Thursday, March 26, 2009

நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - மோகினியின் பாத்திரப்படைப்பு

மோகினியின் பாதிரப்படைப்பை ஆராய்க.

தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல் சுவைப்படச் சொல்கிறது. இதில் துணைக்கதைப்பாத்திரமாக வலம் வரும் மோகினி கதையின் திருப்புமுனைக்கும் நாவலாசிரியரின் நோக்கத்தை வெற்றிப் பெறச் செய்வதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளாள்.

தாசி குலத்தில் பிறந்து, பணத்தாசைமிக்க தாய் முத்தழகம்மாளின் பிடியில் வாழும் பெண்ணாக நாவலாசிரியர் மோகினியை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். வீணை வாசிப்பதிலும் பரதக் கலையிலும் உயர்ந்த கலைத்திறனை மோகினி கொண்டிருக்கிறாள். ‘சேற்றில் முளைத்த செந்தாமரை போல’ கணிகையர் குலப் பொண்ணாக இருந்தாலும் தூய்மையையும் ஒழுக்கத்தையுமே உயிர்மூச்சாகக் கொள்ளும் பெண்ணாக மோகினி படைக்கப்பட்டுள்ளாள். எந்நிலையிலும் தன் கற்பு நெறிக்குக் களங்கம் வரா வண்ணம் தன்னத் தற்காத்துக்கொள்கிறாள். ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்ற கொள்கையில் உறுதி கொண்ட மோகினி ஜமீந்தாரின் தீய நோக்கத்திற்கு இணங்காமல், இறுதியில் தன் கற்புக்காகவே உயிரை மாய்த்துக் கொள்கிறாள். மோகினி மாதவியைப் போல கற்புக்கரசியாகவே மிளிர்கிறாள்.

மேலும், பொருட்செல்வத்திற்கும் பகட்டுக்கும் மயங்காத பொண்ணாக நாவலாசிரியர் மோகினியைப் படைத்துள்ளார். கணாயிரத்துடன் கூட்டுச்சேர்ந்து அவளது அம்மா முத்தழகம்மாள் தனது பணத்தாசையில் போகினியின் அழகையும் கலைத்திறனையும் மூலதனமாக வைத்து நடனம், விளம்ரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழுகுதல் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கிறாள். ஆனால், மோகினியோ பண்பாடுக்கு முரணான செயலைச் செய்ய என்றுமே இசையவில்லை. உதாரணமாகக் கூந்தல் தைல விளம்பரத்தின் போது மெல்லிய சேலை அணிய வற்புறுத்தப்பட்டபோது அதை வீசி எறிந்து தனது மறுப்பை வெளிப்படுத்துகிறாள். கிஞ்சிற்றும் பணத்தாசை இல்லாத மோகினியின் இப்பண்பே மஞ்சள் பட்டி ஜமீந்தார் போன்ற பணக்காரர்களின் உறவை வெறுக்கத் தூண்டுகிறது.

இதனைத் தவிர்த்து, தூய்மையான காதலைக் கொண்ட பெண்ணாகவும் மோகினி படைக்கபட்டுள்ளாள். பொருளுக்காக காதலை விலைபேசும் இவ்வுலகில் தனது ஆட்படுத்தும் அன்பினால் சத்தியமூர்த்தியின் மனதில் நித்திய சுமங்கலியாகவே வாழும் பேறு பெற்றாள். “நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும் அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்” என்ற மோகினியின் கூற்று வெறும் வாய்ஜாலமாக அல்லாமல் தன் கற்புக்கு ஜமீந்தாரால் களங்கம் வரும் வேளையில் உயிரையே மாய்த்துக் கொள்ளும்போதுதான் எத்தகைய ஆழமான அன்பின் வெளிபாடு என்பதை நாவலாசிரியர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருக்கும் சத்தியமூர்த்திக்கு மோகினி சளைத்தாவள் அல்ல என்பதை அவளது பாத்திரப்படைப்பின் மூலம் நாம் தெள்ளத்தெளிவாக உணரலாம். கலைத்துறையில் தரமான படைப்புகளைக் கொடுத்துதப் புகழ் எய்தவே மோகினி மனக்கோட்டை கட்டுகிறாள். எனவேதான் குத்துவிளக்கு பத்திரிக்கைக்கான பேட்டியின்போது “என்னுடைய கலையில் பரிபூரணமான திறமை எதுவோ அதை அடைவதுதான் என்னுடைய உயர்ந்த சாதனையாக இருக்க முடியும்” என்றாள்.

அத்துடன், திடமான மனப்பான்மையும் மோகினியிடத்தில் காணமுடிகிறது. சத்தியமூர்த்திதான் தன் கணவன் என்பதில் இறுதிவரை மாறாத கொள்கை கொண்டதிலிருந்து அவள் எடுக்கின்ற முடிவில் உறுதியாக இருப்பதை மெய்ப்பிக்கின்றது. காதலில் மென்மை கொண்டவளாக இருப்பினும் கற்பைக்காப்பதில் வன்மையும் மன உறுதியும் மிக்கவளாகத் திகழ்கிறாள். ‘யானையின் வாயில் அகப்பட்ட கரும்பு போல’ கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீந்தார் ஆகியோரின் பிடியில் கூண்டுக் கிளியாய் இருந்தபொழுதும் அவர்களது சதிக்கும் வஞ்சகத்திற்கும் அடிபணிய வில்லை. தனது கற்பைக் காக்கும் நோக்கில் கண்ணாயிரத்தை எதிர்க்கவும் துணிகிறாள்.

இதுமட்டுல்லாமல், கலையைத் தெய்வமாக மதிப்பவளாகவும் மோகினி படைகப்பட்டுள்ளாள். அவள் கலைய வியாபாரப் பொருளாகக் கருதவில்லை. விளம்பரத்திற்கும், தனவணிகர் திருமண நிகழ்விற்கும் அவளது கலையை முத்தழகம்மாள் பயன்படுத்துவதை விரும்பாதவளாக இருக்கிறாள். இதன் காரணமாகவே இருவருக்கும் அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்படுகிறது. "நா ஒண்ணும் தெருக் கூத்துப் படிச்சுக்கலை.... இது சரசுவதியோட இலட்சணம்" என்ற மோகினியின் கூற்று இதனைப் புலப்படுத்துகிறது.

ஆகவே, குலம் தாழ்ந்தாலும் குணத்தில் உயர்ந்து நின்று ஒழுக்கத்தையே உயிரெனக் கொண்டு வாழ்ந்த மோகினி போராட்ட வாழ்வின் கொடுமை தாங்காது தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். சத்திமூர்த்தி என்றுமே அவளை மறக்க முடியா வண்ணம் தனது அன்பைப் பொன் விலங்காக அணிவித்த அதே வேளையில் வாசகர் நெஞ்சிலும் என்றும் மறக்க முடியாத பொண்ணாக அவள் நிச்சயம் நிலைத்து நிற்பாள் என்பது திண்ணம்.



(மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

No comments:

Post a Comment