சேர நாட்டின் நீலி மலை என்னும் சபரிமலையில் கட்டியிருந்தனர். சாத்தன் கோயில் தனது ஆளுகைக்குள் இருக்க வேண்டும்; அதனைச் சேரனிடம் கேட்டுப்பெறுவது மதிப்புக் குறைவான செயல் என்று கரிகாலன் நினைத்தான். அந்த கோயிலைக் கைப்பற்றவே சோழ மன்னன் சேர ந¡ட்டின் மீது படையெடுத்தான். இதுதான் வெண்ணிப் பறந்தலையில் போர் நடந்ததற்குக் காரணம். இந்த உண்மை கரிகாலனின் நெஞ்சிற்கு மட்டும் தெரியும்.

துறவி வேடத்தில் இருந்த கரிகாலன் கூறியவற்றைக் கேட்ட பொன்னி உண்மை என்னவென்று அறிகிறாள். பொன்னி, துறவியிடம் (சோழன்) இந்த உண்மையை அறியாததால்தான், தன் காதலன் மீது வெறுப்பை வளர்க்க நேர்ந்தது என்கிறாள். பெருஞ்சேரலாதன் கூடாரத்திற்கு வந்த அவள், மன்னனைச் சந்திக்க விரும்பவதாகக் கூறுகிறாள். மன்னன் பொன்னியைச் சந்திக்கிறான். வந்த காரணத்தை வினவ பொன்னியும் சோழ நாட்டிற்கு படையோடு சேரன் வந்த காரணத்தை வினவுகிறாள். மன்னன் சேரன், பொன்னியிடம் “மண்வெறி கொண்டு சேரநாட்டைக் கைப்பற்ற நினைத்துப் போர் முரசு கொட்டியது சோழன் கரிகாலன்” என்கிறான். சேரன் தான் சோழ நாட்டிற்கு வந்தது பெண் கட்டுத்தான், போரிட அல்ல, என்கிறான். தன்னுடைய காதலன் தான் சேர மன்னன் என்று அறிந்ததும் பொன்னி பெரிதும் வியப்படைகிறாள். இந்த போர் தன் விதியால் விளைந்த போர் என்று பொன்னி அழுகிறாள்.
பொன்னியின் அப்பாவும் தன் மகளை விரும்புவது சேர மன்னன் என்று அறிந்து திகைக்கிறார். போரில் சர மன்னன் வீழ்ந்து விட்டதைக் கூறுகிறார். பெருஞ்சேரலாதன் நெஞ்சிலும் முதுகிலும் புண்ணோடு போர்க்கலத்தில் வடக்கு நோக்கிய படி அமர்ந்திருக்கிறான். பொன்னி கதறித் துடிக்கிறாள். பொன்னி காதலனான சேரனிடம், மாமன்னன் கரிகாலன் நின்று வாழ்த்த திருமணம் நடைபெறவேண்டும் என்றெல்லாம் எண்ணியதாகக் கூறி கண்ணீர் வடிக்கிறாள். குங்குமத்தை எடுத்து பொன்னியின் நெற்றியில் திலகமிட்டு "சேர மன்னன் மானங்காக்க உயிர் நீத்தான் என்று பகைவரும் அறிய வேண்டும்" என்று கூறி உயிர் விடுகிறான். மகள் வாழ்வு வீணாயிற்றே என்ற துன்பத்தில் அவளுடைய அப்பாவும் உயிர் விடுகிறார்.
கரிகாலன் அரசபையில் பொன்னியின் வழக்கு தொடர்கிறது. அரசவையில் நடப்பது கவிதையை பற்றிய வழக்கு. முறையாக வாழ்க்கை நடத்துமாறு பொன்னி கூறுகிறாள். “சேர மன்னனைச் சோழ மன்னன் அரசவையில் புகழ்ந்து பாடியது குற்றம்” என்றார் தளபதி. “பொன்னியோ போர்க்கலத்தில் தான் கண்ட காட்சியைக் கவிதையாக பாடியது குற்றமாகாது” என்கிறாள். அமைச்சரும் வெற்றி பெற்ற வேந்தனைத் தூற்றியும், தோற்றவனைப் போற்றுவதும் குற்றமாகக் கருதப்படுகிறது என்கிறார்.
காளிங்கராயனும், தளபதியும் மன்னன் கரிகாலனைப் தனிமையில் அவதூறாகப் பேசுகின்றனர். மன்னன் பொன்னியின் மீது ஆசை கொண்டுள்ளார், என்று புறம் பேசுகின்றனர். பொன்னியின் விவகாரத்தைப் பெரிது படுத்தி மன்னனின் புகழுக்கு மாசு கற்பிக்கக் திட்டமிடுகின்றனர்.

மன்னன் கரிகாலனைப் பார்க்க வந்ததாகக்கூறிய தளபதி, தான் ரகசியமாக கொண்டு வந்த ஓலையைக் கீழே கண்டெடுத்தாகக் கூறி அதனை அரசியிடம் ஒப்படைக்கின்றார். அந்த ஓலையில் பொன்னி, மன்னன் கரிகாலனை விரும்புவதாகவும் அவர்களுடைய தொடர்பு குறித்தும் எழுதப்பட்டிருந்தது. வேண்மாளும் மனதிற்குள் குழப்பமடைகிறாள். அரசி இரும்பிடர்தலையார¢டம் ஓலை விசயமாகப் பேசுகிறாள். மந்திரியாரோ மன்னன் நேர்மைமிக்கவன், ஒழுக்கமானவன், அவசர முடிவு வேண்டாம் என்று வேண்மாளை அமைதிப்படுத்துகிறார். கரிகாலன் இரும்பிடர்த்தலையரிடம் “ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு” என்கிறான். வேண்மாள் அவன் நேர்மை குறித்து கேட்டபோது தன் நெஞ்சிற்கும் நாவிற்கும் தொடர்பு உண்டு; தான் மட்டுமல்ல, தன் நாட்டு மக்களும் அந்த பண்பினைக் கொண்டிருப்பதை விரும்புதாகவும் கரிகாலன் கூறுகிறான். அரசி தந்த ஓலையைப் பார்த்து, இது தன் மீது சுமத்தும் வீண்பழி என்கிறான். மனைவி தன்னைக் களங்கமுள்ளவன் என்று எண்ணுவதை எண்ணி வருந்தினான். இவ்வேளையில் பொன்னி மன்னனுக்குக் கொடுத்தனுப்பியதாக ஓலை ஒன்றினை வேலைக்காரன் கொடுக்கிறான். முதல் ஓலைக்கும் இரண்டாவது ஓலைக்கும் உள்ள கையெழுத்து வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறான் மன்னன். “குற்றவாளிய உடனே கண்டுபிடிக்க வேண்டும்” என்கிறான் மன்னன்.

காளிங்கராயன் தளபதியிடம் தங்களுடைய திட்டம் பொன்னி எழுதிய ஓலையால் கெட்டுவிட்டது. எனவே, பொன்னியைக் கொன்று பழியைச் சோழ மன்னன் கரிகாலன் மீது சுமத்திவிடலாம் என்று திட்டமிடுகின்றனர். கார்கோடன் மூலம் பொன்னிக்கு உணவில் விஷம் வைத்து கொல்லச் சதித்திட்டம் போடுகின்றனர். மாறு வேடத்தில் வந்த மன்னன் சோழன்; கரிகாலன், காளிங்கராயனும் பாண்டிய மன்னனின் ஒற்றனும் சதித்திட்டம் போடுவதை மறைந்திருந்து கேட்கிறான். ஒற்றன் காளிங்கராயனிடம் ஓலையைக் கொடுக்கிறான். காளிங்கராயரிடமிருந்து ஓலையைக் கவர எண்ணிய சோழன், காளிங்கராயன் மீது மோதி அவனுக்குத் தெரியாமல் அவன் இடுப்பில் சொருகியிருந்த பாண்டிய மன்னரின் ஓலையை எடுத்துவிடுகிறான். மாறுவேடத்தில் இருந்த மன்னனைப் பார்த்து திட்டிவிட்டு அவ்விடத்தை விட்டுப் போகிறான் காளிங்கராயன். பாண்டிய மன்னரின் இரகசியங்களையும், காளிங்கராயரின் சதியயும் அறிந்த சோழன் உடனே அவர்களின் சதியை முறியடிக்க அடுத்த நடவடிக்கையை எடுக்கிறான்.

கார்கோடன் கோட்டை வாயில் காப்பாளர்களிடம் பொன்னியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைக் காளிங்கராயன் தனக்கு அளித்திருப்பதாகக் கூறுகிறான். கார்கோடனால் பொன்னிக்கு ஆபத்து நேரிடலாம் என்று வாயில் காப்பாளர்கள் அஞ்சுகிறார்கள். தங்களின் அச்சத்தைத் துறவி வேடத்தில் வந்த கரிகாலனிடம் கூறுகின்றனர். மன்னனும் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறான். பொன்ன¢யைக் கொல்ல விஷம் கலந்த உணவை எடுத்துச் சொல்கிறான் கார்கோடன். துறவி வேடத்தில் இருந்த மன்னன், கார்கோடன் கையிலிருந்த உணவைப் பறித்து, பறவைகளுக்கு இட; அவை துடிதுடித்து இறக்கின்றன. கார்கோடன் அரச காவலர்கள¡ல் கைது செய்யப்படுகிறான். “இதற்கெல்லாம் காரண கர்த்த காளிங்கராயரே” என்று கார்கோடன் கூறுகிறான்.

கார்கோடன் அரச காவலர்களால் கைது செய்யப்பட்டதைக் காளிங்கராயன் அறிகிறான். காளிங்கராயன் தளபதியிடம் சதித்திட்டம் அம்பலமாகிவிட்டதைக் கூறி வருந்துகிறான். காளிங்கராயர் தன்னுடைய திட்டம் தோல்வியானதற்குக் காரணமான துறவியைக் கொல்ல வேங்கையன் உதவியை நாடுகிறான். இதற்கிடையே பொன்னிக்குத் தீர்ப்பு வழங்கும் நாளும் வருகிறது. பொன்னி தமிழ் புலமை பெற்றவர் என்பதால் அவரைக் கெளரவம¡க நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது. நன்றி கூறிய பொன்னி; “விருந்தினர் விடுதி தனக்குப் பாதுகாப்பான இடமல்ல” என்கிறாள். “விடுதியின் மேலாளர்” என்று கூறிக்கொண்டு கார்கோடன் அங்கிருந்த துறவிக்கு விஷ உணவைக் கொடுத்து கொல்ல முயன்றதாகவும், துறவியார் அவனை அரச வீரர்களிடம் ஒப்படைத்ததாகவும் கூறுகிறாள்.

கார்கோடனைக் காவலர்களிடம் பிடித்துக் கொடுத்தது துறவி என்று தெரிந்து கொண்ட பெரிய மனிதர் (காளிங்கராயர்) வேங்கையன் என்ற முரடனிடம் துறவியைக் கொன்றுவிடுமாறு கூறியிருக்கிறார். நான் துறவியிடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்ததால், துறவி காப்பாற்றப்பட்டார். அதனால்தான் அரச விடுதியை விட சிறைச்சாலை சிறப்பானது" என்று தான் கருதுவதாக கூறினாள். இவ்வேளையில் மன்னன் கரிகாலன், காளிங்கராயனை நோக்கி, நாட்டைக் கவ¢ழ்க்க காளிங்கராயர் செய்த சதிகளை அம்பலப்படுத்துகிறார். "பொருளுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு பாண்டிய மன்னனிடம் இராணுவ இரகசியங்களைக் கூறியது; பொன்னியைக் கொல்ல முயன்றது; துறவியைக் கொல்ல வேங்கையனை ஏவியது; அனைத்தும் காளிங்கராயனின் செயல்களே" என்கிறார். மேலும், துறவியாக வந்தது தானே என்று கூற காளிங்கராயன் செய்வதறியாது திகைக்கிறார். இரகசிய ஒற்றர்கள் வ¡யிலாக காளிங்கராயன் செய்த சதிகள் தனக்குத் தெரியவந்தது என்கிறான் சோழன். மேலும், கார்கோடனும், வேங்கையனும் காளிங்கராயன் செய்த சதிகளையெல்லாம் கூறிவிட்டாதாகச் சொல்கிறான். பாண்டிய மன்னனைச் சிறை செய்ததன் மூலம் அவர்களின் சதிச்செயலை முறியடித்துவிட்டதாகக் கூறுகிறான்.

“பொன்னி மறைந்து விட்ட சேரனின் மானசீகமான பட்டத்து அரசி” என்கிறான். பொன்னியின் துயரக்கதையை அவள் வாயிலாக அறிந்ததாகவும், அவளுடைய துயரத்திற்குத் தானே காரணமாகிவிட்டதை எண்ணி வருந்துவதாகவும் கூறுகிறான். சேரனின் மானத்தை நிலை நிறுத்தியதற்காகப் பொன்னியை பாராட்டுவதாகக் கரிகாலன் கூறுகிறான். பொன்னி சுதந்திரப் பறவையாகச் செல்லவும் அனுமதிப்பதாகவும் கூறுகிறான். சேரனின் மனைவி என்ற அந்தஸ்தோடு பூம்புகாரிலேயே வாழ எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாகக் கூறுகிறான் மன்னன். மன்னனின் அன்பிற்கு நன்றி கூறிய பொன்னி, தான் பிறந்த ஊரும், தன்னுடைய காதலனாகிய சேரன் உயிர் துறந்த ஊருமாகிய வெண்ணிப் பறந்தலையிலேயே வாழ விரும்பவதாகக் கூறி அனைவரிடமிருந்தும் விடுதலை பெறுகிறாள்.


(இக்கதைச்சுருக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியர் திரு.வடிவேலு வைத்திலிங்கம், லூனாஸ் இடைநிலைப்பள்ளி, லூனாஸ், கெடா) - நன்றி

2 comments:

  1. மிகவும் பயனுள்ள இந்த வலைப்பதிவு தமிழ் இலக்க்கிய ஆசிரியர்கள், தமிழ் இலக்கிய தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பது என்கிற எண்ணத்தில் என் வலைபதிவில் இந்த பக்கத்தை இணத்துள்ளேன். உங்கள் சேவை தொடர என் அன்பான நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. லோகப்பிரியா த/பெ செல்வம்June 29, 2012 at 5:13 PM

    வணக்கம். பெர்லிஸ் மாநிலத்தை சேர்ந்த மாணவி நான். இங்கு தமிழ் புத்தகங்கள் கிடைப்பது அரிது. சுயமாக இலக்கியத்தை படிக்கும் எனக்கு இந்த கதை சுருக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், எனக்கு கை கொடுபீர்கள் என்று பெரிதும் நம்புகிறேன்.

    ReplyDelete