பகுதி 2-இன் தொடர்ச்சிசத்தியமூர்த்தியைப் பார்த்த ஜமீந்தாரும், கண்ணாயிரமும் அவனைக் கண்களாலேயே துளைத்தெடுத்தனர். மஞ்சள் பட்டியாரைப் போன்றவர்கள் ஊருக்கு ஊர் பங்களாக்கள் ஆடம்பர ஏற்பாடுகள் செய்துகொண்டு பழைய வீராப்புடன் இருப்பதை எண்ணி மனம் நோகிறான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியை வரவேற்ற பூபதி, ஜம£ந்தாரை அறிமுகப்படுத்தினார். அவரைப் பெரிய கலா ரசிகர் என்றும், தமிழபிமானி என்றும் கூறுகிறார். மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்.
ஜமீந்தாரைத் தமிழபிமானி என்று பூபதி குறிப்பிட்டதை எண்ணி உள்ளுரப் பரிதாபப்பட்டான். சத்தியமூர்த்தி, தனக்கு அடுத்து மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் முக்கியமானவர் என்பதற்காகவாவது அவரைத் (ஜமீந்தாரைத்) தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். சத்தியமூர்த்தியின் தந்தை அந்த வீட்டில் அவர்களுடைய ஏவலுக்குக் கைகட்டி நின்றது அவனுக்குப் பெரிய அவமானமாக இருந்தது. சத்தியமூர்த்தியின் தந்தையை வேலை வாங்குவதன் மூலம் தன்னை அவமானப்படுத்துவதை உணர முடிகிறது.
பூபதியை “ஏய்” என்று ஏகவசனத்தில் ஜமீந்தார் அழைத்ததிலிருந்து அவர்களின் நெருக்கத்தை அறிந்து திகைத்துப் போகிறான் சத்தியமூர்த்தி. “தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமே ஜமீந்தார் தான்” என்றும் “மல்லிகைப் பந்தல் கல்லூரி நிலம் முழுவதுமே ஜமீந்தாரால் இலவசமாக வழங்கப்பட்டது” என்றும் கூறுகிறார். பூபதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறான் சத்தியமூர்த்தி.
“சமூகத்தில் உள்ள பலர் அவர்களிடம் இருக்கும் நியாயமான தகுதிகளுக்காகக் கூடப் புகழப்படுவதில்லை. வேறு சிலரோ இல்லாத தகுதிகளுக்கெல்லாம் சேர்த்து புகழப்படுகிறார்கள்” என்று மனம் குமுறுகிறான் சத்தியமூர்த்தி.
பூபதி சத்தியமூர்த்தியிடம் மெதுவாக, “தனக்குப் பிறந்த நாள் வருவதாகவும், அனைத்து ஏற்பாடுகளுக்கும் பொறுப்பைச் சத்தியமூர்த்தியே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார். புகழுக்கும் பெருமைக்கும் அடிமையானவராக பூபதியும் இருப்பதை எண்ணி அவரைப் புரிந்து கொள்ளத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. தர்மத்தையும் பக்தியையும் பற்றி அடிக்கடி பேசுவதன் மூலமாக மட்டுமே தங்களைப் புற உலகிற்கு நல்லவர்களாகக் காண்பிக்கும் கூட்டத்தில் பூபதியும் ஒருவர் என்று சத்தியமூர்த்தி தெரிந்து கொள்கிறான். அவரைப் பார்க்கவே அருவருப்பாகவும் கூச்சமாகவும் இருந்தது.
தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிருபித்துக்கொண்டாலே போதும் என்ற ஆசை பூபதியிடமும் உள்ளது ஜமீந்தாரைத் தாராளமாகப் புகழ்கிறார். கண்ணாயிரத்தையே அதிபுத்திசாலி என்கிறார். மனம் புழுங்குகிறது சத்தியமூர்த்திக்கு.
மறுநாள் மருத்துவமனைக்குச் சென்று மோகினியைப் பார்க்கிறான். மோகினி அவனைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். காலையில் அவள் கருங்கூந்தலை அவிழ்த்து கோதிக்கொண்டிருக்கின்றாள். சத்த¢யமூர்த்தியைக் கண்டவுடன் கைகளுக்கு அடங்காத கூந்தலைச் சுற்றிக் கொண்டை போடுகிறாள். சத்தியமூர்த்தியின் கண்களுக்கு அவள் இன்னும் அழகாகத் தோன்றுகிறாள். “அவளுடைய அழகை வர்ணிக்க தான் கவிஞனாக இல்லையே” என்று கேலி செய்கிறான் சத்தியமூர்த்தி. “தனக்கு அந்த உரிமை இல்லையா” என்று கேட்க, “எல்லா உரிமையும் அவனுக்கு உண்டு” என்கிறாள் மோகினி. தாயாரின் பிரிவை எண்ணி கண்கலங்கிய போது, “அவளுடைய கண்ணீரைத் துடைப்பதற்குத் தன்னுடைய கைகள் எப்போதும் தயாராக இருக்கும்” என்கிறான்.
சத்தியமூர்த்தி அவளிடம் வசந்த சேனை சாருதத்தன் கதையைச் கூறுகிறான். வசந்த சேனை கணிகையர் குலத்தைச் சார்ந்தவள். பணக்காரி. சாருதத்தனோ பிறருக்குக் கொடுத்துக் கொடுத்தே ஏழை ஆனவன். அவன் மீது ஆழ்ந்த காதல் வயப்படுகிறாள் வசந்த சேனை. அவனோ திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தையாக உள்ளவன். இளம் கணிகையான வசந்த சேனை அவனை விரும்புகிறான். சாருதத்தனிடம் மனதைப் பறிகொடுத்த அவள் அவனுடன் மானசீகமாக வாழ்க்கைப்பட்டிருந்தாள். சகாரன் என்ற காமுகன் வசந்த சேனையைத் துரத்த அவள் சாருதத்தன் வீட்டில் அடைக்கலம் புகுகிறாள். சாருதத்தன் மகன் தெருவில் மண்வண்டி வைத்து விளையாடுக¢றான். அவனுடைய ஏழ்மையைக் காணப் பொறுக்காது தன்னுடைய பொன்நகைகளைக் கழற்றி அந்த மண்வண்டியில் வைக்கிறாள் வசந்த சேனை.
உலகம் நிரந்தரமாக பழித்துக்கூறும் ஒரு பகுதியைச் சேர்ந்த (கணிகையர் / தாசி குலம்) அழகிய பெண்களிடையேயிருந்து தான் வசந்த சேனை, மாதவி, மணிமேகலை, மோகினி, போன்றோர் தோன்றியிருக்கின்றனர் என்று கதையை முடிக்கிறான் சத்தியமூர்த்தி.
“சாருதத்தனும், கோவலனும் தங்கள் காதலியரைச் சாக முயல்வதிலிருந்து காப்பாற்றவில்லை. ஆனால் சத்தியமூர்த்தியோ தன்னைச் சாவிலிருந்து காப்பாற்றியவர்” என்கிறாள் மோகினி.
இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் பூபதி, பாரதி, கண்ணாயிரம் மற்றும் ஜமீந்தாரும் மோக¢னியின் அறைக்கு வருகிறார்கள். பூபதி சத்திய மூர்த்தியைப் பார்த்து திகைப்போடு “நீங்கள் இங்கே எப்படி?” என்று வினவினார். தனக்கு மோகினியைத் தெரியும் என்றும், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து பார்க்க வந்ததாகப் பூபதியிடம் தயங்காமல், தெளிவாகவும், பொறுமையாகவும் கூறினான். பின்னர் அங்கிருந்து வெளியேறுகிறான்.
மோகினியைப் பற்றி வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை மிகப் பெருமையாகக் கூறுகிறார். “மோகினியை யாராவது குறைசொன்னால் நாக்கு அழுகிவிடும், மகா உத்தமி அவள். கள்ளங்கபடு தெரியாத மனசு. இங்கு பிறந்து கஷ்டங்களை அனுபவிக்கிறாள். ஜமீந்தார் அவளை அடைய சுற்றிக் கொண்டிருக்கிறார். என்ன ஆகுமோ இந்தப் பெண்ணின் நிலை?” என்று கூறி முடிக்கிறார்.
மறுநாள் மருத்துவமனைக்குச் சென்ற சத்தியமூர்த்தியிடம், “மோகினியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்” என்று தாதி கூறுகிறார். மஞ்சள் பட்டி ஜமீந்தார் மோகினியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார் என்ற உண்மையை அறிகிறான் சத்தியமூர்த்தி. அவள்மேல் கோபப்படுவதா, பரிதாபப்படுவதா என்று குழம்பினான் சத்தியமூர்த்தி.
பூபதி பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதாக வானொலியில் செய்தி கேட்கிறான். இடிவிழுந்தாற் போல் ஒலித்தது இந்தச் செய்தி. “மனித வாழ்க்கை எவ்வளவுக்குப் பாதுகாப்பில்லாததாகவும், அபாயங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது” என்று மனம் வருந்துகிறான்.
விமானத்துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்கிறான். பூபதியின் பெயர் மாண்டவர்கள் பட்டியலில் உள்ளதை அறிகிறான். பாரதி இந்தப் பேரிடியை எப்படி ஏற்றுக்கொள்வாள் என்று மனம் துடிக்கிறது. பலரிடம் இல்லாத சில நிறைவான நல்ல குணங்கள் பூபதியிடம் இருந்ததை அவனால் மறந்துவிட முடியவில்லை. பலருக்கு நிழல் தந்த ஆலமரத்தில் இடி விழுந்தது போல் இருந்தது அவரது மரணம். தன்னை அன்போடு வரவேற்று, விருந்தாளியைப் போல உபசரித்து பெருந்தன்மையுடன் பழகியது, ஆங்கிலக் கவிதை விளக்கவுரையைக் கேட்டு மனதாரப் பாராட்டியது, உதவி வார்டனாக நியமித்து பெருமைப்பட்ட பூபதி, பாராட்டப்பட வேண்டியவர் தான் என்று எண்ணுகிறான். பாரதியைக் காண ஜமீந்தார் மாளிகைக்குச் செல்கிறான். அங்கு யாருமே இல்லை. தோட்டக்காரன் மூலம் மோகினி அங்கு அனுபவிக்கும் துன்பங்களை அறிகிறான். அவனுக்கு ஆத்ம சமர்ப்பணமான பரிசுத்த வாத்தியம் அங்கே சிறைப்பட்டு அழுது கொண்டிருப்பதை அவன் தன் கண்களாலேயே கண்டான் சத்தியமூர்த்தி.
“நான் விரும்பியா இந்த நரகத்திற்கு வந்தேன்? எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை. கௌரவமான இந்தச் சிறையிலிருந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். நான் வரத் தயார். பின்னர் நானே உங்களுக்குப் பரிய தளையாகிவிடுவேன். ஜமீந்தார் ஆட்கள் உங்களை கருவருக்கத் துரத்துவர்.
என் கலையை உலகம் அங்கீகரிக்கும். என் பிறப்பை அங்கீகரிக்குமா?” என்கிறாள் சத்தியமூர்த்தியைப் பார்த்து.
“உங்களைத் தவிர இன்னொருவர் இந்தக் கைகளைத் தொடுகிற போது என்னுடைய உடம்பில் உயிர் இருக்காது” என்கிறாள் மோகினி.
“நீங்கள் என்னை வாழவைப்பீர்கள். ஆனால் அப்படி முன்வருகிற உங்களை உலகமும் மற்றவர்களும் வாழ விட மாட்டார்கள்” என்கிறாள்.
இந்தப் பேதையின் இதயத்தில் எவ்வளவு உறுதியான அங்கீகாரம் நிரம்பியிருக்கிறது. “தான் அவனுடைய மனைவி” என்று சொல்லிக் கொள்வதிலேயே இவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய சகலவிதமான திருப்திகளும் கிடைத்து விடுவதாகப் பாவனை புரிய முடியுமானால் இது எவ்வளவு உயர்ந்த காதலாக இருக்க முடியும் என்று
வியப்படைகிறான்.
அவளுடைய மங்கள நினைவு வீண் போகாது என்று ஆறுதல் கூறுகிறான். மோகினியை நன்றாக வாழ வைக்க விரும்புவதாகவும், ஆனால் தற்போது அதைச் செய்ய முடியாத பலவீனனாக இருப்பதாகக் கூறுகிறான். உண்மைதான் தன்னுடைய பலம் என்கிறான். ஆன¡ல் அதுவே தற்போது தன்னுடைய பலவீனமாக இருப்பதாகக் கூறுகிறாள். “தன்னுடைய மனோ பலத்தினால் வெற்றி பெற நீண்ட நாட்களாகும். அதுவரை அவளுக்குப் பொறுமையும், தைரியமும் இருந்தால், இந்த உலகில் எங்காவது, என்றாவது ஒரு நாள் கணவன் மனைவியாக ஊரறிய மணந்து வாழலாம்” என்கிறான். “தானும் அந்த நம்பிக்கையுடன் வாழ்வதாகக் கூறுகிறாள்” மோகினி. “தனக்குத் துயரமும், துயரச் சொற்களுமே பொழுது போக்காயிருக்கின்றன” என்கிறாள் மோகினி.
அவ்வேளை அங்கு வந்த சத்தியமூர்த்தியின் அப்பா, அவனை எரித்து விடுவது போல பார்வை பார்த்து காறித்துப்புகிறார். அங்கிருந்து வேதனையுடன் புறப்படுகிறான். சத்தியமுர்த்தி மோகினியைச் சந்தித்த சூழ்நிலையின் சோகங்களில் அவன் மனம் அழுந்திப் போயிருந்தது. மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான் சத்தியமூர்த்தி.
குமரப்பனிடம், “பெரிய மனிதர்களிலும், பணக்காரர்களிலும் கொஞ்சம் விதிவிலக்காய் இருந்த ஒரே நல்ல மனிதரும் இறந்து விட்டாரே” என்கிறான் சத்தியமூர்த்தி. “இந்த ஊரே மங்கலம் இழந்து விட்டாற் போல் தோன்றுவதாக” குமரப்பன் கூறுகிறான். பூபதியின் மரணம் மல்லிகைப் பந்தல் நகரத்தையே அதிர்ச்சியடையச் செய்திருந்தது. எங்கு திரும்பினாலும் அவருடைய மரணத்தைப் பற்றியும், விமான விபத்தைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தனர்.
பூபதியின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் முறையில் கல்லூரிக்கு விடுமுறை விட்டார்கள். மாணவர்கள் கருப்புத் துணி பேட்ஜ் (badge) அணிந்து துக்க ஊர்வலம் நடத்தினர். பூபதியின் மரணத்தை முன்னிட்டு நடந்த அனுதாபக் கூட்டத்தில் தான் மனமுருகிப் பேசியதை வம்புக்காரர்கள் புதுப் புது அர்த்தம் கற்பித்துப் பேசியதை எண்ணி வருந்தினான். அறைக்கு திரும்பிய சத்தியமூர்த்தி, குமரப்பனிடம் மதுரையில் நடந்தவற்றைப் பற்றிய விபரங்களைக் கூறுகிறான். “கடைசியில் கிளியைப் பிடித்து கூட்டில் அடைத்தே விட்டார்கள” என்கிறான் குமரப்பன். மறுநாள் கல்லூரியில் பூபதியின் மரணம் தொடர்பாக பாரதியிடம் தனிப்பட்ட முறை பேச எண்ணியிருந்தான் சத்தியமூர்த்தி. ஆனால் சூழ்நிலை அதற்குச் சாதகமாக இல்லை.
மாலையில் கல்லூரி அலுவலகத்தில் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. மஞ்சள் பட்டி ஜமீந்தார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவரானார். இது சத்தியமூர்த்திக்குக் கவலையும், கசப்பையும் ஏற்படுத்தியது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குப் பாராட்டுவிழா நடைபெறுகிறது. ஜமீந்தாருக்கு மாலை சூட்டி அவர் தலைவராக வந்ததற்குப் பாராட்டுத் தெரிவித்தார் முதல்வர். சத்தியமூர்த்தி அங்கிருந்து வெளியேறி விடுகிறான்.
மஞ்சள்பட்டி ஜமீந்தாரை “அவமானப் படுத்தவே சத்தியமூர்த்தி வெளியேறிவிட்டான்” என்று முதல்வர் கோபம் கொண்டிருந்தார். ஜமீந்தாரின் உள்ளம் கொதித்தது. முதல்வரும், துணை முதல்வரும் இதற்கு மேலும் தூபம் போட்டனர்.
லேக் கார்டனில் தனிமையில் அமர்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. அவன் மனம் அவனைப் பாராட்டியது. ஜமீந்தாரால் தனக்கு நிறைய தொல்லைகள் வரும் என்று அவன் மனம் கூறியது. ஜமீந்தார் கல்லூரி தலைவரான செய்தி அதற்குள் ஊர் முழுவதும் பரவிவிடுகிறது. சத்தியமூர்த்தியின் மேல் அன்பு கொண்ட மாணவர்கள், புதிய நிர்வாகத்தினர் மீது சத்தியமூர்த்தி மனம் வருந்தியிருப்பான் என்று உணர்கின்றனர்.
“பாராட்டு விருந்தில் தமிழில் நாலு வார்த்தைகள் பேசவே தடுமாறினார் ஜமீந்தார்” என்று சுந்தரரேசன் கூறினார்.
“பெரிய மனிதன் என்றால் தாய் மொழியில் நாலு வாக்கியமாவது தப்பாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தாய்மொழியில் ஒன்றுமே பேசவோ எழுதவோ தெரியாதிருக்க வேண்டும். நமது ஜமீந்தாரோ மிகப் பெரிய மனிதர். தாய்மொழியும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது” என்று கூறுகிறான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி தன்னுடைய வெறுப்பை வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்க வேண்டாம், என்று சுந்தரேசன் கூறுகிறார். மேலும் அவர் “ரகசியமான பகையும், பகிரங்கமான உறவும் இன்றைய வாழ்வில் சமார்த்தியமாக வாழ்வதற்குக் கருவிகள்” என்கிறார். “இதை சத்தியமூர்த்தி புரிந்து கொள்ளாதது வருந்தத்தக்கது” என்கிறார்.
மறுநாள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, முதல்வர் அழைப்பதாகக் கல்லூரி ஊழியன் அழைத்தான். “வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வர முடியாது” என்று அனுப்பிவிடுகிறான். வகுப்பு முடிந்ததும் முதல்வர் அனுப்பிய கடிதம் ஒன்றை ஊழியன் கொடுக்கிறான். விருந்தின் நடுவே வெளியேறிய காரணம் குறித்தும், தான் அழைத்த போது உடனே வராததற்கும் கீழ்ப்படியாமை என்றும் எழுதப்பட்டிருந்தது. “ஒவ்வொரு மனிதனும் அவனது புத்திக்கும் அகங்காரத்திற்கும் ஏற்றவாறு பிறரை அடக்கியாள விரும்புவதை உணர்கிறான். தான் சொல்வதைய மற்றவர் சொல்ல வேண்டும், தான் செய்வதையே மற்றவர் செய்ய வேண்டும், என்றும் தன்னைப் போலவே மற்றவர்களும் சிந்திக்க வேண்டும்” என்கிற தொத்து வியாதி அதிக அளவில் பரவி வருவதைப் பார்க்கிறான்.
அவனுக்கும் புதிய நிர்வாகிக்கும் உறவு சுமூகமில்லாததைக் கல்லூரியில் பணி புரிவோர் அறிகின்றனர். அவனிடம் பழகிய ஆசிரியர்கள் கூட பேசவும், சிரிக்கவும் பயந்து மெல்ல விலகிச் சென்றார்கள். சத்தியமூர்த்திக்கும் முதல்வருக்கும் தகராறு. நியாயம் நிச்சயம் சத்தியமூர்த்தியின் பக்கம் இருக்கும் என்று மாணவர்கள் உறுதியாக நம்பினர். பூபதி உயிரோடு இருந்தவரையில் தன்மேல் வெறும் பொறாமையோடு இருந்தவர்கள் எல்லோரும் இப்போது அதை ஓர் எதிர்ப்பாக வெளிப்படையாக மாற்றிக்கொண்டு செயல்படுவது சத்தியமூர்த்திக்கும் புரிந்தது. முதல்வர் அறைக்குச் சென்ற சத்தியமூர்த்தியிடம், “தான் அழைத்த போது உடனே வராதது அவனது திமிரைக் காட்டுவதாகக்” குறிப்பிட்டார் முதல்வர். “வகுப்பைப் பாதியிலேயே நிறுத்தி வர முதல்வர் கைப்பட கடிதம் அனுப்பியிருந்தால் உடனே வந்திருப்பேன்” என்கிறான். தன்னை என்ன செய்திருக்க வேண்டும் என்று கூற அவன் யார்? என முதல்வர் கோபமுடன் வினவினார். “தான் அவரை மதிக்கவும், வணங்கவும், தலைவராக ஏற்றுக் கொள்ளவும் குறைந்தபட்ச தகுதிகளாவது அவரிடம் இருக்க வேண்டும்” என்று சத்தியமூர்த்தி கூறுகிறான்.
அவனை முதல்வர் வலுக்கட்டாயமாக உதவி வார்டன் பதவியிலிருந்து நீக்கினார். புதிய நிர்வாகியின் கட்டளை என்கிறார் முதல்வர். “இதை அப்படியே கல்லூரி நோட்டிஸ் போர்டில் எழுதி தொங்க விட்டு விடுங்களேன்” என்று முகத்திலடித்தாற் போல் கூறி அறையை விட்டு வெளியேறுகிறான். மாணவர்களிடையே முதல்வரும், நிர்வாகியும் சத்தியமூர்த்திக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள் என்ற உண்மை பரவி விட்டது. அதன் விளைவு இருந்தாற்போலிருந்து பெரிதாக விசுவரூபம் எடுத்தது. விடுதி மாணவர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். சத்தியமூர்த்தியை மறுபடியும் உதவி வார்டனாக நியமிக்க வேண்டுமென்பது மாணவர்களின் கோரிக்கையாய் இருந்தது. சத்தியமூர்த்தியின் வகுப்பைத் தவிர மற்ற எல்லா ஆசிரியர்களின் வகுப்பையும் சேதம் செய்தனர். முதல்வர் மாணவர்களைப் பலவழிகளில் மிரட்டியும் பலன் இல்லாது போயிற்று. சத்தியமூர்த்தியால் மாணவர்களின் இந்த விதமான குமுறலையும் கொந்தளிப்பையும் தடுக்க நினைத்தாலும் முடியவில்லை.
மாணவர்கள் நியாயத்திற்குப் போர¡டுகிறார்கள். அவர்களைத் தடுத்தால், முதல்வர் செய்தது நியாயம் என்று ஒப்புக்கொள்வது போலாகும், என்றெண்ணி அமைதியானான். கல்லூரி நிர்வாகம், “மாணவர்கள் ஸ்டிரைக் பண்ணுவது சத்தியமூர்த்தியின் தூண்டுதலால் தான் அதைத் தடுக்காவிடில், அவனைப் பதவியிலிருந்து வெளியாக்க நேரிடும்” என்று பயமுறுத்தி கடிதம் அனுப்பியிருந்தது.
“மாணவர்கள் கோருகிற நியாயத்தைத் தடுக்க உரிமையில்லை. மாணவர்கள் நியாயம் கோருகிறார்கள். நீங்கள் அதை அளிக்க முயற்சி செய்யுங்கள்” என்று பதில் அனுப்பினான். ஆசிரியர்கள் சத்தியமூர்த்தியை அணுகி நின்றாலே கேடு வருமோ என்று அஞ்சினர். அவன் வழி தனிவழியாகியது. கல்லூரி முதல்வரோ சத்தியமூர்த்தியை அதிபயங்கரவாதியாக உருவாக்கிக் காட்ட முயன்று கொண்டிருந்தார்.
கல்லூரி நிர்வாகம் சத்தியமூர்த்தியை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஜமீந்தார் சத்தியமூர்த்தியைப் பார்த்து “நெருப்போடு விளையாடுவதாகவும், சிறைக்கு அனுப்பி விடுவேன்” என்றும் மிரட்டினார். “பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்றும் பதிலடி கொடுத்தான் சத்தியமூர்த்தி. “மரியாதை தெரியாதவன்” என்று ஜமீந்தார் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் நிர்வாகியாக வரமுடியும். “பட்டம் பெற்றவன் தான் விரிவுரையாளனாக வரமுடியும். புத்திசாலியான ஏழைகள், முட்டாள்களாக உள்ள பணக்காரர்களுக்குத் தலைவணங்க நேரிடுகிறது” என்கிறான். “மரியாதை தெரியாத புதிய நிர்வாகியிடம் பேசிப் பயன் இல்லை” என்று அறையை விட்டு வெளியேறிவிடுகிறான்.
அன்றிரவே ஹாஸ்டலின் ஒரு மூலையில் தீ வைத்து விட்டு, இதற்குக் காரணமே சத்தியமூர்த்திதான் என்று போலிஸாருக்கு மஞ்சள் பட்டி ஜமீந்தார் தெரிவித்து விட்டார். போலிஸார் சத்தியமூர்த்தியைக் கைது செய்கின்றனர். அவனுடைய நடையில் கம்பீரமும் பெருமிதமும் இருந்தன. ஆனால் பொய்யும், அநீதியும் நிறைந்த உலக நிமிர்ந்து பார்க்கக் கூசினாற் போல் அவனுடைய தலை மட்டும் குனிந்திருந்தது. போலிஸ் ஸ்டேசன் வாயிலில் பெருங்கூட்டம் கூடிவிடுகிறது. பாரதியோ செய்வதறியாது விழித்தாள்.
பாரதியின் வீட்டில் நீண்ட நாட்களாக டிரைவராகப் பணி புரிபவர், “ஹாஸ்டலில் தீ வைத்தது நிர்வாகி மற்றும் முதல்வர் ஆகியோரின் கூட்டுச் சதி” என்ற உண்மையைக் கூறிவிடுகிறான். செய்தி கேட்டு அவன் மனம் எரிமலையாகக் குமுறுகிறது. சத்தியமூர்த்தியைக் குமரேசன் ஜாமினில் வெளியே கொண்டு வந்த செய்தி, பாரதிக்குச் சற்று நிம்மதியைக் கொடுக்கிறது.
இதற்கிடையே பாரதியிடம், “மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வரப் போகும் விசயத்தைக்” கூறுகிறார் ஜமீந்தார். அவளிடம் “நாட்டியம் மற்றும் வீணை வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம்” என்கிறார்.
சத்தியமூர்த்தி ஜாமினில் வெளிவந்த மறுதினம் கல்லூரி வேலை நிறுத்தம் மேலும் தீவிரமாகிறது. கலெக்டருக்குத் தந்திகள் பறந்தன. ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு மல்லிகைப் பந்தலுக்கு நேரில் சென்று நிலமையைக் கண்டறியுமாறு அரசாங்கம் மாவட்டக் கலெக்டரைக் கேட்டுக்கொள்கிறது.
ஜமீந்தார் சத்தியமூர்த்தியின் அப்பாவிடம் சத்தியமூர்த்தியை அடக்கி வைக்கும்படி மிரட்டுகிறார், இல்லையேல் விளைவு விபரீதமாக இருக்கும் என்று நயமாகவும், பயமாகவும் மிரட்டினார். உண்மை வெளியாகிவிட்டால் என்ன செய்வதென்ற பயமும் ஜமீந்தார் மனதில் மூண்டிருந்தது.
‘குத்து விளக்கு’ பத்திரிக்கையில் மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டனம் செய்து மாணவர்களைச் சில ஆசிரியர்கள் தவறான வழியில் தூண்டுவதை ஒடுக்க வேண்டும் என்றும் கண்டித்து தலையங்கம் எழுதச் சொன்னார் ஜமீந்தார். கண்ணாயிரமும் அவ்வாறு செய்தார். ஜமீந்தாரின் நிர்வாகத் திறமையைப் புகழ்ந்தும் தலையங்கம் வந்தது. இதைக் கண்ட மாணவர்கள் பத்திரிக்கை பிரதிகளை எரித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.