Saturday, February 12, 2011

யார் தமிழ் படிப்பார்? (கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா )

யார் தமிழ் படிப்பார்?
(கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா)



தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே
தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே
தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்
இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!
தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே
தாய்நலங் காப்பது சேய்கடன் தானே
தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?
ஓராண் டல்ல ஈராண் டல்ல
ஆறாண் டாக அடிப்படைக் கல்வி
அளித்த மொழியின் அருமை மறந்து
புளித்தது என்று புகல்வதா இன்று!
ஆதியில் அறிவில் உறைத்த தமிழை
பாதியில் ஏளனம் படுத்தி ஒதுக்கிட
எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்
தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்
கண்ணும் கூடக் காண மறுக்கலாம்
பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்
உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்
மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?
கற்றவர் அவையில் கையொலி பெறுமா?
சொந்தம் என்று வந்த பந்தம்
சோறு போடுமா என்று கேட்கும்
ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்
வேறினம் இல்லை விதிவிதி என்றே
வீறு குறைந்த வீணன் இவனைக்
கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்
தீரா தென்றன் சினம்தீ ராது!
எந்த நாட்டினில் எந்த மொழிதான்
எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
துவையில் கறியுடன் ஊட்டு கின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
மொழியில் பழியை ஏற்றுவ தில்லை
தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்
தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்
தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்
இப்படி யாஇவன் செப்பித் திரிவது
ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது
தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்
தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்
மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு
மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்
உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்
பெருமை வாழ்வைப் பெறவா முடியும்
மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும்
மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்
தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்
தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்
தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்
இமயச் செயலாம் என்மா ணவரே!

(கவிதைப் பூங்கொத்து)

No comments:

Post a Comment