Monday, March 23, 2009

நாவல் (பொன் விலங்கு) - கதைச்சுருக்கம் - பகுதி 4

பகுதி 3-இன் தொடர்ச்சி

மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்த மறுதினம் பாரதியிடம் நாட்டியம் மற்றும் வீணையைக் கற்கும்படி ஜமீந்தார் வற்புறுத்தினார். பாரதி நாட்டியம் பயிலும் நிலையில் இல்லை. மோகினியும் அதைக் கற்பிக்கும் நிலையில் இல்லை. மோகினி “தன்னுடைய கலையுணர்வு செத்துவிட்டதாகக் கூறுகிறாள். யாரோ ஒருவருடைய நல்ல ஞாபகம் மீதமிருந்து ஆட்டிக்கொண்டிருக்கிறது” என்று மேலும் கூறினாள். பாரதி மோகினியிடம் சத்தியமூர்த்தி கல்லூரியில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கூறுகிறாள். கார் டிரைவர் வாயிலாகக் கணக்குப் பிள்ளை தான் சத்தியமூர்த்தியின் தந்தை என்பதையும் தெரிந்து கொள்கிறாள்.

சத்தியமூர்த்தி அவன் தந்தையிடம், “நியாயம் கிடைக்கும் வரை சும்மா விடமாட்டேன்” என்று கூறுகிறான். தன்பேச்சைக் கேட்கவில்லை என்கிற கோபத்தில் தன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று கூறி வெளியேறுகிறார் அவனுடைய
அப்பா. தன்னுடைய தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி வேண்டாதவர்கள் தனக்கு விரித்த வஞ்சகவலையைத் தான் அறுத்தெறிந்துவிட்ட பெருமையும் அவன் இப்போது தன்னுள் உணர்ந்தான்.

கடைவீதியில் பிரபல பட்டு ஜவுளிக்கடை ஒன்றில் ஜமீந்தாரைப் பின்பற்றி தொடர்ந்து மோகினியும் காரிலிருந்து கீழிறங்கி நடந்து கொண்டிருந்தாள். இதைக் கண்ட சத்தியமூர்த்தி நடைதளர்ந்து நின்று விடுகிறான். நண்பன் குமரப்பனும் அப்படியே திகைத்துப் போய் நண்பனுக்கு அருகில் நின்று விட்டான். மோகினியின் கண்களில் அழுகையும், கண்ணீரும் முந்திக் கொண்டு வந்தன. மோகினியும் சத்தியமூர்த்தியைப் பார்த்து விடுகிறாள். அதே சமயம் ஜமீந்தார் அவளை உள்ளே வழுக்கட்டாயமாக அழைத்துப் போய்விடுகிறார். சத்தியமூர்த்திக்கு அவள் இப்படி பயந்து ஒடுங்குவதை நினைத்து உள்ளம் குமுறுகிறது. “மோகினிக்காக அனுதாபப்பட வேண்டிய சத்தியமூர்த்தி இப்படி கோபப்படுவது முறையல்ல” என்கிறான் குமரப்பன். தானும் உணர்ச்சியால் உந்தப்படுவதைத் தவிர்க்க இயலாது தவித்தான் சத்தியமூர்த்தி.

கலெக்டரும், மாவட்டப் பெரிய போலிஸ் அதிகாரியும் (DSP) ஜமீந்தார் மாளிகையில் தங்காது, அரசாங்க விடுதியில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டனர். செய்தியறிந்த ஜமீந்தாரும், கண்ணாயிரமும் முதல்வரின் திறமையின்மை குறித்து அவரிடம் வருத்தப்பட்டுக்கொள்கின்னர்.

முதல்வர் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் செல்வாக்குப் பெறவோ, சோபிக்கவோ முடியாமல் போனதற்கு காரணம் கொள்கை இல்லாத படிப்பு தான் என்று உணர்கிறார். வேரில்லாமல் ஊன்றிய செடி சிறிது காலம் பசுமையாய் தோன்றி விரைவில் பட்டுப் பாய் விடுவது போல முதல்வரின் நிலைமை இருந்தது.

ஜமீந்தாரின் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்த் தோல்வியைச் சந்தித்தன. வந்திருக்கிற கலெக்டர் நேர்மையும், முற்போக்கு மனநிலயும் உடையவர் என்றும் செல்வாக்கையோ, உபசாரங்களைச் செலவழித்தோ ஒன்றும் நெகிழச் செய்து விட முடியாது என்பது உண்மையாகிவிட்டதை அறிகின்றார் ஜமீந்தார்.

ஜமீந்தாரும், கண்ணாயிரமும் மற்றும் கல்லூரி முதல்வரும் கலெக்டரைப் பார்க்க அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர். அவர்களை மறுநாள் கல்லூரியில் சந்திப்பதாகக் கூறிவிடுகிறார் கலெக்டர்.

மறுநாள் கலெக்டரும், போலிஸ் அதிகாரியும் கல்லூரியை சுற்றிப் பார்த்தனர். மாணவர்கள் பிரதிநிதியைச் சந்தித்துப் பேசினர். சத்தியமூர்த்திதான் ஹாஸ்டலுக்கு நெருப்பு வைத்ததாகச் சாட்சி கூறியவர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் போலிஸாருக்குப் பயந்து உண்மையைக் கூறிவிட்டனர். கடைசியாக முதல்வரைக் கூப்பிட்டு விசாரிக்க, அவரும் மென்று விழுங்கினார். கலெக்டரும் போலிஸ் அதிகாரியும் முதல்வருக்கு அறிவுரை கூறினர். முதல்வருக்கு தலைகுனியும்படியான நிலைமை ஏற்பட்டது.

“சத்தியமூர்த்தி தன்னுடைய முந்நாள் மாணவன்” என்கிறார் கலெக்டர். “அவனுக்குப் பொய் பேசத் தெரியாது, உண்மைக்காக முரண்டும் பிடிவாதமும் செய்கிறவன், அவனைப் போல் தங்கமான மாணவனைத் தான் பார்த்ததில்லை, உங்களுக்கும் நிர்வாகிக்கும் பிடிக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் செய்திருக்கிறீர்கள்” என்று முதல்வர் மனதில் படும்படி கூறினார். பொறுப்புள்ள முதல்வராகக் கல்லூரியை நடத்துங்கள் என்கிறார். “கல்லூரியின் நல்ல பெயரையும், சம்பந்தப்பட்டவர்களின் கௌரவத்தையும் முன்னிட்டு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறோம்” என்றார். நடந்தவற்றை ஜமீந்தாரிடம் தெரிவிக்கச் சென்ற முதல்வரிடம், கண்ணாயிரம் ஏதோ கோபித்துக் கொள்ளத் தொடங்கிய போது, “கல்லூரியை எப்படி நடத்துவது என்று நீங்கள் சொல்லித் தர வேண்டாம், வாயை மூடுங்கள்” என்று முதல்வர் கடுமையாகக் கூறினார்.

அதே தினத்தன்று சத்தியமூர்த்தியை அழைத்த கலெக்டர் அவனுடைய எதிர்கால நலனுக்குகந்த அறிவுரை ஒன்றைக் கூறிக்கொண்டிருந்தார். “மதுரை வந்தால் வீட்டிற்குக் கண்டிப்பாக வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு புறப்பட்டார்.

இதற்கிடையே மோகினியிடம் “சத்தியமூர்த்திக்கு வந்த பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்ந்தது” என்கிறாள் பாரதி. செய்தியறிந்த மோகினியும் மகிழ்வடைகிறாள். மோகினி பாரதியிடம் கடிதம் ஒன்றை கொடுத்து, “சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்குமாறு” கேட்டுக் கொள்கிறாள். தனக்குள்ளே பொங்கிக் கொண்டிருக்கிற துயரத்தையும், ஏமாற்றத்தயும் மோகினி தெரிந்து கொண்டு விட முடியாமல், மிகவும் சமார்த்தியமாக நடித்து விடுகிறாள் பாரதி. தன்னுடைய மகிழ்ச்சி மறுபுறம் பாரதியின் மௌனத்திற்கும், கலக்கத்திற்கும் காரணம் என்பதை மோகினி புரிந்து கொள்ளவில்லை.

மோகினி எழுதிய கடிதத்தைப் படிக்கிறாள். மோகினிக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே தவிர்க்க முடியாத பிணைப்பும், அன்பும் இருப்பதைக் கடிதம் பாரதிக்குச் சொல்லி விட்டது. “நான் வாழ்ந்து உங்கள நினைக்க வேண்டும் அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்” என்று மோகினி எழுதியிருந்தாள். மோகினி பெற்ற பாக்கியம் எதுவோ, அதுவே தான் இழந்து கொண்டிருக்கும் பாக்கியம் என்று அவள் மேல் பொறாமை வருகிறது.

கடிதத்தை சத்தியமூர்த்தியிடம் கொடுத்த பாரதி அழுது கொண்டே அங்கிருந்து போய்விடுகிறாள். அவள் எதற்காக மனம் உடைந்து போயிருக்கிறாள் என்று சத்தியமூர்த்திக்குத் தெளிவாக புரிந்திருந்தும், ஒன்றும் தெரியாதது போல நடிக்க வேண்டியிருந்தது.

பாரதி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானாள். மோகினி அவளை தாய் அருமை மகளைக் கவனிப்பது போல் இரவு பகலாய்த் தூக்கம் விழித்து பணிவிடை செய்கிறாள். மோகினியின் மிக உயர்ந்த பண்பைத் தெரிந்து கொள்கிறாள் பாரதி. எங்கள் குடும்பம் என்றோ ஜமீந்தார் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறது என்ற நன்றியினாலும் ஜமீந்தாரிடம் உள்ள பயத்தினாலும் நான் சில சமயங்களில் இவர்களுக்கு அஞ்சி கட்டுப்படுகிறேன். என் மனம் வேறு எங்கோ இருப்பதை நீ தெரிந்து கொண்டிருப்பாய்” என்கிறாள்.இதற்கிடையே சத்தியமூர்த்தி பாரதியின் உடல் நலம் விசாரிக்க பாரதியின் வீட்டிற்கு வருவதாகக் கூறியிருந்தான்.

ஜமீந்தார் கேட்டுக் கொண்டதன் பேரில் அவருக்குக் காப்பி கொண்டு வந்து கொடுக்கிறாள் மோகினி. அதே வேளையில் அங்கே வந்த சத்தியமூர்த்தி, மோகினி ஜமீந்தாருக்குப் பணிவிடை செய்வதாக எண்ணிக் கொண்டு, எரித்து விடுவதைப் போல அவளைப் பார்க்கிறான். மோகினியோ அவனைக் கண்டு நடுங்குகிறாள். அவளை எப்படி எப்படியோ தவறாகப் புரிந்து கொள்ளும்படி சந்தர்ப்பம் சதி செய்து விட்டது.

உள் கூடத்தில் மோகினி மாலையும் கழுத்துமாக ஜமீந்தாருடன் மணமக்களைப் போல் நிற்கும் பெரிய படத்தைக் காண்கிறான். பாரதியைப் பார்க்க அவள் அறைக்குப் போய் விடுகிறான் சத்தியமூர்த்தி. அவனுக்கு அவசர அவசரமாகக் காப்பியைக் கலக்கி கொண்டு வந்து அவனிடம் நீட்டுகிறாள். “உபசாரம் ஜமீந்தாருக்குச் செய்யுங்கள்” என்று கூறி ஆத்திரத்தோடு வெளியேறிவிடுகிறான் சத்தியமூர்த்தி. மோகினியைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. மோகினியின் படத்தையும் ஜமீந்தாரின் படத்தையும் இணைத்து ஒன்றாகத் தோன்றுவது போல செய்தது கண்ணாயிரத்தின் வேலை என்று பாரதி அறிகிறாள். கண்ணாயிரத்தின் செய்கை மோகினிக்குத் துரதிஷ்டமாக மாறிவிட்டதை எண்ணி பாரதி வருந்துகிறாள்.

மோகினியைக் கடிதம் ஒன்று எழுதுமாறு கேட்கிறாள் பாரதி. அதனைத் தோழியின் மூலம் சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்கச் சொல்கிறாள். சத்தியமூர்த்தி மதுரைக்குப் போய் விட்டதாகத் தோழி கூறவே, அக்கடிதத்தை விரைவு தபாலில் மதுரைக்கு அனுப்புகிறாள். கடிதத்தைச் சத்தியமூர்த்தியின் அப்பாவிடம் ஒப்படைக்கிறார் தபால்காரர். அவர் அதைக் கிழித்து அடுப்பில் போட்டு விடுகிறார்.

“என்மேல் உயிரையே வைத்து வாழ்கிறாள் என்று நான் எண்ணியிருந்தது எத்தனை பெரிய பேதமை? ஜமீந்தாருக்கும் இவளுக்கும் திருமணம் நடந்திராவிட்டால் இப்படி மணக்கோலத்தில் புகைப்படம் எடுத்து மாட்ட வேறு சந்தர்ப்பம் ஏது?” என்று எண்ணுகிறான். கலெக்டர் அவனை உடனே மதுரை வரும்படி அனுப்பியிருந்த தந்தியைக் கண்டான். கல்லூரிக்கு விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய பிறகு மதுரைக்குப் புறப்பட்டு விடுகிறான்.

ஜெர்மன் தேசத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பயில விண்ணப்பித்திருந்த அவன நேர்முகத் தேர்விற்கு வரும்படி கடிதம் வந்துள்ளதாகக் கூறிய கலெக்டர் அவன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற அனைத்து உதவிகளும் செய்கிறார். தேர்வில் வெற்றியும் அடைகிறான்.

சத்தியமூர்த்திக்கு ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயில இடம் கிடைக்கிறது. அவனுக்குக் கல்லூரியில் பிரிவுபசார விருந்து நடைபெறுகிறது. சத்தியமூர்த்தியிடம் உண்மை நிலைமயை எடுத்துக்கூற பாரதி எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியில் முடிகிறது. சத்தியமூர்த்தி மதுரை திரும்புகிறான். என்றாவது ஒருநாள் இந்தக் கூண்டிலிருந்து விடுபட்டுப் போய் அவருடன் வாழலாம் என்று எண்ணியிருந்த மோகினியின் நம்பிக்கையும் சரிந்தது.

அன்றிரவு பாரதிக்கு ஒரு கடிதமும், சத்தியமூர்த்திக்கு ஒரு கடிதமும் எழுதுகிறாள். பாரதிக்கு எழுதிய கடிதத்தில் தான் அவருடைய மனைவியாகத்தான் சாவதாகவும், அவருடைய மனைவி என்ற பரிசுத்தத்திற்கு எந்தக் களங்கமும் ஏற்படுவதற்கு முன் உலகிலிருந்து போவதாக எழுதியிருந்தாள். மோகினி தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

மோகினி சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தை டிரைவரிடம் கொடுத்து மதுரைக்குச் சென்று சத்தியமூர்த்தியை உடனே அழைத்து வரும்படி கூறுகிறாள் பாரதி. சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலை வந்தடைந்தான். உண்மையறிந்து குமுறிக்குமுறி அழுகிறான் சத்தியமூர்த்தி. மயானத்தில் அந்த வேளையில் பின்னால் வந்து நிற்கிற காலடியோசை கேட்டு அவன் திரும்புகிறான். பாரதி அழுது கொண்டே, “அக்காள் தெய்வப்பிறவி” என்கிறாள். “தனக்கு மோகினி அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை” என்கிறான்.

“மோகினியை மறக்க முடியாது. நான் மறக்க முடியாதபடி என்கையில் ஒரு பொன் விலங்கு போட்டு பிணைத்துவிட்டாள். எனக்கு ஏற்கனவே மணமாகி, அந்த மணத்துக்கு நாயகியைப் பறிகொடுத்துவிட்டேன் என்ற ஞாபகம் கையிலிருந்து பிரித்தெடுக்க முடியாத; இந்த மோதிரம் உள்ளவரை மாறாது” என்கிறான்.

“எந்த நட்டுக்குச் சென்றாலும், எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் முடிந்தால் மறுபடியும் எங்கள் கல்லூரிக்கு வாருங்கள். நீங்கள் என்று வந்தாலும் உங்கள் மாணவியாகவே நான் உங்களை வரவேற்பேன்” என்று கூறி அவன் பாதங்களை வணங்கினாள்.

“மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே” என்று மோகினி கூறுவது போல பிரமை வந்து அவன் கண்களை நனைத்தது. சலங்கை ஒலி எங்கோ கேட்டது.விமானத்தில் ஏறியவன் பக்கத்தில் இருப்பவர் பேச்சுக் கொடுக்காமலிருக்க நவநீத கவியின் “மானசீக நினைவுகள்” என்ற புத்தகத்தைத் திறந்தான். அவனுடைய மனம் அவளுடைய கோயில். அவளுக்கு மட்டுமே சொந்தமான கோயில்.



(நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட இக்கதைச்சுருக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியர் திரு.வடிவேலு வைத்திலிங்கம், லூனாஸ் இடைநிலைப்பள்ளி, லூனாஸ், கெடா) - நன்றி

No comments:

Post a Comment