இலக்கியத் தாயின் தவப் புதல்வராக விளங்குபவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இவரின் பொன் விலங்கு நாவல் அறுபதாம் ஆண்டு காலக் கட்டத்தை நம் கண் முன்னே நிழலாடச் செய்கிறது. சத்தியமூர்த்தி எனும் தனி மனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டுப் புனையப்பட்ட இந்நாவல் சிறந்த சமுதாயப் படைப்பாகத் திகழ்கிறது. இந்நாவலில் முத்தழகம்மாளும் மோகினியும் தாய், மகள் எனும் உறவில் துணைக் கதாப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கொள்கை வேறுபாட்டினால் இரு துருவங்களாக விளங்கும் இவ்விருவருக்குமிடையே பற்பல முரண்பாடுகளை நாம் காண இயலுகிறது.
கணிகையர் குலத்தில் பிறந்து அதே நிலையில் வாழ விரும்பும் ஒரு கதாப்பாத்திரமாக முத்தழகம்மாள் இந்நாவலில் வலம் வருகிறாள். தன் வழியிலேயே தன் மகளையும் உருவாக்க விரும்புகிறார். சுயநலத்தின் திருவுருவமாகவே திகழும் முத்தழகம்மாள் சொந்த மகள் தற்கொலைக்குத் துணிந்ததைப் பார்த்தும் தன் பண்பை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. மோகினியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சற்றும் அவர் சிந்தித்ததேயில்லை. தனக்கு ஆதாயம் தரும் எந்தவொரு செயலையும் நிறைவேற்றத் துடிக்கும் காரியவாதியாகவே இருக்கிறார்.
மேலும், முத்தழகம்மாள் தாய்ப்பாசத்திற்குப் பதிலாகப் பணத்தாசையையே பிரதானமாகக் கொண்டுள்ளார். தனது மகள் மோகினியை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தி பணம் ஈட்ட முனைகிறார். நடனம், விளம்பரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் மோகினியை ஈடுபடுத்த விழைகிறார். உதாரணமாக அம்மன் கோயில் திருவிழாவில் நடனமாடிய மோகினி, அங்கு வந்திருந்தோரின் நடவடிக்கைப் பற்றியும் தன்னைப் பல்வோறு சில்லறை நடனங்களை ஆட வற்புறுத்தியதைப் பற்றியும் தாயிடம் முறையிடுகிறாள். இனிமேல் அது போன்ற விழாக்களில் தாம் ஆடப்போவதில்லை என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட முத்தழகம்மாள் மோகினியைக் கடுமையான சுடுச்சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார். பெருஞ்செல்வந்தரான மஞ்சள்பட்டி ஜமீந்தார், மோகினியைக் கொண்டு சினிமாப் படம் எடுக்க விருப்பம் தெரிவித்த பொழுது முத்தழகம்மாள் அதற்கு உடன்படுகிறார். அவளைப் பணம் காய்க்கும் மரமாகப் பார்க்கிறார்.
அதே வேளையில் மோகினியோ தனித்தன்மை வாய்ந்தவளாக விளங்குகிறாள், “நூலைப்போல சேலை, தாயைப்போல பெண்” என்ற கூற்றைத் தகர்த்தெறியும் பெண்ணாக மோகினி விளங்குகிறாள். சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல, தாழ்ந்த குடியில் பிறந்தாலும் தனது சிறப்பான பண்புகளால் மோகினி உயர்ந்து நிற்கிறாள். காண்பாரைச் சுண்டியிழுக்கும் பேரழகு படைத்தவளாகவும், பரதக் கலை, வீணை வாசித்தல் ஆகிய திறமையைக் கொண்டவளாக இருப்பினும் அவற்றைக் கொண்டு பெரும் பணம் சம்மாதிப்பதில் மோகினிக்குக் கிஞ்சிற்றும் நாட்டமில்லை. இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் போராட்டம் அரங்கேறுகிறது.
அதனைத் தவிர்த்து, பணக்காரரான மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் உறவை மோகினி அறவே வெறுக்கிறாள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல் கொடிய எண்ணங் கொண்ட ஜமீந்தாரிடமிருந்து மோகினி விலகியே நிற்கிறாள். அதோடு, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமான சத்தியமூர்த்தியையே தனது கணவனாக மோகினி மனத்திலே வரித்துக்கொள்கிறாள். கார் விபத்தில் தன் தாயை இழந்து பிறகு ஆதரவற்ற நிலையில் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் பின் செல்கிறாள். ஜமீந்தாரின் வஞ்சக சதியால் சத்தியமூர்த்தி தன்னை வெறுப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறாள். தனது தூய காதலுக்காகவும் கற்புக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறாள் மேதைப் பெண் மோகினி. மஞ்சள்பட்டி ஜமீந்தாரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆடம்பரமான, பகட்டான வாழ்வை அடைந்திருக்க முடியும் என்றிருந்தாலும் தெய்வீகக் காதலுக்கே முன்னுரிமை கொடுத்த மோகினி மனக்கண் முன் உயிர்ந்து நிற்கிறாள்.
ஆகவே, மோகினி, முத்தழகம்மாள் இருவருமே மாறுபட்ட பாத்திரப்படைப்பால் நம் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், மோகினி தன் கொள்கைகளால் உயர்ந்து நிற்கிறாள். அவளுடைய தாயோ தன் அற்பமான கொள்கைகளால் பின்தள்ளப்படுகிறாள்.