Monday, May 18, 2009

நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - பொன் விலங்கு நாவல் கூறும் படிப்பினை

பொன் விலங்கு நாவல் வாசகர்களுக்குச் சிறந்த படிப்பினையைத் தரவல்லது. அதனை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.


நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி எழுதிய சிறப்பான நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களை இந்நாவல் மையமாகக் கொண்டது. அவ்வகையில் வாசகர்களுக்கு நல்ல படிப்பினைகளைத் தந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் முக்கிய இலக்கிய வடிவமாகச் செயல்படுகிறது.

வாய்மையே வெல்லும் என்ற நீதி இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நிர்வாகி பூபதி விமான விபத்தில் இறந்தவுடன் அக்கல்லூரியின் நிர்வாகம் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் கைக்கு மாறுகிறது. அவருடன் கூட்டுச் சேர்ந்த கண்ணாயிரம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்கும் பொருட்டு, பல தீங்குகளை விளைவிக்கின்றனர். உச்சகட்டமாகக் கல்லூரிக் கூரைக்குத் தீ வைத்து விட்டான் என்று பொய் குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் தள்ள முனைகின்றனர். சத்தியமூர்த்தியோ அவர்களின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் இறுதிவரை போராடுகிறான். கல்லூரி மாணவர்கள், குமரப்பன் போன்ற நல்லவர்களின் பக்கத்துணையுடன் இறுதியில் வெற்றிப் பெறுகிறான். 'வாழ்க்கயே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்ற சத்தியமூர்த்தியின் நம்பிக்கை விதைகள் இன்றைய இளைஞர்களின் மனதில் விதைக்கப்படவேண்டும்.

கெட்டவர்கள், சதிகாரர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்ககள் எனும் கருத்து இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. 'மூன் லைட்' விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணாயிரம் வஞ்சகத்தன்மை நிறைந்தவர். மஞ்சள் பட்டி ஜமீந்தாரோ பணபலத்தைக் கொண்டு பிறரை அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார். அவர்கள் இருவரும் சத்தியமூர்த்திக்கும் மோகினிக்கும் சொல்லொணா துன்பத்தை விளைவிக்கின்றனர். இருப்பினும், அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கொப்ப இறுதியில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் கள்ள நோட்டுத் தயாரிக்கும் கும்பலோடு சம்மந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்படுகின்றனர். எனவே, நாம் பிறருக்குத் துன்பத்தை விளைவிப்பதை விடுத்து நல்லதே நினைத்து நல்லதே செய்தால் வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்ற கருத்து சிந்தனைக்கு விருந்தாகிறது.

மேலும், குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற கருத்தினை வாசகர்கள் இந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தாசி குலத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிய மோகினி போற்றப்படவேண்டியவள். மோகினியிடம் குடிகொண்டிருந்த அடக்கம், பொறுமை, ஒழுக்கம் போன்ற குணங்களே இலட்சியவாதியான சத்தியமூர்த்தியின் உள்ளத்தைக் கவர்ந்தன. சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை உயர்ந்த தெய்வாம்சம் பொருந்திய மலராகக் கருதப்படுவதைப் போன்று நாம் பிறரின் குலத்தையோ வறுமை நிலையையோ எண்ணி அவர்களை எள்ளி நகையாடாமல் அவர்களிடத்தில் காணப்படும் குணத்தைப் போற்றி வாழப் பழக வேண்டும் என்ற உன்னத கருத்தினை நாவலாசிரியர் நமக்குப் படிப்பினையாகத் தந்துள்ளார்.

இதனைத் தவிர்த்து, நல்ல நட்பு வாழ்வை உயர்த்தும் என்ற சிந்தனையையும் நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார். சத்தியமூர்த்தி தனது தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ள அவனுக்குத் தோள் கொடுத்து உற்ற நண்பன் குமரப்பனே. படிப்பறிவிலும் தொழிலிலும் இருவரும் வெவ்வேறு நிலையினைக் கொண்டிருந்தாலும் நகமும் சதையும்போல இணைபிரியாமல் வாழ்ந்தனர். சத்தியமூர்த்திக்கு வந்த மோகினியின் கடிதங்களை அவன் அனுமதியில்லாமல் படித்தமைக்குக் குமரப்பன் மன்னிப்புக் கேட்கும் பொழுது தன் அந்தரங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நண்பனுக்கு உரிமையுண்டு என்று கூறுகிறான். அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பதற்கேற்ப சதிக்காரர்களின் கூட்டுச்சதியை முறியடிக்கவும் பணக்கஷ்டத்தைத் தீர்க்கவும் சத்தியமூர்த்திக்குக் குமரப்பன் உதவியது நட்பின் உச்சத்தைக் காட்டுகிறது. இத்தகையவரைப்போன்று நாமும் ஆராய்ந்து நட்பு கொண்டால் வாழ்வில் சிறக்கலாம் என்பது வெள்ளிடைமலை.

அத்துடன் தூயக் காதல் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த படிப்பினையையும் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நாவல் ஏதுவாக அமைந்துள்ளது எனலாம். சத்தியமூர்த்தி மோகினி காதலானது ஆத்வீகமானது; இன கவர்ச்சிக்கு அப்பாற்பட்டது. மோகினியை மானசீகமாக மனைவியாக ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி சபலபுத்திகொண்ட ஆணாக இல்லாமல் பாரதியுடன் கண்ணியமாகவே பழகினான். சத்தியமூர்த்தியைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் கனவிலும் நினையாத மோகினி மாதவிபோன்று கற்புக்கரசியாகவே வாழ்ந்து உயிரை மாய்த்தாள். பாரதியோ, சத்தியமூர்த்தி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் பழிவாங்கும் எண்ணங்கொள்ளாது உண்மைக் காதலைச் சேர்த்து வைக்கப் போராடி தனது காதலை உண்மை என மெய்ப்பித்தாள். இன்றைய இளைஞர்களுக்கு இது நல்ல படிப்பினையாக அமையும்.

ஆகவே, மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் அரிய நல்ல கருத்துகளை உள்ளடக்கிய பனுவலாகப் பொன் விலங்கு திகழ்கிறது. வாசகர்கள் கண்டிபாய் இந்நாவலைப் படித்துச் சுவைப்பதோடு சிந்தனைக்குத் தீனியாய்ப் பயன்படுத்தி ஏற்றம் பெற வேண்டும்.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

No comments:

Post a Comment