Friday, March 13, 2009

நீண்ட கேள்வி: கவிதை (மாதிரி விடை 1)

'எங்கள் நாடு' என்ற கவிதையில் தன் நாட்டின் சிறப்புகளாகக் கவிஞர் கூறுவனவற்றையும் இக்கவிதையின் வழி நாம் பெறும் படிப்பினையையும் விளக்கி எழுதுக.

நாடறிந்த மலேசியக் கவிஞர் சங்கு சண்முகத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த 'எங்கள் நாடு' எனும் கவிதை, கவிதைப் பூங்கொத்து என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இகவிதையில் கவிஞர் தன் தாய் நாடான மலேசியாவின் தனிச்சிறப்புகளை எல்லாம் பெருமித உணர்வுடன் விளக்கியுள்ளார்

சந்தக் கவிஞரான இவர் மலேசியத் திருநாட்டைத் தாயாக உருவகித்துப் பாடுகிறார். 'இந்த நாட்டு மண்ணிலே இன்றிருக்கும் உயிர்கள் யாவும் எங்கள் தாயின் பிள்ளையே" என்ற கூற்றின் வழி, மலாய் இந்தியர், சீனர், கடசான், டூசூன் போன்ற பல்லின மக்கள் யாவரும் கலை பண்பாடு, சமயம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி வருகின்றனர். பல இனங்களிடையே நிலவும் நல்ல உறவும் ஒற்றுமையும் மலேசியாவை உலக அரங்கில் நிமிர வைத்துள்ளது.

மேலும், அடர்ந்த காடு, மேடாக இருந்த இந்த ஸ்வர்ண பூமியைத் தங்கள் கடின உழைப்பால் சீர்டுத்திச் செம்மயாக்கி இனிய வாழுமிடமாக மாற்றிய நம் முன்னோரைக் கவிஞர் நினைவுகூற வைத்துள்ளார். மக்களின் இனிய பண்பையும் ஒற்றுமைச்சிறப்பையும் தென்றல், ஆறு போன்ற இயற்கைச் செல்வங்கள் வாழ்த்தி மகிழ்வதாகக் கவிஞர் குறிப்பிடுவதன் மூலம் நாட்டின் இயற்கை வளமும் மக்களின் உழைப்பும் போற்றப்படவேண்டிய ஒன்று என்று அறிய முடிகிறது.

இதனைத் தொடர்ந்து பகைமை உணர்ச்சி நீங்கி தோழமை உணர்வுடன் மலேசிய மக்கள் வாழ்வதால் இப்புண்ணிய பூமி அமைதிப் பூங்காவாகத் திகழும் பேறு பெற்றுள்ளதைக் கவிஞர் இக்கவிதையின் வழி இயம்பியுள்ளார். தான் குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து இளைஞனாகி ஒரு பெண்ணை மணந்து வாழும் இந்நாட்டில் வீணான குழப்பங்களும் சண்டைச்சச்சரவுகளும் இல்லை எனக் கவிஞர் பெருமிதத்துடன் கூறுகிறார். அவ்வாறு யாராகினும் வீணான பகைமை உணர்வுக்கு இடங்கொடுத்தால் அவர்களை விட்டு வைக்கமாட்டோம் எனவும் சூளுரைக்கின்றார்.

இறுதியாக கவிஞர், 'உன்னால்தான் மலேசியா' என்ற வாசகத்திற்குப் பொருள் கூறும் வண்ணம் மக்கள் இங்கு நல்வாழ்வுப் பெற்று வாழ்ந்திட வரங்கொடுத்த தன் தாய் நாட்டை வாழ்த்தி வணங்குகிறார். ஈன்றெடுத்த குழந்தை எத்தனை என்றாலும் குறைவின்றிப் பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய் போல, மக்கள் அமைதியாக வாழ்ந்து குடியேறினாலும் தன் நிலத்தின் வளங்களை வழங்கி அனைவரையும் வாழ வைக்கும் நாடாகிய தாயைச் சிந்துக்கவிதைகளால் போற்றிப் பாடி சிரம் தாழ்த்தி, கைகள் குவித்து வணங்கி, தாயே, என் உயிரையும் உனக்காகத் தருவேன் என்று கவிஞர் தன் நாட்டுப்பற்றை வெளிக்கொணர்கிறார்.

தன் தாய் நாட்டின் சிறப்புகளை எடுத்தியம்பும் அதே வேளையில் சில படிப்பினைகளையும் நம் சிந்தனைக்கு விருந்தாக்கி உள்ளார் கவிஞர். தீவிரவாதம், அரசியல் நிலைத்தன்னமை இன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை, உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் மலேசியாவின் பல்லின மக்கள் சுபிட்சமாய் வாழும் நிலை பெற்றதற்கு வேற்றுமைகளைக் களைந்த ஒற்றுமை உணர்வே என்பதனை நாம் உணர வேண்டும். இந்நிலை நீடிக்க வேண்டுமெனில் நாம் மற்றத்தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், இரத்தம் பெருக்கெடுத்து ஓடும் போர்க்களமாக இப்பூமி மாறக்கூடும். அப்பொழுது இத்தாய் மண்ணில் செழித்து நிற்கும் இயற்கை வளங்கள் பயனற்றுப்போகும். ஒவ்வொரு குடிமகனும் தன் தாய் மண்ணை நேசித்து அதன் உயர்வுக்குப் ப¡டுபட வேண்டும் என்ற படிப்பினையையும் கவிஞர் நமக்குத் தந்துள்ளார்.

ஆகவே, பிறந்த நாட்டைத் தாயாகவே எண்ணி அதன் புகழ்பாடும் கவிஞரின் பாங்கு நம்மிடத்திலும் நிலைபெற வேண்டும். அவரின் பேனா முனையில் தெறித்துள்ள சிந்தனை முத்துகளை நாம் படிப்பினையாகக் கொண்டு வாழ வேண்டும்.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

No comments:

Post a Comment