முகம் நீ! முகவரி நீ!
(கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு, இந்தியா)
ஒலிக்கடலில் முதன்முதலாய்
உதித்துவந்த பேரலையே!
கலைக்கடலை நாவினால்
கடையவந்த செவியமுதே!
பிறந்தநாள் அறியாத
பேரழகே! பிறமொழிகள்
இறந்தநாள் காணநிதம்
இளமைபெற்று வந்தவளே!!
நயந்த மொழிகளிங்கு
நாலா யிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயர்மெய்யோ டிருப்பவர்யார்?
வல்லினமும் மெல்லினமும்
வளமான இடையினமும்
நல்லினமாய் ஒன்றுபட்டு
நடக்கவழி செய்தவளே!
உயர்மொழிநீ தனிமொழிநீ
உன்னதமாம் செம்மொழிநீ
உயிர்மொழிநீ மெய்மொழிநீ
உயர்வைத் தருபவள்நீ
வைதாலும் தித்திக்கும்
மதுரமே! காலத்தைக்
கொய்தாலும் மலர்வனத்தில்
குறையாத பூவனமே
நில்லாத காற்றைப்போல்
நிமிருகின்ற ஒளியைப்போல்
எல்லார்க்கும் பொதுவாக
இருப்பவளே உன்னைநாம்
உச்சரிக்கும் போதினிலே
ஊறுகின்ற வாயதன்
எச்சிலும் தேனாகும்
இதழ்களும் பூவாகும்
முப்பதே ஒலிகளுக்குள்
முழுவுலகும் அளப்பவளே!
ஒப்பதே இல்லாத
உயர்குறளைப் பெற்றவளே!
வலஞ்சுழித் தோடுகின்ற
வாக்கிய நதியே
நலஞ்செழித் தோங்குகின்ற
நாணய நாநயமே!
எம்மொழிக்கும் மூத்தவளே!
எம்மொழியாய் வாய்த்தவளே!
செம்மொழியாய் மொழிகளுக்குள்
செம்மாந் திருப்பவளே!
தேவாரம் தொடுத்தவளே!
திருவா சகத்தேனே!
நாவார ஆழ்வாரின்
நயங்களிலே ஆழ்ந்தவளே!
ஏசு மதத்தார்
ஈந்ததொரு கொள்கையினால்
ஏசா மதத்தை
எந்தமிழர்க் களித்தவளே!
மக்கா மதீனாவின்
மக்காத கொள்கையுடன்
நிக்கா முடித்தவளே!
நேயம் வளர்த்தவளே!
உன்னாலே பிறந்தோம்
உன்னாலே வளர்ந்தோம்
உன்னாலே பெருமைபெற்று
உலகத்தில் வாழுகின்றோம்!
அகம்நீ புறம்நீஎம்
ஆருயிரும் நீஎங்கள்
முகம்நீ முகவரிநீ
முடியாத புகழும்நீ!
கவிதைப் பூங்கொத்து
No comments:
Post a Comment