Thursday, April 2, 2009

நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் சிறப்பு

காவிய நாயகி நாடகத்தில் காணப்படும் பெருஞ்சேரலாதனின் சிறப்புகளை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

நாடகாசிரியர் கலைமாமணி இரா.பழனிசாமி கைவண்ணத்தில் மலர்ந்துள்ள காவிய நாயகி எனும் வரலாற்று நாடகத்தில் துணைக்கதைமாந்தராக வலம் வருகிறான் பொருஞ்சேரலாதன். சேரநாட்டின் மன்னனும் இமயவரம்பின் வழித்தோன்றலுமான பெருஞ்சேரலாதன் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்ட ஓர் மன்னனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

சேரநாட்டின் மாமன்னன் பெருஞ்சேரலாதன் தன்மானம் மிக்கவன். வெண்ணிப் பறந்தலைப் போரில் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வாள் முதுகுக்குப் பின் வெளியே வந்து புறப்புண்ணை ஏற்படுத்தி விடுகிறதது. "புறப்புண் ஏற்பட்டும் உயிர் வாழ்கிறான் சேரன்" என மக்கள் அவனைப் பழித்துப் பேசுவார்களே என்று எண்ணுகிறான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போலத் தன்மானத்திற்கு இழுக்கு நேர்ந்த பொழுது வடக்கிருந்து உயிர் துறக்கிறான். இது சேர மன்னனின் தன்மானத்தை வெளிப்படுத்துவதோடு அவனது வீரத்திற்கும் இலக்கணமாகத் திகழ்கிறது.

மேலும், பெருஞ்சேரலாதன் காதலை மதிக்கும் நற்பண்பினனாகவும் திகழ்கிறான். சேர நாட்டின் மன்னனாக இருப்பினும் சாதாரண மண்வினைக் கலைஞர் மகளான பொன்னியின் மீது ஆழ்ந்த காதல் கொள்கிறான். குலத்தைச் சுட்டிக் காட்டி, இவ்வுறவு பொருந்துமா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என அமைச்சர் கேள்வி எழுப்பும் பொழுது உண்மை அன்பு சாதி, மத பேதத்திற்கு அப்பாற்பட்டது என தனது காதலின் மாண்பைப் புலப்படுத்துகிறான். அவளையே மணக்க சித்தமாகவுள்ளான்.

அத்துடன், மக்கள் நலனைப் போற்றும் சிறந்த வேந்தனாகவும் பெருஞ்சேரலாதன் விளங்குகிறான். மாறுவேடம் பூண்டு தன் அமைச்சருடன் சிற்றூர்வரை சென்று அங்கு மக்களின் அறுவடைத் திருநாள் கொண்டாட்டத்தை அறிகிறான். மேலும், தன் ஆட்சியில் மக்கள் குறைவில்லாமல் வாழ வேண்டும் என அரசாட்சி புரிகிறான். ஏழைகள், கல்லாதவர்கள், கள்வர்கள் தன்னாட்சியில் இருக்கக்கூடாது எனப் பாடுபடும் சிறந்த மன்னனாகத் திகழ்கிறான்.

இதனைத் தவிர்த்து, பெருஞ்சேரலாதன் தமிழ்ப்பற்று கொண்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளான். சிற்றூரில் நடைபெறும் அறுவடைத் திருநாளைக் கண்டு களிக்கச் செல்லும் வழியில் மக்கள் பேசுகின்ற மொழியில் மொழிக்கலப்பு இருப்பதைக் கண்டு அமைச்சரோடு உரையாடுகிறான். வடமொழி மந்திரமொழியாகவும் தமிழை உயிர் காக்கும் மொழியாகவும் வளர்க்க வேண்டுமெனக் கூறுகிறான்.

பெருஞ்சேரலாதன் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் சிறந்த பண்பையும் தன்னகத்தே கொண்டுள்ளான். ஓர் ஆண்டிற்குள் பொன்னியைப் பெண் கேட்டு வந்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறான். அவ்வகையில் தான் இறக்கும் தருவாயிலும், மருதவாணர் முன்னிலையில் பொன்னியின் நெற்றியில் திலகமிட்டுத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்ட பிறகே உயிர் துறக்கிறான்.

இதுமட்டுமல்லாது, வாரி வழங்கும் வள்ளலாகவும் பெருஞ்சேரலாதன் திகழ்கிறான். மக்கள் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அறுவடைத் திருநாளான ஆவணித் திருவோணத்தை முன்னிட்டு நாள்தோறும் தான் துயிலெழ இனிமையாகப் பாடும் பாணர்களுக்கு ஆளுக்கு ஆயிரம் பொற்காசுகளும், அரண்மனை வீரர்களுக்கும் பணியாளர்களுக்கும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பரிசளிக்கவும் அமைச்சருக்கு உத்தரவிடுகிறான்.

ஆகவே, துணைக் கதைமாந்தராகச் சேரன் பெருஞ்சேரலாதன் படைக்கப்பட்டிருந்தாலும் காவிய நாயகியாக வலம் வரும் பொன்னிக்கு இவன்தான் நாயகன்; தன்மான நாயகன்.



(மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

1 comment: