Sunday, January 23, 2011

எஸ்.பி.எம். தமிழு இலக்கியப் பாட வரலாற்றில் ஒரு திருப்புமுனை

எஸ்.பி.எம். தமிழு இலக்கியப் பாட வரலாற்றில் ஒரு திருப்புமுனை
முதல் முறையாக மலேசியத் தமிழ் நாவல்

(ஆக்கம் : திரு. இராஜேந்திரன் – மக்கள் ஓசை நாளிதழ், மலேசியா)

மலேசிய கல்வித் துறையில் அரை நூற்றாண்டு வரலாற்றில் முதன் முறையாக எஸ்.பி.எம். மாணவர்களுக்கு உள்நாட்டுத் தமிழ் நாவல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட விருக்கிறது. அதே வேளையில், கலைஞர் மு.கருணாநிதியின் ‘சிலப்பதிகாரம்’ நாடகக் காப்பியமும் பாட நூலாக இடம்பெறவிருக்கிறது.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் 1970 ஆம் ஆண்டு இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிஞர் ஐ.இளவழகுவின் ‘இலட்சியப் பயணம்’ என்னும் அந்த நாவல் 2012ஆம் ஆண்டு நான்காம் படிவ மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வுக்குப் பயன்படுத்தப்பட விருக்கிறது.

மலேசியக் கல்வி அமைச்சின் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வு வரலாற்றில் உள்நாட்டுத் தமிழ் நாவலுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாக இது கருதப்படுகிறது. எஸ்.பி.எம். தேர்வுக்கு உள்நாட்டுத் தமிழ் நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கல்வியமைச்சின் தேர்வு வாரியத்தை வலியுறுத்தி வந்தது. கடந்த பத்தாண்டுகளாக அந்தக் கோரிக்கைக்கு மேலும் அழுத்தம் கொடுத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி கல்வியமைச்சுக்கும் தேர்வு வாரியத்திற்கும் அனுப்பி வந்துள்ளது.

கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 2012-2015 கல்வியாண்டுகளுக்கான தமிழ் இலக்கியப் பாட நூல்கள் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நூல்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஐ.இளவழகுவின் ‘இலட்சியப் பயணம்’ நாவல், முனைவர் முரசு நெடுமாறனின் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள கா.பெருமாளின் ‘கதிரும் கடலும்’, முல்லைவாணனின் ‘குழந்தாய்’, ஐ.உலகநாதனின் ‘இஃது ஆகாது காண்!’, கரு.திருவரசுவின் ‘மொழி-இனம்-பண்பாடு’, தி.சு.பொன்னுசாமியின் ‘அறிவியல் தமிழ்’, கா.பெருமாளின் ‘புலரும் பொங்கல்’, மதுராந்தகனின் ‘தோட்டப்புறத் தமிழர்’, பொன்முடியின் ‘வீண்பேச்சு’, சங்கு சண்முகத்தின் ‘வெற்றி ஈட்டுவாய்’, அமலதாசனின் ‘சப்பானியர் காலத்திலே’, எல்லோனின் ‘துங்கு’, மீசல் அபூ பாக்கரின் ‘ஒழியட்டும் ஆசைகள்’, க.து.மு.இக்பாலின் ‘கல்’ ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

நாடகத்திற்குறிய பாட நூலாக தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் ‘சிலப்பதிகாரம்’ நாடகக் காப்பியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

1957ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தும் 1970ஆம் ஆண்டு வரைக்கும் University Of Cambridge, London எனப்படும் கேம்ரிஜ் பல்கலைக்கழகம் தயாரிக்கும் தேர்வு முறைகள் இங்குள்ள பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தத் தேர்வை MCE தேர்வு என அழைத்து வந்தோம். 1970ஆம் ஆண்டு வாக்கில் நமது கல்வி அமைச்சால் Malaysian Examination Syndicate (Lembaga Peperiksaan Malaysia) வாரியம் நிறுவப்பட்டு உள்நாட்டிலேயே தேர்வுத் தாட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்தத் தேர்வு SPM என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று அடிப்படையில் 1950ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் ஒரு தேர்வுப் பாடமாக இருந்து வருகிறது.

கவிதைப் பாடத்திற்கு நமது நாட்டுக் கவிதைகள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. கவிஞர் காரைக்கிழார், கவிஞர் டி.வி.ஆர்.பி, கவிஞர் வீரமான், கவிஞர் சி.வேலுசாமி, கவிஞர் கரு.வேலுசாமி, கவிஞர் ஐ.உலகநாதன், கவிஞர் கா.பெருமாள் உட்பட பலரது கவிதைகள் பாட நூலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நாவலுக்கு மட்டும் இதுவரைத் தமிழகப் படைப்புகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ‘சிநேகிதி’, ‘கரித்துண்டு’, ‘கள்ளோ காவியமோ’, ‘அகல்விளக்கு’, ‘குறிஞ்சிமலர்’, ‘பொன் விலங்கு’, போன்ற நாவல்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. மலேசியத்தமிழ் நாவல்கள் மாணவர்களுக்கு ஆறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் வழி மலேசிய மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் வழி நமது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தது. தரமான நாவல்கள் படைக்கப்படுவதற்கான தளங்களை உருவாக்க நாவல் எழுதும் போட்டிகளையும், நாவல் எழுத ஊக்குவிக்கும் கருத்தரங்குகளும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்போல், முதன் முறையாக மலேசிய நாவல் ஒன்று எஸ்.பி.எம். மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட விருப்பது புதிய வரலாற்றின் திறவுகோளாக அமைந்திருக்கிறது.

அதே வேளையில் கலைஞர் மு.கருணாநிதியின் சிலப்பதிகாரம் நாடகக் காப்பியமும் பாடநூலாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நல்ல தமிழ் உச்சரிப்புக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் என்றும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலவச பாடநூல்

இதற்கிடையே தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற நூல்களை, 2012 முதல் 2015ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் மூலமாக அரசாங்க மானியம் பெற்று, அதன் வழி இலவசமாக பாட நூல்களை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி மக்கள் ஓசை நாளிதழ், ஞாயிறு பதிப்பு, 23 ஜனவரி 2011

No comments:

Post a Comment