Wednesday, February 18, 2009

பொன் விலங்கு ஒரு கண்ணணோட்டம்

இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம்
இந்திய ஆய்வியல் துறை, மலாயா பல்கலைக்கழகம்


நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இரண்டு பெரிய நெறிகள் வளர்ந்து வருவதைக் காண முடிகிறது. ஒன்று, இன்று பரவலாகப் பலரையும் ஈர்த்துள்ள வெகுசன கலாச்சார இலக்கியம். மற்றொன்று இலக்கியம் பற்றிய சிந்தனையாளர்கள் வரவேற்கும் காத்திரமான இலக்கியம் ஆகும். வெகு சன கலாச்சார இலக்கியம் என்று பார்க்கின்ற வேளையில் அது ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், பாக்கியா போன்ற இதழ்கள் வளர்தெடுக்கும் இலக்கியமாகும். இதில் பெரும்பாலும் பெண்கள் பற்றிய மோசமான வருணனைகளுடன் வக்கிர உணர்வுகளைத் தூண்டும் செய்திகளைக் கொண்டிருக்கும் படைப்புகளே அதிகம் இடம் பெற்றிருக்கும். மாறாக, காத்திரமான இலக்கியம் என்பது சமூக சிந்தனையுடன் இலக்கியத்தைக் காட்டுவதுடன் உண்மையான வாழ்வியலைப் பதிவு செய்து சமூகத்தின் உண்மையான வரலாற்றைப் போற்றும் இலக்கியமாகத் திகழ்கின்றது.

அவ்வகையில், பொன்விலங்கு நாவல் வெகுசன கலாச்சார இலக்கியத்திலிருந்து விடுபட்டு ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் இலக்கிய வடிவமாக செயல்படுகின்றது. ஒரு சமுதாயத்தின் படப்பிடிப்பாக இது அமையாமல் போனாலும் ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற இலட்சிய உணர்வுகளைப் பதியமிடும் ஒரு நல்ல நாவலாக இது விளங்குகின்றது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பல்வேறு செல்நெறிகள் பல காலக்கட்டங்களில் தனது செல்வாக்கினை நிறுவியுள்ளன. அவ்வகையில் அறுபதுகளில் திராவிட இயக்கங்களில் எழுச்சி நல்ல தமிழையும் உயர்ந்த இலக்கியங்களைக் கொண்ட இளைஞர் சமுதாயத்தையும் காண விழைந்தது. அவ்வகையில் நாவல்களின் கருக்களும் பாத்திரங்களும் அவ்வுணர்வுகளுக்கு வடிவம் காண முனைந்தன. அக்காலக்கட்டத்து நாவலாசிரியர்களும் குறிப்பாக, நா.பார்த்தசாரதி போன்றே¡ர் மிகவும் ஈடுபாட்டுடன் நாவல் படைக்கத் தொடங்கினர். இதில் மறைமலையடிகள் தோற்றுவித்த ‘தூயதமிழ் இயக்கமும்’ தன் பங்கினை வழங்கத் தயங்கவில்லை. அவ்வகையில் அமையப்பெற்ற நாவலே நா.பார்த்தசாரதி படைத்திருக்கும் ‘பொன்விலங்கு’ என்ற இந்நாவல்.

மல்லிகைப் பந்தல் என்ற ஊரில் பூபதி நடத்திவரும் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்ற வருகிறான் சத்தியமூர்த்தி என்ற இளைஞன். நல்ல தமிழறிவும் இலட்சிய வேட்கையும் கொண்ட இளைஞனாக உள்ளான் சத்தியமூர்த்தி. அனைவராலும் போற்றப்படுகிறான். பெண்களால் இரசிக்கப்படுவதுடன் காதலிக்கவும் படுகிறான். அதே வேளை அவனுடைய விருப்பம், பலராலும் விரும்பப்பட்டு அங்கிகரிக்க முடியாத சூழலுக்கு உள்ளாகியிருக்கும் நாட்டியக்காரி மோகினியிடம் திரும்புகிறது. கல்லூரியில் வழக்கம்போல் மாணவர்களின் கலாட்டாவும் கேலியும் கிண்டலும் போராட்டமும் வலுப்பெற அதையும் அடக்கி நல்வழிப்படுத்துகிறான் சத்தியமூர்த்தி. சுயநலவாதிகளினால் அவனுடைய காதல் வெற்றிபெறாமல் போக இறுதியில் ஜெர்மனிக்குப் பணி மேற்கொள்ளப்போகிறான். இந்நாவலை சத்தியமூர்த்தி என்ற இலட்சிய இளைஞனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டே படைத்துள்ளார் நா.பார்த்தசாரதி.

சத்தியமூர்த்தியின் இலக்கிய அறிவும் தமிழின் மேல் அவன் கொண்டுள்ள பற்றும் இந்நாவலில் நன்கு வெளிப்படுகின்றன. அதே வேளையில் மோகினியுடன் அவன் கொண்ட காதல், வெறும் இனக்கவர்ச்சியால் தோன்றியது அன்று. அதற்கும் மேலான ஆளுமையின் அடிப்படையில் அமைந்த காதலாகும். காதல் என்பதால் அன்பும், பண்பும், மரியாதையும், ஆளுமையும் இருக்க வேண்டும் என்பது இதில் தெளிவாகின்றது. சத்தியமூர்த்தி குமரப்பனுடன் கொண்ட உண்மையான நட்பின் வெளிப்பாடும் இந்நாவலில் நன்கு காட்டப்பட்டுள்ளது. அத வேளையில், வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கையல்ல அது கல்லும் முள்ளும் கொண்ட இரணப்படுக்கை என்பதையும் மஞ்சள்பட்டி ஜமிந்தார் புலி கோவிந்தன், கண்ணாயிரம் போன்ற பாத்திரங்கள் வழி நாம் அறிய முடிகின்றது. இத்தகைய சுயநல மனிதர்களின் செயல்களைக் கண்டு அதிர்ந்து போகாமல் போராடி வெற்றிபெற வேண்டும் என்ற அடிநாதத்துடன் இந்நாவலில் குரல் வெளிப்படுகிறது. மகாகவி பாரதியின் கனவான புதுமைப் பெண்ணாக இந்நாவலில் வலம் வருபவள் பாரதி என்ற பாத்திரமாகும். இளம் பெண்களுக்கே உரிய பலவீனங்கள் பலவற்றை இவள் பெற்றிருந்தாலும் சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலுடன் தன் பலம் உணர்ந்து அநியாயத்தை எதிர்த்துத் துணிவுடன் போராடும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளாள். இவ்வாறு இந்நாவலில் வரும் இலட்சியப் பாத்திரங்கள் நமது வாழ்விற்கும் வழிகாட்டுதலாக விளங்கும் என்பது திண்ணம்.

அதை வேளையில், இந்நாவலில் ஆங்காங்கே விரவி வரும் இலக்கியச் சிந்தனைகள் நமது சங்க இலக்கியங்களின் விழுமியங்களை எடுத்துக் கூறும் வண்ணம் உள்ளன. ‘நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!’ என்ற பாடலின் வழி மனிதர்களையும் அவர்களினால் அந்த மண்பெறும் புகழையும் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள பாங்கு சிறக்கிறது. இது போன்றே தீமையும் நன்மையும் பிறர் தருவதனால் வருவதாக நினைப்பது பேதமை; அதைப் போலவே நாம் வருந்துவதற்கும் வருத்தம் தணிவதற்கும் பிறர் காரணமாக அமைவதில்லை’ என்று பொருள் வரும் பாடலான ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா - நோதலும் தணிதலும் அவற்றோரன்ன’ என்பதைப் போன்ற கருத்துகளின் சிந்தனைகள் இந்நாவலில் பல இடங்களில் விரவி வந்துள்ளன. மேலும், ‘கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே’ என்ற விவேகானந்தரின் பொன்மொழியையும் இந்நாவல் தனது அடிக்கருத்தாக கொண்டுள்ளது மிகவும் போற்றத்தக்கதாகும்.

இன்றைய மலேசிய இந்திய சமூகத்தின் பலம் இளையோர்கள்தாம். எனவே, இலட்சிய வேட்கையும் தூரநோக்குச் சிந்தனையும் கொண்ட இளைஞர் படை உருவாக வேண்டியது மிக அவசியமாகும். அவ்வகையில் ‘பொன்விலங்கு’ போன்ற நாவல்கள் இளைஞர்களின் தூய உள்ளங்களில் நல்ல விதைகளை விதைக்க முடியும். இடைநிலைப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பதின்ம வயதில் அறிந்துகொள்ள வேண்டிய உண்மையான காதல் பற்றிய சிந்தனையையும் இளைஞர்கள் கொள்ள வேண்டிய ஒழுக்க வாழ்க்கை பற்றிய முறைகளையும் அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையையும் தமிழ், தமிழ் இலக்கியத்திற்காகச் செய்ய வேண்டிய முயற்சிகளையும் இந்நாவல் வலியுறுத்துகிறது என்ற சொன்னால் அது மிகையன்று. எனவே, இளையோர்களும் இலக்கியவாதிகளும் படித்துப் பயன்பெற வேண்டிய ஓர் உன்னதமான நாவல் நா.பார்த்தசாரதியின் ‘பொன்விலங்கு’ ஆகும்.

4 comments:

  1. காலத்திற்கேற்ற ஒரு முயற்சி. இனி தமிழ் இலக்கியம் பயிலும்/பயிலவிருக்கும் மாணவர்கள் இத்தளத்தின்வழி பயனடைவார்கள் என்பது திண்ணம்.

    வாழ்த்துகளுடன்,
    கி.சதீசு குமார்

    ReplyDelete
  2. எசு.தி.பி.எம் தமிழ் இலக்கிய பாடத்திற்கும் ஒரு வலைத்தளம் உருப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாம். மலேசியாவில் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் இத்தளம் தொடர்ந்து நன்முறையில் பணியாற்ற எனது வாழ்த்துகள்.

    நன்றி.

    அன்புடன்,
    கி.சதீசு குமார்

    ReplyDelete
  3. எசு.தி.பி.எம் தமிழ் இலக்கிய பாடத்திற்கும் இதே வலைத்தளத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

    நன்றி.

    அன்புடன்,
    ரா. சிவா.
    (ஆசிரியர், மாசாய் தமிழ்ப்பள்ளி)

    ReplyDelete
  4. வணக்கம்.

    நான் இன்னும் பொன்விலங்கு புதினத்தைப் படித்துப் பார்க்கவில்லை. இருப்பினும், உங்கள் விமர்சனத்திலிருந்து அது ஒரு எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படம் போலத்தான் இருக்கும் எனத் தெளிவாகவே தோன்றுகின்றது. இக்கால யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட இப்புதினம் எவ்விதத்தில் நம் நாட்டு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

    திரவிடமும் தத்துவமும் பேசி அரசியல் நடத்துபவர்களின் பம்மாத்தையெல்லாம் இன்று நாம் அறிந்த பின்னரும், அவர்களின் கருத்தியலைத் தூக்கிப் பிடிப்பது நம்மை நாமே ஏய்த்துக் கொள்வதற்குச் சமம் என்று எனக்குப் படுகின்றது.

    -இ.வே.

    ReplyDelete