Tuesday, March 15, 2011

கவிதை நீண்ட கேள்வி - முகம் நீ! முகவரி நீ!

முகம் நீ! முகவரி நீ! எனும் கவிதையில் வெளிப்படும் சிறப்புகளை விளக்கி எழுதுக.

தமிழன்னைக்கு கவிமகுடம் சூட்டிய கவிஞர்களுள் கவிக்கோ அப்துல் ரகுமானும் ஒருவராவார். அவரது பேனா முனை செதுக்கியுள்ள “முகம் நீ! முகவரி நீ!” எனும் செவிக்கினிய கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை, தமிழ் மொழி அனைத்து சிறப்பு அம்சங்களையும் ஒருங்கே அமையப்பெற்ற மொழி என்பதை மையக்கருவாகக் கொண்டுள்ளது. தமிழைத் தாயாக உருவகித்து அத்தாயின் சிறப்புகளை விளக்குவதாக இக்கவிதை புனையப்பட்டுள்ளது.

கவிஞர் இக்கவிதையின் வாயிலாகத் தமிழின் தொன்மையைக் கூறியுள்ளார். மொழிக்கு மூலமானது ஒலி. அந்த ஒலி கடலில் இருந்து முதன் முதலாய்த் தோன்றியது தமிழ்மொழி எனவும் கலை எனும் கடலை நாவினால் கடைந்ததால் வந்த அமுதமாகத் தமிழைச் சிறப்பிக்கிறார். இதன் மூலம் உலக மொழிகளுள் பழமையான மொழி, செம்மொழி தகுதியைக் கொண்டது நம் தாய் மொழி என்று உன்னத சிறப்பினைக் கூறி நம்மைப் பெருமைப்பட வைக்கிறார்.

மேலும், “கல் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி” என்ற சிறப்பு அம்சத்தைக் கொண்டிருந்தாலும் காலம் செல்லச் செல்ல தளர்ந்து போகும் மற்ற மொழிகளுக்கிடையே நாளுக்கு நாள் இளமைப் பெற்று வருவதாகக் கூறுவதானது மனிதன் அறிவியல் துணைக்கொண்டு கணினியுகம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்றிருந்தாலும் தமிழ்மொழி புதிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கியுள்ளதை அறிய முடிகிறது.

அதுமட்டுமல்லாது,இவ்வுலகில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் அவை அனைத்திலும் உயர்ந்து நிற்பது தமிழ்மொழியே எனக் கவிஞர் துணிந்து கூறுகிறார். தமிழ்மொழியில் உயிருக்கும் மெய்க்கும் என தனித்தனி எழுத்துகளுடன் சிறப்புற்று விளங்குவதைப் போன்று மற்ற எந்த மொழிகளாவது இருக்கிறதா என்று நம்மை ஆராயத் தூண்டுகிறார். மெய்யெழுத்துகளில், அழுத்தத்தால் வேறுபட்ட இனங்களாகப் பிரிந்திருக்கும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்றுவகை மெய்யொலிகள், இயற்கையான முறையில் ஒன்றுடன் ஒன்று இயைந்து இனிமையாக மொழியில் பயன்படும் சிறப்பான முறையைத் தமிழ்மொழி மட்டுமே கொண்டுள்ளதை உணர்த்துகிறார்.

அத்துடன், காலமெல்லாம் உயர்வடைந்துகொண்டே இருக்கிற மொழியாகவும் தமிழ்மொழி இருக்கும் வேளையில் மற்ற மொழிகளுள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகளைக் கொண்ட மொழியாகவும் அது விளங்குவதை நாம் உய்த்துணர வேண்டும். செவ்வியல் தன்மை என்ற அரிய தகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்மொழி ஒவ்வொரு தமிழனின் மூச்சிலும் பேச்சிலும் வாழ்வதோடு அவன் உயர்வுக்கும் வித்திடுவதைக் கவிஞர் நமக்குப் புலப்படுத்தியுள்ளார்.

அடுத்ததாக, ஒருவரைப் பற்றி கருத்து கூறும்பொழுது அதை நயம்பட அவர் முகம் கோணாமல் கூறும் வல்லமை பெற்றது தமிழ். ஒருவரைத் திட்டுவதற்குரிய கடுமையான சொற்களானாலும் அதைக் கூறும் போது கசப்பை விளைவிக்காமல் சிந்திக்கத் தூண்டும் இனிமை வாய்ந்ததாகத் தமிழ்மொழி விளங்குகிறது.மலர்களைக் கொண்ட பூஞ்சோலையைப் போன்று, காலம் கடக்க கடக்கச் சிறிதும் வளம் குறையாத மொழியாகத் திகழும் தமிழ்மொழியின் சிறப்பை எண்ணுங்கால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதைத் தவிர, யாருக்கும் நில்லாமல் உலவிக் கொண்டிருக்கின்ற காற்றும், தளர்ச்சியின்றி எப்போதும் எழுச்சியுடன் நிமிர்ந்து இலங்குகின்ற ஒளியும், எந்தச் சார்புமின்றி உலகம் முழுமைக்கும் பொதுவாகப் பயன் தரும் தமிழ்மொழி போற்றத்தக்கது என்று கவிஞர் இயம்புகிறார். அத்தகைய மொழியை ஒலிக்கும் வேளையில் நாவில் ஊறுகின்ற எச்சில்கூடத் தேனாகச் சுவைக்கிறது என்றும் கவிஞர் பூரிப்புடன் கூறுகிறார்.

தொடர்ந்து, உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டுமாய் முப்பதே எழுத்தொலிகளைக் கொண்டு மூவுலகிலும் உள்ள எந்தப் பொருளைக் குறிக்கவும், எந்தக் கருத்தை விளக்கவும், எந்த உணர்வை உணர்த்தவும் ஆற்றல் கொண்ட உலகப் பெருமொழியாகத் தமிழ்மொழி விளங்குவது வெள்ளிடைமலை. அப்பெருமொழியே வான்புகழ் வள்ளுவனின் திருநாவிலும் திருக்கரத்திலும் விளையாடி தனக்கு நிகராக வேறு நூல் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த திருக்குறள் மலர வித்திட்டிருக்கிறது.

மேலும், எந்தவொரு தடங்கல் இல்லாமல் கருத்துகளைச் சுலபமாக வெளிக்கொணர அரிய அமைப்பை வகுத்துத் தந்திருக்கும் ஒரே மொழியாகத் திகழ்வது தமிழ்மொழியே. பல இலக்கிய, இலக்கண செல்வங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்தம் வாழ்வைச் செழிப்புறச் செய்திருப்பது அதன் வள்ளல் தன்மையை மெய்ப்பிக்கிறது எனலாம். எந்த மொழியை ஒப்பிட்டாலும் அந்த மொழிக்கு மூத்ததாக இருக்கும் தமிழ்மொழி நம் தாய்மொழி எனப் பறைசாற்றுவதில் பெருமிதம் கொள்ளலாம். இவ்வாறு முதன்மை வகிக்கும் தமிழ்மொழி மதவேறுபாடுகள் பார்க்காமல் அனைத்து மதத்தின் கொள்கைகளையும் சுலபமாக மக்களிடம் போய்ச்சேர வழிவகுத்துள்ளது.வேறுபட்ட சமயக் கொள்கை இருப்பினும் தமிழ்ப்பற்று மேலோங்கி இருப்பதால் அவர்களிடையே உள்ள இணக்கம் பாதிப்புறவில்லை. தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதன் வாயிலாக தமிழர்கள் என்ற சிறப்பு அடையை நாம் பெற்றுள்ளோம். உயர்ந்த பண்பாட்டைப் பெற்று நாம் பெருமைகளுக்குரிய இனமாக உலகத்தில் வாழும் பேறும் பெற்று கிட்டியுள்ளோம். தமிழ்மொழியே நமக்கு இவ்வுலகில் அடையாளத்தையும் சிறப்பையும் வழங்கியுள்ளதை நாம் மறுக்க இயலாது. அத்தகைய தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்கள், தங்கள் முகத்தையும் முகவரியையுமே புறக்கணித்தவர்கள் ஆவார்கள் என்ற இன்றியமையாத கருத்தையும் மறைமுகமாகச் சுட்டி நம்மை உய்த்துணர கவிஞர் வழிவகுத்துள்ளார்.

ஆகவே, தொன்மை, தாய்மை, பொதுமை, தூய்மை, தனித்தன்மை, இனிமை, இளமை போன்ற செம்மொழித் தகுதிகளைக் கொண்டு அதன் நலம் கெடாது மென்மேலும் சிறப்பை எய்திட நம்மால் ஆன ஆக்கக் காரியங்களைச் செய்திட வேண்டும்.
(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )

No comments:

Post a Comment