Monday, May 4, 2009

நீண்ட கேள்வி: கவிதை (மாதிரி விடை 2)

'நீ உயர' எனும் கவிதையை நீ எவ்வாறு உணர்கின்றாய் என்று விளக்கி எழுதுக.

அருந்தமிழ் கவிஞர் செ.சீனி நைனா முகம்மதுவின் ஆழ்ந்த கற்பனை நீரோடையில் மலர்ந்த 'நீ உயர' எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் உயர்வும் தாழ்வும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தே அமையும் எனும் உன்னத கருத்தினை மையமிட்டு இக்கவிதைப் புனையப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் சளையாது போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறத் துடிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தானும் உயரத் துடிக்கும் ஓர் இளையனைப் பார்த்து கவிஞர் முதலில் ஆரவமர உட்கார்ந்து கொஞ்சம் சிந்திக்குமாறு வேண்டுகிறார். வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டிய துடுப்பு உள்ளமே எனக் கூறும் கவிஞர் முதலில் அவ்வுள்ளத்தை ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்துகிறார். 'எண்ணம்தான் நம்மை ஆள்கிறது' என்ற உளவியல் ஆய்வாளரின் கருத்துப்படியே கவிஞரின் பேனா முனையும் கோலமிட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கையில் குளத்தில் உள்ள தாமரைச் செடி குளத்தின் நீர் அளவுக்கு உயர்ந்து நிற்கும்; நீர் வற்றினால் தாமரைச் செடி அழியும்; புது வெள்ளத்தில் அது மீண்டும் தழைத்து வளரும். அதுபோலவே 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு' என்ற பொய்யாமொழிப் புலவரின் அமுதவாக்கினைக் கருத்தில் கொண்டு உள்ளம் உயர்ந்தால் வாழ்க்கை உயரும் என்கிறார். மேலும், அத்தகைய உயர்வினைப் பெறுவதற்குத் திருக்குறள் உதவும் என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார். மாந்தனின் வாழ்க்கை உயர்விற்குத் திருக்குறள் பெரும் பயனை விளைவிக்கும் அரிய நூலாக விளங்குகிறது என்பதனை நமக்கு உணர வைத்துள்ளார்.

தொடர்ந்து, "எண்ணம், சொல், செயல்" ஆகிய மூன்றிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நமக்கு நன்மைகள் பல வந்து சேரும் என்று கவிஞர் விளக்கியுள்ளார். அதற்கு எதிர்மாறாக வஞ்சக எண்ணம் கொண்டு சுயநலத்துடனும் பொறாமை குணத்துடனும் வாழ்ந்தால் இந்த உலகவே நம்மை வெறுக்கும் என்ற உண்மையினையும் கவிஞர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாது, நாம் உள்ளத்தில் விதைக்கும் எண்ண விதைகளே பின்னர் செயலாக முளைக்கின்றன என்று உள்ளத்தை விளைநிலமாக கவிஞர் உருவகப்படுத்தியுள்ளார். அத்தகைய விளைநிலத்தில் நல்ல எண்ணங்களை விதைக்காமல் போனால் அது பயன்றற பள்ளம் போன்று ஆகிவிடும் என்று நினைவுறுத்துகிறார். காலம் எனும் ஆழியில் மூழ்கிவிடாமல் மனிதன் புகழுடம்புடன் வாழ வேண்டுமெனில் தீய எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை உள்ளத்தில் பதியமிட வேண்டும் என்பதானது சிந்தனைக்கு விருந்தாகிறது.

இறுதியாக, விதைக்கப்பட்டதே முளைக்கும் என்ற மறுக்க முடியாத இயற்கையின் விதியைப் புரிந்து கொண்டு நாம் முரணான வழிகளைக் கைவிட்டு நல்ல மனப்போக்கைக் கொண்டிருந்தால் நமக்கு உலகமும் வாழ்க்கையும் புதியனவாக விளங்கும் என்ற கருத்தினையும் கவிஞர் நமக்குப் பரிமாறியுள்ளார். புதிய உதயத்தை நோக்கி எழுச்சியுடன் நடைபயில வருமாறு கவிஞர் நமக்கு அறைகூவல் விடுக்கிறார். எனினும், அறிவுரைகள் மட்டும் பல ஆயிரம் குவிந்து அதைக் கேட்டுத் திருந்தும் மனம் இல்லாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடுமென்பது திண்ணம்.

ஆகவே, நாம் சுவற்றில் எறியும் பந்து நம்மை நோக்கிய திரும்பி வருவது போல, ஒருவரின் செயலுக்கு அடிப்படையாக அமைவது அவரின் எண்ணமே என்பது ஆன்றோரின் அமுத வாக்காகும், இதனை நாம் சிந்தையில் தெளிந்து வாழ்வில் வெற்றிக் கனிகளைக் கொய்ய வேண்டுமென்பதே கவிஞரின் ஆவா.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

No comments:

Post a Comment