Monday, January 31, 2011

தமிழ்க் கவிதை - கவிஞர் க.பெருமாள், மலேசியா

தமிழ்க் கவிதை
(கவிஞர் க.பெருமாள், மலேசியா)

எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்,
எழுத்தசையும் சீர்தளையும் தேடிச் சோர்ந்து
பதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!
பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடு
மெதுமெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடம்
மெய்மறந்தேன் அதன்சுவையில் ஒன்றிப் போனேன்!
இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடி
யான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி!


வாழ்வுமெங்கள் வளமும்உயர் தமிழே என்று
வழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!
ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க
அருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாய்ச்
சூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்
சுடந்திருக்கும் உண்மையதை மறுப்பா ருண்டோ!
யாழ்குழலின் இசையெல்லாம் இணைந்து வார்க்கும்
இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்!


துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்
தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்
நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு
நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்டு
விரைவான வெற்றிகண்டால் பரணிப் பாட்டு
வீறுபெறு தமிழாநீ அச்சம் ஓட்டு!
மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!
மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு!


கவிதைப் பூங்கொத்து

No comments:

Post a Comment