Saturday, March 21, 2009

நாவல் (பொன் விலங்கு) - கதைச்சுருக்கம் - பகுதி 2

பகுதி 1-இன் தொடர்ச்சி

இறுதியில் குமரப்பன், “நாட்டிய நட்சத்திரம் மோகினிக்காகத் தாயையும், கண்ணாயிரத்தையும் பேட்டிக் கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில் என்று எழுதவா?” என்று குத்தலாகக் கேட்கிறான். “கண்ணாயிரத்தையும் முத்தழகம்மாளையுமே படம் பிடித்து வெளியிட்டு விடலாமே?” என்று குறும்புத்தனமாகக் கூறினான். “மோகினியின் நாட்டியத்தை மோகினியிடமிருந்துதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது போலத்தான் இந்தப்பேட்டியும்” என்கிறான் குமரப்பன்.

மோகினியிடம், “அவள் ஆடிய நடனங்களின் மறக்க முடியாத ஒன்றைக் கூற முடியுமா?” என்று வினவினான் குமரப்பன். ஆண்டாள் பாசுரத்திற்குக் கடந்த சித்திரா பௌளர்ணமியன்று ஆண்டளாகவே மாறி ஆடியதாகக் கூற, கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் மறுத்து, கடந்த நவராத்திரியன்று மஞ்சள்பட்டி ஜமீந்தார் அரண்மனையில் மோகினி தன்னை மறந்து ஆடியதாக எழுதிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.

சத்தியமூர்த்திக்கு மல்லிகைப் பந்தலில் புதிய புதிய அனுபவங்கள் ஏற்படலாயின. “மாணவர்கள் தங்குகின்ற விடுதிக்கு உதவி வார்டன் அவசியமில்லை என்றும் அப்படியே அவசியம் என்றாலும் இளம் விரிவுரையாளர் தேவையில்லை”
என்று முதல்வரும், ஹெட் கிளார்க்கும் பூபதியிடம் கூறியும், நிர்வாகி அவனை வார்டனாக நியமித்தது முதல்வருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

கல்லூரி திறந்த மூன்றாவது வாரம் ஐந்து நிமிடம் தாமதமாகக் கல்லூரிக்குள் நுழைந்தான் சத்தியமூர்த்தி. இதைக் கண்ட முதல்வர், “இனி ஆசிரியர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் நேரத்தையும் குறிப்பிட வேண்டும்” என்று சுற்றறிக்கை அனுப்பினார். நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு திடமான எண்ணத்துடன் நேரம் போடுவதை நிறுத்திவிட்டான். “பியூன் நேரம் குறிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டதாகக் கூற, சத்தியமூர்த்தி, முடியாது என்று போய்ச் சொல்” என்று பியூனை அனுப்பிவிடுகிறான்.

முதல்வர், ஆசிரியர் அறைக்குள் நுழைந்து, சத்தியமூர்த்தி ரிஜிஸ்டரில் நேரம் குறிப்பிடாததைச் சுட்டியதோடு, “சுயமரியாதையைக் காப்பாற்ற விரும்புகின்றவர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்” என்கிறார். “முதல்வர், துணை முதல்வர் மற்றும் சில பேராசிரியர்கள் நேரம் குறிக்காமல் இருப்பது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவ, “தன்னைக் கேட்க அவன் யார்?” என்று கோபமாக வினவினார். “அவரின் கீழே பணி புரிகிற தகுதி ஒன்றே கேள்வி கேட்கப் போதுமானது. மேலும் யாரை ஆள்கிறோமோ அவர்களிடம் அதிகம் பெருந்தன்மை காட்ட வேண்டும்” என்கிறான். “எனக்கென்ன வந்தது?” என முணுமுணுத்தவாறே அங்கிருந்து போய்விடுகிறார் முதல்வர். முதல்வருடன் வாக்குவாதம் நிகழ்ந்த போது ஒரு விரிவுரையாளர்கூட வாய் திறக்காதது மனதை நோகச் செய்கிறது. நல்லதை வெளிப்படையாக ஆதரிக்கத் தெரியாத விரிவுரையாளர்களை எண்ணி வருந்த¢னான் சத்தியமூர்த்தி.

அவ்வேளையில் மோகினி எழுதிய கடிதம் கிடைக்கிறது. அவளுடைய கடிதத்தைப் படிக்கும்போது மோகினியே அருகில் வந்து நின்றுக் கொண்டு விசும்பி அழத் தொடங்குவது போல் சத்தியமூர்த்திக்குப் பிரமை உண்டாயிற்று. திட நெஞ்சமுள்ள சத்தியமூர்த்தியையே மௌளனமாக அழச் செய்தது அந்தக் கடிதம். பரிசுத்தமான மனம் துடிப்பது கடிதத்ததில் தெரிந்தது. “மோகினிக்குப் பதில் கடிதம் எழுதினால் அது அவள் கையில் கிடைக்குமா” என்று யோசிக்கலானான்.

சத்தியமூர்த்தி தன்னைப் பொருட்படுத்தாமல் இருப்பது பாரதிக்குப் பெரும் மன வேதனையைத் தருகிறது. எதிர்பார்க்கின்ற இடத்தில் அன்பு இல்லாமையை உணரும் போது பெண்கள் வாடிவிடுகின்றனர் என்பது பாரதி விஷயத்தில் உண்மையாயிற்று. சத்தியமூர்த்தியைத் தன்னுடன் படகு சவாரி செய்ய ஆர்வத்தோடு அழைத்த குரலுக்குப் பதிலே சொல்லாமல் பாராமுகமாய் இருந்ததை எண்ணி எண்ணி வேதனைப் பட்டாள் பாரதி. பாரதியிடம் அளவாகவும், கண்டிப்பாகவும் பழக வேண்டும் என்று தன் மனதிற்கு அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தான். “பாரதியின் அன்பு ஆள விரும்புகிற அன்பு. மோகினியின் அன்பு ஆட்படுகின்ற அன்பு. ஆட்படுகின்ற அன்புக்கு இணையாக உறவு உலகில் வேறெதுவும் இருக்க முடியாது” என்று எண்ணிக் கொள்கிறான் சத்தியமூர்த்தி.

திருமண வீட்டில் மோகினியின் நடனம் அரங்கேறியது. மோகினியின் கையால் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பெரிய மனிதர்களுக்குச் சந்தனம் பூசுமாறு முத்தழகம்மாள் கேட்க, மோகினி குமுறும் எரிமலையானாள். “அவர்களின் பணமே வேண்டாம். இலவசமாக நடனம் ஆடியதாகவே இருக்கட்டும்” என்று கூறி கல்யாண வீட்டை விட்டு வெளியேறினாள்.

கல்லூரியில் பணி புரிந்த சில வாரங்களிலேயே மாணவர்களுக்கு நன்கு அறிமுகமானான் சத்தியமூர்த்தி. மாணவன் ஒருவன் “பல விதங்களில் சமூகத்திற்கே பேராசிரியராக ஆகிற தகுதி சத்தியமூர்த்திக்கு இருப்பதாகக்” கூறுகிறான். சதாகாலமும் அவனைச் சூழ நின்று மாணவர்கள் ஆர்வத்தோடு பேசுவது, கல்லூரி முதல்வரிலிருந்து விரிவுரையாளர்கள் பலருக்குப் பொறாமையை உண்டாக்குகிறது. மாணவர்களை மிரட்டி வைத்தால்தான் மரியாதை தருவார்கள், என்ற தப்பபிப்பிராயம் பெரும்பாலான விரிவுரையாளர்களிடம் இருப்பதை அறிந்து வருந்தினான் சத்தியமூர்த்தி. திறமையால் கவர்ந்து மதிப்பைப் பெற முடியாமல் பயமுறுத்தி மதிப்பைப் பெற முயலும் முயற்சியை எண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி.

இதற்கிடையே கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவனின் தந்தையைப் புலி அடித்துவிட்டது. செய்தி அறிந்த மாணவன் சத்தியமூர்த்தியிடம் விசயத்தைக் கூறிவிட்டு கிராமத்திற்குப் போய்விட்டான். தந்தையைப் பார்த்து விட்டு மீண்டும் விடுதிக்கு வந்த அவனை ஒரு வாரத்திற்குள் 25 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அனுமதியின்றி விடுதியை விட்டுப் போனதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தலைமை வார்டன் கூறினார். செய்தி அறிந்த சத்தியமூர்த்தி, “மாணவன் தன்னுடைய அனுமதியின் பேரில்தான் விடுதியிலிருந்து வெளியேறினான்” என்று மாணவன் சார்பாக வார்டனிடம் வாதாடினான். மாணவனின் அறைக்கதவைத் திறக்க முடியாது என்றால் நிர்வாகியைச் சந்திக்கப் போவதாகக் கூறி அங்கிருந்து வெளியறினான். சற்று நேரத்திற்கெல்லாம் அறைக்கதவு திறக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லி, சத்தியமூர்த்த¢யிடம் நன்றி கூறிச் சென்றான் மாணவன். ஒவ்வொருவராகத் தனக்கு எதிரிகளாக மாறி வருவதை எண்ணியபோது எதிர்காலமே வறட்சியாக இருப்பதாகத் தோன்றியது. ஒரு நல்ல மனிதன் வாழ்க்கையில் தன்னுடைய தேவைகளுக்காகவும், நியாயத்திற்காகவும் சேர்த்து போராட வேண்டியிருப்பதை உணர்கிறான்.

விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் வேறுசில பிரச்சனைகளையும் எதிர்நோக்கினர். இது குறித்து உதவி வார்டனான சத்தியமூர்த்தி, தலைமை வார்டனைப் பார்க்கச் சென்றான். அவனிடம், “நீங்கள் இப்பிரச்சனைகள் குறித்து நிர்வாகியிடமே பேசலாமே” என்று குத்தலாகக் கூறினார் வார்டன். மனவேதைனையுடன் திரும்புகிறான் சத்தியமூர்த்தி. இவ்வேளையில் நண்பன் குமரப்பன் எழுதிய கடிதம் கிடைக்கிறது. சத்தியமூர்த்திக்குச் சற்று ஆறுதலாக இருக்கிறது. மோகினியின் புகைப்படங்களும் கடிதத்தில் இருந்தன. ‘குத்துவிளக்கு’ பத்திரிக்கை சார்பாக மோகினையைப் பேட்டி கண்டது, அப்பொழுது அவளது வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்தும் எழுந்தியிருந்தான் குமரப்பன்.

“மோகினியின் முகத்தையும், கண்களையும் பார்க்கும்போது ரவிவர்மா வரைந்த கலைமகளின் உருவம் நினைவிற்கு வருகிறதென்றும், மோகினியின் சிரிப்பில் திருமகளும், கலைமகளும் வாசம் செய்வதாகத் தோன்றுகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தான். மேலும் “நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பவர்கள் வாழ்க்கையில் ஏதாவது தடை இருந்து கொண்டே இருப்பதாக” எழுதியிருந்தான் குமரப்பன்.

பாரதி தன்னைத் தேடி வருவதைக் குறைத்துக் கொள்ளும்படி அவளிடமே இரண்டொரு முறை சொல்லியிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வரும் வேறு சிலரும் பூபதியைப் பற்றியும், அதோடு தன்னையும் பாரதியையும் இணைத்துப் பேசியது அவன் மனதைப் புண்படுத்தியிருந்தது. நேர்முகத் தேர்வு நடந்த முறை, பாரதி தன்னிடம் செலுத்தும் அன்பு ஆகியவற்றைக் கொச்சைப் படுத்தி பேசும் முதல்வரின் போக்கு பாரதிக்குத் தெரிந்தால் அவளது உள்ளமும் நோகுமே என்று விசயத்தை மறைக்கிறான்.

தன் செவியில் விழுந்திருந்த அந்த இரண்டு வம்புப் பேச்சுகளையும் அவளிடம் கூறி தன் நிலையை விளக்கி விடலாமா என்று எண்ணுகிறான் சத்தியமூர்த்தி. உலகத்தின் களங்கம் நிறைந்த சிந்தனையின் ஒரு பகுதியை அவள் புரிந்து கொண்டு வேதனைப் பட நேருமே என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அந்த வேதனை தன்னோடு போகட்டுமே என்று தன்னைத்தானே அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று அவனுக்கு.

பாரதியிடம் பூக்கடையிலிருந்து விடைபெற்று அறைக்குத் திரும்பியவன் பாரதி அவனுக்கு எழுதியிருந்த இரண்டு கடிதங்களையும் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறான். அவன் அறையில் மலர்க்கொத்தை வைக்க வந்தவள் கிழிந்து கிடந்த கடிதத் தாட்களைப் பார்த்து, கண்ணீர் பெருகும் விழிகளோடு, நடைபிணமாக திரும்பினாள். பாரதியின் மனதை நோகடித்து விட்டோமே என்று நிம்மதி இழந்து தவித்தான் சத்தியமூர்த்தி. அன்பைச் செலுத்துவதற்கு நம்பிக்கை வாய்ந்த அந்தரங்க மனிதன் இவன் என்று ஒரு பெண் மனப்பூர்வமாக நேசிக்கத் தேர்ந்தெடுத்த ஒருவனிடம் அந்த நம்பிக்கையும், அந்தரங்கமும் இல்லையென்று தெரிந்தால் ஏற்படும் வேதனை பாரதியை வாட்டியது. பாரதியின் மனதை நோகடித்து விட்டோமே என்று மனம் வருந்துகிறான் சத்தியமூர்த்தி.

சத்தியமூர்த்தி நூலகத்தில் ஷேக்ஸ்பியர் நூலை ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தான். கல்லூரி முதல்வர் வந்ததையும் அறியாமல் படித்த சத்தியமூர்த்தி தனக்கு மரியாதை செலுத்தவில்லை என்று முதல்வர் ஆதங்கப்படுக¢றார். “மரியாதையை முட்டாள்களும் எதிர்பார்க்கிறார்கள், அறிவாளிகளும் எதிர்பார்க்கிறார்கள், என்ன செய்வது” என்று கூறுகிறான் சத்தியமூர்த்தி.

கல்லூரி ஊழியன் சத்தியமூர்த்தியிடம் அவன் தந்தை மதுரையிலிருந்து எழுதியிருந்த கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் பொருளாதார நிலையைக் குறித்து கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. “பல சமூகப் பிரச்சனைகளுக்குக் காரணம் ஒரு தலைமுறையினருக்கு முந்திய மனிதர்களுக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் நடுவேயுள்ள சிந்தனைப் போராட்டம்தான்” என்று உணர்கிறான் சத்தியமூர்த்தி. அவனுடைய அப்பாவோ கண்ணாயிரத்தையும், மஞ்சள் பட்டி ஜமீந்தாரையும் பெரிய மனிதர்களாக எண்ணி போற்றுவது அவனது வேதனையை அதிகப்படுத்துகிறது.

கல்லூரியில் நடந்த மாணவர் தேர்தலில் பாரதி வெற்றிப் பெறுகிறாள். வாழ்த்துக் கூறிய சத்தியமூர்த்தியை அலட்சியப்படுத்துவது போல் நடந்து கொள்கிறாள் பாரதி.

இதற்கிடையில் ‘குத்துவிளக்கு’ பத்திரிக்கை நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராற்றினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மல்லிகைப் பந்தலுக்கு வருகிறான் குமரப்பன். ‘குத்துவிளக்கு’ பத்திரிக்கையின் நிர்வாகம் மற்றும் உரிமை அனைத்தையும் மஞ்சள் பட்டி ஜமீந்தார் வாங்கிவிட்டதாகவும், கண்ணாயிரத்தின் குறுக்கீடு எல்லை மீறிய காரணத்தால் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டதாகவும் குமரப்பன் கூறுகிறான்.

கல்லூரியில் சத்தியமூர்த்தி பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் இடையே பாரதி கேள்வி கேட்கிறாள். பாடம் முடியும் வரை அமைதியாகக் கேட்கும் படி கூறி பாடத்தை நடத்தி முடிக்கிறான். பாரதியிடம் சந்தேகங்களைக் கேட்கும்படி கூற, அவளும் என்ன கேட்பது என்று தெரியாது விழித்தாள். மற்ற மாணவர்கள் இரைந்து சிரிக்கவே அழுது கெ¡ண்டே வகுப்பறையை விட்டு வெளியேறி விடுகிறாள். அறைக்குத் திரும்பிய சத்தியமூர்த்தியிடம் அவனுடைய அனுமதியின்றி மோகினி அவனுக்கு எழுதிய கடிதங்களைத் தான் படித்துவிட்டதாகப் கூறுகிறான் குமரப்பன். சத்தியமூர்த்தியிடம் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பும் கேட்கிறான். “தான் அதைத் தவறாகக் கருதவே இல்லை” என்கிறான் சத்தியமூர்த்தி. “குமரப்பனைப் போன்ற நண்பனிடம் வாழ்வதா சாவதா என்று சிந்தித்து முடிவு சொல்லும் பொறுப்பைக் கூட விட்டு விடலாம்” என்கிறான் சத்தியமூர்த்தி. “சத்தியமூர்த்தி வாழ்வதற்குச் சிந்தித்து முடிவு சொல்கிற நண்பனாக மட்டுமே கடைசிவரை இருப்பதாகக்” கூறுகிறான் குமரப்பன்.

“மனிதனுடைய வாழ்க்கையில் நேரிடும் அழகிய இரகசியங்களெல்லாம் அன்பு காரணமாகவே நேரிடுகின்றன” என்கிறான் குமரப்பன். கடைசியாக மோகினியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட தினத்தன்று அவள் தன் கையில் மோதிரத்தை அணிவித்ததையும், கண்ணீர் மல்கும் விழிகளோடு தனக்குத் திலகமிட்டு விடை கொடுத்த சம்பவத்தையும் கூறுகிறான் சத்தியமூர்த்தி. தன்னை மறந்துவிட வேண்டாம் என்றும் அவனுடைய ஞாபகத்திலேயே வாழ்வதே பாக்கியம் என்று அவள் கூறியதாகக் குமரப்பனிடம் தெரிவிக்கிறான் சத்தியமூர்த்தி. மோகினியைப் போன்ற உடம்பும் மனமும் அழகாய் இருக்கிற கலையரசி காதலியாகக் கிடைத்தது சத்தியமூர்த்தியின் பாக்கியமே என்கிறான் குமரப்பன். தான் அவளுடன் சாகவும் முடியும். ஆனால் அவளின்றி வாழ்வது முடியாத காரியம் என்ற ஜான் டிரைடன் நிலையில், தான் இருப்பதாகவும், மோகினிக்குத் தன்னைவிட வேதனை அதிகம், அவளை ஜமீந்தார் சொந்தம் கொண்டாட விரும்புகிறார் என்கிறான் சத்தியமூர்த்தி.

கல்லூரியில் இயங்கிவரும் தமிழ் மன்ற விழாவிற்கு நவநீத கவியை அழைத்தான் சத்தியமூர்த்தி. விழா வெகு சிறப்பாக நடந்தேறியது. வழக்கம் போன்றே முதல்வரும் வேறு சிலரும் நிகழ்ச்சியைப் பற்றி குறை கூறி திருப்திபட்டுக் கொண்டனர்.

சத்தியமூர்த்தி தங்கியிருந்த மாடி வீட்டின் கீழ்ப் பகுதியில் ‘குமரப்பன் ஆர்ட்ஸ்’ என்ற விளம்பரக் கடையைத் தொடங்கினான் குமரப்பன். நம்பிக்கையையும், தைரியத்தையும் முதலாக வைத்து தொழிலை வெற்றிகரமாகத் தன்னால் செய்யமுடியும் என்கிறான் குமரப்பன். தலைமை வார்டன் தன்னுடைய கடமையைப் புறக்கணிப்பதைப் பெரியப் பாவமாகச் சத்தியமுர்த்தி நினைக்கிறான். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் பொறுப்பற்று இருப்பதைக் கண்டு, அவர்களின் மனதைத் தொடும்படி அவர்களின் கடமையை எடுத்துக் கூறினான் சத்த¢யமூர்த்தி.

கூட்டுப்பணியை மாணவர்களின் ஒத்துழைப்புடன் வெகுச் சிறப்பாகச் செய்து முடிகிறான் சத்தியமூர்த்தி. அவன் செயல்களைக் குறை சொல்வதே தங்கள் வேலை என்பது போன்று கல்லூரியில் ஒரு தரப்பினர் குறை கூறிக் கொண்டிருந்தனர்.
கூட்டுப்பணி முடிந்து கல்லூரி திரும்பிய சத்தியமூர்த்தி மோகினி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளான செய்தியை அறிகிறான். மோகினியின் தாயாரும், டிரைவரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்ட செய்தியும் மோகினி தற்போது மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனையில் இருப்பதையும் தெரிந்து கொள்கிறான்.

நண்பன் குமரப்பனுடன் மதுரைக்குச் செல்கிறான். கண்ணாயிரமும் மஞ்சள் பட்டி ஜமீந்தாரும் காவல் நாய்கள் போல் அங்கு அமர்ந்திருப்பதைக் காண்கிறார்கள். சத்தியமூர்த்தியைப் பார்த்த மோகினி அழுகிறாள். பொங்கி வந்த அழுகை குரலை அடைக்கிறது. “தன்னுடைய வாழ்க்கையில் இனிமேல் தான் வேதனைகளும், சோதனைகளும் அதிகமாகப் போகிறது” என்கிறாள்.

தான் மானசீகமாக சத்தியமூர்த்திக்கு வாழ்க்கைப் பட்டு விட்டதாகவும், அவனை நினைப்பதற்காக, நினைத்து தவிப்பதற்காக தவித்து உருக தான் இன்னும் வாழ விரும்புவதாகக் கூறுகிறாள் மோகினி. தன்னைப் பொறுத்தவரையில் திருமணம் முடிந்ததாகக் கருதுவதாகவும் கூறுகிறாள். சத்தியமூர்த்தி, “தன்னுடைய மனநிலையும் அவ்வாறே” என்கிறான்.

அறைக்கு வெளியே குமரப்பன், மஞ்சள்பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரத்தோடு சண்டை போடுகிறான்.

சத்தியமூர்த்தியைப் போன்ற உத்தமரை அடைய தான் முன் பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும் என்று கூறி கைகூப்பினாள் மோகினி.

மோகினியை மருத்துவமனையில் பார்த்த விசயம் அவனுடைய அப்பாவிற்குத் தெரியவருகிறது. “மஞ்சள்பட்டி ஜமீந்தார் மோகினியை ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள எண்ணியுள்ள இவ்வேளையில் சத்திய மூர்த்தியின் செய்கை மிகப் பெரிய தவறு” என்கிறார். “நாட்டியக்காரி முத்தழகம்மாள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஜமீந்தார் குடும்பத்துக்குப் பழக்கம். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் ஜமீந்தார் செலவில் அனுபவிக்கிறார்கள். ஜமீந்தாரோ முழுமனதையும் மோகினியிடம் பறிகொடுத்துவிட்டார், பெரிய இடத்துப் பகை வேண்டா, ஜமீந்தாரிடம் மன்னிப்புக் கேட்டு விடு” என்கிறார் அவனுடைய அப்பா. சத்தியமூர்த்தி மறுக்கவே அவளுடைய அப்பா கோபமாக அங்கிருந்து வெளியேறுகிறார். இதற்கிடையே பூபதி எழுதிய அவசரத் தபால் (pos laju) சத்தியமூர்த்திக்கு வந்து கிடைக்கிறது. கடிதத்தில் தனக்கு பத்மஸ்ரி விருது வழங்கப்படவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தன்னை மதுரையில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் சந்திக்க வருமாறு குறிப்பிட்டிருந்தார். அங்குச் சென்ற பிறகுதான் அது ஜமீந்தாரின் வீடு என்று அறிகிறான்.

No comments:

Post a Comment